நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள் வரும். தினமும் இத்தனை நாள் என்று பார்த்து எண்ணிக்கொண்டே வருவதில் ஒரு பரபரப்பான ஆனந்தம்.
துணி எடுக்க எங்களை எல்லாம் கூட்டிக்கொண்டு போகமாட்டார்கள். அண்ணன்கள்தான் அதன் முழுப்பொறுப்பு. கடைசிப் பையன், சிறுவன் என்பதால் எனக்கு முன் பிறந்தவருக்கும் எனக்கும் எப்போதும் ஒரே போல சட்டை. அவருக்கு பேண்ட், எனக்கு அதே துணியில் டிராயர். ரெடிமேட் எல்லாம் அப்போது அதிகம் இல்லை. ‘சர்…சர்’ என ஸ்கேலில் அளந்து துணியை கிழித்துத்தருவார்களாம். ஒரு மாதம் முன்பே டெய்லரிடம் கொடுத்துவிடவேண்டும். அப்போதும் தீபாவளி முதல்நாள் இரவு முழுமையாக டெய்லர் கடையில் தவம் இருக்கவேண்டும்.
அம்மா முன்னமே திட்டமிட்டு முறுக்கு, அதிரசம், சில சமயம் எள்ளுருண்டை, கம்பு உருண்டை எல்லாம் செய்து தகர டின், கூடைகளில் போட்டு அட்டத்துப் பலகையில் அடுக்கி வைத்துவிடுவார். எல்லாமே ஒரு பத்து நாட்கள், அதற்கு மேலும் தாங்கும். அரிசி ஊறவைத்து அரைக்கக் கொடுக்கவேண்டும். தெருவில் ஒரே வீட்டில்தான் பெரிய கிரைண்டர் இருக்கும். கிலோவுக்கு இவ்வளவு என காசு. ஊறவைத்த அரிசி போவினிகள், அண்டாக்கள் வரிசையில் இருக்கும். நம் முறை வரும்வரை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அரைக்கும் இடத்தில் மாவை எடுத்துக்கொள்வார்கள் என்பார் பாட்டி. ஒவ்வொரு போவினியிலும் ஒரு கை என்றால் அதுவே நிறைய வருமே என்று யோசிப்பேன். அப்படி ஒன்றும் அவர்கள் எடுப்பது போலவும் இருக்காது. அரைத்து முடிக்கும் வரை தெருவின் சிறுவர்களுக்கு அந்த கிரைண்டர் ஹால்தான் விளையாட்டு மைதானம். அவ்வப்போது மென்று அசைபோட ஊறிய இட்லி அரிசியும் கிடைக்குமே.
மருதாணி வாசம் என்பது தீபாவளியின் அழைப்பிதழ். அம்மா விரல்களுக்கு மொத்தமாக வைத்து உள்ளங்கையின் நடுவே ஒரு பெரிய வட்டம் வைத்து சுற்றிலும் குண்டுகுண்டாக புள்ளி வைப்பார். அது எனக்குப் பிடிக்காது. பக்கத்துவீட்டு அக்கா அழகழகாக மருதாணி வைத்துவிடுவார். தீக்குச்சி, சீவாங்குச்சி (தென்னை ஓலையில் இருக்குமே) எல்லாம் பயன்படுத்தி அழகாக, நேராக, வளைவாக எல்லாம் வைப்பார். அவரிடம்தான் வைத்துக்கொள்வேன். வாசலில் பாய் போட்டு, மருதாணி வாசம் பிடித்துக்கொண்டே தெருவின் கடைசிவரை பார்வையை ஓட விட்டுக்கொண்டிருப்பேன். ஒரு அண்ணா பட்டாசு, இன்னொருவர் டிரஸ், இன்னொருவர் ஏதாவது பலகாரம், பெரிய அண்ணா தீபாவளிச் சிறப்பிதழ் புத்தகங்கள் என வாங்கி வருவார்கள். புத்தகங்களில் பெரும்பாலும் பெரிய அண்ணா வேலை செய்யும் கடையின் ஓனர் வாங்கி படிக்காமல் அப்படியே வைத்திருக்கும் மொத்தமான தீபாவளி இதழ்களும் அடக்கம். என் எதிர்பார்ப்பு ரத்னபாலா, ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் தீபாவளி இதழ்கள். ராணி காமிக்ஸ் மட்டும் எப்போதும் மிஸ் ஆகாது. மற்றவை காசு இருப்பு பொறுத்து கிடைக்கும். ஆனால் சிறுவயது நினைவில் ஒரு தடவைக்கூட அவர்கள் வரும் வரை விழித்து இருந்தது இல்லை. அப்படியே தூங்கிவிடுவேன்.
