Home சிறுகதைபிள்ளை மனசு

விஜி நான் உள்ளே வரும்போதே சொல்லிவிட்டாள்.

“பட்டாளத்தம்மா உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க..”

சட்டையைக் கழற்றப் போனவன் நிறுத்திவிட்டேன்.

“வா.. போயிட்டு வந்தரலாம்…”

“டிபன்?”

“அதெல்லாம் அப்புறம்..”

நான்கு வீடுகள் தள்ளித்தான் அவர்கள் வீடு. ‘பட்டாளத்தம்மா’ என்பது நாங்கள் வைத்த பெயர். சொந்தப் பெயர் ஜானகிதான். கணவர் எக்ஸ் சர்வீஸ் மேன். பிறகு ரெயில்வேயில் சேர்ந்தார். நானும் அவரும் ஒரே வயசுக்காரர்கள்.

ஜானகிக்கு மூன்று பெண்கள். கடைசியாகப் பையன். பையன் பிறந்த ஆறாவது மாதம் திடீரென அவள் கணவர் காலமாகிவிட்டார்.

மூத்த பெண்ணுக்குப் பதினெட்டு வயது. இரக்கத்தின் அடிப்படையில், குடும்பத் தலைவனை இழந்த குடும்பத்திற்கு உதவ அவர்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு வேலை தரும்படி எழுதிய மனுவுக்குப் பலன் இருந்தது. (தாமதமாகவேனும்) ‘குழந்தைகளுடன் நிர்க்கதியாகிப் போனோம்’ என்று நினைத்து விடாதபடி ஆறுதல் தரவும் உதவவும் அருகில் நாங்களும் இருந்தோம்.

“வாங்க”

வரவேற்றாலும் ஜானகியின் முகத்தில் மலர்ச்சி இல்லை.

“என்ன பட்டாளத்தம்மா.. வரச் சொன்னீங்களாமே?”

“காப்பி கூடக் குடிக்கலே.. ஓடி வந்திட்டாரு..” என்ற விஜியை முறைத்தேன்.

குறிப்பறிந்த இரண்டாவது பெண் உள்ளே போய் சுடச் சுட காபியுடன் வந்தாள்.

“நீ போம்மா.. நான் இவங்க கூடக் கொஞ்சம் பேசனும்” என்றாள் ஜானகி. 

“அவளும் இருக்கட்டும். குடும்ப சூழ்நிலை தெரிஞ்சாதான் நல்லது…” என்றேன் முழு விவரமே புரியாமல். 

“அப்படி நினைச்சுச் செஞ்சுதான் இன்னைக்கு இந்த மாதிரி ஆயிருச்சு…” என்றாள் ஜானகி கண்ணில் நீருடன்.

சற்று சங்கடமாய் அமர்ந்திருந்தேன். எதனால் வருத்தம்?

“எங்கே வினோதினியைக் காணோம்? இன்னும் ஆபீஸிலிருந்து வரலியா?” என்றேன்.

மூத்தவள் அவள்தான். அப்பா பார்த்த வேலையை அவளுக்குத்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

‘அவ போக்கே  இப்ப சரியில்லை…”

ஓ.. பிரச்னை வேறு ஏதோ. ஜானகியே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

“யாரையோ லவ் பண்றாளாம்… அவனைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவாளாம்….”

ஜானகி சொல்லச் சொல்ல எங்களுக்கு இனம் புரியாத அவதி. பெண்ணைப் பெற்றவன் பாடு எப்போதுமே அவஸ்தைதான். பையனின் போக்கைச் சகித்துக் கொள்கிற மனோபாவமே வளர்ந்து விட்ட குடும்பச் சூழலில், பெண்ணுக்கும் கருத்துச் சுதந்திரம் தோன்றினால்  ஜீரணிக்கிற மனசு இன்னமும் வரவில்லையா!?

“பையன் யாராம்?”

“நான் அவகிட்டே பேசவே இல்லே. பாவி… இப்படி அனாதையா அவர்தான் எங்களைத் தவிக்க விட்டுப் போனார்னா.. இவளும் சேர்ந்துக்கிட்டு வேதனைப்படுத்துறா.”

ஜானகி அழுதாள். அதே நேரம் வினோதினி உள்ளே வந்தாள். எங்களை அவள் எதிர்பார்க்கவில்லை போலும். அம்மாவின் அழுகை, அவளுக்கு நடந்து கொண்டிருப்பது என்ன என்று புரியவைத்து விட்டது.

