- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13: நிலமே அம்மியாக, உடல் குழவியாக
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14: காற்றின் போர்
இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான் அது. அந்த விவரங்களைத் தேடியே அனுமனை அவன் அனுப்பி வைத்திருந்தான்.
வாலி தன்னைத் தேடி எமனையே அனுப்பிவிட்டானோ என்ற அச்சம் அவனது நரம்புகளைத் தளர்வடையச் செய்தது. அவன் மலை முகட்டிலிருந்து அடிக்கடிப் பார்த்துக்கொண்டே இருந்தான். அப்போது அவன் கண்ட காட்சி அவனை மேலும் அச்சத்துக்குள்ளாக்கியது.
சுக்ரீவனின் உடல், காற்றில் அலையும் இலையைப் போல அதிர்ந்தது. தூரத்தில் வில்லேந்திய அந்த இரு மாவீரர்களின் பேரொளி, அவனது கண்களைக் கூசச் செய்தது. அவர்கள் பின்னிருந்து அந்தி மாலைச் சூரியனின் ஒளி அவர்களின் உடலில் பட்டுத் தெறித்தது. அதில் ஒருவன் கருஞாயிறு போலவும், இன்னொருவன் அந்த ஞாயிற்றின் ஒளி போலவும் பள்ளத்திலிருந்து மேலெழுவதைக் கண்டான். அச்சம் அவனை முழுமையாக ஆட்கொண்டது.
அச்சம் என்பது ஒரு விசித்திரமான நோய். அது கற்பனையைக் கத்தியாக்கித் தன் கழுத்திலேயே வைத்துக்கொள்ளும் ஒரு மனப்பிறழ்வு. உரிமையை இழந்த ஒருவனுக்கு, உலகமே தனக்கு எதிராகச் சதி செய்வதாகத் தோன்றும். வாலி என்னும் மாபெரும் இருள் சுக்ரீவனின் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
உயிர் வாழ வேண்டும் என்ற பற்று அதிகரிக்க அதிகரிக்க, மரண பயம் கூடும். அந்த பயம் ஒருவனைக் கோழையாக்கிவிடும். அச்சம் ஒருவனைத் தற்காத்துக்கொள்ளச் சொல்லும், ஆனால் அதே அச்சம் அவனைச் சிந்திக்க விடாமல் முடக்கிவிடும். சுக்ரீவன் அந்த முடக்கத்தின் உச்சியில் இருந்தான்.
சுக்ரீவன் தன் தலையை உலுக்கிக்கொண்டு தன் சிந்தனையிலிருந்து விடுபட முயன்றான். அவன் கூர்ந்து கவனித்தான். அவர்கள் வந்துகொண்டிருக்கும் அந்த வழி வானரர்களாகிய தங்களுக்கே சற்றுச் சிரமம். செங்குத்தான பெரும் பாறைகள் நிறைந்த அந்த வழியில் இந்த மனிதர்களால் எப்படி வர முடிந்தது? மேலும் அவர்கள் வருவது நடந்து வருவது போலல்லாமல், ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது.
அப்போது மலையின் சரிவுகளில் ஒரு பிரம்மாண்டமானத் தங்க மேகம் நகர்ந்து வருவதைப் போல அனுமன் வந்துகொண்டிருந்தான். அருகில் வர வர சுக்ரீவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. தன் ஆத்ம நண்பனும், கிஷ்கிந்தையின் மதியூக மந்திரியுமான அனுமன், தான் சோதிக்கச் சென்ற அந்த இரு வீரர்களையும் தன் இரு தோள்களிலும் சுமந்து வந்துகொண்டிருந்தான்.
அனுமனின் தோள்கள் இமயமலை போன்றவை; அதன் மேல் அமர்ந்திருந்த இராம இலக்குவர்கள், சூரிய சந்திரர்கள் ஒருங்கே உதித்தது போலக் காட்சியளித்தனர். இந்தக் காட்சி சுக்ரீவனின் மனதில் இருந்த அச்சத்தைச் சட்டென்று அடித்துச் சென்று, அங்கே ஒரு பெரும் குழப்பத்தை விதைத்தது.
குழப்பம் என்பது, பழைய நம்பிக்கைகள் உடைந்து சிதறுவதன் முதல் அறிகுறி. மூளை பழகிப்போன பயத்திலிருந்து விடுபட முடியாமலும், அதே சமயம் கண்முன் காணும் முரண்பட்ட ஒரு புதிய உண்மையைப் புரிந்துகொள்ள முடியாமலும் தவிப்பதுதான் குழப்பம். குழப்பம் என்பது அறிவின் விழிப்புநிலை, உண்மையைத் தரிசிப்பதற்கான வாயிற்படி. அச்சத்தை விடக் குழப்பம் மேலானது. அவன் அச்சத்திலிருந்து மெதுவாக வெளிப்பட்டான்.
