கண்கள்
மற்றவர்கள் போலில்லை
கள் வடிக்கும் கண்களை
பெற்றிருக்கிறாள்
கடந்து போவதற்கும்
கரைந்து போவதற்கும்
அவை வழிகாட்டிகள்
**
அவரின்
கண்களைக் கசக்கி மூடிவிட சொன்னார்கள்
என் விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் கசக்கும் வித்தை தெரியவில்லை
வெறித்த விழிகளில்
கடைசியாக எதைப் பார்த்திருப்பார் என எதிர் திசையைப் பார்த்தேன்
அவரே நின்றுக் கொண்டிருந்தார்
**
எந்தக் கண்களை தானம் செய்வது
ஏற்கனவே அவை
அவளைக் காண மட்டுமென
நேர்ச்சை செய்யப்பட்டனவே.
**
கண்ணை மூடிக்கொண்டு கண்டுபிடி
என்கிறாள்
மூச்சுக்காற்றுக்கு மிக அருகே
தன்னை முழுமையாக அசைக்கிறாள்
கண்டுபிடி கண்டுபிடி என
சிரிக்கிறாள்
அவள் வாசனையைக் கடந்து
இனி எப்போதும்
அவளைக் கண்டுபிடிப்பதாக இல்லை
**
கண்களுக்கு வயதாகிவிட்டன
அவன் பெயரில்
யார் யாரோ அணைக்கிறார்கள்
யார் யாரோ முத்தமிடுகிறார்கள்
முன்பு அவன்
யாரைப்போலவோ அணைத்தான்
யாரைப்போலவோ முத்தமிட்டான்
பெயரில் எதுவும் இல்லை.
மங்கோலியக் கூடாரங்கள்
நாடோடியின் நாட்குறிப்புகளில் குறியீடுகளின் நடனங்கள்
தாறுமாறாகக் கிடக்கின்றன எண்ணிலடங்கா பாதங்கள்
ஒவ்வொன்றும் உலகின் வெவ்வேறு திசைகள்
சூரியனும் நிலவும் சாட்சியாகின்றன
வந்தவரெல்லாம் தங்கிட அல்லாத வாழ்வில்
நாடோடிகளின் பிழைப்பு நிச்சயமானது
நீலவானத்தை தெளிவாகக் காண்
தாய் தந்தையின் முகங்களைப் போல்
பனிப்படர்ந்த முகடுகளில் கம்பளிப்பூச்சியென ஊர்ந்து செல்
காவலுக்கு யாருமில்லை களவாடத் தேவையில்லை
செங்கிஸ்கானின் படை வருகிறது
புகைகளின் மத்தியில் குதிரைகளின் மூச்சு சப்தம்
ஒரு தலை துண்டாக வந்து விழும் அச்சப்படாதே
போருக்கான முன்னறிவிப்பு
காதலியின் வாசம்
தந்தையின் இரத்தம்
தாயின் கண்ணீர்
பிள்ளைகளின் பதவி
எதற்காக வேண்டுமானாலும் போர் தொடங்கப்படலாம்
முடிவு முடிவுகளிலிலிருந்து தொடங்கும் கவனி நீ
அசையாத உலோகக் குதிரையின் மீது நிற்கிறான் செங்கிஸ்கான்
ஓநாய்களிடமிருந்து யுத்தம் கற்றுக்கொள்
கால்நடைகளை பழக்கு வாழ்வதற்கும் சேர்த்து
இரண்டு திமில் ஒட்டகங்கள் தோதானச் சவாரி
கழுகுப் பந்தயத்தில் நரம்புகளை கோத்து மாலையிடு
அங்க்பயர்
உனக்கும் ஆசைகள் இருக்கின்றனவா
சொல்
புத்தனுக்கு நேர்ந்துவிடப்பட்ட நிலங்கள்