தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்

(பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷம்பாக் அவர்கள், எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் வேண்டுகோளிற்கிணங்கி நம் சிறப்பிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி)

கேள்வி: பெரும் இதிகாசங்களைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் சமகால இலக்கிய ஆக்கங்கள் அந்தத் தொடர்ச்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உருவாகின்றனவா?  உலக அரங்கில் அவை போதுமான அளவிற்குப் பிரதிநிதிப்படுத்தப் படுகின்றனவா?

பதில்: இந்தியாவின் இதிகாசங்கள் அவற்றின் அளவினால் அல்லாது, நிலைத்த ஆன்ம வலுவால், தற்காலக் கலைவடிவங்களைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. இந்த “இதிகாச உணர்வை” நாம் சமகால சினிமாவிலிருந்து மேடை நாடகங்கள் வரை எங்கும் காண்கிறோம். ஆனால் இந்திய இலக்கியம் அதற்கு உரித்தான உலகளாவிய அங்கீகாரத்தை, இன்னும் முழுமையாகப் பெறவில்லை. இதற்கான சவால்கள் இரண்டு தரப்புகளாக உள்ளன: பல மொழிகளில் பரவி கிடக்கும் எண்ணற்ற படைப்புகள் மற்றும் சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புகளின் கடுமையான பற்றாக்குறை. நமது இலக்கிய அடையாளமே பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதால், அதை ஒரே வரையறைக்குள் கொண்டுவருவது கடினமாகிறது. உலகம் இந்திய எழுத்தின் பரந்த வீச்சை உணர வேண்டும் என்றால், திட்டமிட்ட, விரிவான மொழிபெயர்ப்பு முயற்சிகள் அவசியம்.

கேள்வி: உங்கள் படைப்புகளில் இடம்பெறும் இந்தியப் பின்னணியுடனான மத்தியதரக் குடும்பச் சூழல், இந்திய வாசகர்களிடையே ஒரு உடனடித் தொடர்பை உண்டுபண்ணி விடுகின்றன.   உங்கள் கூர்மையான சூழல் அவதானிப்பும், அதைப் புனைவுச் சூழலில் கட்டமைப்பதின் கலையும் நன்கு பரிமளிக்கின்றன.  இந்தக் கலை நுட்பத்தை எவ்வாறான புனைவாசிரியர்களின் வாசிப்பைக் கொண்டு வளர்த்துக் கொண்டீர்கள்? 

பதில்: ஒரு குறிப்பிட்ட இலக்கிய உணர்வு எங்கிருந்து தோன்றுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது சாத்தியமில்லை. இத்தகைய தாக்கங்கள் பெரும்பாலும் இலக்கியத்திற்கானவை மட்டுமல்ல. கர்நாடகாவின் கடல் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த நான், வாய்வழி கதை மரபுகளாலும், பல்வேறு நாட்டுப்புற நாடக வடிவங்களாலும் சூழப்பட்டிருந்தேன். குறிப்பாக நடனம், இசை, தன்னிச்சையான உரையாடல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் யக்ஷகானம் என்ற பாரம்பரிய நாடக வடிவம், உலகைப் பற்றிய எனது பார்வையை ஆழமாக வடிவமைத்தது. விவரங்களுக்கான நுண்ணுணர்வு எனக்கு ஒரு கலைக்கருவி மட்டுமல்ல; அது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் அடிப்படை வழிமுறையாகவே உள்ளது. இந்தப் பார்வை, நான் சமூகத்துடன் உறவாடும் முறையிலும் இயல்பாகவே பிரதிபலிக்கிறது.

கேள்வி: எழுத்திற்கான தேடல், தரவுகளின் பெருக்கம்,  எழுதும் வெளி, படைப்புகளைப் பரவலாகக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம், நுட்பமான பார்வையைக் கொண்டு தரும் செயற்கை அறிவியல் செயலிகள் என்று இலக்கியம் உருவாகுவதற்கான சூழல் பெருகிவரும் நவீன காலத்தில், படைப்பூக்க மனநிலைகளும் கூடி வருகின்றனவா?  அல்லது வெளிப்படையாக்கத்தின் அதிகரித்தலால் இலக்கிய மாயவசீகரம் உலர்ந்து குறைந்து வருகிறதா?

