Home சிறுகதைஅறிவென்பது யாதெனில்..

அறிவென்பது யாதெனில்..

0 comments

“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா.

“விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன்.

“ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா.

மூவர் வாயிலும் விழுந்து கிடந்தவன் தமிழ். ஒரே கல்லூரியைச்சேர்ந்த நால்வரும் அவரவர் துறையில் முதலிடம் பிடித்தவர்கள். கேம்பஸ் இண்டர்வியூவுக்கு வந்த பெரிய கம்பெனி நான்கு பேரையும் தேர்வு செய்து நாளை நடைபெறும் நேர்காணலுக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

கல்லூரி முதல்வர் இவர்களைக் கூப்பிட்டு அறிவுரைகள் சொல்லி நரேனுடன் அவனது காரில் நான்கு பேரும் ஒன்றாகச் செல்லுமாறு பணித்தார். அவர் பேச்சைத் தட்டுவதில்லை நரேன்.

கார் கிளம்பியது. அது ஒரு ஜீப் டைப் கார். எட்டுமணிநேரப் பயணம். முன்னால் நரேனும் சீத்தாவும் உட்கார, பின்னால் ஷாவும், தமிழும் இருந்தார்கள். கிளம்பியது முதல் தமிழைக் கலாய்த்துக்கொண்டே இருந்தார்கள் அவர்கள்.

“அதென்னடா பேரு தமிழ்னு? எங்கயாவது இங்லீஷ், ஜாப்பனீஸ்னு இருக்கா? தமிழாம் தமிழ்”

சிரித்துக்கொண்டான் தமிழ்.

“ஹலோ தமிழ், நாங்கலாம் வேறவேற சப்ஜெக்ட்ன்னாலும் ஒரே பேஸ், சயின்ஸ். நீ இதுக்கு சம்மந்தமில்லாத துறை, தமிழிலக்கியம். உன்னை எப்படிடா செலக்ட் பண்ணினாங்க? நீ அங்க வந்து என்னா பண்ணுவ? க்ளாஸ் எடுப்பியா?” என்றான் நரேன்.

“இல்லல்ல. வந்து பாகவதர் பாட்டுப்பாடி நம்மையெல்லாம் உற்சாகமா வச்சுப்பான்… அதானே “ என்று சொல்லிவிட்டு, சிரிக்க ஆரம்பித்தாள் சீத்தா.

“அதென்னவோபா, சப்ஜெக்ட்டா தமிழ் படிச்சா ரெண்டாவது பக்கத்திலயே தூக்கமா வரும். பேசாம தூக்கமருந்துப் பாடம்னு அதுக்குப் பேர் வச்சிருக்கலாம்” என்றான் ஷா.

மொக்கையாகச் சொல்லி அவர்களுக்குள்ளேயே அடக்க முடியாமல் சிரித்தபடி இருக்க, தன் மெல்லிய புன்னகையால் அவற்றை ஏற்றுக்கொண்டான் தமிழ்.

இரண்டுமணி நேரம் போயிருக்கும். வண்டியை மெயின்ரோட்டை விட்டு காட்டு வழியில் திருப்பினான் நரேன்.

“டேய்… இங்க ஏண்டா போற… இது என்ன வழி?” என்றான் ஷா.

“கத்தாதே, நானும் சீத்தாவும் ஏற்கனவே மேப்ல பார்த்துட்டோம். இது குறுக்குவழி, ரெண்டுமணிநேரம் மிச்சமாகும்” என்றான் நரேன்.

“ரெண்டுமணி நேரம் மிச்சம் பண்ணி?”

“காட்டுக்குள் ஒரு சின்ன ரிலாக்ஸ் பார்ட்டி, எல்லாம் வாங்கியாச்சு, அப்படியே கிளம்பினா சரியா இருக்கும்” என்றாள் சீத்தா.

“ஓ… சூப்பர்” என்றான் ஷா.

வழியில் ஒரு மரத்தடியில் நிறுத்தினார்கள். பாட்டில்கள் திறக்கப்பட்டன. தீனிகள் பரப்பி வைத்து அருந்த ஆரம்பித்தார்கள். தமிழ் வெறுமனே ஸ்னாக்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டான். ஒரு மணி நேரம் போனது. பியரின் தூண்டுதலால் மரத்தடியில் ஒதுங்கிய ஷா அங்கிருந்து கத்தினான்.

“டேய்… இங்க வாங்களேன்”

அவன் காட்டிய இடத்தில் பள்ளத்தில் அந்த மிருக எலும்புக்கூடு கிடந்தது. கீழிறங்கி அதைத் தூக்கி வந்தான் நரேன். கொஞ்சநேரம் அதை உருட்டிப்புரட்டிப் பார்த்தார்கள்.

