களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா?
களிறன் அண்ணன் யானை, பிடிகா தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் இருக்கு, அதனால மண்ணுக்குள்ள இருக்கற கிழங்குகளைத் தந்தத்தால தோண்டி எடுக்கும். அதைத் தங்கச்சிக்குக் கொடுக்கும்.
களிறனும் பிடிகாவும் சில சமயம் பயங்கரமா முட்டி மோதி சண்டை போட்டுக்குவாங்க. ஒருநாள் ரெண்டு பேருக்கும் சண்டை வந்திடுச்சு. சண்டை போடும் போது களிறனோட தந்தம் பிடிகாவோட காலில் குத்திடுச்சு. பிடிகாவுக்கு ரொம்பக் கோவம் வந்திடுச்சு. களிறனைத் தள்ளிவிடப் போனது. களிறன் ஓடியே போயிடுச்சு. பிடிகா துரத்திக்கிட்டே போனது.
களிறன் ஓடிப் போய் அம்மா பின்னாடி நின்னுது. கோவமா வந்த பிடிகாவை அம்மா சமாதானம் செய்து அனுப்பியது.
பிடிகா, “என்னயக் குத்தின உன் தந்தத்தை, நான் ஒரு நாள் ஒடச்சுருவேன். இன்னிக்குத் தப்பிச்சுப் போ.” அப்படின்னு கோவமா சத்தம் போட்டுட்டுப் போயிடுச்சு.
சண்டை நடந்து ஒரு வாரமாயிடுச்சு. பிடிகா, களிறன் கூட பேசவும் இல்லை. விளையாடவும் இல்லை. களிறனுக்கு ரொம்பக் கவலையாக இருந்தது.
காட்டில் யானைகள் கூட்டமா சுத்திக்கிட்டு இருக்கும். அப்படித்தான் களிறன், பிடிகா எல்லாம் அவுங்க கூட்டத்தோட தினமும் சுத்திக்கிட்டு இருக்குங்க. எல்லா யானைகளும் கரும்பு, இலை, பழம், புல், கிழங்கு, வேர் இதெல்லாத்தையும் தேடித் தேடி சாப்பிட்டுச்சுங்க. சுத்திக்கிட்டு இருக்குங்க. பிடிகா பேசலையேனு களிறன் கவலையா இருந்துச்சு. வேர்களைத் தோண்ட வந்த இடத்திலேயே நின்னுடுச்சு.
”பிடிகாவோட எப்படி ஜாலியா விளையாடுவோம்? பழங்கள், கிழங்குகளத் தேடி, தேடிச் சாப்பிடுவோம்!” எல்லாத்தையும் நினைச்சுக்கிட்டே நின்றது களிறன்.
இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. “ஐயோ! நம்ம கூட்டத்தைக் காணுமே! பாட்டி வழி காட்டிருக்கும். எல்லாரும் அது பின்னாடி போயிருப்பாங்களே. எனக்கு வழி தெரியலையே! எப்படிப் போறது? ” அப்படீன்னு களிறன் பயந்து போயிடுச்சு.
“சரி வேற வழியில்லை. எப்படியாவது போய், நம்ம கூட்டத்திலே சேரணும்.” அப்படினு களிறன் ஓட்டமும் நடையுமாப் போனது. ஒரு யானையைக் கூட காணும். களிறனுக்கு ரொம்ப பயமா இருந்தது. ‘கத்திப் பார்க்கலாமா?’ன நினைத்துப் பிளிறியது.
யாரும் பதில் குரல் கொடுக்கலை.
களிறன் ரொம்ப தூரம் வந்திடுச்சு. நின்று சுத்திப் பார்த்தது. வேற பக்கம் போவோம்னு நினைத்தது. வேற பக்கமா வேகவேகமாப் போனது. களிறனுக்கு ரொம்பப் பசித்தது. ‘அதோ கரும்பு மாதிரி இருக்கே. சரி சாப்பிட்டுப் போகலாம்’னு நினைத்தது.
களிறன் ஒரு அடி எடுத்து வைத்தது. “ஆ… ஐயோ!”னு கத்திக்கிட்டே குழிக்குள்ள விழுந்திடுச்சு. அப்புறம் என்ன ஆச்சுனே களிறனுக்குத் தெரியலை.
பிடிகாவும் அவள் அம்மாவும் களிறனைத் தேடிக்கிட்டே இருந்தாங்க. மறுநாள் காலையில், ஒரு இடத்தில் களிறன் மயக்கமாக் கிடந்தது. பிடிகாவும் அம்மாவும் வேகமாகப் போனாங்க. நடந்தது என்னனு அம்மாவுக்குப் புரிஞ்சுது. பிடிகா, “அம்மா… நம்ம களிறனுக்கு என்னாச்சும்மா?”னு கவலையாக் கேட்டது.
“சொல்றேன். நீ ஓடையில் இருந்து கொஞ்சம் தண்ணி கொண்டு வா”னு சொன்னது அம்மா யானை. பிடிகா, தும்பிக்கையில தண்ணி கொண்டு வந்தது. களிறன் முகத்தில் தெளித்தது. நல்லகாலம். களிறன் முழிச்சுப் பாத்தது.
பிடிகா, ” ஐயோ! அம்மா களிறனோட தந்தத்தைக் காணும்மா.” என்று கத்தியது.
அம்மா யானை, “தந்தம் போனால் போகுது. நம்ம களிறன் செல்லத்துக்கு ஒண்ணும் ஆகலை. அதுவே போதும். அதோ பாரு. குழி தெரியுதே. அது மேலே இலை, தழைகளை மனுஷங்க பரப்பி வச்சிருப்பாங்க. பக்கத்திலே நமக்குப் பிடிச்ச உணவு ஏதாவது வச்சிருப்பாங்க. அதை எடுக்கப் போகும் போது, நாம உள்ளே விழுந்திருவோம். நம்மளப் பிடிச்சுக்கிட்டுப் போயிடுவாங்க.”
“நல்ல வேளை எப்படியோ நம்ம களிறனோட தந்தத்தை மட்டும் எடுத்துகிட்டு, அவனை விட்டுட்டுப் போயிட்டாங்க. தந்தம் கொஞ்ச நாளில் வளர்ந்திடும்” என்று அம்மா யானை சொன்னது.
களிறன் மயக்கம் தெளிந்து எழுந்திருச்சுது. பிடிகாவும் அம்மாவும் அவனோட தலையைத் தடவிக் கொடுத்தாங்க. பாசத்தைக் காட்டினாங்க.
“உன்னக் குத்தின என் தந்தத்த யாரோ ஒடச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. பிடிகா இனிமேல் என்னோட பேசுவியா? விளையாடுவியா?” என்று கவலையாகக் கேட்டது களிறன்.
“கவலைப்படாதே களிறா. தந்தம் போனால் போகட்டும். இனிமேல் எப்பவும் நாம ரெண்டு பேரும் விளையாடுவோம். பழங்கள் எல்லாம் பறிச்சுத் தரேன். வா.” என்று அன்போடு கூட்டிக் கொண்டு போனது பிடிகா. பிடிகாவும் களிறனும் விளையாடிக்கிட்டே போச்சுங்க. அம்மாவுக்கு நிம்மதியா இருந்துச்சு.