பதில்: இலக்கியம் என்பது உலகில் நிகழும் மாற்றங்களுக்கான உயிர்ப்பான பதில். சினிமா எனும் கலை வடிவத்தின் வருகையின்போது, “புத்தகத்தின் இறப்பு” என இதே போன்ற விவாதங்கள் எழுந்தன; ஆனால் இலக்கியம் நிலைத்து  இருந்தது. எழுத்தாளர்கள், இந்தச் சமூகத்தின் ஓர் அங்கமாக கலந்திருப்பதால், வாசகர்களின் மாறிவரும் கற்பனைகளை எட்டிப் பிடிக்க, இயல்பாக உருமாற்றம் அடைகின்றனர்.  எழுத்துப் பிரதியின் தனித்துவமான வலிமை, மனித மனத்தின் உள் உலகை, அதன் தனிப்பட்ட சிந்தனை ஓட்டங்களை, படம்பிடித்துக் காட்டும் திறனில் உள்ளது. மொழி என்பது மனிதர்களை இணைக்கும் மிக அடிப்படை வழி என்பதால், கற்பனையைத் தூண்டும் அதன் சக்தி எப்போதும் குறையாது. இலக்கியத்தின் மாயவசீகரம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது; ஒவ்வொரு வாசகரின் மனத்திலும் அது தனித்துவமான ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குகிறது.

கேள்வி:இலக்கியம் படைத்தல் என்பதை முழுநேரப் பணியாக வைத்துக் கொள்வது வணிக நோக்கில் கடினம்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தீர்கள். வாழ்வாதாரத்திற்கு ஒரு பணம் தரும் பணியை மேற்கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்துடன், இலக்கியம் படைத்தலைச் செய்யும்போது, அதன் தீவிரம் மட்டுப்படாதா? அப்படி இலக்கியம் உண்டாக்கும் துடிப்பு அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடையே காணப்படுகிறதா?    

பதில்: எழுத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பது, படைப்பின் தரத்திலும் அளவிலும் சமரசங்களை உருவாக்கும் அபாயம் கொண்டது. பெரும் வணிக வெற்றியைப் பெற்ற சிலரால் மட்டுமே அந்தப் பாதையைத் தேர்ந்து எடுக்க முடிகிறது. ஒரு “தின வேலை” வைத்திருப்பதில் ஒரு அமைதியான வலிமை உள்ளது; அது எப்போது வேண்டுமானாலும், எப்படிச் சொல்ல வேண்டும் என விரும்புகிறோமோ அப்படியே எழுதும் சுதந்திரத்தை வழங்குகிறது. வரலாற்றைப் பார்த்தால், நமது சிறந்த இலக்கியங்களில் பல்வேறு பிற தொழில்களில் ஈடுபட்டோரிடமிருந்தே உருவானவை; அவர்களின் வெளி வாழ்க்கைகள் புதிய உலகங்களையும் புதிய உணர்வுகளையும் எழுத்துக்குள் கொண்டு வந்தன.

கேள்வி: வணிக இலாபங்கள் ஈட்டுவதற்கான தொடர்புவலைகளும், தொழில்நுட்பங்களும் பெருகி வரும் இந்த நவீன உலகம், அத்தகைய சாத்தியங்களைக் குறைவாகக் கொண்டிருக்கும் இலக்கியச் செயல்பாடுகளை வருங்கால சந்ததியினரிடம் ஊக்குவிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றனவா?

