தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 7 – மொழியாக்கம்

தங்கப் பசு

ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது ரங்கண்ணாவுக்கு ரொம்ப இஷ்டம். தான் ஏதும் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் மகளுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டான். சில நாட்களில் அவள் பெரியவளானாள். பெரியவள் ஆனதும் வரன் பார்க்க வேண்டுமல்லவா? திருமணம் செய்ய வேண்டுமென்றால் நிறைய பணம் தேவையல்லவா… அவ்வளவு பணம் ரங்கண்ணாவிடம் இல்லை. அதனால் அந்த ஊர் ராஜாவிடம் சென்று “ராஜா… ராஜா… என் மகளுக்குக் கல்யாண வயசு வந்திடுச்சு. உதவி பண்ணுங்க” என்று கேட்டான்.

அந்த ராஜாவுக்கு அறுபது வயது இருக்கும். அவன் வெறும் விளங்காதவன். ரங்கண்ணா மகளின் அழகைப் பார்த்து “இவ்ளோ அழகான பிள்ளையை யாருக்கோ ஏன் கல்யாணம் பண்ணி வைக்கிற? எனக்குப் பிடிச்சிருக்கு. நானே பண்ணிக்கிறேன்” என்றான். அதைக் கேட்டு ரங்கண்ணா அதிர்ச்சியில் உறைந்து போனான். கொடுக்க மாட்டேன்னு சொன்னால் என்ன செய்வானோ என்னமோ என்று பயந்துபோய் மனசுக்குள்ளேயே திட்டிக்கொண்டு சரி என்றான்.

விஷயம் தெரிந்து ரங்கண்ணா மகள் கண்ணீர் வடித்து, அழுது புலம்பினாள். அந்த வயதான ராஜாவிடமிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்து.. யோசித்து, “ராஜா.. ராஜா.. உன்னை எனக்குப் பிடிக்கும்தான். ஆனா எனக்குத் தங்கத்துல பெரிய பசு ஒன்னு செஞ்சு கொடு. அப்பறமா பண்ணிக்கிறேன்” என்றாள். சரியென்று ராஜா ஒரு பெரிய தங்கப்பசு செய்து அவளுக்குக் கொடுத்தான்.

கல்யாண நாள் அன்று அவள் பட்டுச்சேலை கட்டிவிட்டு வருகிறேன் என்று உள்ளே சென்று யார் கண்ணிலும் படாமல் மெதுவாகப் பசுவுக்குள்ளே நுழைந்து ஒளிந்துகொண்டாள். ரொம்ப நேரம் ஆகியும் அவள் வராததால் ராஜா கல்யாணப் பொண்ணை இழுத்துக்கொண்டு வாருங்கள் என்று காவலாளிகளை அனுப்பினான். அவர்கள் போய்ப் பார்த்தால் வேறென்ன… எங்கேயும் காணவில்லை. காவலாளிகள் அரண்மனை முழுவதும் அணுஅணுவாகத் தேடினர். அப்படியும் அவளை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு ராஜாவோட கல்யாணமும் நின்றுபோனது.

ராஜா வீட்டில் இருந்த தங்கப்பசுவைப் பார்த்து “கல்யாணமே நின்னு போச்சு. இனியும் இந்தத் தங்கப்பசு எதுக்கு? இதை எடுத்துட்டுப் போயி வித்துட்டு வாங்க” என்றான். வீரர்கள் அதை எடுத்துக்கொண்டு போய் சந்தையில் விற்பனைக்கு வைத்தனர். பக்கத்து ஊர் ராஜகுமாரன் அந்தப் பசுவைப் பார்த்து “அப்பா.. எவ்ளோ அழகா இருக்கு இது” என்று நினைத்து அதை வாங்கிக்கொண்டு போய் தன் அறையில் வைத்துக்கொண்டான்…

அந்த இளவரசருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது. அவள் மிகவும் கொடுமைக்காரி. தொட்டதுக்கு விட்டதுக்கெல்லாம் கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்றுவிடுவாள். எப்போதும் பிறந்த வீட்டிலேயேதான் இருப்பாள். இந்த இளவரசன் தங்கப் பசுவை வாங்கி வந்தபோது கூட அவள் பிறந்த வீட்டிலேதான் இருந்தாள்.

