Home கட்டுரைதீபாவளியும், தீபாவலியும்

தீபாவளியும், தீபாவலியும்

0 comments

தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார் தாத்தா. அப்பா ஆசையாசையாய்  வாங்கி வைத்திருக்கும் புஸ்வாணம், சங்கு சக்கரத்தை எல்லாம் கொளுத்த நானும் அக்காவும் அஞ்சுவோம். கிராமத்துச் சிறுவர்கள்தான் அவற்றைக் கொளுத்திக் கொண்டாடி மகிழ்வார்கள். வளர வளர வண்ணத் தொலைக்காட்சியின் வரவால் தீபாவளி நிகழ்ச்சிகள் கருத்தைக் கவர, கிராமத்திற்குப் போவதை மாற்றி, பாட்டியும் தாத்தாவும் டவுனில் இருக்கும் எங்களுடன் வந்து தீபாவளி கொண்டாட ஆரம்பித்தார்கள். பேருக்கு மத்தாப்புகளைக் கொளுத்தி விட்டு மீதி நேரமெல்லாம் டி.வி சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து eeமகிழ்வோம்.

திருமணத்திற்குப் பிறகு வந்த மூன்று தீபாவளிகள் மறக்க முடியாதவை. மணமாகி ஒன்றரை மாதத்திலேயே தலை தீபாவளி வந்தது. அன்றுதான் நான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன் என்கிற இனிப்பான செய்தியும் தெரியவர, அந்தத்  தீபாவளி தித்திக்கும் தீபாவளியாக இனித்தது.

திருமணமான ஏழாவது ஆண்டில் வந்த தீபாவளி வலி மிகுந்த கொடுமையான பண்டிகையாக மாறியது. தீபாவளிக்கு அடுத்த நாள் என் தந்தை திடீரென மாரடைப்பால் காலமாக, எனக்கு அது கருப்பு தீபாவளியாக அமைந்தது.

அதன் பிறகு வந்த வருடங்களில் தீபாவளி என்றாலே அப்பாவின் இறப்பும் இழப்பும் மனதை உறுத்த, தீபாவளி என்பது என்னைப் பொருத்தவரை கசப்பான நிகழ்வாகத்தான் இருந்தது. புது ஆடைகள் கூட வாங்கப் பிடிக்கவில்லை. அதே மாதத்தில் தான் எனது பிறந்த நாளும் வருவதால், அப்பா இறந்த பிறகு என்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடவில்லை.

மெல்ல, மனதைத் தேற்றிக் கொண்டு கடந்த வருட தீபாவளியிலிருந்துதான், அப்பா தெய்வமாக நின்று ஆசிர்வதிப்பார் என்கிற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கைகொடுக்க, தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாட ஆரம்பித்தேன்.

இந்த வருட தீபாவளிக்குச் சில தினங்கள் முன்புதான் எனது பிறந்தநாள் வந்தது. எனது உடன்பிறவா சகோதரரான, பெரிய பதவியில் இருக்கும் எனது அண்ணன், எனது பிறந்தநாளுக்கு அவருடைய நண்பர்களான சமூகத்தில் பிரபலமாக இருக்கும் வி.ஐ.பிகள் பலருக்கும் தெரிவித்து விட்டார். அவர்கள்  எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை போன் செய்தும், வாட்ஸ் அப்பிலும் அனுப்பி, இன்ப அதிர்ச்சி தந்தனர். அது மறக்க முடியாத பிறந்த நாளாக அமைந்தது.  இன்னும் சில தினங்களில், தீபாவளிப் பண்டிகை நெருங்கும்  நிலையில், இந்தத் தீபாவளியைத்  தித்திப்பான தீபாவளியாக மாற்றிய எனது அண்ணாவிற்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். தன் வாழ்வில் எத்தனை துயரங்களைச் சந்தித்தாலும், பிறரை மகிழ்வித்து மகிழும் என் அண்ணாவைப் போல அபூர்வமான மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம்.

Author

You may also like

Leave a Comment