வாழ்தல் இனிது

“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா.

இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண நிகழ்வில் மீண்டும் சந்தித்ததாக, தர்மனிடம் சொல்லியிருந்தாள். ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் அவரது கணவர் வீட்டை கவனித்துக் கொள்வதாகவும் வேலைக்குச் செல்வதில்லை எனவும் கூடவே சொல்லியிருந்தாள். வாரம் தவறாமல் பாமாவும் ஜீவிதாவும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிட்டுக்கொண்டே இருப்பதாலும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் அன்று பள்ளி டூர் போகவிருப்பதாலும் இந்த வாரம் போவதாக ஜீவிதாவின் யோசனை.

“அங்கேயே கொன்னு போட்ருவேன். வாய வச்சுக்கிட்டு தேமேன்னு இருக்கணும். புரிஞ்சுதா?” என்றாள் ஜீவிதா.

எப்போதும்போல இப்போதும் ‘தேமே’ என்றுதான் இருந்திருப்பான் தர்மன். பாமா அனுப்பிய குடும்ப ஃபோட்டோவை காட்டாமல் இருந்திருந்தால். பாமாவின் கணவன் சத்யநாராயணன் தர்மனின் கல்லூரி நண்பனாக இருப்பான் என யாருக்குத்தெரியும்?

“அதெப்படி ஜீவி? அவன் எவ்வளவு பெரிய படிப்பாளி தெரியுமா? எல்லாம் கரைச்சுக் குடிச்சவன்போல வெறித்தனமா மார்க் வாங்குவான்.  வாழ்க்கையில் எங்கயோ போவான்னு பேசிப்போம், ஆனா, அவன் வீட்டோட சமையல் பண்றான், பாத்திரம் கழுவறான், துணிதுவைக்… அச்சோ, என்னால ஜீரணிக்கவே முடியலை” என்றான் தர்மன் நிஜ வருத்தத்துடன். சுமாராகப் படித்த தானே ஒரு அரசு வேலையில் இருப்பதையும், சத்யநாராயணனின் பரிதாப நிலைமையும் அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தின.

“அதெல்லாம் அவங்க குடும்பவிஷயம். போனோமா, ரெண்டுவாய் சாப்பிட்டோமா, நலம் விசாரிச்சோமா அதோட வரணும்… புரியுதா. எதாவது வாய குடுத்து ஏழரையை இழுத்துவிட்டீங்கன்னா அப்புறம் பத்ரகாளி ஆகிடுவேன்… ஆமா”

“ட்ரைபண்றேன்” என்று முடித்தான் தர்மன். ஜீவிதாவின் பத்ரகாளி அவதாரம் எவ்வளவு அழகாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.

ஞாயிறு மதியம் பாமாவின் வீட்டை அடைந்தார்கள். மிக அழகிய இரண்டுமாடி வீடு. மாடியில்தான் அவர்களின் இயல்பு வாழ்க்கை. கீழே ஒரு அழகிய கலைக்கூடம் போல அமைத்திருந்தார்கள். ஆங்காங்கே ஓவியங்கள், ஜன்னல் ஓரங்களில் வெயில்படும்படி பூச்செடிகள், காணக்கிடைக்கா டிசைன்களில் அழகிய திரைச்சீலைகள்,  ஒருபக்கம் சிறு மேடைபோல அமைத்து அங்கே உட்கார்ந்து படிக்கும் வகையில் ஒரு டேபிள்சேர், கூடவே சிறு நூலகம். இதைப்போல இரண்டு மடங்கு பெரியவீடான தங்கள் வீட்டின் நிலையை மனதில் நினைத்துக்கொண்டனர் ஜீவிதாவும் தர்மனும்.

அற்புதமாகச் சமைத்திருந்தான் சத்யநாராயணன். கல்லூரிக் காலங்களில் தர்மன், சமோசா பிரியனாக இருந்ததை மனதில்கொண்டு சூடாக அதைப் பரிமாறினான். அவன் சமைத்து வைத்திருந்த விதவிதமான டிஷ்களை ஹோட்டலில்கூட கண்டதில்லை ஜீவிதா. சைவம் தனியாகவும், அசைவம் தனியாகவும் வைத்து அசத்தியிருந்தான். சிக்கனின் சிவப்புநிறம் கண்ணைப் பறித்தது. போட்டி வறுவல் மனதை அள்ளியது. நெய்சாதம் என்று ஒன்று இதுவரை சாப்பிடாத சுவையில் இருந்தது. கொஞ்சமும் பிடிக்காத ரவாகேசரியை அன்று தர்மன் அள்ளி அள்ளி விழுங்கியதை பார்த்து அதிசயித்தாள் ஜீவிதா.

