தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன்
கோட்டகொண்டா திறமைசாலி
நம் கர்னூல் ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி குரல், எதற்கு என்றாலும் சரி.. ‘உ’ என்றால் ‘ஊ..’ என்று எல்லோரையும் தாண்டி முன்னால் இருப்பான். அசாத்தியமான வீரன், அங்கு சுற்றியுள்ள ஊர்களில் நல்ல பெயர். அது மட்டும் இல்லை.. அவனுக்குச் சின்ன வயதில் இருந்து, சுத்தமாகப் பயமென்றால் என்னவென்றே தெரியாது. அர்த்தராத்திரி சுடுகாட்டில் ‘ஒத்தையில் படு’ என்றாலும் படுப்பான்.
அந்த ஊருக்கு அருகிலேயே மானப்பாடு என்ற ஓர் ஊர் இருந்தது. அந்த ஊருக்கு வெளியே ஆலமரத்தில் பேய் ஒன்று இருக்கிறது. அது மிகவும் சேட்டை பிடித்தது. இராத்திரி சமயத்தில் யாராவது அந்த வழியில் வந்தார்கள் என்றால் போதும்.. அவர்கள் மேல் விழுந்து இல்லாத சேட்டைகள் எல்லாம் செய்யும். அதன் அட்டூழியம் தாங்க முடியாமல், ஜனங்கள் கீழேயும் மேலேயும் புரண்டு விழுந்து ஓடினால் விழுந்து விழுந்து சிரிக்கும்.
அதனாலேயே இருட்டினால் போதும், யாராக இருந்தாலும் சரி.. எவ்வளவு வேலை இருந்தாலும் சரி.. செத்தாலும் அந்தப் பக்கம் போகவே மாட்டார்கள்.
ஒருநாள் நம் கோட்டகொண்டா திறமைசாலி வேலை விஷயமாக அவன் அத்தை ஊருக்குச் சென்றான். வேலை முடிகிற சமயம் நன்றாக இருட்டியது. அவன் அத்தை ஊரில் இருந்து கோட்டகொண்டாக்குப் போக வேண்டும் என்றால் இடையில் மானப்பாட்டைத் தாண்டியாக வேண்டும். இவனுக்குப் பயம் என்றால் என்னவென்று தெரிந்தால் இல்லையா?!.. புறப்பட்டான். அதைப் பார்த்து அவனுடைய அத்தையும் மாமாவும், “மாப்பிளை.. மாப்பிளை.. மானப்பாடு பேய் மோசமானது. பாத்துச்சுனா விடாது.. மேல மேல விழுந்து பயமுறுத்தும். ராத்ரியானாலே அந்த வழில யாரும் போக மாட்டாங்க. நீ கூட இந்த ராத்ரி இங்கயே படுத்துட்டு காலையிலயே போ” என்றனர். ஆனால் இதற்கு எல்லாம் பயப்படுகிற இரகமா நம்ம ஆளு? இல்லை அல்லவா. வெறுங்கையாலேயே புலியைக் கொன்றவன். அதனால், ‘வேண்டாம்…வேண்டாம்’ என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு புறப்பட்டான்.
அவன் அந்த இருட்டில் தனியாக நடந்து நடந்து, மெதுவாக மானப்பாட்டை அடைந்தான். தூரத்தில் ஆலமரம் தென்பட்டது. அவனுக்கு அத்தை மாமா சொன்னது ஞாபகத்திற்கு வந்து கவனமாக அடிமேல் அடிவைத்து.. அங்குமிங்கும் கவனித்துக் கொண்டு செல்லத் தொடங்கினான்.
அவன் சரியாக அந்த மரத்திற்குக் கீழே வந்தானோ இல்லையோ.. இவனைப் பற்றி தெரியாத அந்தப் பேய் மேலே இருந்து “ஓ” என்று கத்திக் கொண்டே பறந்து வந்து அவன் மேல் தாவியது. ஆனால் அவன் பயப்படுவானா?! வெறுங்கையாலேயே பெரிய புலியை எதிர்த்தவன். பேய் அப்படித் தாவிக்கொண்டே.. தாவிக்கொண்டே இருக்க, படக்கென்று அதன் முடியைப் பிடித்து, விர்..விர்..விர் என்று சுற்றி நிலத்தில் போட்டு அடித்து, நொடியில் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து, பரபரபரவென்று அதன் முடியை அறுத்தான். அதற்கு அதன் முடி என்றால் மிகவும் பிடிக்கும்.
அதோடு, அது கப்பலே மூழ்கியது போல் அழுது அழுது, அவன் காலைப் பிடித்துக் கொண்டு “தப்பு நடந்துடுச்சி. இனி ஜென்மத்துக்கும் இந்த மாரி, எப்பயும் மனுஷங்க சோலிக்கே போமாட்டன் .. என் முடியை எனக்குத் தா” என்று பின்னாலேயே சென்றது.
அவன் அந்த முடியை இடுப்பில் சொருகிக் கொண்டு, “என் பின்னாலயே வந்து, நான் சொல்ற வேலைங்க எல்லாத்தையும் பண்ணு.. அப்ப குடுக்குறேன்” என்றான். சரியென்று அவனைப் பின் தொடர்ந்துக் கொண்டே, யாரும் பயப்படாமல் இருக்க பெண்வேடம் போட்டுக்கொண்டு மானப்பாட்டில் இருந்து கோட்டகொண்டாவிற்கு வந்தது.
