நாள்: 8 தொடர்ச்சி & நாள் 9
பாரு, சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்ல காலடி எடுத்து வச்சுட்டாங்க. வச்சதுமே அடுப்படியில இருந்த பீங்கான் பவுல் உடஞ்சு போச்சு. யாரா இருக்கும்னு யோசிக்கவே இல்லையே….பாருதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டானுங்க. அது கிட்ட கேட்டதுக்கு “என்னய பாத்தா பீங்கான் பவுலயா ஒடைக்கிற மாதிரி இருக்கு? உங்க எல்லாரோட 576 பல்லையும் உடைக்க வந்தவடா நானு”ன்னு பார்வையாலயே பதில் சொல்லுச்சு பாரு.
பேசிக்கிட்டே வந்து கிச்சன் ஸ்லாபுல உக்காந்துகிச்சு. அங்க பாவம் நார்மல் ஹவூஸ் காரனுங்க ஒழுங்கு மரியாதையா வீட்ட சுத்தம் பண்ணிட்டு இருந்தானுங்க. இது ஸ்லாப்புல ஏறி உக்காந்தத பாத்ததும் “ஏம்பா இது என்ன அண்டாவா? அங்குட்டு தூக்கி வச்சுட்டு தொடைக்க? இறங்கி போகச் சொல்லுப்பா”ன்னு கேப்டன் கிட்ட சொன்னானுங்க. துஷார் போயி இறங்க சொன்னதுக்கு “என்னடா அக்காவையே இறங்க சொல்ற? பாரு இறங்கிப் போறவ இல்லடா…ஏறிப் போறவ”ன்னு துஷார் கிட்ட பஞ்ச் அடிக்க, கொதிச்சு எந்திரிச்ச கனி நேரா வந்து “பண்றதெல்லாம் ரவுடித்தனம் இதுல என்னய கார்னர் பண்றானுங்க, காரக்கொழம்பு பண்றானுங்கன்னு புராணம் வேற. அறிவு அப்டின்ற வார்த்தைக்கு உனக்கு ஸ்பெல்லிங்காச்சும் தெரியுமா? நான் பேசுனத சொவத்துக்கிட்ட பேசுனா கூட விரிசல் விட்டுருக்கும். வீணா போன உங்கிட்ட பேசுனா தரிசாத்தான் போகும்”ன்னு சொல்லிட்டு போயிருச்சு. “நீ என்ன கிச்சன் ஏரியா இன்சார்ஜா? நீ சொல்றத நான் கேக்க முடியாது”ன்னு சொன்னதும். கெமி வந்து “க்ளீனிங்க் டீம் இன்சார்ஜ் நாந்தான். இவ எந்திரிக்கலேன்னா க்ளீன் பண்ண முடியாது”ன்னு சொல்ல, வரிசையா எல்லாரும் வந்து “நாங்களும் ஒரு வேலையும் பண்ண முடியாது”ன்னு வெளிய போயிட்டானுங்க. ஜெர்க்கான பாரு “ஆகா இப்ப வேற ரூட்ட பிடிக்கனுமா? சரி இறங்கிருவோம்”னு சொல்லிட்டு கீழ இறங்குச்சு. “சரி நீங்க சமைங்க ஆனா சாப்ட மாட்டாடா இந்த பாரு”ன்னு சொல்லிட்டு உள்ள போச்சு. போயி பெட்ல படுத்துகிட்டு “வந்துட்டானுங்க, இவனுங்க பண்ணா அது கலை…நான் பண்ணா கொலை. மானங்கெட்ட மலுக்கு உப்புப் போட்டு குலுக்குன்னானாம்”ன்னு காந்திமதி மாதிரி வன்மத்த கக்கிட்டு இருந்துச்சு.
