காலை விழித்தவுடன் பரபரப்புடன் வாட்ஸ் அப் குழுவைத்தான் திறந்து பார்த்தாள் சுஷ்மிதா. அது அவர்களுடைய ஊரின் பெண் தொழில் முனைவோர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பின் வாட்ஸ் அப் குழு. பெருநகரமும் அல்லாத சிறிய கிராமமும் அல்லாத நடுத்தரமான நகரம் அது. ஒரு தாலுகா தலைநகரத்தின் அளவுக்குப் பெரியது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சொந்த முயற்சியால் தொழில் ஆரம்பித்து நடத்திவரும் பெண்களை இணைத்து ஒரு குழு உருவாக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டும், அறிமுகம் செய்து கொண்டும் சேர்ந்து வளர்கிறார்கள்.
அந்த அமைப்பின் வாட்ஸ் அப் குழுவில்தான் எதுவும் நல்ல செய்தி வந்திருக்கிறதா என்று சுஷ்மிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அன்றைக்குக் காலையில், “உங்கள்ல யார் யார் குருவம்மா கூட நல்ல பழகியிருக்கீங்க? அவங்க நாலு வரி பேசி ஒரு வாய்ஸ் மெசேஜ் எடுத்து எனக்கு அனுப்புங்கப்பா.. ஒரு வாரமாகியும் அவங்க இன்னும் கண் முழிக்கல.. லேசா விரல்கள் ஆடுதுன்னு சொல்றாங்க.. ஒருவேளை நம்ம குரலைக் கேட்டா முழிக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க” என்று பதிவிட்டிருந்தாள் இந்திரா. அவள்தான் அந்த அமைப்பை உருவாக்கியவள்.
மாவட்டத் தலைநகரில் இருக்கும் பெரிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் குருவம்மாள். ஒரு வாரம் முன்பு தற்கொலை முயற்சி செய்து விட்டாள். அதிகாலையில் தூக்கில் பாதி தொங்கிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தவளை அவளது மகன் வந்து தாங்கிக் கொண்டான். அக்கம் பக்கத்தவரை அழைத்து, கயிற்றிலிருந்து விடுவித்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போய்விட்டான். இருந்தாலும் குருவம்மாளின் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. சுயநினைவு வரவில்லை. உபகரணங்களின் உதவியால் உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருந்தார்கள்.
அன்று முதல் தினமும் இந்திரா மருத்துவமனைக்கு சென்று வருகிறாள். முதல் நாள் இரவு கூட குருவம்மாள் மகனிடம் நலம் விசாரித்து, செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு வந்தாள். “டாக்டர் கிட்ட கொஞ்சம் எப்படி நிலைமை என்ன கேட்டு சொல்றீங்களாக்கா?” அவள் மகன் கேட்டபோது இந்திராவுக்குக் கண்கள் கலங்கின. அவன் 12 ஆம் வகுப்புதான் படித்து வந்தான். அவனுடைய வயதுக்கு நிறையவே கஷ்டங்களைப் பார்த்து விட்டான். எல்லாவற்றையும் விட பெற்ற தாயை இந்த நிலையில் பார்ப்பது மிகக் கொடுமையானது. அவனுடன் போய் மருத்துவரிடமும் விவரம் கேட்டாள். “முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்.. மூளை டேமேஜ் ஆகி நிறைய இடங்கள் சைலன்டா இருக்கு.. வாய்ஸ் தெரப்பின்னு சொல்லுவோம், தெரிஞ்சவங்கள ஏதாவது பேச வச்சு, ரெகார்ட் பண்ணி அவங்க காது பக்கத்துல போட்டுப் பாருங்க. சப்போஸ் இம்ப்ரூவ்மெண்ட் இருந்தாலும் இருக்கலாம்” என்று சொன்னார்.
அதைத்தான் சுருக்கமாக விளக்கி, குருவம்மாளுடன் நெருங்கிப் பழகியவர்களைக் குரல் பதிவு செய்து அனுப்புமாறு கேட்டு குழுவில் பதிவிட்டாள் இந்திரா.
“எங்கிட்ட அந்த அக்கா நல்லா பேசுவாங்க.. நான் பேசி அனுப்புறேன்” என்று பதில் போட்டிருந்தாள் விஜயா.
