ராஜ்ஜியங்களை எப்படியாக உருவாகிருக்கக் கூடுமென்பதைச் சொல்லிருந்தேன். அப்படி ஒரு கூட்டத்தால் எல்லா இடங்களிலும் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் கொலை செய்து திருடி கொண்டு வந்துவிட முடியுமென்கிற நிலை இருந்திருந்தால் இன்றைய தேதி வரைக்குமே கற்காலத்தில் தான் இருந்திருப்போம்.வணிகம் என்பது பிறந்திருக்காது.
ஒரு கூட்டத்திற்கு தேவையான ஒன்று தூரத்தில் இருக்கும் மற்றொரு கூட்டத்திடம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் இருந்து திருட முடியாது அவர்களை கொலை செய்ய முடியாது என்ற நிலை இருந்திருந்தால் என்ன ஆகிருக்கும் ?
சரி ஏன் அப்படியான ஒரு நிலை வாய்ப்பு இருந்திருக்குமா என கேட்டால் கட்டாயம் இருந்திருக்கும் என்பதற்கான சாத்தியங்கள் தான் அதிகமாக இருக்கிறது. இரண்டு கூட்டத்திற்கும் சம அளவிலான வலிமையுடன் இருந்ததால் ஒரு கட்டம் வரைக்கும் இரண்டு கூட்டத்தில் எதுவும் வெற்றி பெற்று இருக்காது.
ஆக வலிமையுடன் இருக்கும் இரண்டு ஆதிவாசிக் குழு அந்த இன்னொரு ஆதிவாசிக் குழுவினரிடமிருந்து தங்களுக்குத் தேவையானதை பெற வேண்டுமென்றால் அவர்களுக்குத் தேவையானதை நாம் கொடுக்க வேண்டுமென்கிற புரிதலுக்கு ஒரு நிலையில் வந்திருப்பான்.
இப்படியாகத் தான் பண்டமாற்று முறை வந்திருக்க வேண்டும். மிருகத்தில் இருந்து தான் மனிதன் உருவாக்கினான் என்பதால் புணர்வு, வேட்டையாடுதல், உண்ணுதல் ஆகியவை மனிதனுக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றாக தான் இருந்தது.
மிருகத்தில் இருந்து மனிதன் உருவாகவில்லை என வைத்துக் கொண்டால் மனிதன் எப்படி புணரக் கற்று கொண்டான் என்பதே பெரிய கேள்வியாக இருக்கும். அதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கப் போவதில்லை நமது கவனம் முழுவதும் வணிகம் எப்படி இருந்தது என்பதை புரிந்துக் கொள்வதில் தான் இருக்கப் போகிறது.
சரி,
பண்டமாற்று முறை எப்படி நடப்புக்கு வந்தது என சொல்லி இருந்தேன்.
இப்பொழுது பண்டமாற்று முறையை விட்டுவிட்டு ஏன் மனிதர்கள் நாணய வழி வணிகத்திற்கு மாற என்ன காரணம் இருக்க முடியும் ? மனித தேவைகள், மதிப்பிடல் ஆகியவற்றினால் தான் பண்டமாற்று முறை தோல்வியடைந்தது.
மேலும் போன அத்தியாயத்தில் நாம் பார்த்த ராஜ்ஜியங்கள் உருவான விதமும் ஒரு காரணமாக இருந்தது. ராஜ்ஜியங்கள் விரிவடைந்த பொழுது தலைவனுக்கு அவனை சார்ந்த குழுவினர் மூலமாக பண்டமாற்ற நிறைய பொருட்கள் கிடைத்திருக்கும். ஆனால் எல்லா பொருட்களையும் பண்டமாற்று முறையில் கொடுத்து விட முடியாது.
ஏனென்றால் மற்றொரு குழுவினருக்கு அந்த பொருளுக்கான தேவை இருந்திட வேண்டும். உதாரணமாக ஒருவன் கூர்மையான கற்களாலான ஆயுதம் வைத்திருக்கிறேன் அவனுக்கு சாப்பிட பழ வகைகளுக்கான தேவை இருக்கும்.
அவன் சந்திக்கும் மற்றொரு கூட்டத்து ஆளிடம் வேட்டையாடி கொன்ற மிருகங்களின் தோல் இருக்கும் அவனுக்கு சிறு மிருகங்களை விரட்டி அடிக்க சின்ன சின்ன கற்களுக்கான தேவை இருக்கும்.
இப்பொழுது இருவரும் சந்தித்து கொண்டால் அங்கு பண்டமாற்றம் நடக்குமா ?
நடக்காது.
பண்டமாற்று முறை தோல்வியடைய இது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் அந்த பொருளுக்கான மதிப்பீடலும் ஒரு காரணமாக அமைந்தது.
ஒரு ஆயுதத்திற்கு எவ்வளவு காய்கறிகள், பழங்கள் கொடுக்க வேண்டுமென்கிற அளவுகோல் குழப்பங்கள் ஏற்பட தொடங்கியது ராஜ்ஜியங்கள் விரைவடைந்த பொழுது.
உதாரணமாக இரவு சாப்பாட்டுக்கு உங்களிடம் 50ரூபாய் தான் இருக்கிறதென்றால் உணவக விலை பட்டியலை பார்த்துவிட்டு அதற்கு ஏற்றது போல் சாப்பிடுவீர்கள்.
விலைபட்டியல் இல்லாத உணவகங்களில் சாப்பிட போனீர்களென்றால் எங்கே அதிகம் சாப்பிட்டால் கட்டணம் அதிகமாகி விடப் போகிறதே என்கிற பயத்தில் குறைவாக சாப்பிட்டு விட்டு வருவீர்கள்.
இதே பிரச்சனை தான் பண்டமாற்று முறையும் எதிர்கொண்டது.
வேட்டையாடிகளாக இருந்த பொழுதிலும் சிறு குழுக்களாகவும் இருந்த வரைக்கும் இந்த பண்டமாற்று முறை பெரிய விஷயமாக இருக்கவில்லை. ஆனால் சிறு குழுக்களின் மக்கள் தொகை அதிகமான பொழுது பண்டமாற்று முறை அதன் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது.
ஏன் அப்படி ?
தொடரும்.