நார்மல் ஹவுஸ் ஆளுங்க சூப்பர் டீலக்ஸ் ஆளுங்ககிட்ட போயி “சிறப்பான, தரமான சாப்பாடு செஞ்சு வச்சிருக்கோம். உங்களுக்கு வேணும்னா…பாருவ வந்து மன்னிப்பு கேக்க சொல்லு, இல்ல பண்ண சமையல மண்ணுல போட்டு பொதச்சிருவோம்”னு சொல்லிட்டானுங்க. “நல்ல ஆள எங்ககிட்ட அனுப்புனீங்கடா டேய், பவர தவறா யூஸ் பண்றதுல இவகிட்ட எலான் மஸ்க்கே தோத்துருவாண்டா”ன்னு பொலம்பிட்டே பாருகிட்ட போனானுங்க. அதுதான் கூட்டத்தப் பாத்தா குதுகலாமாகிடுமே. “சாரியும் கேக்க மாட்டேன், மேட்சிங்கா ப்ளவுஸும் கேக்க மாட்டேன்”னு பத்தி விட்டுருச்சு.
வாட்டரும், பாருவும் வழக்கம் போல பொரணி பேச, கமருதீன் வந்து “பாரு இதெல்லாம் பாவம். உன்னால எல்லாரும் சாப்டாம இருக்கானுங்க. வெளிய இதுனால உன் பேரு கெட வாய்ப்பிருக்குன்னு சொல்ல….”என் பேரு கெட்டுச்சுன்னு நீ பாத்தியா? மக்கள் கைதட்டல பாத்தேல்ல….எல்லாம் என் தற்கொலைப் படைடா என் வென்று”ன்னு கூப்பாடு போட “கூடவே இருக்கியே வாட்டரு நீயாச்சும் கொஞ்சம் சொல்லக் கூடாதா?”ன்னு கமருதீன் பதமா கேட்டதுக்கு. “நான் கூட சொன்னேன் கண்ட அல்ஷேஷன்லாம் கத்தும் வேணாம்னு…பாத்தியா இப்ப நீ கத்துற”ன்னு வாட்டரு கமருதீன் வாயப் புடுங்க “போயா உருண்டை”ன்னு வாய விட்டதும் “ரைட்டு, வாய விட்டுட்டான். சீக்கிரம் இங்க இருந்து எலிமினேட் ஆகிடுவான். எப்பிடி என் ராஜதந்திரம்”ன்னு காலர தூக்கி விட்டாப்ல. இந்தக் கமருதீனுக்கு மூளைன்றது மண்டையில ஒரு ஓராமான மூலையில கூட இல்ல போல. வாண்டடா வந்து வேண்டுதல் மாதிரி வாட்டரு கிட்ட வாயக் குடுத்து கேஸ் வாங்கிக்கிறான்.
பின்ன எல்லாரும் வெளிய பேசிட்டு இருந்தப்ப பாரு நைஸா வந்து “சாரி கேட்டு பழகுனா இங்க சாரியத் தவிர எதுவும் கேமா நடக்காது”ன்னு சொல்ல, ரம்யா “சாப்பாடு விஷயத்துல பாலிடிக்ஸ் பண்ணாத. இன்னொரு தடவ நான் மயங்கி விழுந்தா அது மயக்கம் இல்ல மரணம்”ன்னு பயமுறுத்த…”ஆத்தீ கொல கேஸெல்லாம் வருதுடோய்ன்னு பயந்து, “விளையாட்ட சுவாரஸ்யமாக்க நான் பண்ண தந்திரங்கள் உங்கள காயப்படுத்தி இருந்தா என்னய உங்க வீட்டுப் புள்ளையா நெனச்சு மன்னிச்சிருங்க”ன்னு வஞ்சப்புகழ்ச்சியா மன்னிப்பு கேட்டுச்சு. “இவனுங்க கையால சமச்சத வேணாம்னு சொல்லிட்டு பொசுக்குன்னு இப்ப தட்ட எடுத்து நீட்டுனா மரியாதை கெட்டுப் போயிரும். இப்பவே நான் எப்படா சாப்பாட எடுத்து வாயில வப்பேன், என் மானத்த வாங்கலாம்னு எல்லாரும் ஓரக்கண்ணால பாத்துட்டு இருக்கானுங்க”ன்னு சுதாரிச்ச பாரு “யப்பா சபரி, அந்த சைடு அடுப்புல சட்டிய வச்சு ஒரு கப்பு நூடுல்ஸ் செஞ்சு குடுடா”ன்னு கேட்டு வாங்கி சாப்ட்டுச்சு.