“நானும்தான்.. என்கிட்ட அந்த அக்கா ரெண்டு பிளவுஸ் தைக்கக் குடுத்திருக்காங்க.. அக்கா பிளவுஸ் ரெடியாயிடுச்சு.. வந்து வாங்கிக்கோங்கன்னு நான் வாய்ஸ் மெசேஜ் போடுறேன்” என்றாள் தையல் கலைஞராக இருக்கும் தனம்.
பத்துப் பதினைந்து மெசேஜ்கள் இந்திராவுக்குப் போய் சேர்ந்தன. அதையெல்லாம் குருவம்மாளின் மகனுக்கு அனுப்பி வைத்தாள் இந்திரா. “தம்பி! இதெல்லாம் உங்க அம்மாவுக்குப் பழக்கமானவங்களோட குரல்ப்பா..மாறி மாறி போட்டுக் காட்டு”
பொறுமையாக ஒவ்வொருவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்களையும் மறுபடி மறுபடி குருவம்மாளின் காதுகளுக்கு அருகில் கொண்டு போய் கேட்க வைத்துக் கொண்டிருந்தான் அவள் மகன். ஒரு குரலுக்கும் அவளிடம் எதிர்வினை இல்லை. “அம்மா!” என்று அவன் கூப்பிட்டால் மட்டும் கொஞ்சம் போல உடலில் எதோ மாற்றம் தெரிந்தது. கண்களைத் திறக்கவில்லை.
“நீங்க அனுப்புன எல்லா வாய்ஸ் மெசேஜையும் போட்டுக் காட்டிட்டேன்க்கா.. ஒரு பலனும் இல்லையே.. வேற யாரையாச்சும் பேச வச்சு அனுப்புறீங்களா? நானும் சொந்தக்காரங்க சிலர்ட்ட கேட்டிருக்கேன்” இந்திராவை அழைத்துப் பகிர்ந்து கொண்டான் அவள் மகன்.
தன் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவரின் பெயர்களையும் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்திரா. திடீரென்று சுஷ்மிதாவின் பெயர் வரவும், ‘இவளும் குருவம்மாளும்தானே சொந்தக்காரங்க.. ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே வேலைக்குப் போவாங்க’ என்று தோன்ற, சுஷ்மிதாவைப் பிடித்தாள் இந்திரா.
“ஏண்டி சுஸ்மீ.. அத்தே அத்தேன்னு ஒட்டிக்கிட்டே திரிவியே.. நீ ஏன் இன்னும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பாம இருக்கே? தினசரி உன் குரலை கேட்கிறவுகதானே அவுக.. அதைக் கேட்டா கண்ணு முழிக்க வாய்ப்பு இருக்குல்ல? இப்ப மத்த எல்லாத்தையும் விட இதுதானே முக்கிய வேலை.. அப்படி என்னத்த வெட்டி முறிக்கிற நீ”
“ஐயோ அக்கா.. என்ன பேசலாம்னு முடிவு பண்ணிக்கிட்டு இருந்தேன்.. அதுக்குள்ள வந்துட்டீங்க”
“சரி சரி சீக்கிரம் அனுப்பு.. எனக்குக் குருவம்மா நினைப்பாவே இருக்கு.. எந்த வேலையும் ஓட மாட்டேங்குது..”
சுஷ்மிதாவுக்கும் கண்கள் கலங்கின.. “அக்கா, கடந்த ஆறு மாசமா நானும் குருவம்மா அத்தையும் பொழுதன்னைக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தோம். நீ ஒழிஞ்சு போகணும், அதை நான் பார்க்கணும் அப்படின்னு கூட சொல்லியிருக்கேன்.. ஆனா இப்படி ஒரேயடியா போகணும்னு கனவுல கூட நினைக்கல.. விஷயம் கேள்விப்பட்டதுல இருந்து சோறு தண்ணி இறங்க மாட்டேங்குது.. ரெண்டு தடவை போய்ப் பாத்துட்டு வந்தேன்.. நல்லாத் தூங்கி ஏழு நாள் ஆச்சு.. மனசு அத்தையவே சுத்திச் சுத்தி வருது.. என் புருஷன் கூட, நீ அவளுக்கு போட்டியா சீட்டு பிடிக்க ஆரம்பிச்சுட்டேங்குற வருத்தத்துல தூக்குப் போட்டு இருப்பாளோ! அப்படின்னு கேக்குறாரு.. ஏந்தான் அவ கூட சண்டை போட்டோமோன்னு இருக்கு.. இப்படி ஒரு முடிவு எடுப்பாளா?” புலம்புவதற்கு ஆள் கிடைத்த நிம்மதியில் மனதில் இருப்பதை எல்லாம் இந்திராவிடம் கொட்டினாள் சுஷ்மிதா.