பதில்: மனிதவியல் துறைகளை, இலக்கியத்தையும் சேர்த்து, பயிலும் மனிதர்களின் அறிவாற்றலை நாம் பெரும்பாலும் குறைவாக மதிப்பிடுகிறோம். தானியங்கி தொழில்நுட்பம் மேலோங்கும் இன்றைய உலகில், பல்வேறு சமூகச் சூழல்களில் மனித வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்வது ஒரு கலாச்சாரச் செல்வம் மட்டுமல்ல; எந்தத் தொழிலிலும் வெற்றிக்குத் தேவையான அடிப்படைத் திறனாகும்.  இலக்கிய உலகின் எதிர்காலத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், முந்தைய கேள்விக்கான பதிலில், இலக்கிய உலகின் எதிர்காலத்தைப் பற்றிய தணியாத வேட்கையின் பிரதிபலிப்பு இருக்கின்றது.

கேள்வி: உலக அரங்கில், வட்டாரவழக்கின் பின்னணி கொண்டு உருவாக்கப்படும் படைப்புகளில், அவற்றின் மொழிச் செறிவு, சொல்வளம், மொழிக் கட்டுமானம் போன்ற தன்மைகள் எப்படியான இலக்கிய அலகுகள் கொண்டு எடை போடப்படுகின்றன? 

பதில்:  ஆழமாக ஒரு வட்டாரத்தை சார்ந்தவை, அதனாலேயே உலகளாவியதாக ஆகிவிடுகின்றன.  ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுக்குள் ஆழமாக இறங்கும் போது, மனித அனுபவத்தின் உலகளாவிய மையத்தைத் தொட்டுவிடுகிறோம். இந்தச் சூழலில், சொற்களும் மொழிக் கட்டமைப்புகளும் அந்த அனுபவத்திலிருந்து பிரிக்க முடியாதவையாகின்றன. ஓர்  இலக்கியப் படைப்பை — அதற்கான மதிப்பீடு சாத்தியமென்றால் — முழுமையான பார்வையில்தான் அணுக முடியும். உலகின் சிறந்த இலக்கியங்களை நோக்கினால், வாசகர்களும் இலக்கிய சமூகமும் அவற்றில் எவ்வளவு ஆழமாகப் பிணைந்திருக்கின்றன என்பதையும், அவற்றை ஒரு பகிர்ந்த பண்பாட்டு மரபாக மாற்றியுள்ளன என்பதையும் உணர முடிகிறது.

கேள்வி: ஒரு மூலப் பிரதி அதன் மொழி லாவண்யங்களும், தனித்துவமும் கொண்டு பெறும் வரவேற்பிற்கும், ஆங்கிலம் போன்ற பெரு மொழிக்குப் பெயர்ந்து பிறகு பெறும் வரவேற்பிற்கும் எப்படியான வேறுபாடுகள் இருக்கின்றன? அதிக வாசகர்பரப்பைக் கோரி உருவாக்கும் படைப்புகள் இத்தகைய தன்மைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய சமரசத்திற்கு உள்ளாகின்றனவா? பின்னதில் கிடைக்கும் பெரும் வெளிச்சம், முன்னதில் கிடைக்காத போது, அந்த மூல மொழியின் செறிவும் நுணுக்கங்களும் சிறிது சிறிதாக இழந்து போகின்றனவா?  படைப்புகள் அதன் மூலத்தின் தனித்துவத்தை எவ்வளவு தூரம் பாதுகாத்துக் கொள்கின்றன? 

பதில்: முன்னரே குறிப்பிட்டதுபோல், ஒரு புத்தகம் அது மொழிபெயர்க்கப்படும் ஒவ்வொரு மொழியிலும் ஒரு புதிய உருவத்தைப் பெறுகிறது. காரணம், ஒரு வாக்கியத்தின் துல்லியமான மொழிபெயர்ப்பே கூட, மூல மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நினைவுகளையும் தொடர்புகளையும் எழுப்பக்கூடும். மொழிபெயர்ப்பாளர்கள் மூல அனுபவத்தைப் பாதுகாக்க முயன்றாலும், முழுமையான நிறைவை அடைவது அரிது; படைப்பு மொழி, உணர்வு, பண்பாடு ஆகியவற்றுக்கிடையேயான இடப்பெயர்ச்சியை கடக்க வேண்டியுள்ளது. மேலும், அதிக வாசகர்களை அடைவதற்காக படைப்பை எளிமைப்படுத்துவது ஒருபோதும் சரியான வழி அல்ல. எழுத்தாளரின் உண்மையான வலிமை, அவர் தன் வாசகருடன் கொண்டிருக்கும் தெளிவான உறவில்தான் உள்ளது. அந்த உறவுதான் நுணுக்கமாகவும், கவித்துவமாகவும், ஆழமாகவும் எழுதும் சுதந்திரத்தை அளிக்கிறது.