‘கராபுரா’ என சத்தம் கேட்டு எழுவேன். தீபாவளி அதிகாலை இருட்டில் பொது பைப்பில் நல்லதண்ணீர் வரும். தெருவே சண்டையில் இருக்கும். இரவு தூங்கும்வரை இனிக்க இனிக்க பேசிக்கொண்டிருந்த அம்மாக்கள், அக்காக்கள் எல்லாம் கண்டபடி திட்டிக்கொண்டே தண்ணீர் பிடிப்பார்கள். ஜென்ம விரோதிகள் கூட அப்படி சண்டை போட மாட்டார்கள். ஆண்கள் எல்லாம் இதில் தலையிடுவதில்லை. எண்ணெய் தடவிய தலையுடன், புதிதாக பிரஷில் துலக்க ஆரம்பித்தவர்கள் வாய் நிறைய பேஸ்ட் நுரையுடன் (அப்போதெல்லாம் அதிகம் கோபால் பல்பொடிதான். அது ஒரு இனிப்பு. கோல்கேட் கூட பவுடர்தான் அதிகம்) அங்கங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். அதே சண்டையிட்ட தெரு டீம் எல்லாம் குளித்து முடித்து அடுத்த நொடியே பாசப்பறவைகளாக, பலகாரங்கள், இட்லிகள் பரிமாறிக்கொள்ளும் அதிசயமும் நடக்கும்.
வீட்டுக்குள் ஓடுவேன். அண்ணாக்கள் எல்லாம் நன்றாக தூங்கிக்கொண்டிருப்பார்கள். புதிய சட்டை டிராயரை எடுத்து வாசம் பார்ப்பேன். அது ஒரு வித்தியாசமான வாசம் தரும். தீபாவளி உடைக்கே உரித்தான வாசம். அழகாகத் தைத்து அயர்ன் செய்து மடிப்பு கலையாமல் இருக்கும். அடுத்து பட்டாசுப் பொட்டலம். பேப்பரில் மடித்து ஒரு பண்டலாக இருக்கும். பிரித்துக்கொட்டுவேன். இரண்டு சரம், கம்பி மத்தாப்பு, சாட்டை, புஸ்வாணம், பாம்பு மாத்திரை, கலர் தீப்பெட்டி அனைத்திலும் ஒன்று அல்லது இரண்டு பாக்ஸ்கள் இருக்கும். ஊசிப்பட்டாசு இரண்டு பாக்கட். ஒரு துப்பாக்கியும் சுருள் கேப் இரண்டு டப்பாக்களும்தான் என் தேடல். பெரிய அண்ணன் எப்போதும் வெள்ளை நிற சில்வர் துப்பாக்கி வாங்கி வருவார். அது எனக்குப் பிடிக்காது. அழுத்தவே கடினமாக இருக்கும். சின்ன அண்ணன் சரியாக எனக்குப் பிடித்த கருப்புத் துப்பாக்கி வாங்கி வருவார்.
