விமர்சனம் : The Hunt –  Rajiv Gandhi Assassination Case

Hunt – Rajiv Gandhi Assassination Case

ராஜீவ் கொலை நடந்தபோது எனக்கு 21 வயது. ஜார்க்கண்ட் பிரிக்கப்படுவதற்கு முந்தைய பீகாரில் ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கரிச் சுரங்கத்தின் நகரியத்தில் வாழ்ந்துவந்த எனக்கு, ராஜீவ் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதும் இந்தியா முழுக்கத் தமிழர்களைத் தேடிக் கொல்ல காங்கிரஸ்காரர்கள் அலைவதாக வெளியான செய்தி + வதந்தி பீதி கிளப்பியது. அச்சத்தில் வெளியே பூட்டிய அறைக்குள்ளும் கட்டிலுக்கடியில் படுத்துக்கொண்டு அவ்வப்போது கிடைத்த ப்ரெட்டைத் தின்று வாழ்ந்த மூன்று நாட்கள் இன்று நினைத்தாலும் கிலியேற்றுகின்றன.

தொடர்ச்சியாக ராஜீவ் கொலை வழக்கை அன்றாட செய்தித்தாள்களிலும் டாப்லாய்ட் இதழ்களிலும் தொடர்ந்து படித்து வந்ததால் இந்தத் தொடரில் காட்டப்படும் பல நிகழ்வுகள் ஏறத்தாழ நேரில் பார்த்ததுபோன்றே இருந்தன.

சில நிறைகளை முதலில் சொல்லிவிடுகிறேன். திரைக்கதை பெரும்பாலும் விறுவிறுப்பாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் தேர்வு நிஜநபர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. இசை, காட்சியாக்கம் போன்றவை உயர்தரம். டப்பிங்கில் கொஞ்சம் போலச் சொதப்பல் இருந்தாலும் (கோயமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முர்கா போஸ் போடச்சொல்லும் கான்ஸ்டபிள்) பெருமளவு ஏற்புடையதாகவே இருந்தது. எல்லா நடிகர்களும் திறமையாக நடித்திருந்தார்கள். பார்க்கத் தூண்டும் தொடர்தான் – சந்தேகமில்லை.

ஆனால் அங்கேயே நிறுத்திவிடமுடியுமா?

பெரிய குறைகள் என்றால்:

சிறப்புப்படை பெரிய அளவில் துப்பறிவதாகவே காட்டப்படவில்லை.

வேதாரண்யத்தில் கோனேஸ்வரன் ஹெல்மட் போடாமல் மாட்டுவது முக்கிய திருப்பம். அதேபோலத்தான் கோயமுத்தூரில் ட்ரிபிள்ஸ் போகும் புலிகளும் மாட்டுகிறார்கள். இவ்வளவு யதேச்சை நிஜவாழ்வில் சாத்தியமில்லை.

சுபா சுந்தரம் போன்றவர்களின் விசாரணை விரிவாகக் காட்டப்படவே இல்லை. அங்கிருந்து பல தகவல்கள் வந்திருக்கும் – ஆனால் தேவையற்றதாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு அடி அடித்தால் எல்லாப் புலிகளும் புலி ஆதரவாளர்களும் எல்லா உண்மைகளையும் கக்கி விடுகிறார்கள்.

புலிகளின் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டோம் என்று சிறப்புப்படை சொல்கிறார்கள் – ஆனால் எப்படிச் செய்தார்கள் என்பதற்குக் காட்சிகளே இல்லை.

மொத்தத்தில், கார்த்திகேயன் தலைமையிலான படையை என்னவோ குமாஸ்தாக்கள் நான்கு ஃபைல்களை ஆய்வு செய்து மேலதிகாரிக்குக் கொண்டுசெல்லும் அரசாங்க அலுவலகம் போலத்தான் காட்டியிருக்கிறார்கள் – குறிப்பாக கடைசிப் பகுதியில் வரும் 36 மணிநேரத்தாமதங்களின் போது.

சிவராசன் கொலை நடந்த உடனே திரும்பாததற்குச் சொல்லப்பட்ட காரணம் ஒரு மேம்படுத்தலாக இருக்கலாம் – ஆனால் 91 மேவில் ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி மட்டும்தான். அவர் அதற்குமுன் முதல்வராக இருந்திருக்கவில்லை, தீவிரப் புலி எதிர்ப்பைக் காட்டியதில்லை என்பதால் கரும்புலிகள் அவர்களைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள் என்று நம்பமுடியவில்லை. (பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு எடுத்த நடவடிக்கைகளினால் அவரும் ஹிட் லிஸ்ட்டில் வந்தார் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பதவியேற்கும் முன் அவர் ஹிட் லிஸ்ட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன்.)

காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தயாராக இருந்தது என்பது போலவே தொடரில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மே21க்குப் பிறகு நடந்த தென் மாநிலத் தேர்தல்களில் ராஜீவ் மரணத்தின் அனுதாப அலை பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தியும்கூட, மத்தியில் 195 தொகுதிகளே கொண்டு மைனாரிட்டி ஆட்சிதான் அமைத்தார் நரசிம்மராவ். அனுதாப அலை இல்லாமல் போயிருந்தால் அது 140 என்று சுருங்கியிருக்கத்தான் வாய்ப்பு.

தமிழக அரசியலைக் கொஞ்சம்கூடத் தொடாமல் இருந்ததுதான் இந்தத் தொடரின் மிகப் பெரிய லெட் டவுன். அன்றைய சூழலில், தி நகரில் பத்மநாபா கொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, தமிழ் மக்களின் மனப்பாங்கு ராஜீவ் கொலையுடன் அடியோடு மாறியது, சுப்புலட்சுமி ஜெகதீசன் என்ற பெயரே சொல்லப்படாதது..

சிவராசன் பெயரை மட்டும் ஏன் முன்னிறுத்துகிறீர்கள் என்று நரசிம்மராவ் கேட்பதாக ஒரு காட்சி வருகிறது. இந்தத் தொடரே அப்படித்தான் – சிவராசன் மரணத்தோடு முடிவடைகிறது – துப்பறியும் காட்சிகளும் இல்லாமல், பின்னணி அரசியலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல்

அரைவேக்காட்டுத்தனமாக. 

Author

Related posts

பறந்து போ – திரையனுபவம்!

ரோந்து – திரை விமர்சனம்