Home இதழ்கள்மில்மா பர்ஃபியும் தேன்குழலும்..

முள்ளுத் தேன்குழல்:

முறுக்கு இல்லாத தீபாவளியா?? எல்லோர் வீடுகளிலும் தேன்குழல் எனப்படுகிற முறுக்கு பலவிதங்களில் செய்யப்படுவதுதான். இதற்காக மிஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருக்கும் எந்த அரிசிமாவையும் பயன்படுத்தி, சட்டென்று செய்து தரலாம். கரகர மொறுமொறு முறுக்கு யாருக்குத்தான் பிடிக்காது இல்லையா!! 

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு – 2 கப் 

பொட்டுக்கடலை மாவு – 1 கப்

வெண்ணெய் (அ) நெய் – 2 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

சீரகம் – 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – ½ தேக்கரண்டி

எண்ணெய் – பொரிக்க 

செய்முறை:- 

கடையில் வாங்கிய அரிசிமாவோ அல்லது மிஷினில் அரைத்து வந்த மாவோ எதுவானாலும் அதைச் சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளவும். 

பொட்டுக்கடலையையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துச் சலித்துக் கொள்ளவும். 

இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம் , வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 

எண்ணெயைக் காயவைத்து, மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து கொள்ளவும். இருபுறமும் திருப்பி விட்டு ஓசை அடங்கியதும் எடுக்கவும். 

சுவையான வீட்டிலேயே தயாரித்த தேன்குழல் தயார். 

பின்குறிப்பு:

1) உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொண்டு அந்த மாவைச் சேர்த்தும் செய்யலாம். அப்போது பொட்டுக்கடலை மாவை குறைத்துக் கொள்ள வேண்டும். 

2) பயத்தம்பருப்பை மாவாக்கி அதை அரிசிமாவுடன் சேர்த்தும் செய்வார்கள். 

3) முள்ளு அச்சிலோ, சாதா முறுக்கு அச்சிலோ, ஒற்றை ஸ்டார் அச்சிலோ எதில் வேண்டுமானாலும் பிழிந்து கொள்ளலாம்.

மில்மா பர்ஃபி

எளிதில் செய்யக்கூடிய பர்ஃபி இது. தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து, சட்டென்று செய்து அசத்தலாம். கடலைமாவு எல்லோர் வீட்டிலிருக்கும் பொருள்தான். பால் பவுடர் வாங்கி வைத்துக் கொண்டால் நிறைய ஸ்வீட் ரெசிபிக்களைச் செய்யலாம்.  வாங்க.. இந்த மில்மா பர்ஃபியை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

கடலைமாவு – 2 கப் 

பால் பவுடர் – 1 கப் 

நெய் – 1 கப் 

சர்க்கரை – 1 ½ கப் 

ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன்

தண்ணீர் – ¾ கப் 

பாதாம், முந்திரி, பிஸ்தா – அலங்கரிக்க 

செய்முறை: 

அடுப்பில் ஒரு அடிகனமான அல்லது நான்ஸ்டிக் கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடு பண்ணவும். அதில் சலித்த கடலைமாவைச் சேர்த்து நன்கு வறுக்கவும். கடலைமாவின் பச்சை வாசனை போகும் வரை நிதானமான தீயில் வறுக்கவும். நன்கு வறுபட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதனுடன் பால் பவுடரும், ஏலக்காய்த்தூளும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.  இப்போது கடாயை அடுப்பிலேற்றி அதில் சர்க்கரை சேர்க்கவும். அதில் சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும். அதாவது ஏறக்குறைய ¾ கப் அளவு வேண்டும். சர்க்கரை கரைந்து கொதித்து ஒரு கம்பிப்பதம் வந்ததும் மாவுக்கலவையை அதில் சேர்த்து, கைவிடாமல் கிளறி விடவும். சில நிமிடங்களில் ஓரங்களில் நுரை போல் பூத்து வந்ததும் அதை நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே உலர்பருப்புகளால் அலங்கரிக்கலாம். சூடு சற்றுக் குறைந்ததும் துண்டங்களாக வெட்டிப் பரிமாறலாம்.  சுவையான மில்மா பர்ஃபி தயார். 

Author

You may also like

Leave a Comment