மருதாணி கலைத்து, உச்சந்தலையில் இருந்து பாதம் வரை நல்லெண்ணெய் ஊற்றி ஊறவிட்டு உட்கார்ந்திருக்கவேண்டும். அதே நேரம் தெருமுனையில் மளிகைக்கடைக்காரர் வீட்டில் பட்டாசு வெடிக்க ஆரம்பித்திருப்பார்கள். அதுதான் எங்களுக்குப் பெரிய கண்காட்சி. காலையில் அங்கே வேடிக்கை பார்க்கப் போகமாட்டேன். அம்மா திட்டுவார். வெளியே விறகு அடுப்பில் மிகச்சூடாக தண்ணீர் காயும். சீயக்காயும் அரப்பு தூளும் சரிவிகிதமாக அம்மா கலக்குவதைப் பயமாகப் பார்ப்பேன். தீபாவளியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அதுதான். கண்கள் எரியாமல், அழாமல் தண்ணீர் ஊற்றிக்கொண்டதே இல்லை. தலையைப் பிடித்து ஆட்டி அலசி ஒருவழியாக அந்த சித்திரவதையில் இருந்து தப்பித்து, துவட்டி புதுத்துணியில் காலரில் மஞ்சள் வைத்து ஒரு ஊசிப்பட்டாசு, ஒரு கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் வைத்து காலை தீபாவளி முடியும். சாமி கும்பிடுவது எல்லாம் இல்லை. தீபாவளி என்றால் தீபாவளி, அவ்வளவுதான்.
கையை நன்றாகக் கழுவச்சொல்வார் சின்ன அண்ணன். பட்டாசு மருந்து ஒட்டிக்கொண்டிருக்குமாம். சூடாக இட்லியும், அவற்றை முழுக வைத்து ஆவி பறக்க ஊற்றிய மட்டன் குழம்பு வாசனையும் பசியைக் கிளப்பும். சாப்பிட்டவுடன் அப்படி ஒரு தூக்கம் வரும். ஆனால் தூங்கமாட்டேன். தீபாவளியின் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு முக்கியம். வருடம் முழுதும் காத்திருந்த நாள் அது. ஒவ்வொரு அண்ணாவிடமும் போய் ‘ஈ…’ யென சிரித்தபடி நிற்பேன். ஆளுக்கு ஐந்து ரூபாய், சில சமயம் பத்து ரூபாய் தீபாவளி காசு கொடுப்பார்கள். அப்படியே அம்மாவிடம் கொடுப்பேன். அவர் பங்குக்கு கூட கொஞ்சம் சேர்த்து என் உண்டியலில் போட்டுவிடுவார். அப்புறம் சற்று நேரம் எல்லோரும் புத்தகங்களில் ஆழ்ந்துவிடுவோம். நான் காமிக்ஸ் எடுத்து வாசம் பார்த்துவிட்டு படம் மட்டும் பார்ப்பேன். படிக்க நேரம் இல்லை. தெருவின் நண்பர்கள் கூடும் வரை மட்டுமே நேரம். அண்ணன்கள் எல்லோரும் மதியம் சினிமா, நண்பர்கள் எனக் கிளம்பிவிடுவார்கள். யாராவது ஒருவர் மட்டும் ஒரே ஒரு சரம் வைத்துவிட்டுப் போய்விடுவார். பட்டாசு வெடிக்க ஏன் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது எனக்கு அப்போது புரியாது.
நாங்கள் ஒன்று கூடி எப்படி விளையாடுவது எனத் திட்டமிடுவோம். காமிக்ஸின் கௌபாய் கதைகள் எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். தலையில் வைக்க அது போல கௌபாய் தொப்பி மட்டும் கிடையாது. ஏதோ ஒரு வருடம் பழனிக்கு மொட்டைபோட்ட சமயம் வாங்கி வைத்திருந்த ஒரே ஒரு தொப்பியை ஒவ்வொரு வருடமும் ஒருவன் பயன்படுத்துவான். இன்னொருவனுக்கு அவன் அப்பாவின் ஆல்டர் செய்த பேண்ட் உண்டு. மற்ற எல்லோருக்கும் டிராயர்தான். இன்னொருவனிடம் பெல்ட் வைத்த ரப்பர் செருப்பு உண்டு. பார்க்க ஷூ போலவே இருக்கும். எல்லோரும் ஏதாவது ஒரு சின்ன துணியை கழுத்தில் கட்டிக்கொள்வோம். அதுதான் கௌபாய் அடையாளமாக எல்லோருக்கும் இருக்கும். அண்ணாக்கயிற்றில் (அரைஞாண்) துப்பாக்கியைச் சொருகிக்கொள்வோம். சுருள் கேப் கொஞ்சம் எடுத்து டிராயர், சட்டை பாக்கட்டில் குண்டுகளாக வைத்துக்கொள்வோம். ஒரு சில பெரிய பையன்கள் ஊசிப்பட்டாசு, லட்சுமி வெடியை எடுத்தும் வைத்துக்கொள்வார்கள். அவை டைனமைட் குச்சிகள் என காமிக்ஸ் உபயத்தில் சொல்லிக்கொள்வோம்.
