Home உரையாடல்நேர்காணல் – முனைவர் பேராசிரியர் உலகநாயகி பழனி

நேர்காணல் – முனைவர் பேராசிரியர் உலகநாயகி பழனி

by Abinaya Srikanth
0 comments
Ulakanaayaki-pazani

தலைவணங்கி புத்தகங்களைப் படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம் – முனைவர் பேராசிரியர் உலகநாயகி பழனி 

தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதி சொல்லவில்லை ! – முனைவர் பேராசிரியர் உலகநாயகி பழனி 

——–

பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் பேச்சாளராக, பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழ் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கும் அமைப்பாளராக,

73 நாடுகளுக்கு பயணம் செய்து , 193 விருதுகளை வென்று, 40 புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் முனைவர் உலகநாயகி பழனியுடனான உரையாடலில் தமிழ் தடையில்லா அருவியாக பொழிந்தது.

தமிழ் மீதான ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது?

என் தாய் தந்தையர் இருவருமே தமிழ் பேராசிரியர்கள். மூன்று வயதில் உலகப் பொதுமறை நூலான திருக்குறளில் உள்ள 30 குறள்களை மூன்று நிமிடத்தில் தெளிவான உச்சரிப்புடன் ஒப்புவித்ததால், என் பெற்றோரது குருவான பேரறிஞர் முனைவர் மு.வரதராசனார் அவர்கள் 

திலகவதி என்ற என் பெயரை மாற்றி உலகநாயகி என்று பெயர் சூட்டி தமிழ் மொழியில் தலை சிறந்து விளங்குமாறு ஆசீர்வதித்தார்.  சேர்க்கையின் போது‌  திருக்குறள் ஒப்புவித்துத் தான் பள்ளியில் சேர்ந்தேன். சிறுவயதில் இருந்தே எனக்கு தமிழ் மீது அதீத பற்று இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து தமிழ் வழிக்கல்வியை மேற்கொண்டேன்.  என் தமிழ் ஆர்வத்திற்கு தாய் தந்தையினரும் முக்கியக் காரணம்.

தமிழின் மீதான காதல் அதிகரிக்க யார் காரணம்?

பெண்களை ஒதுக்கி வைத்திருந்த காலத்தில் அவர்களது மதிநுட்பம் நம் விடுதலைக்குத் துணை நிற்கும் என்று நம்பிக்கை வைத்து

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி’

என்ற பாரதியை 12 வயதிலேயே படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 12 முதல் 17 வயது வரையிலான பாரதி குறித்த எனது பேச்சுக்களை பதிவு செய்யாவிட்டாலும், கல்லூரி முதலாம் வகுப்பிலிருந்து 43 ஆண்டுகள் வரை பாரதியார் குறித்து நான் பேசிய 100 மேடைப்பேச்சுகளை பாரதி 100 என்ற தொகுப்பாகவும், பாரதியின் வரலாற்றை ‘எட்டையபுர எரிமலை’ என்ற  நூலாகவும் வெளியிட்டிருக்கின்றேன்.

பாரதி சங்கத்தின் முதல் பெண் செயலாளராக பாரதியாரின் 103 வது பிறந்தநாளன்று 103 பாரதி ஆர்வலர்களுக்கு விருதளித்ததை பாரதியைக் கொண்டாடும் வாய்ப்பாகக் கருதினேன்.

ஒரு பேச்சாளராக 73 நாடுகளின் சுற்றுப் பயணத்தில் கற்றவை?

ஒரு ஏழைப் பேராசிரியருக்கு ஐந்தாவதாக பிறந்த மகள் தமிழால் உலகை வலம் வர முடியும் என்பதற்கு 1994ல் தொடங்கிய என் பயணம் ஒரு சான்று. பயணங்களை நான் எதிர்பார்த்தது இல்லை என்றாலும் , ஒரு  நாட்டில் நிகழ்த்தும் உரை 

மற்றொரு நாட்டிற்கான  அழைப்பாக    அமைந்து விடும். வாழ்வாதாரத்திற்காக உலகம் முழுவதும் சென்று சேர்ந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் தமிழையும் எட்டுத்திக்கும் கொண்டு சேர்த்திருக்கின்றார்கள்.

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும்போது நம் நாட்டில் அதற்கான வழியில்லையே என்ற ஆதங்கம் தோன்றியது.

உலகெங்கும் சிறப்பாக வாழும் தமிழ் மக்கள் தமிழுணர்வுடன்  அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்க்கப் பள்ளிகள் , தமிழ்ச்சங்கங்கள் மற்றும் இணைய வழி வகுப்புகளுக்கான முன்னெடுப்பை மேற்கொண்டு இருப்பது , நம் நாட்டில் நாம் அதே அளவு தமிழ் ஆர்வத்துடன் இருக்கின்றோமா என்ற கேள்வியை எழுப்பியது. தமிழுக்கு என்னால் முடிந்த தொண்டாக ‘ உறவுச்சுரங்கம்’ என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, சுமார் 11 ஆண்டுகளாக சங்க இலக்கியங்கள், நாயன்மார்கள், தமிழ் ஆளுமைகள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்த மாத, வாரக்கூட்டங்களை நடத்தி வருவதற்கு, அயலகத் தமிழர்களே தூண்டுகோலாக அமைத்திருக்கின்றார்கள்.

