Home கட்டுரைசீரற்ற நிகழ்வுகள்

சீரற்ற நிகழ்வுகள்

by Balamurugan
1 comment

உலக அரசியல் ஆராய்ச்சித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் பிரைன் கிளாஸ். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். வரலாற்றில் நடந்த சில சீரற்ற நிகழ்வுகளை(random events) விவரிக்கிறார்..

1945 ஆம் வருடம். அமெரிக்க உள்துறைச் செயலாளராகப் பணியாற்றிய ஸ்டிம்சனுக்கு ஒரு இரகசியத் திட்டப் பட்டியல் அவரது மேசைக்கு வந்தது.அதில் ஜப்பானிய முக்கிய நகரங்களின் மூன்று பெயர்கள் கீழ்க்கண்டவாறு வரிசைப்படி இடம் பெற்றிருந்தது.

1.க்யோட்டோ(Kyoto)
2.ஹிரோசிமா
3.கொக்குரா

அத்திட்டத்தின்படி முதல் நகரமான க்யோட்டோவில் முதல் அணுகுண்டைப் போடவேண்டும்.நாசம் செய்து முடித்தவுடன அடுத்த நகரமான ஹிரோசிமாவில் இரண்டாவது அணுகுண்டைப் போடவேண்டும்.இதுதான் இரகசியத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன், ஸ்டிம்சன், அவருக்குக் கீழ் பணியாற்றிய இரண்டு மூன்று ராணுவ மேலதிகாரிகளைத் தவிர யாருக்கும் இப்பட்டியலைப் பற்றித் தெரியாது.

இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் . இறுதியில் அவரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பட்டியலில் இருந்த முதல் நகரமான க்யோட்டோவின் பெயரை நீக்குகிறார் ட்ரூமேன். அதுவரை சாப்பிடவே முடியாமல் பரிதவித்த ஸ்டிம்சன் காஃபி அருந்தச் சென்றார் .

ஸ்டிம்சனின் பதற்றத்திற்கான காரணம் என்ன தெரியுமா?

அவர் பதின்பருவத்தில் வளரும்போது ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களோடு ஜப்பானுக்குச் சுற்றுலா சென்றார். க்யோட்டோவின் எழில்மிகுத் தோற்றத்தில் மெய்சிலிர்த்தார். அந்த நகரத்தின் கலாசாரம், மக்களின் பழக்கவழக்கங்கள். எல்லாம் அவருக்குப் பிடி்த்தது.ஒருகட்டத்தில் அமெரிக்க நகரங்களைவிட அதிகமாகவே விரும்பினார். ஸ்டிம்சனின் மனத்தில் செல்ல நகரம் ஆனது க்யோட்டோ. அப்படி மனத்தில் ஒன்றிப்போன நகரத்தையும்,அந்த மக்களையும் அழிக்க யார்தான் விரும்புவார்?அதற்காகத்தான் ஜனாதிபதியுடன் அவ்வளவு மல்லுக்கட்டினார் ஸ்டிம்சன்.க்யோட்டோவின் பத்து லட்சம் மக்களின் உயி்ர்கள் இவரது தயவால் பிழைத்தன .

க்யோட்டோ நீக்கப்பட்டதால் பட்டியலிலிருந்த இரண்டாவது நகரமான ஹிரோசிமாவில் முதல் அணுக்குண்டைப் போட்டது அமெரிக்க இராணுவம்.அடுத்து கொக்குராவின் மீது அடுத்த அணுக்குண்டெறியவேண்டும். அமெரிக்கப் போர் விமானம் சீறிப் பாய்ந்தது. ஆனால் காலநிலை சரியில்லை.அங்கு கடுமையான மேகமூட்டம். விமானியால் தரையில் என்ன நடக்கிறதென்றே பார்க்கமுடியவில்லை. சரியாக குறிபார்க்கமுடியவில்லை.குண்டு போட்டால் இலக்கு தப்பிவிடும். பின்னடைவு நேரிடும் என்று தன்னால் முடியாது என மறுத்துவிட்டார் போர் விமானி.

என்ன செய்வது என்று யோசிக்கிறது ஸ்டிம்சன் குழு.நேரம் போதாது. சட்டென்று முடிவெடுத்தாகவேண்டும். அவசர அவசரமாக புதியதாக ஒரு நகரம் பட்டியலில் இணைக்கப்பட்டது. அதுதான் நாகசாகி.

அன்று மேகமூட்டம் என்ற அதிர்ஷ்டக் காற்று கொக்குராவின் மீது வீசியதால் அங்குள்ளவர்கள் உயிர் பிழைத்தார்கள்.அதனால்தான் பேரதிர்ஷ்டத்தைக் குறிப்பிடும்பொதெல்லாம் ஜப்பானியர்கள் “கொக்குரா லக்” என்றழைக்கிறார்கள்.

அன்று அணுக்குண்டுப் பட்டியலி்ல் இடம்பெறாமலிருந்த நாகசாகி துரதிர்ஷ்ட நகரமாக மாறியது.அமெரிக்கப் போர் விமானத்தின் இரண்டாவது அணுக்குண்டு எப்படியெல்லாம் சீரழித்தது என்று நான் புதிதாக விளக்கத் தேவையில்லை.