பாறைகளும், தண்ணீரும், மணற்குன்றுகளுமான அப்போது சாக்கடை கலக்காத ஆறுதான் எங்கள் அந்தக் கால அமெரிக்க கௌபாய் நிலம். அங்கங்கே ஒளிந்து நின்றுகொண்டு மெல்ல எட்டிப்பார்த்து “டுமீல்” என்று வாயாலும் கத்தியபடி சுட்டுக்கொள்வோம். சுருள் கேப்பின் சத்தத்தை விட எங்கள் வாய் சத்தம் சில சமயம் அதிகமாகக் கேட்கும். ஊசிப்பட்டாசு, லட்சுமி வெடி கோஷ்டி அங்கங்கே நின்றபடி அவற்றைக் கையில் வைத்துப் பற்றவைத்து எங்கள் மேல் தூக்கி எறிவார்கள். அதுதான் ஆபத்தான கட்டம். அதை ஒருதடவை பார்த்துவிட்டுதான் ‘இனிமே ஆத்துக்குப்போவியா… போவியா” என அம்மா செம்மயாக என்னைக் கவனித்துவிட்டார். மதியம் அதே இட்லியும் குழம்பும். டிவி கிடையாது. அங்கங்கே நின்று வேடிக்கைதான். சாயந்திரம் வரை ஊசிப்பட்டாசை மெல்ல ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி வெடிப்போம். எல்லோரும் மளிகைக்கடைக்காரரின் வீட்டு வெடிக்காகக் காத்திருப்போம். நாலைந்து பெரிய பெட்டி நிறைய பட்டாசுகள் வெடிப்பார்கள். ஆயிரம்வாலா சரம், பெரிய பெரிய கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், ராக்கெட் எல்லாம் வைப்பார்கள். ஒரு மணி நேரம் நீளும் அந்த வண்ண விளையாட்டு வேடிக்கை.
நான் ஆவலாகவும் ஆதங்கமாகவும் பார்ப்பேன். அதைக் கவனித்த சின்ன அண்ணன் ஒரு தடவை சொன்னார்,
“அவங்க வெடிக்கிற பட்டாசு காசு வச்சு ரெண்டு வருஷம் முழுக்க நாம வீட்டுக்குச் செலவு பண்ணலாம். நீ பத்த வச்சாலும் அதே வெடிதான். நமக்கு பதில் அவங்க பத்த வைக்கிறாங்க. நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம். காசு மிச்சம்”
அப்போதுதான் நான் கவனித்தேன். வேடிக்கை பார்க்கும் நாங்கள் அனுபவித்து ரசிக்க, அவர்களோ ‘எப்போ தீரும்?’ என்று கடமையாக உள்ளே செல்வதும், வெளியே வந்து பற்றவைப்பதுமாக இருந்தார்கள். வெடிப்பதை நின்று பார்க்கக்கூட இல்லை.
