வளர்நிலையில் வரும் தனிமை

வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் பற்றி ஆராய்கிறது.

குடும்ப வழக்கங்களால் ஏற்படுத்தப்படும் தனிமை இதில் ஒரு வகை. வீட்டுப் பழக்கவழக்கங்கள், பெற்றோர்களின் கட்டுக்கோப்பான வளர்ப்பு, மற்றும் பெரியவர்களின் அதிகமான கண்காணிப்பு ஆகியவை குழந்தைகளைத் தனிமையில் தள்ளுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணம் 12 வயதான ரகுவின் கதை. அவன் தன் அக்கம்பக்க நண்பர்களுடன் விளையாட மிகவும் ஆர்வமாக இருந்தான். ஆனால் அவனுடைய தாத்தா, ‘நல்ல குடும்பக் குழந்தைகள் வெளியே அலைவதில்லை’ என்று கடுமையாகத் தடுத்தார். நாளடைவில், ரகு தன்னுடைய அறையில் மட்டுமே நேரத்தைச் செலவிட ஆரம்பித்தான். மற்ற குழந்தைகள் விளையாடும் சப்தம் கேட்கும்போது அவன் மனதில் ஏக்கம் வளர்ந்தது. இதுபோன்ற நிலைமைகள் குழந்தைகளின் சமூக தொடர்பு திறன்களைப் பாதித்து, அவர்களை உள்மூடலாக மாற்றுகிறது.

சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைப் படித்தும் கேட்டும் அறிந்த பெற்றோர்கள், முன்னைவிட இன்னும் அதிகமாகக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

கலாசார மாற்றங்களால் ஏற்படும் தனிமை வேறு வகை. நாட்டை விட்டு வெளியேறும் குடும்பங்களின் குழந்தைகள் அடிக்கடி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். புதிய கலாச்சாரத்தில் தங்களுக்கு இடமில்லை என்ற தவறான எண்ணம் அவர்களைத் தனிமையில் ஆழ்த்துகிறது. கோமதி என்ற 14 வயது பெண்ணின் அனுபவம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவள் தன் குடும்பத்துடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்தாள். வீட்டில் தமிழ் பேசும் அவள், பள்ளியில் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது. தன் உச்சரிப்பைக் கேலி செய்த சக மாணவர்களைத் தவிர்க்க, அவள் மதிய உணவு நேரத்தில் நூலகத்தில் தனியாக அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தாள். படிப்படியாக அவள் எல்லோரிடமிருந்தும் விலகி தனித்துவிட்டாள். இப்படிப் புதிய சூழலில் தங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் குழந்தைகள் உள்ளார்ந்த கோளாறுகளை எதிர்கொள்கின்றனர்.

இன்னும் சிலருக்குப் பருவ வயதில் உடல் வளர்ச்சி காரணமாக, தனிமை ஏற்படுகிறது.

வளரும் பருவத்தில் உடல் வேறுபாடுகள் (உயரம், எடை, உடல் திறன்) அல்லது மற்றவர்களின் கேலி காரணமாக ஏற்படும் தாழ்வுமனப்பான்மை கடுமையான தனிமையை உருவாக்குகிறது. இது குறித்து அருண் என்ற சிறுவனின் வாழ்க்கை அனுபவம் நமக்குத் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. அவன் தன் வயதுக்கு மிகவும் குட்டையாக இருந்தான். கூடைப்பந்து விளையாட்டின்போது மற்ற சிறுவர்கள் அவனைத் தேர்வு செய்வதில்லை. ‘நீ ஒருத்தன் போதும், நாங்க ஜெயிச்சிடுவோம்’ என்ற கேலியான பேச்சுகள் அவனை மிகவும் வேதனைப்படுத்தின. இதன் காரணமாக அருண் விளையாட்டு நேரத்தில் வகுப்பறையிலேயே அமர்ந்து இருக்க ஆரம்பித்தான். உடல் வேறுபாடுகள் காரணமாக கேலிக்கு ஆளாகும் குழந்தைகள் தங்களைத் தாழ்ந்தவர்களாக நினைத்துக்கொண்டு சமூகத்திலிருந்து விலகி விடுகின்றனர்.