‘கலைஞரின் படைப்புலகில் பெண்ணியம்’ என்ற புத்தகம் உருவான சூழல் குறித்து ?

கோவை செம்மொழி மாநாட்டை செம்மையாக நடத்தியதற்காக கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அந்த மாநாட்டில் பங்கேற்ற சுமார் 50 பெண் தமிழ் பேராசிரியர்களிடம்‘கலைஞரின் படைப்பில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை பகிரக் கேட்டிருந்தேன். அந்த 50 கட்டுரைகளின் தொகுப்பான இந்த ஆய்வு நூலுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் கல்லூரி பேராசிரியர்களின் வருவாயை உயர்த்திய அந்த மிகச் சிறந்த மனிதருக்காக வெளியிட்ட புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சேர்த்தது மனநிறைவு கொடுத்தது.

தற்காலத்து சிறுவர்கள் தமிழ் எழுதவும் வாசிக்கவும் சிரமப்படுவது மெல்லத் தமிழினிச் சாகும் என்பதை குறிக்கின்றதா ?

தமிழ்த்துறைத் தலைவராக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 30 ஆண்டு சேவைக்குப்பின்னான பணி ஓய்விற்குப் பின்னும் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தும், வாசிப்பில் உச்சரிப்பு பயிற்சியும் கொடுத்து வருகின்றேன். வாய்க்கால் சரியாக வெட்டப்பட்டால் தான் வயலுக்கு தண்ணீர் போய்ச் சேரும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு முறையாக தமிழைக் கற்றுக் கொடுத்து, அவர்களை வழிநடத்தி, அவர்களுக்குத் தமிழில் பெயர் வைத்து, தாய்மொழி வழிக் கல்வியை ஆதரித்து, இல்லத்தில் தமிழ் பேசுவதை ஊக்கப்படுத்தி, மொழி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொண்டால் இக்காலத்து சிறுவர்கள் மிகவும் சுலபமாகத் தமிழை கற்றுத் தேர்ந்து விடுவார்கள். தமிழுக்கு அழிவில்லை.‘மெல்லத் தமிழினிச் சாகும்” என்று சொன்ன ஒருவரைத்தான் பாரதி கோபத்துடன் “கடிந்து” ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

திருக்குறளை ஏன் வாசிக்கவேண்டும்?

நான் சுமார் 40 நூல்களை வெளியிட்டு இருந்தாலும் ‘வாழ்வியல் வள்ளுவம்’ என்னுடைய முதல் நூல் என்பதில் எனக்கு பெருமை உண்டு. எட்டு ஆண்டு கடின உழைப்புக்குப்பின், மாணவர்களுக்கு எளிதாக புரியக்கூடிய வகையில் திருக்குறளுக்கான தெளிவுரை எழுதி இருக்கின்றேன். மேலாண்மை படிப்புகளில் (management theory) கற்றுத் தெரிந்து கொள்ளும் முக்கிய வணிகத் திறன்கள், 4000 ஆண்டுக்கு முன்னரே திருக்குறளில் காலமறிதல், இடமறிதல் , வலிமை அறிதல் என சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு தொழிலை எந்த காலத்தில் தொடங்க வேண்டும்? எந்த இடத்தில் தொடங்க வேண்டும்? பொதுமக்களின் திறனை எவ்வாறு தெரிந்து கொண்டு அந்த வியாபாரத்தை தொடங்க வேண்டும் ? போன்றவை திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மேற்கோள் காட்டுவதற்காக திருக்குறள் எழுதப்படவில்லை. நம் வாழ்வில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் திருக்குறள் எழுதப்பட்டிருக்கின்றது.

தமிழ்ச்சங்கங்கள், வளர்ச்சிக் கழகங்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சி மன்றங்களால் தமிழ் மொழிக்கு என்ன பயன்?

நான் தற்போது உலகத் தமிழ் ஆராய்ச்சி பெருமன்றத்தின் International Association of Tamil Research (IATR) செயலர் ஆக பணியாற்றுவதால் அவர்களின் முக்கிய செயல்பாடுகளை பட்டியலிட முடியும்.

உலகில் எங்கிருந்தாலும்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு , பதினெண் கீழ்க்கணக்கு என 36 சங்க இலக்கியத்தை அறிந்து கொள்வதற்கான இணையதளத்தைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்நூலகமாக  அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் ஆர்வலர்களுக்கான பதவிகளைக் கொடுத்து தமிழை உலக அரங்கில் கொண்டு செல்வதற்காக, ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மற்றும் தமிழிலிருந்து ஆங்கிலம் போன்ற

மொழியாக்கங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றார்கள். 