கேள்வி: உங்களுடைய படைப்புகள் மொழிமாற்றம் செய்யப்படும்போது, என்னவகையான படைப்புரீதியான மாற்றங்களை உங்கள் பிரதிகள் எதிர்கொள்வதாக எண்ணுகிறீர்கள்? இந்திய மொழிகளிலோ, உலக அரங்கிலோ பெரும் வாசகவெளியைச் சென்றடையும் வாய்ப்பிருப்பதான பிரக்ஞையுடனே உங்கள் படைப்புகளை வடிவமைக்கிறீர்களா?

பதில்: எனது முதன்மை வாசகர்கள் கன்னடர்களே; வேறு எந்த வாசகர்களுக்காகவும் புனைவெழுத்து எழுதுவது எனக்குச் சாத்தியமில்லை. புனைவு என்பது மொழியுடன் தீவிரமான,  உடலுணர்வோடு கூடிய ஈடுபாட்டை நாடுகிறது; அதன் உள் ஒலிகளையும், அதில் பதிந்த அனுபவங்களையும் வெளிக் கொணர இதுவே வழி. சிந்தனையும் மொழியும் ஒன்றோடொன்று இணையும் இந்த ஆழமான தொடர்பே ஒரு பண்பாட்டின் நுணுக்கங்களை வெளிப்படுத்த எழுத்தாளருக்கு உதவுகின்றன.

கேள்வி: யக்ஷகானம் போன்ற நாடக வடிவங்களிலிருந்து உங்கள் படைப்பூக்கத்திற்கான தாக்கம் உருவானதாகக் குறிப்பிடுகிறீர்கள்.  கன்னட இலக்கியத்தில் நாடக வடிவத்திற்கு ஒரு முக்கிய மதிப்புண்டு.  டி பி கைலாசம், கிரீஷ் கர்னாட். காரந்த் என்று தொடர்ந்து இன்றைக்கு உங்களுடைய படைப்புகள்வரை நவீன நாடகத்திற்கான ஒரு வரிசை இருக்கிறது.  நாடக வடிவங்கள் மொழிகடந்த பார்வையாளர்களுக்கு, அவற்றின் கலாச்சாரப் பின்னணியைக் காட்சிமொழியில் அழுத்தமாகக் கொண்டு செல்லும் வாய்ப்பு கொண்டவை.  பெருகிவரும், விஷுவல் தொழில்நுட்பம், கூத்து வடிவத்துக் கலைப்படைப்புகளுக்குப் புத்துருவாக்கம் அளிக்கின்றனவா? 

பதில்: எந்தக் கலைவடிவமும் வெளி உலகின் சவால்களிலிருந்தோ, தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்தோ தப்ப முடியாது; வரலாறெங்கும் இதுவே நடந்துள்ளது. மக்கள் நாடகம் குறிப்பாக அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு உடனடியான பதிலை அளிக்கும் தன்மை கொண்டது. மற்ற கலைவடிவங்களைப் போலவே, அது நமது கற்பனையை வடிவமைத்து, யதார்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளச் செய்கிறது. மக்கள் மரபுகள் இயல்பாகவே தாங்கும் சக்தி கொண்டவை; வட்டார நாடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நாம் அனைவரும் ஒரு பொதுவான உலகைப் பகிர்ந்து, கூட்டுச் சவால்களை எதிர்கொள்கிறோம்; நாடகம் எப்போதும் போல இன்றும் அவற்றுக்குத் தனித்துவமான, அவசியமான விரைவுடன் பதிலளிக்கிறது. கன்னட நாடக உலகில் தற்போது நடைபெறும் முயற்சிகள் இதற்குச் சிறந்த சான்றாகும்.