அனுமன் ஒருபோதும் தகுதியற்றவர்களைத் தன் தோளில் சுமக்கமாட்டான் என்ற எண்ணம் அவன் அச்சத்தை நீக்கினாலும் குழப்பத்தை நீக்கவில்லை. அனுமன் அருகில் வருவதற்கு முன்பே அவன் யாரும் அறிய முடியாத வகையில் பாறைகளின் இடுக்குகளில் தன்னை ஒளித்துக்கொண்டான்.
குகை வாயிலில் சமதளப்பரப்பில் அனுமன் மெல்ல அவர்களை இறக்கிவிட்டான். சுக்ரீவன் இன்னும் பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டே அவர்களை நோக்கினான். அனுமன் முன்னே வந்து, சுக்ரீவன் இருந்த இடத்தை ஊகித்து அந்தத் திசை நோக்கிச் சைகை செய்தான்.
“அரசே, அச்சம் கொள்ள வேண்டாம். வாலியின் வஞ்சகம் இவர்களிடம் இல்லை. இவர்கள் தசரதச் சக்கரவர்த்தியின் மைந்தர்கள், அயோத்தியின் இளவரசர்கள். அறத்தை நிலைநாட்டப் பிறந்த இந்த இராம இலக்குவர்கள், உனது நட்பு நாடி வந்திருக்கிறார்கள்,” என்று அனுமன் கம்பீரமாக முழங்கினான்.
அனுமனின் வார்த்தைகளில் இருந்த உறுதி, சுக்ரீவனின் உள்ளத்தில் இருந்த இருளை முற்றிலுமாக விலக்கியது. அவன் மெதுவாகப் பாறையின் மறைவிலிருந்து வெளிப்பட்டான். இராமனின் கண்களில் இருந்த கருணையும், அந்த முகத்தில் தெரிந்த பேரமைதியும் சுக்ரீவனைச் சட்டென்று ஈர்த்தன.
ஒரு துயரமுற்ற இதயம், இன்னொரு துயரமுற்ற இதயத்தை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் என்பார்கள். இராமனின் தேடலும், சுக்ரீவனின் இழப்பும் அங்கே மௌனமாக உரையாடின.
சுக்ரீவன் பேச முற்பட்டபோது அவனது தொண்டை அடைத்தது. அவனது துயரம் சொல்லில் அடங்காதது. ஒரு வீரன் தன் தோல்வியை இன்னொரு வீரனிடம் சொல்வது என்பது விவரிக்க முடியாத மரண வலியைத் தரும். அந்த நிலையை கவனித்த அனுமன், தானே அறிமுகத்தைத் தொடங்கினான்.
“ஐயனே, இவர் கிஷ்கிந்தையின் மன்னர் சுக்ரீவன். தன் அண்ணன் வாலியால் அநீதியாகத் துரத்தப்பட்டு, இன்று இந்த மலையில் அகதியாகத் தஞ்சமடைந்திருக்கிறார். இழந்த தன் மானத்தையும், உரிமையையும் மீட்க ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறார்,” என வாலிக்கும் மாயாவிக்கும் நடந்த போர், அதனால் உண்டான குழப்பமும் மனவேறுபாடும் அண்ணன் தம்பிகளுக்கிடையே உண்டாக்கிய பகை, சுக்ரீவன் அடித்துத் துரத்தப்பட்டது என அனுமன் சொல்லி முடித்தான்.
சுக்ரீவன் இப்போது விம்மத் தொடங்கினான். அனுமன் மேலும் தொடர்ந்தான், “தர்மத்தின் வேரையே அறுக்கும் விதமாக, தன் தம்பியான சுக்ரீவனின் மனைவி உருமையை வாலி பலவந்தமாகத் தன் வசப்படுத்திக்கொண்டான். மனைவியைப் பிரிந்து, நாட்டை இழந்து, இன்று சாவிற்கு அஞ்சி இந்த மதங்க வனத்தில் சுக்ரீவன் தவித்துக்கொண்டிருக்கிறான்.”
இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த இராமனின் கண்கள் அந்தச் செயலின் கொடூரத்தைக் கேட்டதும் தணலாக மாறின. ஒருவன் மனைவியை இன்னொருவன் அபகரிப்பது என்பது உலகிலேயேப் பெரிய பாவம். அந்த வேதனையைத் தான் அனுபவிப்பது குறித்துத் தன் இயலாமை மீதான கோபம் அதிகரித்தது இராமனுக்கு. எல்லாவற்றையும் விடத் தம்பியின் மனைவி, மகளுக்கு ஒப்பானவளை ஒருவன் எப்படி கவர்ந்துகொள்ள முடியும்?
இராமன் மனம் கோபத் தணலாக மாறி எரிந்துகொண்டிருந்தது. தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்டான்: “அவ்வளவு கொடியவனா அந்த வாலி? அது சரி, இந்த இடமும் கிஷ்கிந்தைக்கு உட்பட்ட இடம்தானே. இங்கு எப்படி வாலி வராமல் இருக்கிறான்?” என்றான் இராமன்.