இந்த வரலாற்றின் பாடத்திலிருந்து அதிர்ஷ்டத்தின் இயல்பை மிக நேர்த்தியாக விளக்குகிறார் பிரைன் கிளாஸ்.அதிர்ஷ்டம் ஏதோ ஒருவகையில் ஒருவருக்கு நல்லதைக் கொடுக்கும். அதே நேரம் இன்னொருவருக்கு எந்தக் காரணமும் இல்லாமல் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும்.என்கிறார்

எந்த ஒரு நல்ல காரியமும் எக்காலத்திலும் நல்லதுதான் விளைவிக்கும் என்பது கட்டாயம் இல்லை.நாளைய தலைமுறைக்கு உதவும் என்று இன்று ஒரு செடியை நட்டிருப்பார் ஒருவர்.ஆனால் நூறு வருடங்கள் கழித்து இன்னொருவர் அம்மரத்தை வெட்டியிருப்பார்.இதுவே இயற்கை.மரம் வளர்த்தவர் மரத்துக்கு தீங்கு வேண்டும் என்றா நினைத்தார்?

இன்னொரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்தார் ப்ரைன் கிளாஸ்..

1905 ஆம் வருடம் . விஸ்கான்சினில் ஒரு சிறிய பங்களா இருந்தது. அங்கு க்ளாரா ஜான்சன் என்ற பெண் நான்கு குழந்தைகள் மற்றும் கணவரோடு வாழ்ந்தார். திருமணமான நான்கு வருடங்களி்ல் வருடத்திற்கு ஒரு குழந்தை என இடைவெளியே இல்லாமல் நான்கு குழந்தகளையும் பெற்றெடுத்தார் .கடுமையான வீட்டுவேளை, நான்கு குழந்தைகளையும் பராமரிக்கவேண்டும். ஒரு கட்டத்தில் மனச்சோர்வு அதிகமாகி தீவிர மனநோய்க்கு ஆளானார்.ஒருநாள் தன் நான்கு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியூருக்குப் போயிருந்த கணவன் வீடு திரும்பியவுடன் பேரதிர்ச்சியானார்.

பல வருடங்களாக துக்கத்திலிருந்த அந்தக் கணவன் ‘கடந்துபோறதுதானே வாழ்க்கை’ என சமாதானமாகி மறுமணம் செய்துகொண்டார். அவர் வேறு யாருமில்லை. என் தாத்தா. ஒருவேளை என் தாத்தா மறுமணம் செய்யாமல் வாழ்ந்திருந்தாலோ அல்லது க்ளாராவோடு மகிழ்ச்சியாக காலம் தள்ளியிருந்தால் என் அப்பா என்றொருவர் இருந்திருக்கமாட்டார். நானும் பிறந்திருக்கமாட்டேன் அல்லவா? நான் இன்று சந்தோசமாக இருப்பதற்கு அத்துயரச் சம்பவம்தானே காரணம்? என்று வியக்க வைக்கிறார் பிரைன் கிளாஸ்.

இந்த இரு நிகழ்வுகளிலிருந்து ஒரு பாடம்…

ஒருவர் இன்று துயரத்தை அனுபவி்ப்பதற்கு என்றோ அவருக்கு நடந்த ஒரு மகிழ்ச்சியான சம்பவம் காரணமாக இருக்கலாம்.அதேபோல இன்று ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் என்றோ நடந்த ஒரு துயரம் காரணமாக இருக்கலாம்.

சம்பந்தமே இல்லாமல் எங்கோ யாருக்கோ நடந்த ஒரு துயரச் சம்பவம் வேறொரு இடத்தில் தொடர்பே இல்லாத இன்னொருவருக்கு நன்மையை விளைவிக்கும்.அதேபோல எதிரெதிர் மாறகவும்(vice versa) அமையும்
எந்த விளைவுக்கும் இதுதான் காரணம் என்று யாராலும் உறுதியாக கூறமுடியாது.

நம் புலனறிவுக்குப் புலப்படாத ஒன்றைத் தெரியாது என்றுதானே சொல்லவேண்டும்.ஏன் முன்ஜென்ம பாவம், கர்மா, தலையெழுத்து, விதி
என்று சொல்லவேண்டும்.அதுவும் ஒருவர் துயரத்தில் பரிதவிக்கும்போதா இப்படித் தூற்றுவது?பாறாங்கல்லோடு கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பதற்கு ஒப்பானது.

மதப்புத்தகத்தில் இருப்பதைத்தானே குறிப்பிட்டேன். என ஆயிரம் காரணங்களைக் கூறலாம்.சக மனிதனைக் காயப்படுத்தும் எந்தச் சொல்லாக இருந்தாலும் அதைத் தவிர்ப்பதுதானே ஒரு மனிதன் என்பதற்கான அடையாளமாக இருக்கமுடியும்.

இந்த நாள் அனைவர்க்கும் இனி்ய நாளாக அமையட்டும்.

Author

You may also like

1 comment

அருள் August 20, 2025 - 10:00 am

கேயாஸ் தியரியை வேறு விதமாக விளக்கியது போல உள்ளது அண்ணா

Reply

Leave a Comment