தங்கப் பசு இளவரசன் அறையில் இருந்தது அல்லவா… தினமும் இராத்திரியானதும் அவள் பசுவுக்குள்ளிருந்து வெளியே வந்து அங்கே இருக்கிற சோறு, பழங்களை எல்லாம் நன்கு தின்றுவிட்டு மறுபடியும் போய் யார் கண்ணிலும் படாமல் பசுவுக்குள்ளே சென்று மறைந்துகொள்வாள். இளவரசன் “இது என்னப்பா.. நான் திங்காமலே தினம் காலையில எல்லாம் காணாமல் போயிடுது. இது என்னன்னு கண்டுபிடிக்கணும்” என்று எண்ணினான்.

அன்றிரவு தூக்கம் வராமல் இருக்கச் சுண்டுவிரலைக் கிழித்துக்கொண்டு அதற்கு எலுமிச்சை வைத்துக்கொண்டான். விரல் இப்படிச் சுர்ருனு காந்தும்போது தூக்கம் எங்கிருந்து வரப்போகுது? அப்படியே படுக்கையில் நகராமல் படுத்துக்கொண்டு ஒரு கண்ணைத் திறந்தபடியே இருட்டில் தெளிவாகக் கவனித்துக்கொண்டிருந்தான்.

பசுவுக்குள்ளே இருந்தவளுக்கு இந்த விஷயம் தெரியாது அல்லவா? அதனால் எப்போதும் போல் நடுராத்திரியானதும் தங்கப் பசுவுக்குள்ளிருந்து வெளியே வந்து எல்லாவற்றையும் தின்ன ஆரம்பித்தாள். அதைப் பார்த்து இளவரசன் பின்னால் இருந்து சத்தம் வராமல் மெதுவாக அவளருகில் வந்து படார்னு அவள் கையைப் பிடித்துக்கொண்டு “யாரு நீ? தேவதையா? பேயா? ராட்சசியா? மனுசியா? சொல்லு” என்று கேட்டான். அப்பொழுது அவள் கண்ணீர் வடித்துக்கொண்டே நடந்தது அனைத்தையும் அழுதுகொண்டே கூறினாள். அப்போது அந்த இளவரசன் அவள் கண்களைத் துடைத்துவிட்டு, “இனி எதுக்கும் பயப்பட வேண்டாம். இப்பத்தில இருந்து நீ என்கூடவே இருந்துக்கோ” என்று அவளைத் திருமணம் செய்துகொண்டான்.

ராஜாவின் மூத்த மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்துபோய் விறுவிறுனு ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு வந்தாள். இளைய ராணியைப் பார்த்து “அப்பா!!.. இவள் என்னை விட எவ்ளோ அழகா இருக்கா. இவளை எப்படியாச்சும் இங்கிருந்து விரட்டலனா ராஜா என் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டாரு” என்று நினைத்தாள்.

ஒருநாள் இளையவளிடம் போய் “நம்ம தோட்டம் ரொம்ப அழகா இருக்கும். போயிட்டு வரலாம் வா” என்று அழைத்துக்கொண்டு போனாள். அங்கே ஒரு பெரிய குளம் இருந்தது. அந்த குளத்துக்கு அருகில் அழைத்துக்கொண்டு போய் “நீ அழகா இருக்கியா நான் அழகா இருக்கேனான்னு தண்ணில பார்ப்போமா” என்றாள். அதற்கு இளைய ராணி “அவங்க அவங்க அழகு அவங்களுக்கு அக்கா, நமக்குள்ளயே எதுக்கு இந்தப் போட்டி” என்றாள். அப்படியும் மூத்த ராணி இருப்புக் கொள்ளவில்லை. கடைசியில் சரியென்று இளைய ராணி குளத்தில் எட்டிப்பார்த்தாள். உடனே மூத்தவள் பின்னால் இருந்து படார்னு அவளைக் குளத்திற்குள் தள்ளிவிட்டாள்.