அனுமன் தொடர்ந்தான்:
“ஐயனே, மாயாவியின் மரணம் அசுர குலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. வாலியின் மீதான பகை மாயாவியின் தம்பியான துந்துபியை வெறிகொண்டு அலையச் செய்தது.”
இலக்குவனுக்கு இந்தப் பேச்சுகள் கசந்தன. ஒருவன் தம்பியின் மனைவியைக் கவர்ந்திருக்கிறான். இன்னொருவன் அண்ணன் உடன் இல்லாமல் அவனை இறக்க விட்டிருக்கிறான். இவர்கள் எப்படி உடன்பிறந்தார் ஆனார்கள்? ‘கேவலம்’ என்று நினைத்துக்கொண்டான்.
அனுமன் துந்துபியின் கதையைத் தொடர்ந்தான்:
“மாயாவியின் இறப்புக்கு நீதி தேடி எருமை முகம் கொண்ட துந்துபி வாலியை எதிர்த்துப் போரிட்டான். பல காலமாக நடந்த போரில் துந்துபி கொல்லப்பட்டான். அந்த உடலை வெற்றிக் களிப்பில் வாலி சுழற்றி எறிய, அது இந்த இருசியமுக மலையில் வந்து விழுந்தது.”
“அநியாயம்… அநியாயம். சற்றுத் தூரத்தில்தானே மதங்க முனிவரின் குடில் உள்ளது, பல தவசிகளும் உள்ளார்களே.. இது பாவச்செயல் இல்லையா?” உறுமினான் இராமன்.
“ஆம் ஐயனே, அதனால்தான் மதங்க மாமுனி வாலிக்குச் சாபமிட்டார். அவர் வசிக்கும் இந்தப்புனித மலையில் எங்கு வாலியின் கால் பட்டாலும், அவன் உடலும் தலையும் சிதறி இறந்து போவான் என்பதே அச்சாபம். அந்த அச்சத்தில்தான் அவன் இங்கே வருவதில்லை” என்றான் அனுமன்.
“அதனால் துயரம் தீர்ந்தது என நினைக்க வேண்டாம் ஐயா, வாலியின் கால் இந்த மலையில் படக்கூடாது என்பதுதானே நிபந்தனை, ஆகவே அவன் இந்த இடத்தைப் கால் படாமல் எம்பிக் கடக்கும்போது என் தலை வெளியே தெரிந்தால் போதும்.”
சுக்ரீவன் உடல் சொல்லும்போதே அச்சத்தில் குலுங்கியது. அவனால் பேச முடியவில்லை. நிதானித்துக்கொண்டு பின் சொன்னான்:
“மேலிருந்து நேராக அவன் கீழிறங்கி என் தலையிலும் தோள்களிலும் உதைத்துவிட்டுப் போய்விடுவான்.” சொல்லும்போது அவன் கண்களில் அவமானத்தின் முழுச் சாயலும் படிந்திருந்தது.
“இந்தக் குகைதான் எங்களை அவனிடமிருந்து பாதுகாத்து வைத்திருக்கிறது” என்றான் சுக்ரீவன் அவமானத்தால் குரல் கம்மியபடி.
சுக்ரீவனின் குரலில் தொனித்த அந்த அவமானம் இராமனின் மனதை ஆழமாக உலுக்கியது. ஒரு மாவீரன், நாளும் பொழுதும் தன் உயிருக்கும் மானத்திற்கும் அஞ்சி ஒரு குகைக்குள் பதுங்கிக் கிடப்பது எப்பேர்ப்பட்ட நரக வேதனை என்பதை இராமன் உணர்ந்தான். இராமன் மெல்ல முன்னேறி, சுக்ரீவனின் தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டான். அந்த ஸ்பரிசத்தில் ஒரு தாயின் அரவணைப்பும், ஒரு மாமன்னனின் அபயமும் கலந்திருந்தன.
தூரத்தில் சில கண்கள் இவர்களின் அத்தனை செயல்களையும் கவனித்துக்கொண்டிருந்தன.
பின்குறிப்பு:
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மக்களிடையே புழங்கும் ‘ஜானபத ராமாயணலு’ எனப்படும் தெலுங்கு நாட்டுப்புற ராமாயணக் கதைகளிலும், ‘புர்ரக்கதா’ போன்ற கதை சொல்லும் மரபுகளிலும் வாலி சுக்ரீவனை உதைத்து விட்டுச்செல்லும் கதை வெகுவாகப் புகழ்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தொன்மையான நாடகக் கலை வடிவமான ‘யக்ஷகானா’ நிகழ்ச்சிகளிலும் வாலியின் இத்தகைய அதீத சாகசங்கள் உணர்ச்சிபூர்வமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.
(தொடரும்)
2 comments