குழந்தைகள் கலைக்களஞ்சியம்,

தமிழ் மொழிக் கலைக்களஞ்சியம்,

மருத்துவக் கலைக்களஞ்சியம் ,ஏழு பாகங்களுடனான சித்த மருத்துவக் கலைக்களஞ்சியம், உயிரியல் ஆய்வு, மண்ணியல் ஆய்வு, அணுவியல் ஆய்வு என 

அறிவியல், வரலாறு, கலை, இலக்கியம் போன்ற எண்ணற்ற துறைகளின் தகவல்களை எளிய தமிழில் வெளியிட்டு இருக்கின்றார்கள். விஞ்ஞானிகள் , மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஆலோசனைகளோடு உருவாக்கப்படும் தமிழ் கலைக்களஞ்சியங்களை அண்ணா பல்கலைக்கழகத்திலும், சித்த மருத்துவ நூல்களை பத்தாயிரத்துக்கும் அதிகமானோரும் வாங்கி பயன் பெற்றிருக்கின்றார்கள். தமிழக அரசு தற்போது ஒதுக்கியுள்ள இரண்டு கோடி ரூபாய் நிதி தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளித்து தமிழை உலகெங்கும் கொண்டு சேர்க்கும்‌.

விருதுகள், அங்கீகாரங்கள் எவ்வகையான ஊக்கத்தை தருகின்றன?

கடல் கடந்து தமிழ் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த அம்மா இலக்கிய விருது, தமிழ்நாட்டில் சிறப்பாக தமிழ்பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னான முதல் விருதை பெற்றது மிகுந்த மகிழ்வை தந்தது. ரயில் பயணத்தின் போது ஒரு பழ வியாபாரி வானொலியில் கேட்ட என் குரலையும், பேச்சையும் வைத்து என்னை அடையாளம் கண்டு தன் மகளுக்கு என்னுடைய புத்தகத்தை வாங்கி கொடுத்ததாக கூறியது மிகவும் மன நிறைவை கொடுத்தது. 

திருவானைக்காவில் உள்ள தனியார் கல்லூரி, நாமக்கல் அருகே இருக்கும் விவேகானந்தர் கல்லூரி , கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி என பல கல்லூரிகளில் என் புத்தகங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பதை முக்கிய அங்கீகாரமாக கருதுகின்றேன்.

பேச்சாளர் மற்றும் எழுத்தாளராக விரும்புவோர் தங்களை எப்படித் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்?

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், பேச்சாளர்களின்  உச்சரிப்பு, உரைவீச்சு, பட்டிமன்றங்கள், கவியரங்கங்களையும் நன்றாக கவனிக்க வேண்டும். சக பேச்சாளர்களின் பேச்சை கவனித்தால் தான் நமக்கான  ஒரு புதிய பாணியை உருவாக்கிக் கொள்ள முடியும். சிறந்த பேச்சாளர்களின் பேச்சுக்களை திரும்பத் திரும்ப கேட்பதே நம் பேச்சுத் திறமைக்கு அடித்தளமாக அமையும். குமரி ஆனந்தனின் மேடைப்பேச்சு சார்ந்த நூல்கள், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள், மு. வரதராசனாரின் படைப்புகள்,  கலைஞரின் நாடகங்கள், பாரதியார் பாடல்கள் , பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பழம்பெரும் நூல்களை வாசிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் உச்சரிப்பு அழகாகும். குறிப்பெடுப்பதை பழக்கப்படுத்திக்கொண்டு, ஒற்றுப் பிழை இல்லாமல் எழுதக் கற்று, முக்கிய மேற்கோள்கள் மற்றும் கவிதைகளை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

நூலகங்கள் மற்றும் புத்தக கண்காட்சிகளுக்கு சென்று புதிய புத்தகங்களை  வாசிக்க வேண்டும். 

‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாம்’ 

‘உள்ளத்திலே நேர்மையும் தைரியமுமிருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்’.

என்பது பாரதியின் கூற்று. மேடைப் பேச்சுக்கலைக்காக  நான் எழுதிய 18 அத்தியாயங்கள் கொண்ட ‘வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்’ புத்தகத்தில் பல முக்கிய பேச்சாளர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதி இருக்கின்றேன். அப்புத்தகம் ஏழு பதிப்புகளைத்தாண்டி இருந்தாலும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக பதிப்பகத்தாரிடம் எனக்கான உரிமத்தொகையை அவர்களே வைத்துக் கொண்டு  பல பதிப்புகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். ‘தலைவணங்கி புத்தகங்களைப் படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம். எழுதுகோல் தலைவணங்கும்பொழுதெல்லாம் தேசம் தலைநிமிர்கின்றது’.

Author

You may also like

Leave a Comment