குளத்தில் விழுந்த இளைய ராணி அழகான ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூவாய்ப் பிறந்தாள். ஒருநாள் இளவரசன் குளத்தில் நண்பர்களோடு நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது கண்களில் தாமரைப் பூ பட்டது. “அப்பா!!.. எவ்ளோ அழகா இருக்கு இந்தத் தாமரைப் பூ” என்று அனைவரும் அதைப் பறிக்கச் சென்றனர். அது யார் கையிலும் அகப்படவில்லை. ஆனால் அந்தத் தாமரைப்பூ இளவரசன் எந்தப் பக்கம் நீச்சலடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தது. அதைப் பார்த்து “இதென்னடா இது என்கிட்டயே வந்துட்டு இருக்கு” என்று ஆச்சரியப்பட்டு அதைப் பறித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றான்…

மூத்த ராணி அந்த ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூவைப் பார்த்து “ஓஹோ… இவள் தாமரைப் பூவாப் பிறந்து திரும்ப வீட்டுக்குள்ள வந்துட்டாளே” என்று தேடிப்பிடித்து அதோட இதழ்களை எல்லாம் தன் இஷ்டத்துக்குக் கண்டவாறு பிடுங்கி முற்றத்தில் வீசி எறிந்தாள்.

முற்றத்தில் விழுந்த அந்தத் தாமரைப்பூ அங்கேயே மல்லிக்கொடியாக முளைத்தது. இராத்திரியோட இராத்திரியாகப் பெரிய செடியாகிக் கொத்துக் கொத்தாகப் பூக்கத் தொடங்கியது. அந்தப்பூ மணம் அரண்மனை முழுவதும் நிறைந்திருந்தது. இளவரசன் “இதென்னப்பா இவ்ளோ நல்ல வாசனை வந்துட்டு இருக்கு” என்று அந்த மல்லிப்பூக்களை எல்லாம் பறித்துக்கொண்டு வந்து தன் அறை முழுவதும் பரப்பினான்.

மூத்த ராணி அந்த மல்லிகைப்பூக்களைப் பார்த்து “ஓஹோ! இவள் மறுபடியும் மல்லிக் கொடியா பிறந்துட்டாளா” என்று நினைத்து ராஜா வெளியே சென்றபோது அந்தச் செடியை அடியோடு பிடுங்கிக் குவியலாகப் போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்தாள். அது நன்கு எரிந்து சாம்பலானதும் அதை ஊருக்கு வெளியில் கொண்டுபோய்ப் போட்டாள். உடனே சாம்பல் விழுந்த இடங்களில் எல்லாம் இராத்திரியோட இராத்திரியாகப் பெரிய பெரிய மாமரங்கள் முளைத்தன.

அந்த ஊர் ராணிக்கு வண்ணான் ஒருவன் இருந்தான். அவன் துணி மூட்டைகளை எடுத்துவந்து கொண்டிருந்தபோது மாமரத் தோட்டத்தைக் கண்டான். “இதென்னப்பா நேத்து வரைக்கும் இங்க ஒரு மரங்கூட இல்லை. இராத்திரியோட இராத்திரியா தோட்டம் வந்துடுச்சு” என்று ஆச்சரியமடைந்தான். தோட்டத்தின் நடுவில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு மரத்தில் ஒரு பெரிய மாம்பழத்தைக் கண்டான். “இதென்னப்பா இவ்ளோ பெருசா இருக்கு. நான் இப்ப வரைக்கும் இவ்ளோ பெரிய பழத்தை எப்பயும் பார்த்தது இல்லை” என்று நினைத்துப் பக்குவமாக அதைப் பறித்துப் பெரிய கோணிப்பையில் போட்டு மூட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

கத்தி எடுத்து அறுக்கப்போனபோது உள்ளிருந்து “பார்த்து…! பார்த்து…! என் காலையோ கையையோ வெட்டிராம மெதுவா வெட்டு” என்று கேட்டது. “இதென்னப்பா மாம்பழம் பேசுது” என்று ஆச்சரியப்பட்டு மெதுவாக அறுத்துப் பார்த்தால் வேறென்ன… உள்ளே இருந்து கலகலவென்று சிரித்துக்கொண்டு இளைய ராணி வெளியே வந்தாள். அவன் அவளைப் பார்த்து “எனக்கெப்படியும் பிள்ளைங்க இல்லை. கடவுளே உன்னை அனுப்பிருக்காரு. நீ என் கூடயே இரு” என்று வளர்க்கத் தொடங்கினான்.