பேசாமல் அறைக்குள் போனாள்.

“நீங்களே பாருங்க… எப்படி அலட்சியமாய் போகிறாள்னு. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். அன்னிக்கு நீங்க அவரோட வேலையை எங்க குடும்பத்துல ஒருத்தருக்குன்னு கேட்டு வாங்கினப்ப நானே அதை ஏத்துகிட்டு இருக்கணும். சொல்லியிருக்கக் கூடாது, இவளைப் போகச் சொல்லியிருக்கக் கூடாது.

திகைப்புடன் ஜானகியைப் பார்த்தேன்.

“இப்பப் பாருங்க… மறுபடியும் எங்களுக்குச் சங்கடம் தான். இவன் எப்ப பெரியவனாகி, படிப்பு முடிச்சு வேலைக்குப் போயி எங்களைக் காப்பாத்தறது?”

பத்து வயசு பாலாஜியைக் காட்டினாள்.

“நான் வேணா வினுகிட்ட பேசவா?” என்றேன்.

ஜானகியின் மௌனம் சம்மதம் போல் இருந்தது.

எழுந்து போனேன், கதவைத் தட்டினேன்.

வினோதினி கதவைத் திறந்தாள்.

“நீங்களா…!”

என்னிடம் பிரியம் வைத்திருக்கிற பெண்.  வேலைக்காக அலைய வேண்டி வந்த போது நான்தான் கூடவே போனேன். வேலை கிடைத்து, அவளை இருக்கையில் அமர வைத்து, “நல்லா வரணும்” என்று கை குலுக்கிய முதல் நபர்.

இன்று தெரிந்துவிடும், என் உண்மை மதிப்பு என்னவென்று.

“வினு.. நான் என்ன சொல்றதுன்னு புரியலே. நீ புத்திசாலிப் பொண்ணுன்னு மட்டும் தெரியும். ஏணி, தோணி, வாத்தியார்னு சொல்லுவாங்க. பயன்படுத்திட்டு விட்டுறதால. ஆனா அது மத்தவங்களுக்குத்தான், நம்மைப்  பெத்தவங்களுக்கு இல்லே.”

பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“உன்னையே நம்பி இருக்கிற மத்தவங்களை நினைச்சுப் பாரு. நம்ம குடும்பச் சூழ்நிலை புரியாத ஒருத்தரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுகிட்டா அப்புறம் இவங்க கதி?! உன்னோட உதவி இன்னும் நாலஞ்சு வருஷத்துக்காவது இவங்களுக்குத் தேவை. அதுக்காக உனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொல்ல வரலே..”

 இத்தனை பெரியவன், என் மகளுக்குச் சமமானவளிடம் கெஞ்சுகிற நிலையில் பேச வேண்டி இருக்கிறதே என்று நினைக்கவில்லை. ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்ற கருத்தில் உடன்பாடு உள்ளவனாச்சே.

“தயவு செஞ்சு உன்னோட முடிவை மறுபரிசீலனை பண்ணும்மா…’ என்றேன்.

வினோதினியின் முகத்தில் இறுக்கம்.

“மன்னிச்சுருங்க. நான் தேர்ந்தெடுத்தவரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்.”

எனக்கும் லேசாய்க் கோபம் வந்தது.

“யார் அவன்…. எங்களை விட அத்தனை உசத்தியா?”

“நான்தான்….”

பின்னாலிருந்து குரல் கேட்டது. திரும்பினேன். வாசு ! என் மகன் !

“நீயா..!”

“ஆமாப்பா.. யோசித்துப் பார்த்தேன். வினோதினி சம்பளம் அவங்க குடும்பத்துக்குத் தேவை. வினுவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வேறு யாரையோ கட்டிகிட்டு, பாதி சம்பளம் வீட்டுக்குத் தரலாமான்னு கெஞ்சறதுக்கு, நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு முழுச் சம்பளத்தையுமே அவங்க வீட்டுக்குத் தரலாம்னு.. நீங்களும் மறுக்க மாட்டீங்கன்னு…”

திடமாய் நின்றவனைப் பார்க்க பெருமிதம் வந்தது. என்னைப் போலவே என் வாரிசும்.

“வாழ்த்துக்கள்” என்று இருவரின் கரம் பற்றிக் குலுக்கினேன் ஒரு சிநேகிதனைப் போல.

Author

You may also like

Leave a Comment