அந்தக் கோட்டகொண்டா திறமைசாலிக்கு, ஊருக்கு வெளியே ஒரு பெரிய வயல் இருந்தாலும் அது தரிசு பூமியாக இருந்தது. வயல் முழுவதும் கற்களும் பாறைகளும் பெரிய பெரிய குழிகளும் அடர்த்தியான மரங்களுமாக இருந்தன. அவன் அந்தப் பேயை அழைத்து “போ.. போயி, என் வயல் முழுசையும் நல்லாச் சுத்தம் பண்ணிட்டு வா, போ” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதுதான் தாமதம், அந்தப் பேய் விரைந்து, ஓடோடி… வயல் கரைக்குச் சென்று கற்களையும், பாறைகளையும், மரம் கிரம் என எல்லாவற்றையும் சுத்தமாக எடுத்து வீசிவிட்டு ஓடோடிப் போய், “நீ சொன்ன மாதிரியே உன் வயல் முழுசும் நல்லா சுத்தம் பண்ணிட்டேன்.. என் முடியை எனக்குத் தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சின்னதாக ஒரு சிரிப்புச் சிரித்தபடியே, “வயலைச் சுத்தம் பண்ணா முடிஞ்சிதா? தண்ணி வேணாமா? போ.. போயி, ஒரு பெரிய கிணறு தோண்டிட்டு வா.. போ” என்றான். அவன் அப்படிச் சொன்னது தாமதம்.. அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று, ஏழு இராத்திரி ஏழு பகல் கஷ்டப்பட்டு ஒரு பெரிய கிணறு தோண்டி, தண்ணீர் ஊறியதும் ஓடோடி அவன் அருகில் சென்று, “நீ சொன்ன மாதிரியே உன் வயல்ல கிணறு தோண்டிட்டேன். இப்பயாச்சும் என் முடியை எனக்குத் தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சின்னதாக ஒரு சிரிப்புச் சிரித்தபடி, “வயலைச் சுத்தம் பண்ணி, கிணறு தோண்டுனா முடிஞ்சிதா… வயலை எவன் உழுவான்?” என்றான். அவன் அப்படிச் சொன்னது தாமதம், அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று, காளைகளுக்குக் கலப்பையைப் பூட்டி, நிலம் முழுவதும் உழுது, ஓடோடி அவன் அருகில் சென்று, “நீ சொன்ன மாதிரியே, உன் வயல் முழுசையும் நல்லா உழுதிட்டேன். இப்பயாச்சும் என் முடியை எனக்குத் தா” என்று கேட்டது.
அதற்கு, அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சின்னதாக ஒரு சிரிப்புச் சிரித்தபடி “வயலைச் சுத்தம் பண்ணி, கிணறு தோண்டி, உழுதால் முடிஞ்சிதா? வயல்ல எவன் விதை போடுவான்?” என்றான். அவன் அப்படிச் சொன்னது தாமதம்.. அந்தப் பேய் விதை மூட்டையைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் வயல் கரைக்குச் சென்று, வயல் முழுவதும் நன்றாகப் பாத்தி கட்டி, நிலம் நன்றாக நனைந்ததும் விதைகளை எல்லாம் தூவிவிட்டு, ஓடோடி மறுபடியும் அவன் அருகில் சென்று “நீ சொன்ன மாதிரியே உன் வயலு முழுசும் தூவிட்டேன், “இப்பயாச்சும் என் முடியை எனக்குத் தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சின்னதாக ஒரு சிரிப்புச் சிரித்தபடி, “வயலைச் சுத்தம் பண்ணி, கிணறு தோண்டி, உழுது, விதை தூவுனா முடிஞ்சிதா? பயிர் எவன் பண்ணுவான்?” என்றான். அவன் அப்படிச் சொன்னது தாமதம்.. அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று, பயிருக்கு தேவைப்படும்போது எல்லாம் உரம் போடும், தண்ணீர் பாய்ச்சும், பூச்சிமருந்து தெளிக்கும். பசுக்களும் பறவைகளும் வந்து நாசம் பண்ணாம இராத்திரி பகலாகக் காவல் காத்து, கடைசியில் பயிர் நல்ல செழிப்பாக வளர்ந்ததும் விரைந்து ஓடோடி அவன் அருகில் சென்று, “நீ சொன்ன மாதிரியே உன் வயலு முழுசும் நல்லா செழிப்பாப் பயிர் பண்ணிட்டேன். இப்பயாச்சும் என் முடியை எனக்குத் தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சின்னதாக ஒரு சிரிப்புச் சிரித்தபடி, “வயலைச் சுத்தம் பண்ணி, கிணறு தோண்டி, உழுது, விதை தூவி, பயிர் பண்ணா முடிஞ்சிதா? அறுத்துக் குவிச்சி வீட்டுக்கு எவன் எடுத்துட்டு வருவான்?” என்றான். அவன் அப்படிச் சொன்னது தாமதம்.. அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று, பயிர் முழுவதையும் அறுத்து, குவித்து வண்டியில் ஏற்றி வீட்டிற்குக் கொண்டுவந்து “நீ சொன்ன மாதிரியே பயிர் முழுசையும் உன் வீட்டுல சேர்த்திட்டேன்… இப்பயாது என் முடியை எனக்குத் தா” என்று கேட்டது.
அப்போது அவன் அதன் முடியை எடுத்து வந்து, “இன்னொரு தடவை இந்த மாதிரி நீ எங்கயாச்சும்.. யாரையாச்சும்.. தொல்ல பண்ணனு தெரிஞ்சுதுனு வையி, அவ்ளோதான். இந்த வாட்டி மாதிரி உன் முடியை வெட்டினதோட விட மாட்டேன். ஒரேயடியா உன் தலையை வெட்டிருவேன்” என்று மிரட்டி அதன் முடியை அதன் கையில் வைத்தான். அவ்வளவுதான்.. அந்தப் பேய் முடியை எடுத்தது. அடுத்ததாக யாரும் பார்க்காதபடி கீழேயும் மேலேயும் விழுந்து ஓடிப்போனது.