மெல்ல மெல்ல சூழ்நிலை மாறியது. நானும் ஹைஸ்கூலில் சேர்ந்தேன். ஒரு தீபாவளியில் அண்ணன்கள் திருமணம் ஆகி தனியே போய்விட, ஒருவர் மட்டும் எங்களோடு இருந்தார். அவர் தீபாவளிக்கு டிரஸ், இனிப்பு வகை மட்டும் வாங்கிவருவார். அம்மாவும் முன்போல வீட்டில் எதுவும் செய்வதில்லை. அந்த ஆண்டு பட்டாசு யார் வாங்குவார்கள் என்பதில் குழப்பம். பெரிய அண்ணன் வீட்டுக்குப்போனேன். நூறு ரூபாய் தந்தார். என்னையே போய் வாங்கிக்கொள்ளச் சொன்னார். முதல் தடவையாக தீபாவளி முதல் நாள் இரவில் கடைவீதிக்குப் போனேன். டிராயர்தான் போட்டிருந்தேன். பட்டாசுக் கடை முழுவதும் பெரியவர்கள் கூட்டம். பயமாக இருந்தது. நான் ஒரு கட்டில் கடைக்குப் போய் முதல் தடவையாக ஒரு பனியன் வாங்கினேன். நெடுநாள் ஆசை. பத்து ரூபாய் முண்டா பனியன் அது. விலைக்கு வாங்கி பாக்கட்டில் இருந்து காசு எடுத்துக் கொடுத்ததும், ஒரு பெரிய மனிதத் தோரணை எனக்கும் வந்தது. பட்டாசுக் கடையை நெருங்கி கும்பலின் உள்ளே எப்படியோ நுழைந்தேன்.
“தம்பி, யார்கூட வந்த?” என்றார் கடையில் ஒருவர்.
“நானேதான் வந்தேன். பட்டாசு வேணும்” என்றேன்.
“என்ன என்ன வேணும்?”
“கம்பி மத்தாப்பு ஒரு டப்பா, அப்புறம் சங்கு சக்கரம் எவ்வளவு?”
“அது இருபது ரூபாய்”
“அதில் அஞ்சு”
“அஞ்சு டப்பாவா?”
“இல்லை, அஞ்சு சக்கரம் மட்டும், அப்புறம் சாட்டை அஞ்சு… அப்புறம்…”
“ஓ… இரு இரு… டேய் தம்பி, இந்த தம்பிக்கு சில்லரையில் கொடு” என்று ஒரு பையனை என்னிடம் அனுப்பிவிட்டு அவர் டப்பா டப்பாவாக வாங்குபவர்களைக் கவனிக்கச் சென்றுவிட்டார். எண்ணி எண்ணி வாங்கினேன். கூடவே ஒரு துப்பாக்கியும். எல்லாம் சேர்த்து அறுபது ரூபாய்தான் ஆனது. பனியன் போக மீதம் முப்பது ரூபாய் என் பாக்கட்டில் இருந்தது. அதுவே ஒரு தைரியத்தைத் தந்தது. அப்போதுதான் கவனித்தேன். நிஜ கௌபாய் துப்பாக்கி போலவே உறை, பெல்ட் எல்லாம் வைத்து ஒன்று இருந்தது. கொல்லு பட்டாசு ஆறு, குண்டுபோல வைத்து வெடிக்கலாமாம். நூறு ரூபாயாம். அடுத்த ஆண்டு அதை வாங்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். கடைவீதி இருள் போர்த்தியது. நான் இதுவரை காணாத வாண வேடிக்கை, பட்டாசு முழக்கங்களைக் கண்டேன். பேசாமல் இப்படியே வேடிக்கை பார்த்தாலே அறுபது ரூபாயும் மிச்சமாகியிருக்குமே என்றும் தோன்றியது.
அடுத்த தீபாவளியில் நாள் குறிக்கும் ஆர்வம் விட்டுப்போனது. இன்னமும் ஒரு வாரம் இருந்தது. நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது தூரமாக பயங்கர வெடிச்சத்தம். கடைவீதியின் ஒரு இடத்தில் இருந்து வானை மறைக்கும் புகை மண்டலம். ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தோம் நாங்கள். எல்லோரும் பதறியபடி ஓடினார்கள். சரியான கும்பல். பட்டாசு பண்டல்களை வியாபாரத்திற்காக ஒரு குடும்பம் வீட்டில் வைத்திருந்தார்களாம். ஏதோ தீப்பற்றி… வீடே இருந்த இடம் தெரியாமல் மண் குவியலாகக் கிடந்தது. ஊரே திரண்டு அழுத நாள் அது. அந்த வீட்டில் யாருமே மிஞ்சவில்லையாம். பட்டாசு ஆர்வம் சுத்தமாக விட்டுப்போனது எனக்கு.
தற்போதெல்லாம் தீபாவளி… அதுவும் ஒரு விடுமுறை நாள்.