9வது நாள். அரோரா துஷார் கிட்ட ஹஸ்கி வாய்ஸ்ல “நான் கமருதீன ஒரு பிரண்டா பாக்குறேன். ஆனா அவன் டாவு மூடுல இருக்கான் போல, நான் சிரிச்சுட்டே இருப்பேனா, அதப் பாத்துட்டு “நீ அழகா இருப்பன்னு நெனைக்கல, சிரிச்சா சிலுக்கு மாதிரி இருப்பன்னு நெனைக்கல, பிக்கி நம்மள லவ் கப்புளா செட் பண்ணிருவாரோன்னு தெரியல ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு”ன்னு சொல்றான். இதக் கேட்டதுல இருந்து எனக்குதான் பயமா இருக்கு”ன்னு பொலம்புச்சு. இந்த கேப்புல சூப்பர் டீலக்ஸ் ரூமுக்கு குடுத்த ந்யூட்டெல்லா டப்பாவ பாரு டேபிள்ள இருந்து எடுத்து கனி அக்கா தொட்டிக்குள்ள போட்டு ஒளிச்சு வச்சுருச்சு.
இங்க கலை வந்து பாருகிட்ட
கலை: இந்த சபரி ரொம்ப பண்றான்
பாரு: ஆமால்ல என்னய என்ன பாடு படுத்துறான் பாத்தியா? அவனுக்கு என் மேல ஒரு கண்ணு…நீ சரியா கண்டு பிடிச்சுட்ட
கலை: உன்னத் தவிர இந்த வீட்ல 18 பேரு இருக்கோம். எங்களுக்கும் எதாவது நடக்கும். அதென்ன எப்பப் பாத்தாலும் உனக்கு மட்டுமே நடக்குதுன்னு பேச்சு?
பாரு: ஓ…இது உன் பொலம்பல் டைமா…சரி பொலம்பு…அதக் கேட்டு நான் உன்ன ஏத்திவிடுறேன்.
கலை: என்னய தினமும் குளின்றான், கக்கூஸ் போயிட்டு வந்தா கை கழுவுன்னு சொல்றான்…இதெல்லாம் பெருங்கொடுமையா இருக்கு…எனக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது….
பாரு: என்னது கக்கூஸ் போயிட்டு வந்தா கை கழுவ மாட்டியா? (மை.வா: அட கொடுங்கொரங்கே இது தெரியாம நீ வந்து கையக் குடுத்ததும் நானும் பதிலுக்கு கையக் குடுத்து தொலச்சுட்டேனே. பினாயில் வேற எங்கன்னு தெரியல)
அப்ப அந்தப் பக்கமா வந்த சபரி “என்ன என்னயப் பத்தி கொற சொல்றானா? குளிக்க சொன்னது குத்தமாமா? பேசாம என்னய தூக்குல போட்டுரலாமா?”ன்னு கேசுவலா கேட்டுட்டு சிரிச்சுட்டே போயிட்டான்.
இங்குட்டு ஆதிரை துஷார் கிட்ட
ஆதிரை: துஷாரு, எனக்கு இந்த பொம்பளைங்க கூட பேசுறதே பிடிக்கிறது இல்ல
துஷார்: ஏன், நீ பாய்ஸ் ஹை ஸ்கூல்ல படிச்சியா?