நரேன் சொன்னான்.. “சிங்கம்போல”

“இங்கே சிங்கம் கிடையாது, புலியாக இருக்கும்” என்றான் தமிழ்.

“டேய், இதுக்கு உயிர் வந்தா எப்படி இருக்கும்?” என்றான் நரேன்.

“கொடுப்போமா?” சீத்தா.

“அதெப்படி?” ஷா.

“இதோ, நரேன் ரோபோடிக்ஸ் எக்ஸ்பர்ட், இவன் இதை இணைக்கட்டும், நான் வயரிங் இணைப்புகள் தந்து இயங்க வைக்கிறேன். நீதானே புரோக்ராமெர், உன்னால எதாவது முடியுமா?”

“சூப்பர், நாளை அவங்ககிட்ட காட்ட ஒரு ப்ரோக்ராம் எழுதிருக்கேன். விலங்குகளின் குணங்களை ரோபோவுக்குப் பதிச்சு அதை மிருகங்களோட சுத்த வச்சு ஆராய்ச்சி பண்ணலாம்னு. யூஸ் பண்ணிப் பாத்துடலாம். தமிழ், நீ இதுக்குப் பாட்டு சொல்லிக்குடு, ஹாஹா” நரேன்.

வேலைகள் ஆரம்பித்தன. எலும்புகள் இணைந்தன. வயர்கள், பேட்டரிகள் அங்கங்கே ஓடின. மூளைப்பகுதியில் அந்த மோட்டார் போன்ற கருவியை வைத்து முடுக்கினான் நரேன். அதில் தன்வசம் இருந்த பாக்ஸைத் திறந்து குறிப்பிட்ட சிப்பை எடுத்துப் பதித்தான். சுவிட்ச் போட்ட கணம் ஒரு நிமிடம் அசையாது இருந்த அந்த எலும்பு ரோபோ திடீர் கர்ஜனையுடன் இவர்கள் மீது பாய்ந்தது.

பயந்துபோய் மூவரும் ஓட ஆரம்பித்தனர். அங்கிருந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடினர். ஒரு நான்கு சுற்றுக்கு அப்புறம் அந்த ரோபோ சட்டென்று கால்கள் முறிய மடங்கி விழுந்தது.

“ஆத்தீ… கொடுமை. இந்த தமிழ் எங்கே காணோம்?” சீத்தா கேட்க, அவர்கள் சுற்றிய மரத்தில் இருந்து இறங்கி வந்தான் தமிழ்.

“எப்படிடா?” ஆச்சரியமாக கேட்டாள் சீத்தா.

“ரெண்டே தீர்வுதான். ஒன்னு தோல்வி, இல்லைன்னா வெற்றி, அதன் பாதிப்பு என்ன வரும்னு தர்க்கமா கணக்குப்போட்டேன். மரம் ஏறிட்டேன்”

“ஓ… அப்போ நாங்க செத்திருந்தா பரவால்லியா?” கோபமாகக் கேட்டான் நரேன்.

“அதெல்லாம் ஆகாது. ஏன்னா அதோட கால்மூட்டில் நரேன் போட்டிருந்த இணைப்புகளை உங்களுக்கு தெரியாம அப்பவே எடுத்துட்டேன். மூணு, நாலு சுத்துதான் சுத்தமுடியும். அப்புறம் விழுந்துடும்.”

“அடப்பாவி, ஏன் எங்ககிட்ட சொல்லலை?”

“தமிழ்னு பேர் வைச்சுக்கறது உலகிலேயே ஸ்பெஷல்னு, ஓடினப்போ உங்களுக்கு தெரிஞ்சுருக்குமில்ல. முன்னயே சொல்லியிருந்தா அசடாட்டம் அங்கேயே இருந்து அதுகிட்ட ஒரு அடியாவது வாங்கியிருப்பீங்க”

“நீ நிஜமாவே அறிவாளிதாண்டா” என்றான் ஷா.

“அதான் இப்படி நடக்கும்போது உதவி தேவைனு என்னையும் செலக்ட் பண்ணியிருக்காங்க” என்றான் தமிழ்.

பயந்திருந்த அவர்களைப் பின்சீட்டில் உட்கார வைத்துவிட்டு தமிழ் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

ஆர்வக்கோளாறுகளான மூவரும், பின்சீட்டில் உட்கார்ந்து, வரும்போது கிடைத்த விரியனின் எலும்புக்கு இணைப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

Author

You may also like

Leave a Comment