Home இலக்கியம்அதிசயப்புல்லாங்குழல்

மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம் வாழ்ந்தன. அதனால் அந்தக் காட்டுக்குள் யாரும் செல்வதில்லை.

எப்போதாவது யானைகள் கீழே இறங்கிவந்து கரும்புத்தோட்டத்தில் கரும்புகளைச் சாப்பிடும். எப்போதாவது புலிகள் கீழே இறங்கிவந்து ஆட்டைக் கொன்று தூக்கிக் கொண்டு சென்று விடும். எப்போதாவது நரிகள் கீழே இறங்கி வந்து கோழிகளைத் தூக்கிக் கொண்டு போய் விடும். பாம்புகள் மட்டும் எப்போதும் ஊருக்குள்ளும் வயற்காடுகளிலும் சுற்றிக் கொண்டு திரியும். எலிகள், ஓணான்கள், கோழிக்குஞ்சுகள், என்று சிறிய உயிரினங்களைச் சாப்பிடும்.

கிராமத்து மக்கள், “அதுக வாழ்ற இடத்துல நாம குடியிருக்கோம், நாமதான் எச்சரிக்கையாக இருக்கணும்“ என்று பேசிக் கொள்வார்கள். இன்று ஆனந்தன் அந்த மூங்கில் காட்டுக்குள் போய் விட்டான். ஆடுகள் முதலில் தயங்கின. இதுவரை போகாத இடம் என்று சொல்லின.

“ம்மே.. மே.. ம்ம்மே“

ஆனால் ஆனந்தன் அதைக் கவனிக்கவில்லை. உள்ளே மூங்கில் அடர்ந்து வளர்ந்திருந்தது. கல் முங்கில், முள் மூங்கில், முள்ளில்லா மூங்கில், என்று விதவிதமான மூங்கில்மரங்கள் வானாளவ ஓங்கி நின்றன. பல மரங்களில் வெண்ணிறப்பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்திருந்தன. சில மூங்கிலிலிருந்து மூங்கிலரிசி உதிர்ந்து கொண்டிருந்தது. காற்று மூங்கில் மரங்களுக்குள் புகுந்து இனிய ஓசையை ஏற்படுத்தியது.

ஆடுகள் அமைதியாக மேய்ந்து கொண்டிருந்தன. மூங்கில் இளம் தளிர்களை, மூங்கிலரிசியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்பொது தான் அந்தச் சத்தம், திடும்.. திடும் என ஒரு யானைக்கூட்டம் அங்கே வருகிற சத்தம் கேட்டது.

“ ப்ளாங்.. ப்ளீங்..”

ஆடுகள் கலைந்தன. “ ம்ம்மேஏ.. ம்ம்ம்ம்மேஏ..” என்று கத்தின. ஆனந்தனுக்கு அப்போதுதான் தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரிந்தது. ‘என்ன செய்ய!’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு கொம்பன் யானை. கோபத்துடன் பிளிறியது. அவன் திரும்பி ஓடப் போனான். காலில் ஏதோ தட்டியது.

அது ஒரு புல்லாங்குழல். அவனுக்கு எப்போதும் புல்லாங்குழலைப் பிடிக்கும். அவன் குனிந்து கையில் எடுத்ததான். அடுத்த நொடி அதிலிருந்து இனிய இசை புறப்பட்டது.

அந்த இசை புல்லாங்குழலின் ஒரே ஒரு துளையிலிருந்து வந்தது. அதைக் கேட்டதும் கோபமாக வந்த கொம்பன் யானை அப்படியே நின்றது. இசைக்குத் தன் தலையை ஆட்டியது. அப்படியே ஆட்டைப் போல அமைதியாகத் திரும்பிப் போய் விட்டது.

ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவன் அந்த அதிசயப்புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான். அதைப் பத்திரமாகக் கூரையில் ஒளித்து வைத்தான். யாரிடமும் அவன் சொல்லவில்லை.