ஆதிரை: அட யாருடா இவன்…நமக்கு பொம்பளைங்க கூட செட்டாகாது. இங்க கூட பாரு எனக்கு FJ கூடத்தான் செட்டாகுது. உள்ள வரதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னமே நாங்க மால்ல சந்திச்சுக்கிட்டோம். அன்பா பேசிக்கிட்டோம், அறியாமை கலஞ்சுக்கிட்டோம். அப்போவே அவன அடிச்சேன் சைட்டு, வீட்டுக்குள்ள வந்து பாத்ததும் எனக்கு ஒரே ப்ரைட்டு.
துஷார்: அப்போ உன் லவ்வர்?
ஆதிரை: அடேய் அவன் வெறும் லவ்வர்டா….இவன் என் பெஸ்டிடா…பெஸ்டி பெருசா லவ்வர் பெருசா? பெஸ்டிதான் பெருசு.
துஷார்: என்னய பாத்தா உங்க யாருக்குமே கேப்டன் மாதிரி தெரியலல. கைல என்ன கரும்பு வில்லோடயா உக்கந்திருக்கேன்? எல்லரும் உங்க டாவுக் கதைகள எங்கிட்ட வந்து கொட்டுறீங்க? வாரக் கடைசியில விசே வந்து வண்ட வண்டையா கேக்கப் போறாப்ல//
இப்போ டாஸ்க். பிக்பாஸோட ஹிட் டாஸ்க் (அப்டின்னு யாரு சொன்னா? அவரே சொல்லிக்கிட்டாரு!) பொம்மை பொம்மைய பேரு மாத்தி மாஸ்க்குன்னு தூக்கிட்டு வந்தாப்ல. அதாவது 18 பேரோட மூஞ்சி கட்டவுட்டு இருக்கும். அத எடுத்துட்டுப் போயி அங்க இருக்குற சொவத்துல வைக்கனும். ஆனா அங்க 17 இடம் தான் இருக்கும். யாரு மூஞ்சி மிஞ்சுதோ அவங்க அவுட். நார்மல் ஹவுஸ் ஆளுங்க அவங்க மூஞ்சிய எடுக்கக் கூடாது. ஆனா சூப்பர் டீலக்ஸ் ஆளுங்க யாரு மூஞ்சிய வேணும்னாலும் எடுத்துக்கலாம். நார்மல் ஹவுஸ் ஜெயிச்சா அதுல இருக்குற ஒருத்தருக்கு அடுத்த வாரத்துக்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும். சூப்பர் டீலக்ஸ் வீட்ல, 4 அல்லது 5 பேர் நாமினேஷனுக்கு போவாங்க. அதுவே சூப்பர் டீலக்ஸ் ஜெயிச்சா 50% நாமினேஷன் ஃப்ரீ ரூல்ஸ்ல இருந்து ஒரு வின்னருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஆட்டோமேட்டிக்கா அவங்களுக்கு போயிடுமாம். (நாலு வாட்டி பாத்துப் பாத்து எழுதுனேன். வாசிச்சது பாரு வேற…என்ன கொடும சரவணன்.)
ரெண்டு வீட்டு ஆளுகளும் கூடிப் பேசி ஸ்டார்டஜி ப்ளான் பண்ணானுங்க. ஆட்டம் ஆரம்பிச்சுது. இந்த தடவ பாரு மாஸ்க்க எடுக்க விடலன்னு விக்கல போட்டு சாத்துச்சு. “கெமிய சொல்லிட்டு நீ மட்டும் விக்கல காயப்படுத்துற?”ன்னு FJ கேட்டதுக்கு வழக்கம் போல “ஏலே இசுக்கு, உனக்கு ஆம்பளத் திமிரு டா”ன்னு அதையே 62 தடவ சொல்லிட்டு இருந்துச்சு. எல்லாரும் மாஸ்க்க ஒழிச்சு வெளையாண்டதால இந்த ரவுண்டு செல்லாதுன்னு சொல்லிட்டானுங்க. அடுத்து வந்த ரவுண்டு வெளையாடும் போது வினோத்து கால் தவறி விழுந்து கதற,
சபரி “யோவ் வாட்டரு, ரம்யா மயங்குனப்பதான் பிரசவ கேஸ்னு சொல்லி தப்பிச்ச…இப்ப இது பிசியோ கேஸ்தான…வந்து என்னன்னு பாரு
வாட்டர்: இப்ப நான் டாக்டரு இல்ல ஆக்டரு
சபரி: இப்ப டவுட்டே இல்ல கன்ஃபார்மா நீ போலி டாக்டர் தான். இருடி வெளிய போயி பார் கவுன்சில்ல கேஸ் குடுத்து உன் பிசியோ லைசன்ஸ பறிக்கிறேன்.