கேள்வி: ஒரு படைப்பாளியாக, கதை உருவாகும் பாதையில் மேம்படுதல் , ரிவிஷனிங் எவ்வளவு தூரம் தேவைப்படுகிறது?  உங்களுடைய பன்மொழிப் புலமை, உங்களுடைய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளில் உங்களை ஈடுபடுத்துகிறதா?  மொழியாக்கத்தின் போது இயல்பாக பிரதி மாறுபடுதல், அல்லது மேம்படுதல் நிகழும் வாய்ப்புகள் உண்டாகும்போது எப்படி அதைக் கறாராக மறுத்து, மூலப் பிரதியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது?

பதில்: எனது படைப்புகளில் கதையமைப்பு இயல்பாகவே ஊடுருவியுள்ளது. ரிவிஷனிங் (revisioning) என்பதைவிட, திருத்துதல் (Editing) என்பது பாணி மற்றும் தொனியின் எல்லைகளை மேம்படுத்தும் செயலாகவே நான் கருதுகிறேன். அந்தச் செயல்முறையில் புதிய சாத்தியங்கள் தோன்றும்போது, அவற்றை முழுமையாக ஆராய வேண்டிய கட்டாயம் எனக்குத் தோன்றுகிறது; ஆகவே ஒவ்வொரு படைப்பிலும் இந்தப் பயணம் தனித்துவமாக மாறுகிறது.

கேள்வி: மொழிபெயர்க்கப்பட வேண்டிய முக்கியப் படைப்புகள் எவை? என்பதில் ஒரு விரிந்த ஒற்றுமையான கருத்தை உருவாக்குவது அவசியமானதா?  மாறாக, ஒற்றுமையற்ற, முரண்பாடுகளுடனான குறுங்குழுவாத சூழல் மொழிபெயர்ப்புச் சூழலின் ஆரோக்கியத்தைக் குன்றச் செய்கிறதா?

பதில்: மொழிபெயர்ப்புகளைப் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட படைப்புகளுக்கெனக் குறுக்கிக் கொள்வது சரியான அணுகுமுறையல்ல.  ஓர் இலக்கிய மரபு மற்றொன்றை உண்மையாகப் பாதிப்பது, பரிசோதனை முயற்சிகள் உட்பட பல்வேறு வகை எழுத்துகள் மொழிகளுக்கிடையே பரவும்போதுதான். ஆனால், இந்தியச் சூழலில், மொழிபெயர்ப்பு பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்களை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. அவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்த பிரதிகளைப் பதிப்பாளர்களிடம் வழங்குகிறார்கள். இதனால் பல முக்கியமான படைப்புகள் கவனிக்கப்படாமல் போகின்றன; திட்டமிட்ட மொழிபெயர்ப்பை ஆதரிக்கும் வலுவான சூழல் இல்லாமை இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குகிறது.

கேள்வி: இன்றைக்கு இந்தியப் பின்னணியில் எழுதிக் கொண்டு வரும் படைப்பாளிகளில் உங்கள் கவனம் பெற்றோரைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?

பதில்: காஷ்மீரைச் சேர்ந்த சாஹித் ரஃபீக்கின் கதைகள் நுணுக்கமும் வலிமையும் கொண்டவை. இன்றைய இந்திய இலக்கியச் சூழலில் குறிப்பிடத்தக்க கவனத்துக்குரியவர்.

Author

  • விவேக் ஷாண்பக், இந்திய இலக்கியத்தின் அடையாளங்களில் ஒருவரான கன்னட மொழி எழுத்தாளர். அயோவா (Iowa) பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்தாளர் திட்டத்தில், நிலைய எழுத்தாளராகவும், "தேஷா காலா" எனும் இலக்கியப்பத்திரிகையின் ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர்.  பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியவர்.

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

மிட்டாய்க்காரன்|கணேஷ் வெங்கட்ராமன்