“அப்பாடா, ஃபுல்மீல்ஸ். இப்போ ஸ்ட்ராங்கா ஃபில்டர் காஃபி குடிச்சா எப்படி இருக்கும்?” என்றாள் பாமா. உடனே  கேட்டான் சத்யநாராயணன்,

“டபுள் ஸ்ட்ராங்கா போடவா”

“அச்சோ, கணவரே… அதையாவது நான் போடறேன்.  என் ஃப்ரெண்டோட வீட்டுக்காரர் என் கணவரின் ஃப்ரெண்டுங்கறதே அதிசயம். அவரோட பேசுங்க, ஜஸ்ட் டென் மினிட்ஸ்ல வரேன். நானும் நல்லாதான் போடுவேன்” என்றபடி கிச்சனில் நுழைந்தாள் பாமா. அவள் சென்றதும் கனத்த அமைதி நிலவியது. அதைக் கலைக்கும் விதமாக,

“நீங்க பேசுங்க, நான் அவளோடு இருக்கேன்” என்றபடி கிச்சன் பக்கம் நகர்ந்தாள் ஜீவிதா.

“பாமா, உன்ட்ட ஒண்ணு கேட்கணுமே” என்றாள் ஜீவிதா.

“அவர் ஏன் வேலைக்கு போகாம சமைச்சுட்டு இருக்கார்ன்னா?” சிரித்தபடி கேட்டாள் பாமா.

“அடக்கடவுளே, அதில்லப்பா, உங்கிட்ட அதைமட்டும்தான் எல்லோரும் கேட்கறாங்களோ?”

ஃபில்டரில் சுடுதண்ணீரை ஊற்றி மூடியிட்டு ஒரு ஓரமாக  வைத்து, பாலை அடுப்பில் வைத்துவிட்டு சிரித்தபடி திரும்பினாள் பாமா.

“ஆமாடீ, அதான் முதல் கேள்வி. வேலைக்குப் போயிட்டு இருந்தவர்தான். பெரிய கம்பெனியில் ஈடி. வேலைக்கு எல்லாமே ஆளுங்க வச்சிருந்தோம். ஆனா அவருக்குக் கடந்த சிலவருஷமா கொஞ்சம் முடியலை. தொடர்ந்து நாலுமணி நேரம் வேலை செஞ்சா மயங்கிடுவார். சிலநேரம் பிட்ஸ்போல வந்திடுது. ஏதோ சத்துக்குறைவுன்னு சொல்றாங்க. அதான் குழந்தைங்ககூட வேணாம்னு தள்ளிவச்சிருக்கோம்.”

“ஆனா இங்க எல்லாவேலையும்…?”

“அவரு ஹாபியா கத்துகிட்டார் எல்லாமும். ஒரு துளி கறையில்லாமல் துவைப்பார். பாத்துப்பாத்து சமைப்பார். வீட்டை அழகா பராமரிப்பார். அது எல்லாமே அவருக்கு நிம்மதியைத் தருது.  கூடவே கதை எழுதுவார், இண்டீரியர் டிசைன்ஸ் போட்டுத்தருவார். அதிலயும் வருமானம் பாக்கிறார். என்னவொரு நல்லதுன்னா, தன் உடல் எவ்வளவு தாங்குமோ பாத்துப்பாத்து ஓய்வெடுத்துச் செய்வார். அழகாப்போகுது வாழ்க்கை. நீ என்ன கேட்கணும்னு இருந்த?”

“வந்து … உன் ஹஸ்பண்ட்கிட்ட டிப்ஸெல்லாம் கேட்கலாமான்னு”

“அச்சோ, தாராளமா கேளு, சந்தோஷப்படுவார். இப்போ இல்லைனாலும் கால் பண்ணு, வாட்ஸாப்ல கேளு. தயங்காம சொல்லுவார்”

ஹாலுக்கு கோப்பைகளுடன் வந்தார்கள்.

சத்யநாராயணன் ஜீவிதாவைப் பார்த்துப் பேசினான்,

“என்ட்ட ‘ஏன் ஹவுஸ் ஹஸ்பண்டா சும்மாயிருக்கே?’ன்னு கேட்டான், சொல்றதுக்குள்ள நீங்களும் வந்துட்டீங்க. இப்போ துவைக்க, வீடு பராமரிக்க, சமையலுக்கு, தோட்டத்துக்கு, டிரைவர் இப்படி எல்லா வேலைக்கும் தனித்தனியா ஆள் போட்டால்  மொத்தம் நாற்பதாயிரம் சம்பளம் வருது. இது எப்படி சும்மா இருக்கிறதாகும்?  கூடவே வீட்ல இருந்தபடியே டிசைன்ஸ்ல ஒரு இருபதாயிரம் சம்பாதிக்கிறேன். கணக்குப்பார்த்தால் இவனைவிட கொஞ்சம் அதிகம். அப்போ நீங்க ஹவுஸ்வைஃபா வீட்ல ‘சும்மா’தான் இருக்கீங்களா?”

ஜீவிதா தர்மனைப் பார்த்து முறைத்ததில் பத்ரகாளி தெரிய ஆரம்பித்தாள்.

Author

Related posts

வழி நடத்தும் நிழல்கள்

நல்லாச்சி – 12

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு