Home இலக்கியம்சுருள் மூக்கு பூதங்களும் சுட்டித் தம்பியும்

அரூபன், அற்புதன் இருவரும் உயிர் நண்பர்கள். அவர்கள், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. எங்கு வெளியில் சென்றாலும் அவர்கள் சேர்ந்தே செல்வார்கள்.

ஒரு நாள், இருவரும் விளையாடி முடித்தபின் பேசிக் கொண்டே மலை மீது ஏற ஆரம்பித்தார்கள். இருள் கவியத் தொடங்கியதும்தான், தாங்கள் வெகு தூரம் வந்துவிட்டதை உணர்ந்தார்கள். அற்புதன் சற்றே பயந்தாலும் அரூபன் தைரியமாக,

“வேகமா இறங்குடா, முழுவதுமாக இருட்டுமுன் கீழே சென்றுவிடலாம்” என்றான்.

இருவரும் வந்த வழியிலே விரைவாகச் செல்லத் தொடங்கிய பொழுது,

“குழந்தைகளா” என்று ஒரு குரல் கேட்டது.

நின்று, சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அவர்கள் கண்களுக்கு யாரும் தெரியவில்லை.

பயம் மேலிட, நடையின் வேகத்தைக் கூட்டினார்கள். மீண்டும் “குழந்தைகளா” என்று அதே குரல்.

அவர்கள் ஒருவர் கையை மற்றவர் அழுந்தப் பிடித்தபடி திரும்பிப் பார்த்த பொழுது, மலை ப்ரம்மாண்டமாகத் தெரிந்தது.

“பயப்படாதீர்கள்.. இங்கே பாருங்கள்”

குரல் வந்த திசையில் திரும்பிய அவர்கள், தங்கள் எதிரே வினோதமாக இரண்டு உருவங்கள் நிற்பதைக் கண்டார்கள்.

அற்புதன், உதவிக்கு யாரையாவது அழைக்க எண்ணி வாயைத் திறந்தான். சத்தமே வெளியில் வரவில்லை.

“நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். நாங்கள் இந்த மலையில் வசிக்கும் பூதங்கள். என் பெயர் பாபாமூக்கா, இவன் பெயர் ஜீபாமூக்கா. நாங்கள் இருவரும் சகோதரர்கள்”

“ஐயோ பூதமா! என்று அலறிய அற்புதனை, தோள்களைப் பற்றி ஆசுவாசப்படுத்திவிட்டு,

அரூபன் அவற்றைக் கூர்ந்து பார்த்தான். சற்றே பெரிய முட்டைக் கண்கள், முறம் போன்ற காதுகள், பானை வயிறு. எல்லாவற்றையும் விட அவனை மிகவும் ஈர்த்தது மூக்குதான். சராசரிக்குச் சற்றே நீளமாக இருந்த மூக்கு, அதன் நுனி முறுக்கு போல சுருண்டு வளைந்து இருந்தது.

தன் மூக்கையே அவன் ஆச்சரியமாகப் பார்ப்பதை கவனித்த பாபாமூக்கா உற்சாகமடைந்து, அந்த மூக்கை அப்படியே நீட்டி, மூக்காலேயே அவர்களை அணைத்தது. இருவரும் மிரண்டு போய் அழ ஆரம்பித்தார்கள். உடனே தவறை உணர்ந்த பாபாமூக்கா தன் மூக்கை இழுத்துச் சிறியதாக்கி அவர்களை விடுவித்தது.

அவர்களுடைய பயத்தைப் போக்குவதற்காக, இரண்டு பூதங்களும் குதித்தும், பானை வயிற்றை அசைத்து நடனமாடியும் அவர்களை உற்சாகப்படுத்தின.

கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் விலகி இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். அரூபன் மெதுவாக பாபாமூக்கா அருகே வந்து அதன் மூக்கைத் தொட்டுப் பார்த்தான். சுருண்டிருந்த நுனியில் விரலை விட்டு சுற்றிச் சுற்றி விளையாடினான். அதன் வயிற்றைத் தடவிப் பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தான்.

அற்புதன் இது வரை அமைதியாக இருந்த ஜீபாமூக்காவிடம் சென்றான். அவனுக்கும் அரூபனைப் போல பூதத்தைத் தொட்டுப் பார்க்க ஆசை. ஆனால் பயம் முற்றிலும் விலகாததால் ஒரு தயக்கம் இருந்தது. ஜீபாமூக்கா, பாசமாக அவன் கையைப் பற்றி தன் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டது. சிறிது சிறிதாக அச்சம் அகல, அவனும் ஜீபாமூக்காவுடன் விளையாட ஆரம்பித்து விட்டான்.

இப்பொழுது முற்றிலும் இருட்டிவிட்டது.

“அச்சோ, இந்த இருட்டில் வீட்டிற்கு எப்படிப் போவது” என்றான் அற்புதன்.

உடனே பாபாமூக்கா, “நாங்கள் எங்களுடைய மூக்கை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீட்டலாம். நீங்கள், எங்களுடைய மூக்கில் அமர்ந்து கொண்டு அந்த வளையம் போல் இருக்கும் நுனியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். மூக்கின் நுனி அடிவாரத்தைத் தொட்டதும், உங்கள் வீடு எங்கே என்று சொல்லுங்கள். அங்கே இறக்கி விடுகிறோம்”

முதலில் தயங்கினாலும், தனியாக இருட்டில் வீட்டிற்குச் செல்வது கடினமாக இருக்கும் என்பதால், நண்பர்கள் இருவரும் பாபாமூக்காவின் யோசனைக்கு ஒத்துக் கொண்டனர்.

இவர்கள் அமரும் அளவு வசதியான நீளத்தில் மூக்கை நீட்டின இரு பூதங்களும். அவர்கள் வசதியாக அமர்ந்து நுனியைப் பிடித்துக் கொண்டனர். உடனே, பூதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீளத்தை அதிகப்படுத்தினர்.

அடிவாரத்தை நெருங்கும்போது மக்கள் ஆங்காங்கே கூட்டமாக நிற்பதைப் பார்த்த அரூபனுக்குப் புரிந்துவிட்டது. எல்லோரும் தங்களைத்தான் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இந்த பூதங்களின் மூக்கிலிருந்து இறங்குவதைப் பார்த்தால் அவர்கள் பயந்து விடுவார்கள்.

அவன் உடனே பாபாமூக்காவிடம், தங்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கி விடச் சொன்னான். இறங்கியவுடன் இருவரும் வேகமாகத் தங்கள் வீட்டிற்கு ஓடினர்.

வீட்டு வாசலில் அழுது கொண்டிருந்த அரூபனின் அம்மா, அவர்களைப் பார்த்ததும் ஓடி வந்து முதலில் அவனைக் கட்டிக் கொண்டு, பிறகு எங்கு சென்றார்கள் என விசாரித்தாள். அதற்குள், வெளியே இவர்களைத் தேடிச் சென்ற அற்புதனின் பெற்றோரும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

அரூபன், “நாங்கள் வழி தவறி மலை மீது சென்று விட்டோம், பிறகு சரியான வழி கண்டுபிடித்து வருவதற்குள் இருட்டிவிட்டது. அதனால்தான் தாமதமாகிவிட்டது” என்றான்.

அவன் எவரிடமும் பூதங்களைப் பற்றிச் சொல்லவில்லை. அற்புதனுக்கும் கண்களால் சைகை காண்பித்துவிட்டான் யாரிடமும் சொல்ல வேண்டாமென்று.

அடுத்த நாள் காலை அரூபன்,

“அற்புதா, நேற்று நாம் அந்த பூதங்களுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோம். இன்று மாலை நாம் மேலே போய் அவர்களைச் சந்தித்து நன்றி சொல்லி விட்டு வந்துவிடலாம்” என்றான்.

“ஐயோ நேற்று மாதிரி இன்றும் தாமதமானால் என் அம்மா என்னை வெளுத்து வாங்கிடுவாங்க”

“விரைவாக ஓடிப் போய் நன்றி சொல்லி விட்டு நேரத்தோடு வந்துவிடலாம்.”

இருவரும் மாலை பள்ளியிலிருந்து வந்தவுடன், விளையாடப் போவது போல வீட்டை விட்டு வெளியேறித் தாங்கள் முதல் நாள் பூதங்களைச் சந்தித்த இடத்திற்குச் சென்று, “பாபாமூக்கா”.. “ஜீபாமூக்கா” என்று பலமான குரலில் கத்தினார்கள். பூதங்கள் வரவில்லை. சிறிது நேரம் கத்திப் பார்த்தும் பூதங்கள் வராததால் இருவரும் வருத்தத்துடன் வீடு திரும்பினர். அடுத்த ஒரு வாரம் தினமும் முயற்சி செய்தும் அவர்களால் பூதங்களைக் காண இயலவில்லை. இனி அவர்களைத் தேடிப் போவது வீண் என்று முடிவு செய்து மலை மேலே போவதை நிறுத்தி விட்டார்கள்.

சில நாட்கள் கழித்து, அவர்கள் இருவரும் பள்ளி செல்லும் போது,

“குழந்தைகளா” என்று பரிச்சயமான குரல் கேட்டது.

இருவரும் ஒரே குரலில்

“பாபாமூக்கா” என கத்திக் கொண்டே தங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். ஒருவரையும் காணவில்லை.

உடன் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் இவர்களை வினோதமாகப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

“குழந்தைகளா.. சத்தம் போடாதீர்கள், நான் தான் பாபாமூக்கா. உங்கள் காலடியில் சிறிய உருவத்தில் இருக்கிறேன். மாலை, நாம் அன்று சந்தித்த இடத்துக்கு வாருங்கள்”

இருவரும் எப்பொழுது பள்ளி முடியும் எனக் காத்திருந்தார்கள். அவர்கள் சென்ற போது, மூன்றாவதாக ஒரு குட்டிப் பூதமும் அங்கு இருந்தது. ஆனால், அதனுடைய மூக்கு மட்டும் வேறு மாதிரி இருந்தது. மூக்கு கொஞ்சம் சப்பையாக.. நீளம் குறைவாக, நுனியில் சுருளாமல்.

“இவன் எங்களுடைய தம்பி ஹூபா. நான்கு நாட்களாக மலை உச்சியில் பூதத்திருவிழா நடந்தது. நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். உங்கள் அழைப்பு கேட்டாலும் எங்களால் வர இயலவில்லை. வாருங்கள், இந்த மலை முழுக்கச் சுற்றிப் பார்க்கலாம்”

அரூபனையும், அற்புதனையும் பார்த்த குட்டிப் பூதத்திற்கு குஷி பிறந்து விட்டது. மரத்தில் ஏறி தாவிக் குதித்தது, தன் உருவத்தை மறைத்து மறைத்து கண்ணாமூச்சி ஆடியது. அவர்கள் இருவரையும் கையில் பிடித்தபடி வேகமாக சுற்றிக் கதற வைத்தது. பயந்து அலறிய அவர்களை, ஹூபாவுடமிருந்து விடுவித்த ஜீபாமூக்கா, “ஹூபா, நீ இவ்வாறு பயமுறுத்தினால், அவர்கள் இனி இங்கு வரமாட்டார்கள்” என்று கூறியவுடன் ஹூபா சற்று அடங்கியது.

பூதங்கள் தங்களுடைய மூக்கில் சிறுவர்களை அமர வைத்து, மலை உச்சியில் இறக்கிவிட்டனர். அவ்வளவு உயரத்திலிருந்து கீழே தெரிந்த இயற்கை காட்சிகள் அவர்களைப் பரவசமாக்கின.
பூதங்கள், சிறுவர்கள் இருவருக்கும் விதவிதமான பழங்களைப் பறித்து தந்தன. பெரிய மரங்களில் ஊஞ்சல் கட்டி அவர்களை ஆட்டி மகிழ்வித்தன. தங்கள் மூக்கில் அமரவைத்து, அதை நீட்டியும், குறுக்கியும் அவர்களைச் சிரிக்க வைத்தன.

“இன்று நேரமாகிவிட்டது, நாளை வாருங்கள். உங்களை அருவிக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றது பாபாமூக்கா.

பிறகு தங்கள் மூக்கு வாகனத்தில் ஏற்றி அவர்களை மலையடிவாரத்தில் விட்டன.

மலைக்குச் செல்வதும், மூன்று பூதங்களுடன் வேடிக்கையாய் விளையாடிப் பொழுதைக் கழிப்பதும் சிறுவர்களின் தினசரி வாடிக்கையாகிவிட்டது.

ஒரு நாள் அவர்கள் மேலே சென்ற போது, ஹூபா இல்லாமல் மற்ற இரண்டு பூதங்களும் சோகமாக நின்று கொண்டிருந்தன.

“ஏன் வருத்தமாக இருக்கிறாய்?” என்றான் அற்புதன்.

“இங்கே மலை மேல் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார். ஹூபா, அவருடைய குடிலுக்குச் சென்று சேட்டைகள் செய்ததன் விளைவு, அவர் கோபம் கொண்டு அவனை மீனாக மாற்றி, தன் குடிலில் ஒரு பானை நீரில் போட்டு வைத்திருக்கிறார். மேலும், அவர் தன் குடிலைச் சுற்றி பூதங்கள் வர இயலாதவாறு மந்திரத்தால் ஒரு வேலி போட்டு வைத்திருக்கிறார். ஹூபாவை எப்படி அங்கிருந்து விடுவிப்பது என்று தெரியவில்லை”

“வருத்தப்படாதே பாபாமூக்கா.. குடில் எங்கே என்று காமி, நாங்கள் ஹூபாவை விடுவிக்க முயற்சி செய்கிறோம்” என்றான் அரூபன்.

“இவ்வளவு சக்தி படைத்த நாங்களே எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம். நீ சின்னப் பையன், உன்னால் எப்படி முடியும்?”

“நான் சின்னப் பையன்தான், ஆனால் நீ ஒன்று கவனித்தாயா? அவர் பூதங்கள் உள்ளே வராமல் இருக்கத்தான் வேலி போட்டிருக்கிறார்.. மனிதர்களுக்கு அல்ல. என் உருவமும் சிறியது, நான் எப்படியாவது உள்ளே சென்று அந்தப் பானையைத் தூக்கி வருகிறேன்”

அவர்கள் முனிவரின் குடிலுக்குச் சென்ற பொழுது, அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஹூபா இருந்த பானை அருகே அவருடைய சிஷ்யர் ஒருவர், விறகுக் குச்சிகளை உடைத்துக் கொண்டிருந்தார்.

அரூபன் எதோ அற்புதன் காதில் சொல்ல, அவன் மட்டும் குடிலை நெருங்கி,

“ஐயா.. ஐயா” என்றான்.

திரும்பிய சிஷ்யர், “யாருப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு” என்றார்.

“ஐயா.. வழி தவறி வந்துவிட்டேன், மிகவும் தாகமாக இருக்கிறது. குடிக்க சிறிது தண்ணீர் கிடைக்குமா”

“இரு.. வருகிறேன்” என்று அவர் உள்ளே சென்றார்.

அவர் உள்ளே போனவுடன், அரூபன் விரைவாகச் சென்று அந்த பானையைத் தூக்கி வந்துவிட்டான். வெளியே வந்தவன், ஆவலாக அந்த மீனைக் கையிலெடுக்க, பாசமாக அவன் கையைக் கவ்வியது ஹூபா. வலி பொறுக்க முடியாமல் கையை அவன் உதறினான். கீழே பூமியில் விழுந்தவுடன் ஹூபா பூத உருவத்துக்கு மாறியது.

அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறினர்.

இரண்டு பெரிய பூதங்களும், பாசமாக தம்பியைத் தழுவியபடி கண்ணீர் விட்டன.

“இனிமேல் யாரையும் தொல்லை செய்யக் கூடாது சரியா? நல்ல வேளை, இந்தக் குழந்தைகள் உன்னைக் காப்பாற்றினார்கள். நாங்கள் எவ்வளவு கவலைப் பட்டோம் தெரியுமா?”

“ஆமாம், அந்த குட்டிப் பானைக்குள்ளே நான் மிகவும் தவித்துப் போனேன். தாவிக் குதிக்க மரம் இல்லை, உருண்டு விளையாட மலை இல்லை. இப்பொழுதுதான் சுதந்தரமாக இருக்கிறது. இனி யார் வம்புக்கும் செல்ல மாட்டேன். “

“நன்றி நண்பா,”

என்றபடி அரூபன் மீது அவன் எதிர்பாராத சமயம் தாவி, அவனோடு தானும் சேர்ந்து உருண்டு போய் ஒரு மரத்தில் மோதி எழுந்தது.

“குட்டிப் பூதமே! உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சிரித்துக் கொண்டே அரூபன் எழுவதற்குள், ஹூபா மரத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டது.

மற்ற மூவரும் அவர்களுடன் இணைய, அவர்களின் குதூகல வேடிக்கைப் பயணம் தொடர்ந்தது.

Author

  • ஜெயந்தி நாராயணன் மதுரையில் பிறந்தவர். மதுரையிலும் திருச்சியிலும் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில வருடங்கள் பணியாற்றிய பின், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பல ஆண்டுகள் நிதி மேலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைகள் பல்வேறு மின்னிதழ்களிலும், வார இதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதை மற்றும் வெண்பா எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைத் தொகுப்பான சுகிரா 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது.

You may also like

Leave a Comment