“எனக்கும் நினைக்க நினைக்க ஆத்தாமையா இருக்கு.. என்னத்தச் சொல்ல.. காரணம் என்ன ஏதுன்னு கேக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. நகராட்சி வேலையை ரொம்ப நாளா டெம்பரவரியாவே பார்த்துக்கிட்டு இருக்கா, பெர்மனெண்டாக்கச் சொல்லி பல முறை மனு குடுத்துட்டாங்க.. கவர்மெண்ட் கேட்கல.. பணக்கஷ்டம் வேற.. அந்த மன உளைச்சல்ல தான் தூக்குப் போட்டுக்கிட்டான்னு சொல்லி இருக்கேன்.. நீயும் யார் கேட்டாலும் அப்படியே சொல்லிரு.. ஒரு வகையில அதுவும் உண்மைதானே.. நீயும் அவளுமாதானே கலெக்டர் ஆஃபீஸ் போக, போராட்டம் பண்ணன்னு இருந்தீங்க. ஒருவேளை இந்தச் செய்தி கேட்டுப் பாவப்பட்டுக்கூட கவர்மெண்ட் நிரந்தரமாக்க வாய்ப்பிருக்கு”
“சரிதான்.. அப்படியே யார் கேட்டாலும் சொல்லுவோம்.. நான் அதை யோசிக்கல பாருங்க”
சுஷ்மிதாவும் குருவம்மாளும் நகராட்சியில் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். வீடு வீடாகப் போய் எங்காவது தண்ணீர் தேங்குகிறதா, கொசு முட்டையிட வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நீர்நிலைகளில் கொசு மருந்து ஊற்ற வேண்டும். மூன்று நான்கு வருடங்களாகத் தற்காலிக வேலைதான் பார்க்கிறார்கள். அவ்வப்போது நிரந்தரம் செய்யச் சொல்லிக் கோரிக்கை வைப்பார்கள். நாளொன்றுக்கு 185 ரூபாய் மட்டுமே சம்பளம். அதை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவது இயலாத காரியம். அதுவும் குருவம்மாளுக்கு கணவன் இல்லை, குடித்துக் குடித்தே உயிர் விட்டிருந்தான். பணியை நிரந்தரம் ஆக்குவது பற்றி அடிக்கடி பேசுவாள். ‘எத்தனை நாளைக்குத்தான் இந்த டெம்ப்ரவரி சம்பளத்தை நம்பி உயிர் வாழ்றது’ என்று அடிக்கடிப் புலம்புவாள்.
அந்த வேலையில் முதலில் சேர்ந்தது குருவம்மாள்தான். ஒரு வார்டுக்கு ஒரு நபரை மட்டும் நியமித்திருந்தார்கள். பின் கூடுதலாக ஒரு நபரை போட்டுக் கொள்ளலாம் என்று ஆணை வந்த போது, குருவம்மாள்தான் உறவுப் பெண்ணான சுஷ்மிதாவைச் சேர்த்து விட்டாள். சுஷ்மிதாவுக்குக் குருவம்மாள் உறவில் அத்தை முறை. ஆனாலும் ரொம்பவும் வயது வித்தியாசம் எல்லாம் இல்லை. நான்கைந்து வயது பெரியவளாக இருப்பாள் குருவம்மாள். அவ்வளவுதான். ‘அத்தை’, ‘நீ, வா, போ’ என்று சொல்லிக் கொள்வாள் சுஷ்மிதா.
