Home கட்டுரைநினைவெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி

நினைவெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி

2 comments

“தீபாவளி” சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்
நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத்தக்கவை.

“தீபாவளி” நினைவெல்லாம் நிறைந்திருக்கும்  தீபாவளி. எத்தனை, எத்தனை தீபாவளி.

  • ஒரு மாதம் முன்பே துணி எடுத்து, ப்ளீட்  வைத்து தைக்கக் கொடுத்து தயாராகாத பேன்ட் சட்டையை  வாங்கி வர , டெய்லர் கடைக்கு  நாலைந்து முறை அலைந்தும் அலுக்காத தீபாவளி…
  • அம்மாவோடு அடுப்படியில் வியர்க்க, வியர்க்க அதிரசம் தட்டிக் கொடுத்து, விரல் இடுக்குகள் வெல்லப்பாகு பிசுபிசுக்க, பாமாயில் வெக்கையை சுவாசித்து, சுவாரஸ்யம் கூட்டிய தீபாவளி…
  • அப்பாவின் சைக்கிளில், கேரியரில் அமர்ந்து மடியில் ஒயர் கூடையில் கனக்கின்ற பட்டாசும், மத்தாப்பாய் மகிழ்ச்சி தெறிக்கும் மனசுமாய், வீடு சேர்ந்த தீபாவளி…

  • வாங்கிய வெடியை முறத்தில், தந்தி பேப்பர் தளமிட்டுப் பரத்தி வைத்து, மொட்டை மாடி வெயிலில் காய வைத்துக் காவல் காத்த தீபாவளி…
  • மேகம் பார்த்து, கண்களில் சோகம் கோர்த்து, மழைக்கு பயந்து, மனசு நனைத்த தீபாவளி…
  • அதிகாலை எண்ணைக் குளியலில், சீயக்காய் பொடி கண்களில் இறங்கி, சிவப்பு விழிகளுடன் சிவாஜி கணேசனாக வலம் வந்த தீபாவளி…
  • பூச்சட்டி கலசம் பொங்கித் தணிந்த இருட்டில், கொளுத்திப் போட்ட மத்தாப்பு கம்பியை மிதித்துத் துடித்து விந்தி விந்தி… நடந்த தீபாவளி…
  • மறுநாள் தீபாவளி…காலை, எப்போது விடியும்?  என உள்ளே சரவெடிச் சத்தம் சங்கீதம் கூட்ட, ஏக்கம் பொங்கித் தூக்கம் தொலைத்த தீபாவளி…
  • ஏடாகூடமாய் தெறித்து வந்த சரவெடித் துணுக்கு, புதுச் சட்டையில் பொட்டு வைக்க, வீட்டில் மறைத்து, மறைத்து மகிழ்ச்சி மறைந்த தீபாவளி…
  • வெடிக்க மறுத்த  நாட்டு வெடி , மறுபரிசீலனை செய்த அணுகிய கணத்தில் வெடித்துத் தொலைக்க, கையும், காதும் கனத்துக் கிடந்த தீபாவளி…
  • கல்கி, விகடன், குமுதம், கலைமகள்,அமுதசுரபி… எத்தனை எத்தனை தீபாவளி மலர்கள்.வண்ணப் படங்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், துணுக்குகளும்… அதிகப் பக்கங்கள், அதீத கனத்துடன் நினைவுகளில் இன்றும் அச்சு வாசம் வீசும் புத்தக தீபாவளி…
  • பண்டிகைக்கு பகலில் மாயவரம் சென்று, மாலையில் வீடு திரும்பும் பக்கத்து வீட்டு பழனிகுமார் மாமா, மாலா அக்கா தம்பதி வருகைக்காக மொத்தத் தெருவும் காத்திருந்து, வெடிச்சத்தமும், மத்தாப்பு, கலச வெளிச்சமும், ராக்கெட் சீறலுமாக, இரவெல்லாம் அதகளப்பட்ட தீபாவளி…
  • தூக்கு வாளிகளும், பைகளும் சைக்கிளின் இரண்டு ஹான்ட்  பார்களிலும்,  பலகாரங்கள்  சுமந்து கனக்க சைக்கிள் ஒட்டி, குறைந்தது பத்து அன்பர்களின் வீட்டிற்காவது சென்று அன்பும், இனிப்பும்  பகிர்ந்து, மனசு நிறைத்த தீபாவளி…
  • கையில் இனிப்பும், உதட்டில் சிரிப்புமாக, சேறு,சகதி, மழைநீர் தவிர்க்க கணுக்கால் வரை உயர்த்திய புதுப் பட்டுப்பாவாடையில் எங்கள் தெரு பேரழகு தேவதைகளின் கொலுசுக் கால்களை கண்களால் மொய்த்து, கனவுகளில் மொத்தமாய்க் கரைந்த பதின்வயது தீபாவளி…
  • பத்தாம் வகுப்பு படித்த நாட்களில், பள்ளித்தோழன் அபுபக்கரின் தங்கை அகாலமாக இறந்த சோகத்தில், அவனுடன், அவன் வீட்டுத் திண்ணையில் அழுகையும், கண்ணீருமாக பெருந்துயருடன், கழித்த தீபாவளி…
  • 1987- நாயகன் வெளிவந்த கடலூர் பாடலி அரங்க வாசலில், வளராத மீசையை வலுக்கட்டாயமாய் வழித்து கமலஹாசனாய் கற்பனை செய்து, கர கரக் குரலில் தென்பாண்டிச் சீமையிலே…” பாடல் முணுமுணுத்த பதினாறு வயது தீபாவளி…
  • முதல் வேலைக்குப் போன பின்னர் சம்பளமும், சொற்ப போனஸும் வாங்கி… மொத்தக் குடும்பத்துக்கும் துணியெடுத்து, சென்னையில் இருந்து அரசுப் பேருந்தின்  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து,  காற்றின் வேகத்தில், மனசு பறக்க, ஆனந்தக்கண்ணீர்  கன்னத்தில் உருள, ஊர்திரும்பிய இருபது வயதுகளின் தீபாவளி…
  • Menera டவரில் ஏறி, கட்டுமானத்தில் இருந்த பெட்ரோனாஸ் டவர் பார்த்து … நஸி கொராங், நஸி லெமாக், சத்தேய்… என ரிங்கெட் புழங்க சுதந்திரமாக KL கோலாலம்பூர் மழைச் சாரலில் சுற்றித்திரிந்த 1997 தீபாவளி…