வாட்டரு: பிசியோ லைசன்ஸ்னா?
சபரி: அடங்கொய்யால….//
சொல்லிட்டு கூட்டத்துல நின்னு வேடிக்கை பாத்தாப்ல வாட்டரு. கெமி அவுட்டு. பாரு, முடியளவுல தப்பிச்சுச்சு. அதுக்கடுத்த ரவுண்டுல சூப்பர் டீலக்ஸ் ஆளுங்க பேசுன டீல் பாருவயே பதம் பாத்துச்சு. பாரு அவுட். ரெண்டு ரவுண்டுலையும் குறி வச்சு பாரு மூஞ்சிய எடுத்த சபரிய ட்ரிக்கர் பண்ணப் பாத்துச்சு. அவன் லெஃப்ட் ஹாண்ட் சுண்டு விரல்ல டீல் பண்ணிட்டுப் போயிட்டான். எல்லாரும் வரிசையா யாரு மூஞ்சிய எடுத்தாங்கன்னு சொல்லிட்டு இருக்குறாப்போ வாட்டரு அவர் பேர அவரே “வாட்டர் லெமன் ஸ்டார் மூஞ்சிய எடுத்தேன்”னு சொல்றப்போ கமருதீன் வாயில சனி சல்சா ஆட “தூ”ன்னு துப்பிட்டான். இத எதிர்த்த பாருவ FJ “அத ஏன் நீ கேக்குற? அத வாட்டரே கேக்கட்டும்”னு சொல்ல, எல்லாரும் அவன “சும்மா இருடா”ன்னு சொல்ல கோச்சுட்டு உள்ள போயிட்டான். அப்பறம் அவன ஆறுதல் சொல்லி கூட்டீட்டு வந்தானுங்க.
தோத்தப் பாரு சும்மா இருக்குமா? வெளிய உலாத்திட்டு இருந்த துஷார்கிட்ட வந்து
பாரு: ஆமா எதுக்குடா என் மூஞ்சிய எல்லாரும் ஈசியா எடுக்குற மாதிரி மேல வச்ச?
துஷார்: இல்லயே மொத ரவுண்டுல கீழ தான வச்சேன்
பாரு: அப்ப எதுக்குடா என் மூஞ்சிய எல்லாரும் ஈசியா எடுக்குற மாதிரி கீழ வச்ச?
துஷார்: அடுத்த ரவுண்டுல உன் மூஞ்சிய எடுத்து பீரோல்ல வச்சுரவா? யாருமே எடுக்க முடியாது
பாரு: இந்த ஐடியாவ அப்பவே பண்ணி இருக்கலாமேடா? இப்ப என்னய தூக்கி வெளிய வீசிட்டனுங்களே…உன் மூஞ்சிய கொண்டு போயி எங்க வப்ப?
துஷார்: அய்யய்ய…உன் ரோதன பெரும் ரோதனையா இருக்கே
பாரு: நீ 15 பேரோட எடுப்பார் கைப் புள்ளடா
துஷார்: அது என்ன 15 மீதி 3? ஒண்ணு நான், ஒண்ணு நீ, இன்னொன்னு?
பாரு:, அது என்னோட கைப் புள்ள வாட்டரு டா//
இப்டியே கத்திட்டே இருந்துச்சு. அப்பறம் உள்ள பெட் ரூமுல துஷார நிக்க வச்சு ரொம்பவே புல்லி பண்ணுச்சு “நீ எத்தனாவது படிச்ச? உனக்கு அறிவிருக்கா? உனக்கு அறிவிருக்குன்னு எந்த அறிவ வச்சு கண்டுபிடிச்ச? சொந்த மூளைய செங்கல்பட்டுல வச்சுட்டு வந்துட்டியா? ஏன் பாக்குறதுக்கு கொரியன் பட ஹீரோயின் மாதிரி இருக்க?” இப்பிடி அளவுக்கு மீறி புல்லி பண்ணிட்டு இருந்துச்சு. ஆனா பையன் பிசிறடிக்கலையே. “நீ ஒளறுரத ஒளறு”ன்னு நின்னு சிரிச்சுட்டு இருந்தான். அப்பறம் அவனுக்கே போர் அடிச்சு வெளிய போயிட்டான்.
வியானா வந்து “ந்யூட்டெல்லாவ நீதான வச்சிருந்த? இப்பக் காணோம். கேஸாகப் போகுது”ன்னு சொல்ல. “ரைட்டு, கேஸ் நம்பர் 642-ஆ! சூப்பர்”ன்னு சொல்லுச்சு.
உள்ள வாட்டரு வந்து பாரு கிட்ட “திட்டுறதக் கூட எவ்வளவு நாசூக்கா திட்டுற! அதான் மதுரக்கார ஆளுன்னு சொல்றது…சென்னைக் காரனுங்களுக்கு இவ்வளவு வெவரம் பத்தாது”ன்னு சொல்ல, பக்கத்துல படுத்திருந்த வினோத்து “யோவ், வார்த்தை வழுக்குது. சென்னைக்காரன பத்தி தப்பா பேசிட்டு இருந்த. செல்லய திருப்பிருவேன்”னு சொன்னதும் பாரு பதறிப் போயி “அடேய் ஊரு சண்டைய கெளப்பி விடாதீங்கடா? கூட்டத்துல நான் வேற இருக்கேன்”னு சொன்னதும். வாட்டருக்கு வேர்த்துடுச்சு.
இந்தப்பக்கம் FJ-வ கனி, சபரி எல்லாரும் கூலாக்கிட்டு இருந்தானுங்க. “கோவத்தக் கட்டுப்படுத்து, உன் நல்லதுக்குதான் சொல்றோம். வேணும்னா ஆதிரை மடியில கொஞ்ச நேரம் படுத்துட்டு வறியா?”ன்னு கேட்டு சமாதனப் படுத்துனானுங்க.
மறுபடியும் மூடர் கூடம் மீட்டிங்க். பாரு, கலை, வாட்டரு.
கலை: சபரி செய்யுறது நல்லால்ல
பாரு: என்ன, அக்குள சொறிஞ்சுட்டு ஆட்டா மாவுல கைய விடாதன்னு சொன்னானா?
கலை: அதும் சொன்னான், ஆனா வேலை செய்யுறது எல்லாம் நானு. கடைசியில சட்டி பக்கத்துல நின்னுக்கிட்டு சமையல் ரெடின்னு பேரு வாங்கிக்கிறான் சபரி
பாரு: அவன் கேமே அதாண்டா…என்ன வாட்டரு சரிதான?
வாட்டரு: நான் கக்கூஸப் பாத்துட்டு வந்துரவா?
கலை: கக்கூஸ் என்ன கலைக்கூடமா? நீ வந்ததுல இருந்து 7 வாட்டி கக்கூஸ பாத்துட்டு வந்துட்ட…என்ன விஷயம் பாரு?
பாரு: உள்ள ஒரு ஊர் சண்டையில மாட்டிக்கிட்டான். அதான் கலக்கிட்டு இருக்கு//
இதோட முடிஞ்சிருக்கு. மாஸ்க் டாஸ்க் இன்னும் முடியல. தொடரும்…
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
48
previous post