ஆரம்பத்தில் இருந்து இரண்டு பேரும் ஒரே ஏரியாவுக்குத்தான் வருகிறார்கள். காலையில் 7:00 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள் என்றால் பதினொரு மணிக்கு மேல் முடித்து விடுவார்கள். தினந்தோறும் பார்த்துப் பழகி, அங்குள்ள மனிதர்கள் அனைவரும் நன்றாகத் தெரிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அப்போதுதான் சிறிய அளவில் சீட்டு நடத்த ஆரம்பித்தாள் குருவம்மாள். நிறைய பேரிடம் சீட்டுப் பிடித்தாள். 20 பேர் கொண்ட சீட்டு என்றால் சீட்டின் கால அளவும் இருபது மாதங்களாக இருக்கும். ஒவ்வொருவரும் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும். முதல் மாதம் வசூல் ஆகும் தொகை சீட்டு நடத்துபவருக்கு. அதாவது குருவம்மாளுக்கு.
இரண்டாம் சீட்டிலிருந்து மாதம் ஒருவருக்கு மொத்தமாகத் தொகையைக் கொடுப்பாள் குருவம்மாள். பெரும் தொகையை வாங்கி விடுபவர்கள் அடுத்த 18 மாதங்கள் ஒழுங்காகப் பணம் கட்ட வேண்டும். சமயங்களில் சிலர் மாதத்தின் நடுவிலேயே கூட அவசரமாக வேண்டும் என்று கேட்பார்கள். அவர்களுக்கு எப்படியாவது பணத்தைப் புரட்டி இடையே பணம் கொடுத்து விடுவாள். இதுவரை யாரும் அவளை ஏமாற்றியதில்லை. அந்த ஒரு குடும்பத்தைத் தவிர.
பரமசிவத்தின் மனைவி தன் கணவனுக்கு ஹார்ட் அட்டாக் என்றும், ஆபரேஷன் பண்ண வேண்டும் என்றும் அவசரமாக வந்து பணம் கேட்டபோது பூர்வமாகத் தலையில் நின்று பணத்தைப் புரட்டிக் கொடுத்தாள். இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் இருந்து விட்டு பரமசிவம் வீட்டுக்கு வந்தான். அறுவை சிகிச்சை எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை. அடுத்தடுத்த மாதங்களின் தவணையையும் தரவில்லை. இவள் போய் கேட்டவுடன், ‘கந்துவட்டின்னு கேஸ் குடுத்துருவோம் பாத்துக்கோ’ என்று மிரட்டினார்கள்.
அவர்களுக்கு முன்கூட்டியே கொடுத்து விட்டதால் சின்னராசு என்ற இன்னொரு பார்ட்டிக்குப் பணம் தரத் தாமதம் ஆகிவிட்டது. சின்னராசு பரமசிவத்துக்குப் பங்காளி முறை. பரமசிவம் ஏமாற்றியதால்தான் தனக்குப் பணம் தர தாமதமாகிறது என்பது அவனுக்கு அதிகக் கோபத்தைக் கொடுத்தது. இத்தனை வருடம் பழகியும் குருவம்மாளுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் பரமசிவமும் சரி, சின்னராசுவும் சரி ஒரு கட்டம் வரை இனிமையாகப் பழகுவார்கள். கொஞ்சம் கோபம் வந்து விட்டால், கொலை பாதகத்திற்கும் அஞ்ச மாட்டார்கள். இரண்டு பங்காளிகளும் சேர்ந்து படுத்திய பாட்டில், ‘ஏன்டா இந்தத் தொழிலை எடுத்தோம், கூழோ, கஞ்சியோ குடிச்சிட்டு பட்டினியாக் கிடந்தாக்கூட நிம்மதியா இருந்திருக்குமே’ என்று குருவம்மாளைப் புலம்ப வைத்தார்கள்.
முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கொண்ட இரண்டு சீட்டுக் குழுக்களும் குருவம்மாள் வசம் இருந்தன. அவர்கள் மத்தியிலும் ஐந்து வருடங்களாகச் சீட்டு நடத்தி வருகிறாள், அங்கெல்லாம் இப்படி எதுவுமே நடந்ததில்லை. சின்னராசு, ‘எனக்கு எப்ப பணம் தரப் போற?’ என்று நெருக்குகிறானே, பரமசிவம் போனால் போகிறான், அவனைத் தவிர மற்றவர்களிடம் அடுத்த மாதத் தவணையை வசூலித்து விட்டால் அந்தத் தொகையை அவனிடம் கொடுத்துவிடலாம் என்று குருவம்மாள் நினைத்திருக்கையில், மற்றவர்களிடமும் போய், “இவகிட்ட காசு குடுக்காதீங்க, ஏமாத்திடுவா” என்றெல்லாம் சொல்லிக் கலைத்து விட்டுவிட்டான்.