இரு கலாச்சாரங்களுக்கு இடையில் வாழும் இளையோர் அடிக்கடி அடையாள நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். வீட்டின் மதிப்புகளும் வெளி உலகின் எதிர்பார்ப்புகளும் வேறுபட்டிருக்கும்போது அவர்கள் குழப்பம் அடைகின்றனர். பிரியா என்ற பெண்ணின் அனுபவம் இந்தக் குழப்பத்தின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது. அவள் ஒரு முற்போக்கான குடும்பத்தில் வளர்ந்தாள். ஆனால் அவளுடைய தாத்தா, பாட்டி மிகவும் பாரம்பரியவாதிகள். அவள் பள்ளிக்கு நீண்ட கால்சராய் அல்லது பாவாடை மட்டுமே அணிந்து பள்ளிக்குச் செல்ல வீட்டில் அனுமதி. குட்டைப் பாவாடை அல்லது ஷார்ட்ஸ் அணிந்தால் வீட்டில் விமர்சனம், ஆனால் மற்ற பெண்கள் நவீன உடைகள் அணிவதைப் பார்க்கும்போது தான் பின்தங்கியவள் என்ற எண்ணம். இந்த இரட்டை வேதனை அவளை குழப்பத்தில் ஆழ்த்தி, யாரிடமும் பேசாமல் இருக்க வைத்தது. இப்படித் தொடர்ந்து முரண்பாடான சூழ்நிலைகளில் வாழ்வது குழந்தைகளை மனரீதியாகப் பாதித்து தனிமையில் ஆழ்த்துகிறது.

வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் தனிமை பல்வேறு எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது. உளவியல் அளவில், இது மன அழுத்தம் மற்றும் கவலையை அதிகரித்து, குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது. எதிர்காலம் பற்றிய தேவையற்ற அச்சம் மற்றும் சந்தேகம் ஆகியவை அவர்களின் மன நலத்தைச் சீர்குலைக்கின்றன.

சமூக தளத்தில், தனிமை குழந்தைகளின் தொடர்பு கொள்ளும் திறனைப் பாதிக்கிறது. அதனால், நண்பர்களை உருவாக்குவதில் அவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. குழு நடவடிக்கைகளில் பங்கேற்கத் தயங்கும் இந்தக் குழந்தைகள் சமூக உறவுகளை வளர்த்துக்கொள்வதில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

கல்வி அளவில், தனிமையில் உள்ள குழந்தைகள் வகுப்பறை விவாதங்களில் பங்கேற்கத் தயங்குகின்றனர். இதனால் அவர்களின் அறிவுசார் ஆர்வம் குறைந்து, கூட்டுத்திட்டங்களில் ஒத்துழைப்பது கஷ்டமாகிறது. இந்த எல்லா தாக்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தடைபடுத்துகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண குடும்பம், கல்வி நிலையங்கள், மற்றும் சமூகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. பெற்றோர்களுக்கு முதன்மையான பொறுப்பு உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் சமூக தேவைகளையும் சமமாக கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரங்களில் நண்பர்களுடன் விளையாட அனுமதித்தல், அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு திறந்த உரையாடல் நடத்துதல், மற்றும் வயதுக்கு ஏற்ற சுதந்திரம் வழங்குதல் ஆகியவை பெற்றோர்கள் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்.

கல்வி நிலையங்கள் எல்லா குழந்தைகளும் பங்கேற்கக்கூடிய உள்ளடக்கிய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். புல்லியிங் மற்றும் கேலிகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்தல், உளவியல் ஆலோசகர்களை நியமித்து குழந்தைகளின் மனநலத்தைக் கவனித்தல் ஆகியவை கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும்.

சமூக அளவில், வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் குழந்தைகள் ஒன்றாகப் பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டாடும் நிகழ்வுகள் மூலம் அடையாளக் குழப்பத்தைக் குறைத்தல், மற்றும் பெரியவர்கள் இளையோருக்கு வழிகாட்டும் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகின்றன.

தனிநபர் மேம்பாட்டு அளவில், குழந்தைகள் தங்களுடைய பலங்கள் மற்றும் ஆர்வங்களைக் கண்டறிந்து அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய குழுக்களிலிருந்து ஆரம்பித்து படிப்படியாகப் பெரிய குழுக்களுடன் பழகுதல், விளையாட்டு, கலை, இசை போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று புதிய நண்பர்களைச் சந்தித்தல், மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தொடர்புகளில் சமநிலை பேணுதல் ஆகியவை சுய-மேம்பாட்டிற்கான வழிகள்.

வளர்ந்து வரும் சூழலில் ஏற்படும் தனிமை ஒரு சாதாரண, ஆனால் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை. குடும்பம், கல்வி நிலையங்கள், மற்றும் சமூகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இதைத் தீர்க்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவி செய்வது நம் கடமை.

தனிமை என்பது தற்காலிகமானது, ஆனால் அதன் தாக்கங்கள் நீண்டகாலம் நீடிக்கலாம். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே தகுந்த நடவடிக்கைகள் எடுத்து, எல்லாக் குழந்தைகளும் ஆரோக்கியமான சமூக உறவுகளை வளர்த்துக்கொள்ள வழிவகை செய்வது அவசியம். ஒரு குழந்தையின் மகிழ்ச்சியும் வெற்றியும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் அக்கறையிலும் புரிதலிலும் தான் இருக்கிறது.

தனிமை என்பது தேர்வு அல்ல, அது சூழ்நிலையின் விளைவு. அதை மாற்ற நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.”

Series Navigation<< மாற்றுத்திறனாளிகளின் தனிமை

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19