ஒரு முறை அந்த வண்ணானுக்குப் பெரிய காய்ச்சல் வந்து படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் போனான். ரொம்ப நாட்களாகத் துணி எதுவும் வராததால் மூத்த ராணி “என்ன ஆயிடுச்சு இவனுக்கு” என்று அவன் வீட்டிற்கு வந்தாள். அங்கே அவன் மகளைப் பார்த்து “இவள் அப்படியே இளைய ராணி கணக்கேயே இருக்காளே. அப்படின்னா இவள் திரும்பயும் வண்ணான் மகளா பிறந்துட்டாளா? எப்படியாச்சும் இவளைக் கொன்னே ஆகணும்” என்று எண்ணினாள்.

வீட்டிற்குச் சென்று படுக்கையில் விழுந்து “அம்மா… அப்பா…” என்று முணங்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்து ராஜா “என்னாச்சு? இப்படி கஷ்டப்படுற?” என்று கேட்டான். அதற்கு அவள் தலையைப் பிடித்துக்கொண்டு “நேத்துலேருந்து ஒரே தலைவலி, எவ்ளோ மருந்து போட்டாலும் குறையுற மாரி இல்லை. நம்ம வண்ணான் இருக்கான் இல்லையா… அவன் மகளைக் கொன்று – இரத்தத்தை என் தலையில் பூசுனாத் தவிர என் தலைவலி குறையாது” என்று கூறினாள். இது கள்ளத் தலைவலி என்று தெரியாத இளவரசன் மந்திரியை அழைத்து அவளைக் கொன்று இரத்தம் எடுத்துவா என்றான்..

மந்திரி வீரர்களை அழைத்துக்கொண்டு வண்ணான் மகளைக் கொல்வதற்கு அவர்கள் வீட்டிற்குச் சென்றான். அவளைப் பார்த்து “இவங்க யாரு? அப்படியே காணாமப்போன நம்ம இளைய ராணி கணக்கே இருக்காங்களே” என்று நினைத்து அவளைக் கொல்லாமல் வேகமாகச் சென்று இளவரசனிடம் விஷயத்தைத் தெரிவித்தான்.

உடனே இளவரசன் குதிரையில் ஏறி வேகமாக அங்கு வந்து அவளைப் பார்த்து ஆச்சரியமடைந்து “யார் நீ? அச்சு அசல் என் இரண்டாவது பொண்டாட்டி மாதிரியே இருக்க” என்று கேட்டான். அப்போது அவள் நடந்தது அனைத்தையும் கூறினாள்.

கையோடு ராஜா சந்தோஷமாக அவளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்று மூத்த ராணியை அழைத்து “சீ… சீ… நீ இவ்ளோ கேடுகெட்டவனு நினைக்கவே இல்லை. போ என் வீட்டிலிருந்து” என்று தள்ளினான். அதைப் பார்த்து இளைய ராணி கணவன் கையைப் பிடித்து “ஒன்னும் இல்லைங்க. என்னமோ தெரியாம பண்ணிட்டாங்க. அவங்கள மன்னிச்சு வீட்டுல சேர்த்துக்கோங்க” என்று வேண்டினாள். ராஜா இளைய ராணியின் நற்குணங்களை மெச்சி அவளை ஐந்தடுக்கு மாடியில் வைத்து அழகு பார்த்து, மூத்த ராணியை மாட்டுக்கொட்டத்தில் போட்டான்.

Series Navigation<< தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 – மொழியாக்கம்

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6

வெள்ளை நாய்

எனக்கான ஒரு நாள்