“எப்படியாவது புரட்டி நாலு நாள்ல பணம் தர்றேன்” என்று குருவம்மாள் சொல்லியிருந்தாள். சரியாக ஐந்தாம் நாள் அன்று குருவம்மாளைத் தெருவில் பார்த்து அசிங்க அசிங்கமாகக் கேள்வி கேட்டான் சின்னராசு. “எங்க வீட்டுல மூணு ஆம்பளைங்க இருக்கோம், வந்து ஆளுக்கு ஒவ்வொருத்தர் கூடவும் ஒரு நாள் படுத்துட்டுப் போ, ரூவா கழிஞ்சிருச்சுன்னு நினைச்சுக்குறோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னபோது மனதே வெறுத்துப் போனது.
‘அண்ணே அண்ணே!’ ன்னு எத்தனை தடவை அவனைக் கூப்பிட்டிருப்பேன், இந்த வார்த்தையைச் சொல்ல எப்படி மனசு வந்துச்சு’ விடிய விடிய யோசித்தாள். பொழுது புலரும் வேளையில், வெளியில் போய் இந்தப் பொல்லாத உலகத்தைச் சந்திக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தூக்கு மாட்டிக் கொண்டாள்.
பரமசிவம்- சின்னராசு விவகாரத்தால்தான் ஏதோ ஒரு பிரச்சனை என்பதுவரை சுஷ்மிதாவுக்குத் தெரியும். குருவம்மாள், சுஷ்மிதா இரண்டு பேரும் வெகு ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். சீட்டுத் தொழில் நன்றாக நடக்க துவங்கியவுடன் குருவம்மாளுக்குக் கொஞ்சம் வசதி கூடியது. சற்றே பெரிய டிவி, நல்ல உடைகள் இதெல்லாம் வாங்க முடிந்தது. “அடுத்த மாசம் செகண்ட் ஹாண்ட்ல ஒரு வண்டி வாங்கலாம்னு இருக்கேன் சுஸ்மீ..” என்று அவள் சொன்னவுடன் தானும் சீட்டுப் பிடிக்க ஆரம்பித்தால் என்ன? என்று சுஷ்மிதாவுக்குத் தோன்றியது.
ஒரே ஏரியாவில் வேறு தெருக்களில் இவளும் சீட்டுப் பிரிக்க ஆரம்பித்தாள். குருவம்மாள் வழக்கமாகப் பிரிக்கும் தெருவில் ஒரு பெண் சுஷ்மிதாவின் சீட்டில் சேரவும், குருவம்மாளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “பாவம் நம்ம சொந்தக்கார பிள்ளையாச்சே, கஷ்டப்படுதேனு வேலைக்குச் சேர்த்து விட்டேன், எனக்கே போட்டிக்கு வரியா?” என்று குருவம்மாள் அவளை அவ்வளவு திட்டினாள். அதிலிருந்துதான் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு. சரியாகப் பேசிக் கொள்வதில்லை.
பழைய நினைவுகளுடன் வேலைக்குச் சென்றாள் சுஷ்மிதா. இப்போது குருவம்மாளின் வேலையையும் சேர்த்து இவள்தான் பார்க்கிறாள். ஏரியாவில் காய்ச்சல் சீசன் துவங்கியிருந்தது. கொசு மருந்து ஊற்றும் வேலைகளுடன் சேர்த்து, வீடு வீடாகச் சென்று யாருக்காவது காய்ச்சல் கண்டிருக்கிறதா, சிகிச்சை எடுத்திருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும். மற்ற வீடுகளில் விசாரிப்பது போலவே சின்னராசுவின் வீட்டு வாசலிலும் போய் நின்றாள் சுஷ்மிதா. “அக்கா..” என்று கூப்பிடவும் சின்னராசு மனைவி வெளியே வந்தாள்.
அந்த வீட்டில் யார் முகத்தையும் பார்க்கவே சுஷ்மிதாவுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு, “வீட்ல யாருக்கும் காய்ச்சல் இருக்காக்கா” என்று கேட்டாள்.
சின்னராசுவின் மனைவிக்கு முகமே சரியில்லை. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, “என் புருஷன்தான் ஏதோ பேசி அந்தப் புள்ள இப்படி தூக்குல தொங்கியிருக்கு.. அவனைப் பத்தி உனக்குத் தெரியுமே.. நாக்குல நரம்பில்லாமப் பேசுவான்.. என்னையும் என் பிள்ளைகளையும் கூட அப்படித்தான் பேசுவான்.. என்னமோ பல்லைக் கடிச்சுட்டு வாழ்க்கையை ஓட்டுறோம்” என்றவள், ஆயிரம் ரூபாயை சுஷ்மிதா கையில் திணித்து, “இந்தா புள்ள.. என்னால ஏண்டது (இயன்றது). அடுத்தடுத்த சீட்டையும் நானே இப்படி துட்டு சேர்த்து ஒழுங்கா கட்டிருதேன்.. எப்படியாவது அந்தப் புள்ள பொழச்சி வந்தா சரி.. எப்ப முடியுமோ எங்க ரூவாயைக் கொடுக்கட்டும்.. இதோ பாரு தாயி.. குருவம்மா நல்லா ஆகணும்னு வேண்டிக்கிட்டு அம்மன் கோவிலுக்குக் காசு கூட முடிஞ்சு வச்சிருக்கேன். அவ வயிறு எரிஞ்சு சாபம் போட்டு என் பிள்ளைகளுக்கு எதுவும் வந்துரக்கூடாது” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அந்தப் பணத்தை வாங்கவா, வேண்டாமா என்று யோசித்தாள் சுஷ்மிதா. வாங்கிக் கொள்வோம், இப்படிச் சிறுக சிறுக யாராவது உதவினால் கூட அது குருவம்மாளுக்கு இப்போதைய நிலைமையில் பேருதவியாக இருக்கும் என்று தோன்றியது. கூடவே இன்னொரு யோசனையும் மனதில் தென்பட்டது. ‘அட!.. இது நமக்கு இத்தனை நாளாத் தோணாமப் போச்சே’ என்று யோசித்த சுஷ்மிதா, சின்னராசுவின் வீட்டிலிருந்து வெளியே வந்து குருவம்மாள் மகனுக்கு அவசரமாக ஃபோனைப் போட்டாள்.
“ஆஸ்பத்திரில ஆச்சி அம்மாவுக்குத் துணைக்கு இருக்காங்க, நான் வீட்டுக்கு வந்து துணிமணி எடுக்க வந்தேன்” என்றான் அவன்.
“அப்படியே அம்மா ஒரு ஊதா கலர் பேக்ல சீட்டு பிரிக்கிற கணக்கு வழக்கு எல்லாம் எழுதி ஒரு நோட்டு வச்சிருப்பா, சின்னச் சின்ன சிட்டைகளும் இருக்கும்.. அதை எடுத்துட்டு வந்து என்கிட்ட குடு” என்று, தான் நின்று கொண்டிருக்கும் இடத்தைச் சொன்னாள் குருவம்மாள்.
அடுத்ததாக இந்திராவுக்கு அழைத்தவள், “இந்திராக்கா.. நம்ம குரூப்ல 100, 110 பேர் இருக்கோமே.. ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு சின்னராசுக்குக் குடுக்க வேண்டிய ரூபாயைக் குடுத்துட்டா என்ன? அவன் ஏதோ அசிங்கமாப் பேசினதுலதான் அத்தை இப்படிப் பண்ணியிருக்கு”
“அதெல்லாம் குருவம்மா பொழச்சு வந்தப் பிறகு பார்த்துக்கிடலாம்.. இந்தத் தறுதலைதான் அவ இப்படி முடிவு எடுக்கக் காரணம்னா, அப்படி அவசரமா பணத்தைப் புரட்டிக் கொடுக்கணும்னு என்ன அவசியம்? உசுரையும் குடுத்து துட்டையும் குடுக்கணுமா?” என்றாள். அது சரியென்றே பட்டது சுஷ்மிதாவுக்கு.
விறுவிறுவென்று காய்ச்சல் பற்றிய விசாரணைகளை சுஷ்மிதா முடிக்கவும், குருவம்மாளின் மகன் ஊதாக் கலர் பையைக் கொண்டு வந்து தரவும் சரியாக இருந்தது. குருவம்மாளிடம் அந்த மாதத் தவணை தர வேண்டியவர்களின் வீட்டைப் போய் தட்டினாள். “எங்க அத்தை உங்களை நம்பித்தானே சீட்டு சேர்த்துச்சு? இதுவரைக்கும் எத்தனை தடவை அவகிட்ட பணம் வாங்கி இருப்பீங்க. ஒரு தடவையாவது ஏமாத்துச்சா எங்க அத்தை? நீங்களும்தானே லாபம் பார்த்தீங்க.. இப்பவும் நீங்கதான் குடுத்து உதவணும்.. எக்ஸ்ட்ரா பைசா கேக்கல.. இந்த மாசம் கட்ட வேண்டிய சீட்டு ரூபாயைக் குடுங்க போதும்” என்றாள்.
‘தந்து விடுகிறோம்’ என்றார்கள் சிலர். ‘யோசித்துச் சொல்கிறேன், வீட்டில் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று சிலர் சொன்னார்கள். ஓரிருவர், “இந்தா.. ஏற்கனவே ரெடியா எடுத்துதான் வச்சிருந்தேன்.. நீன்னா நம்பிக்கையா கொடுத்துரலாம்..” என்றார்கள். யாரும் எதிர்மறையாகச் சொல்லவில்லை. சின்னராசா போட்ட தூபம்தான் அவர்களைத் தாமதிக்கச் செய்திருந்தது. மற்றபடி யாருக்கும் குருவம்மாள் மேல் கெட்ட அபிப்ராயம் இல்லை.
பணப்பிரச்சனை தீர்ந்து விட்டது, இனிமேல் குருவம்மாள் கண்விழிக்க வேண்டியதுதான் பாக்கி என்று நினைத்தாள் சுஷ்மிதா. குரல் பதிவில் என்ன பேசி அனுப்புவது? என்று அதுவரை யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது தெளிவாகப் பிடிபட்டது.
ஒரு வீட்டு வாசலில் கிடந்த கல்பெஞ்சில் அமர்ந்து கடகடவென்று ஃபோனை எடுத்து, இரண்டு நிமிடம் ஓடும் அளவிற்கு ஒரு வாய்ஸ் மெசேஜைப் பேசி இந்திராவுக்கு அனுப்பி விட்டாள்.
மறுநாள் நல்ல செய்தியை எதிர்பார்த்தபடி கண்விழித்த சுஷ்மிதாவுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் வருவதற்குப் பதிலாக ஃபோனே வந்தது. “ஏட்டி சுஷ்மிதா.. நீ பேசி அனுப்புனதுதான் மந்திரம் போட்ட மாதிரி வேலை பாத்திருக்குதுடி.. உங்க அத்தை கண்ண முழிச்சிட்டாளாம்.. ரெண்டு நிமிஷம் கண்ணை முழிச்சு எல்லாரையும் சுத்திப் பார்த்திருக்கா.. அப்புறம் மறுபடியும் மூடிகிட்டாளாம். மத்தியானத்துக்குள்ள நல்லா ஆயிடுவான்னு சொல்லிருக்காங்க” என்றாள் இந்திரா குதூகலத்துடன்.
“அப்படி என்னத்தடி பேசி அனுப்புன..?” என்றான், ஃபோன் சத்தம் கேட்டு எழுந்த சுஷ்மிதாவின் கணவன்.
“அதுவா… உனக்கு இந்த மாசம் தவணை கொடுக்க வேண்டியவங்க எல்லார் கிட்டேயும் பேசி வசூலிக்க ஆரம்பிச்சிட்டேன். உன் மகன் கிட்ட கொடுத்து வைக்கிறேன்.. இப்ப நான் கேட்டாக் கூட மறுப்பு சொல்லாம சீட்டு பணத்தை தந்திடுறாங்க.. சீக்கிரம் முழிச்சு வாறியா.. இல்லாட்டி உன் ஏரியாவையும் நான் எடுத்துக்கிடப் போறேன்” அப்படின்னு சொன்னேன்.. கண்ணு முழிச்சுட்டா!” என்றாள் சுஷ்மிதா.