    எத்தனை, எத்தனை தீபாவளி

    அத்தனையும்… இணையம் இல்லா, முகநூல் இல்லா, தீபாவளிகள்.
    திராவிடத் தமிழர் விழாவா? வடமாநிலத்தவர் தந்த ஆரியக் கொண்டாட்டமா? — அறியாத,புரியாத நாட்களில், அனுபவம் சேர்த்த தீபாவளிகள்.
    டாலர்- திர்ஹாம் பார்க்காத நாட்களின் தீபாவளிகள்… ஆனால், அன்பால் மனம் நனைந்த தீபாவளிகள். உறவுகள் சூழ்ந்த, உணர்வில் உறைந்த தீபாவளிகள்.

    என்னைப் பொறுத்த மட்டில், தீபாவளி என்பது நரகாசுரவதமோ, நாராயண வழிபாடோ, இயற்கைக்கு நன்றி கூறும் நாளோ, மறைக்கப்பட்ட மகாவீரர் நினைவு நாளோ, அரசியலோ அல்ல.

தீபாவளி என்பது அனுபவம்,இனிப்பான அனுபவம்.

தீபாவளி என்பது இனிய நிகழ்வுகளின் அனுபவம்.

அவை மதம் இனம் என்ற மேற்பூச்சுகள் தாண்டி முழுக்க நினைவுகள் சார்ந்தவை.

சக மனிதர்கள் மனதும், மணமுமாக  கூடிக் கொண்டாடும் பேரனுபவம்.

தற்போதைய வாழ்வில், இருவரோ மூவரோ மட்டுமே முகம் பார்த்து, சிரித்து, சினந்து, சிலிர்த்து,மகிழும், இந்த நகரப் பகுதியின்  அடுக்கக வாழ்வில், எத்தனை , எத்தனை சொல்லியும் நம்மால் புரிய வைக்க முடியவில்லை. அந்த தீபாவளிகளின் சந்தோஷத்தின் சாரத்தை மட்டும், சாறாய்ப் பிழிந்து அடுத்த தலைமுறைக்கு சிறிதேனும் கொடுக்க முயன்று, முயன்று முழுதும் தோற்கிறோம்.

அலைபேசித் திரைகளில் கரைந்து போன கவனங்களும், தொலைதூர உறவுகளும், காஜூ கட்லி, பேடா… மழ மழ இனிப்பு வகைகளும், காற்று மாசு தவிர்க்க காலக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பட்டாசுக் கொண்டாட்டங்களுமாக, “தீவாலி” ஆகிப் போன “தீபாவளி”

கால ஓட்டத்தில், மெல்லத் தொலைத்த பசுமை நிறைந்த தோட்டங்களை, நமது வீட்டு பால்கனித் தொட்டிகளில் தேடிக் கொண்டு இருக்கிறோம்.

வேறென்ன சொல்ல..?

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

Author

You may also like

2 comments

பூங்குன்றன் October 17, 2025 - 11:38 pm

சிறப்பு நண்பரே
தொலைந்த தீபாவளிகளை தோண்டி எடுத்துள்ளீர்கள்..
தீபாவளி ….வெடியும் வெடிசார்ந்த திணை..
ஆரம்பித்த வரலாறை அடியோடு மாற்றி கொண்டாடும் விழா ….
எப்படியானாலும் பண்டிகை என்றாலே கொண்டாட்டமும் குதூகலமும் தானே…
வாழ்த்துகள் சொல்வோரெல்லாம் வாழ்த்தட்டும் ..
மற்றவரெல்லாம் வாழ்ந்து கடக்கட்டும் …,

Reply
Rama October 23, 2025 - 3:04 pm

Hi Sasi….மிக அழகாக அனைத்து அனுபவங்களையும் எழுதி அந்த நாட்களுக்கே சென்ற மகிழ்வை தந்துவிட்டீர்கள்.

சிவாஜி, பதின் வயது பெண்கள், அபுபக்கர் தமக்கை, தென்பாண்டி சீமை ……இனித்தும் கனத்தும்….நெஞ்சை விட்டு நீங்கா நினைவுகள்

Reply

Leave a Comment