வரலாற்றில் பொருளாதாரம்: – 7

அத்தியாயத்திற்குள் போவதற்கு முன்பு சில கேள்விகள்.

இன்றைய நாளில் விரும்பினால் மட்டுமே வரி செலுத்தலாம் அப்படி செலுத்தாமல் இருந்தால் உங்கள் மீது எந்தவித கேள்வி கேட்க மாட்டார்கள் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களென இருந்தால் நீங்கள் வரியை செலுத்துவீர்களா ?

சுதந்திரமாக நீங்கள் திருடலாம், கொலை மற்றும் கற்பழிப்பு ஆகியவற்றை செய்யலாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் தண்டனை என்பது இல்லை என்கிற நிலை ஒன்று இருந்தால் யாரும் நல்லவன் என்கிற முகமூடியை மாட்டி கொண்டு இருக்க மாட்டார்கள்.

மேல் சொன்ன மாதிரியான நிலை இருந்தால் என்ன நடக்கும் என யோசித்து பாருங்கள்.

சமூகம் என்கிற அமைப்பு இருக்காது. சமூகம் என்கிற அமைப்பு உயிருடன் இருக்காது. சமூகம் என்கிற ஒன்று இல்லாத பொழுது பொருளாதார வளர்ச்சி என்பதும் இருக்காது.

இதன் மூலம் என்ன புரிந்து கொள்ள முடிகிறதென்றால் பொருளாதார வளர்ச்சிக்கு சமூக அமைப்பு தேவையான ஒன்றாக இருந்துள்ளது. கட்டுக்கோப்பான சமூகம் நிலைத்திருக்க சட்டங்கள் இன்றியமையாத விஷயமாக இருந்திருக்கிறது.

பல லட்சம் ஆண்டுகள் வேட்டையாடி கூட்டமாக இருந்த மனிதர்கள் ஒரு இடத்தில் சமூகமாக வாழ தொடங்கிய பொழுது சட்டங்கள் தனிநபரின் உரிமைகளை காக்க உருவாக்கப்பட்டது.
தனிநபருக்கு உரிமை என்று ஒன்று இருக்கிறது உணர்த்தியதால் தான் சமூக அமைப்பில் அங்கமாக தனி மனிதன் இருக்கிறான்.

எல்லாம் சரி அப்படியான சட்டங்கள் இருந்ததற்கான சான்று இருக்கிறதா ?

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், அதாவது எழுதப்பட்ட வரலாறு இல்லாத காலத்தில், பொருளாதார வளர்ச்சிக்குச் சட்டங்கள் நேரடியாகப் பங்களித்ததற்கான ஆதாரங்கள் அரிது.
இருப்பினும், மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்தபோது, சமூகங்கள் பெருகி சிக்கலான நிலைக்கு மாறின. அப்போது பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு சில விதிகள் மற்றும் நெறிமுறைகள் தோன்றின. இதுவே பின்னர் சட்டங்களாக பரிணமித்தது.

அப்படி பரிணமித்த சட்டங்களின் முக்கியப் பங்கு என்னவாக இருந்ததென பார்ப்போம்.

சொத்துரிமை: வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்த நிலை மாறி, மனிதன் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு மாறியபோது, நிலம் மற்றும் உடைமைகளுக்கு உரிமை கோரும் தேவை எழுந்தது. இதைக் கட்டுப்படுத்தவும், தகராறுகளைத் தீர்க்கவும் சில விதிகள் உருவாக்கப்பட்டன. இது உற்பத்தி மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு வழிவகுத்தது.
வர்த்தகம் மற்றும் வணிகம்: மக்கள் ஒருவருக்கொருவர் பொருள்களைப் பரிமாறிக் கொள்ளத் தொடங்கியபோது, கடன், ஒப்பந்தங்கள், மற்றும் பரிவர்த்தனைகளின் விதிகள் தேவைப்பட்டன. மெசபடோமியா போன்ற பண்டைய நாகரிகங்களில், வர்த்தக முறையை ஒழுங்குபடுத்தவும், மோசடியைத் தடுக்கவும் சட்டபூர்வ ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்பட்டன. இது வணிக நம்பிக்கையை வளர்த்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது.

சமூக அமைதி: ஒரு சமூகத்தில் அமைதி நிலவினால்தான் பொருளாதார நடவடிக்கைகள் தடையின்றி நடக்கும். குற்றங்கள், திருட்டு போன்றவற்றைத் தடுக்கவும், நீதி வழங்கவும் உருவாக்கப்பட்ட சட்டங்கள் சமூக அமைதியைப் பேண உதவின. இது தனிநபர்களுக்குப் பாதுகாப்பை அளித்தது, மேலும் அவர்கள் அச்சமின்றி உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட முடிந்தது.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் முழுமையான சட்ட அமைப்பு இல்லை என்றாலும், ஒரு தனி மனிதனின் உழைப்பிற்கான ஊதியத்தை தருவதற்கு வழிவகை செய்யவும் பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும், சொத்துரிமையைப் பாதுகாக்கவும், சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட ஆரம்பகால விதிகள் மற்றும் நெறிமுறைகள் எல்லாம் உருவாக்கப்பட்டன.
அவை எல்லாம் காலபோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுத்தன.

இந்த அடிப்படை விதிகள் தான் பின்னர் பாபிலோனிய பேரரசர் ஹம்மூராபி சட்டம் போன்ற விரிவான சட்டத் தொகுப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்து, நாகரிகங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

சொத்துரிமை, சமூக அமைதி மற்றும் வணிகர்களின் வர்த்தகம் ஆகியவை தான் ஆதிகாலத்தில் சட்டங்கள் என்கிற கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்தன.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருந்தவை தனிமனிதனின் விருப்பங்கள். ஒரு தனிமனிதனுக்கு விருப்பங்கள் ஏற்பட காரணமாக இருந்தது குடும்பம் என்கிற அமைப்பு. இது போன்ற பல குடும்பங்கள் சேர்ந்து தான் ஒரு சமூகமாக இருந்தது.

ஆக கல்யாணம், குடும்பம் என்கிற அமைப்பு உருவானதால் தான் அன்றைய தேதியில் பொருளாதார வளர்ச்சி என்பது வந்தது. அதனால் ஆதிகாலத்தில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி உருவானது என்பதை சொல்வது அவசியமாகுகிறது.

தொடரும்.

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19