அடுத்த நாள் இரவில் ஊருக்குள் புலி இறங்கி விட்டதாகச் செய்தி பரவியது. ஆனந்தனின் வீடு இருந்த தெருவிளக்கில் மற்ற குழந்தைகளுடன் படித்துக் கொண்டிருந்தான் ஆனந்தன். அப்போது இருட்டுக்குள்ளிருந்து இரண்டு தீக்கங்குகளைப் போல சுடர்கள் தெரிந்தன. ஆனந்தனுக்குத் தெரிந்து விட்டது. உடனே அவன் கூரையில் ஒளித்து வைத்திருந்த அதிசயப்புல்லாங்குழலை எடுத்தான்.

உடனே புல்லாங்குழலின் இரண்டு துளைகளிலிருந்து இனிய இசை கிளம்பியது. புதரிலிருந்து வெளியே வந்த புலி ஒரு பூனைக்குட்டியைப் போல வாலை ஆட்டிக் கொண்டு திரும்பிச் சென்றது.

ஆனந்தன் மட்டுமல்ல, குழந்தைகளும் ஆச்சரியப்பட்டார்கள்.

அன்றிலிருந்து ஆனந்தன் அந்த அதிசயப்புல்லாங்குழலைக் கீழே வைப்பதில்லை.

அதேபோல ஒரு நாள் நள்ளிரவில் கூட்டமாய் கோழிகளைப் பிடிக்கவந்தது குள்ளநரிக்கூட்டம். ஆனந்தன் கையில் வத்திருந்த அதிசயப்புல்லாங்குழலின் மூன்று துளைகளிலிலிருந்து வந்த இசையைக் கேட்டன. அப்படியே நாய்க்குட்டிகளைப் போலத் திரும்பிச் சென்றன.

பாம்புகளும் அப்படித்தான் அந்தப் புல்லாங்குழலின் நான்கு துளைகளிலிருந்து வந்த இசையினால் மயங்கித் திரும்பிவிட்டன. ஊர் மக்கள் ஆனந்தனைப் பாராட்டினார்கள்.

ஆனால் ஆனந்தன் இந்த அதிசயப்புல்லாங்குழல் அவனுக்கு கிடைத்ததற்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அவன் அதுவரை அந்தப் புல்லாங்குழலை வாயில் வைத்து ஊதிப்பார்த்ததில்லை.

காலையில் அவன் அதிசயப்புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்து ஊதினான். அந்தப் புல்லாங்குழலின் ஏழு துளைகளிலிருந்தும் இசை புறப்பட்டது. அப்படி ஒரு இசையை யாரும் கேட்டதில்லை.

ஊர் மக்கள் மயங்கி நின்றார்கள். ஆனந்தன் அப்படியே புல்லாங்குழலை வாசித்தபடியே முன்னால் சென்றான். அவனுக்குப் பின்னாலேயே அந்த ஊரிலிருந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய்கள் எல்லாரும் மாயத்தால் கட்டுப்பட்டவர்களைப் போல நடந்தனர்.

வீடுகளும் வீடுகளிலிருந்த பண்ட பாத்திரங்களும் அப்படியே நடந்தன. தெருக்களும் தெருவிளக்குகளும் நடந்தன.

ஆனந்தன் மூங்கிலூர் மலையடிவாரத்திலிருந்து வெகுதூரமாய் அழைத்துச் சென்றான். ஓரு இடத்தில் புல்லாங்குழல் இசை நின்றது. ஆனந்தன் ஊதினாலும் இசை வரவில்லை.

உடனே எல்லாரும் அப்படியே நின்றனர். வீடுகளும் நின்றன. அந்த இடத்தில் எல்லாரும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இனி மக்களால் விலங்குகளுக்கோ, விலங்குகளால் மக்களுக்கோ எந்தத் தொந்தரவும் இருக்காது.

அடுத்த நாள் ஆனந்தனின் அதிசயப்புல்லாங்குழலும் மறைந்து விட்டது. அதுதான் வந்த வேலை முடிந்து விட்டது இல்லையா?

Author

  • உதயசங்கர், Udhayashankar

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனத் தொடர்ந்து பல்வேறு தளங்களில் எழுதிக்கொண்டிருப்பவர். எழுத்திற்காகப் பல விருதுகளை பெற்றுள்ள இவரின் ஆதனின் பொம்மை சிறார் நூலுக்கு , 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment