Home சிறுகதைஉள்ளதைப் பேசு

காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள்.

“மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள்.

வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. பாப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான் கொஞ்சம் லேட் ஆயிருச்சு..” என்றாள்.

“எதாச்சும் சாக்குப்போக்கு சொல்றதே உனக்கு வேலையாப் போச்சு.. மச மசன்னு நிக்காம, போய் வேலையைப் பாரு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள் கீதா.

வேகமாகச் சமையலறைக்குள் சென்ற கமலா, அங்கே கிடந்த பாத்திரங்களை எல்லாம் மடமடவென்று தேய்த்து வைத்தாள். இட்டிலியை ஒரு அடுப்பில் ஏற்றி வைத்துவிட்டு, சட்னிக்குத் தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள்.

“கமலா.. சூடா ஒரு காபி போட்டுக் கொண்டு வா” என்ற சத்தம் கேட்டதும்.. “இதோ வந்துட்டேன்மா..”என்று சொல்லிவிட்டு இன்னொரு அடுப்பில் பாலைச் சுட வைத்தாள்.

பால் காய்ந்ததும்.. அவசரமாகக் காப்பித்தூளைச் சேர்த்து, சர்க்கரையும் சேர்த்துப் பதமாக ஆற்றி நுரை பொங்க.. டம்ளரில் ஊற்றி சேலைத் தலைப்பில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள். ஹாலில் சோபாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கீதா முன் வைத்தாள்.

“பாப்பாவுக்கு சீக்கிரமா ஜடை போட்டு விடு.. அவளுக்கு இன்னிக்கு நூடுல்ஸ் வேணுமாம். அதையே செஞ்சு கொடுத்து விடு..” என்று அடுக்கடுக்காய் வேலைகளைக் கொடுத்தாள்.

“இதோ.. செய்றேன்மா”ன்னு அவசரமாகக் கிச்சனுக்குள் நுழைந்தாள் கமலா.

நூடுல்ஸ்க்கு தேவையான கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பீன்ஸ் இவற்றை நறுக்க ஆரம்பித்தாள். ஒருபக்கம் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு நூடுல்ஸ் பாக்கெட்டுகளைப் பிரித்துப் போட்டு, அது வெந்து கொண்டிருக்கும் பொழுது.. பக்கத்தில் காய்கறிகளை வதக்க ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக நூடுல்சைச் செய்து ஒரு டப்பாவில் அடைத்து விட்டாள்.

பாப்பாவின் அறைக்குச் சென்றாள். விளையாடிக் கொண்டிருந்த அனு, “ஹாய் கமலாம்மா..” என்று ஆசையாய் வந்து கட்டிக்கொண்டாள். அனு, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். கமலாவிடம் அதிக அன்பு கொண்டவள்.

“வாங்க அனு செல்லம்.. பள்ளிக்கூடத்துக்கு டைம் ஆச்சு” என்றாள்.

அவளுக்கு இரண்டு ஜடைகளைப் பின்னி, ரிப்பனை வைத்து மடித்துக் கட்டி.. பள்ளிச்சீருடையைப் போட்டு விட்டு.. காலை உணவை ஊட்டிவிட்டாள். ஷூவை மாட்டிவிட்டு, பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு பள்ளி ஆட்டோவில் ஏற்றி விட்டாள்.

திரும்ப உள்ளே வந்து கிச்சனில் உள்ள அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சுத்தப்படுத்தினாள்.

கீதாவிடம் சென்று “அம்மா.. மதியத்திற்கு என்ன சமையல் செய்ய வேண்டும்” என்று கேட்டாள்.

நிமிர்ந்து அவளைப் பார்க்காமலே “மதியத்திற்கு தக்காளிச் சோறும், தயிர்ப்பச்சடியும் செய்துவிடு” என்று கீதா சொன்னாள்.

“சரிம்மா..” என்றவள், உள்ளே சென்று அதற்கான வேலைகளை வேகமாக முடித்தாள். மதியம் 3 மணிக்கு மேல் தனது வீட்டிற்குக் கிளம்பினாள். அவள் குழந்தைக்குக் காய்ச்சல் இன்னும் விடவில்லை. அதனால் மறுநாளும் சற்று தாமதமாகவே வேலைக்கு சென்றாள். அதே சிடுசிடு அர்ச்சனை.. அதே கடுகடு வரவேற்பு. அமைதியாய்த் தாங்கிக்கொண்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி செல்லும் பரபரப்பு இல்லை. ஆனால் சமையல் வேலை கூடுதலாக வந்து விடும். கீதாவுக்குக் காஃபி போட்டு, சுடச்சுட பீங்கான் கப்பில் ஊற்றிக் கொண்டு இருக்கும் போது, அனு பாப்பாவின் பந்து வேகமாய் பீங்கான் கப்பில் பட்டுத் தெறித்தது.

காப்பியோடு, பீங்கான் கப் கீழே விழுந்து நொறுங்கியது. கப் உடைந்த சத்தம் கேட்டதும், “அங்கே என்ன சத்தம்..?” என்று கேட்டுக்கொண்டே கிச்சனுக்கு வந்தாள் கீதா.

அனு பாவமாக கமலாவைப் பார்த்தாள். பீங்கான் கப் உடைந்து காஃபி எல்லாம் சிதறி இருப்பதைப் பார்த்து.. கோபம் அடைந்த கீதா “ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்வதில்லை..” என்று படாரென்று கமலாவின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

கமலாவும் அமைதியாகத் தலை குனிந்து கொண்டாள்.

உடைந்த துண்டுகளை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்த கமலாவிடம்.. அனு மெதுவா வந்து “சாரி கமலாம்மா” என்றாள். அவள் முகத்தின் வாட்டம் பார்த்த கமலா.. அவளிடம் “பரவால்ல கண்ணா.. பார்த்து விளையாடுங்க” என்று சொன்னாள்.

வார இறுதி முடிந்து திங்களும் வந்தது. அன்று பள்ளியில் பாவேந்தர் பாரதிதாசனின் இளையார் ஆத்திசூடியை டீச்சர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் “உள்ளதைப் பேசு” என்ற ஆத்திசூடியைச் சொல்லும் போது.. ‘எது உண்மையோ.. அதை மட்டுமே பேசு’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்டதில் இருந்து அனு பாப்பாவிற்கு ஒரே சோகம். வீட்டிற்கு வந்ததும் நேரே அவள் அம்மாவிடம் சென்று “அம்மா.. முந்தா நாள் பீங்கான் கப்பை நான்தான் தெரியாம உடச்சிட்டேன். கமலாம்மா உடைக்கல” என்று அழுதாள்”. “நீங்க திட்டுவீங்கன்னு பயந்துதான் சொல்லல.. இன்னைக்கு வகுப்புல எங்க டீச்சர்.. உள்ளத உள்ளபடிப் பேசணும்னு சொல்லிக் கொடுத்தாங்க.. எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சும்மா.. கமலாம்மா பாவம்மா” என்றபடி விசும்பினாள்.

குழந்தை தன் தவறைச் சரி செய்யத் தவிப்பதைப் பார்த்து கீதாவுக்கும் மனது ஏதோ செய்தது.

மறுநாள் கமலாவிடம் நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

Author

  • பிறப்பிடம்: திருநெல்வேலி வசிப்பிடம்: மிச்சிகன், அமெரிக்கா வேலை: அலுவலக மேலாளர் கவிதாயினி , எழுத்தாளர் , இதழாசிரியர், தன்னார்வல தமிழ் ஆசிரியர், நிகழ்வுத் தொகுப்பாளர்/தயாரிப்பாளர், கருத்தரங்கம் / கவியரங்கத் தலைமை, கட்டுரையாளர், பட்டிமன்ற பேச்சாளர்/நடுவர், கதை சொல்லி, ஒருங்கிணைப்பாளர்/நெறியாளர். கதம்பம், தென்றல், முத்துக்கமலம், வளரி, வல்லினச் சிறகுகள், இனிய உதயம், மக்கள் முரசு, தாரகை, நெல்லை டைம்ஸ், ஆனந்தச்சந்திரிகை, ஆக்கம், தமிழ்ப்பல்லவி, கொக்கரக்கோ, சித்திரகுப்தன், அன்புப்பாலம், காற்றுவெளி போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர், இதுவரை எழுதிய நூல்கள்: 21, தொகுத்த நூல்கள்: 17,  பங்கேற்ற தொகுப்பு நூல்கள்: 20 "சங்கப்புலவர் விருது", "தங்க மங்கை", "சொல்லின் செல்வி",  "பாரதியார் விருது",  "சமுதாயச்சிற்பி", "ஈரோடு தமிழன்பன் 80", "சிங்கப்பெண்", "முத்தமிழ்த்திலகம்", "உ.வே.சா. விருது", "உவமைக்கவிஞர் சுரதா விருது", "அருந்தமிழ் தாரகை", "நூலேணி தன்முனை இலக்கிய விருது" உள்ளிட்ட விருதுகளைப்பெற்றிருக்கிறார்.

You may also like

Leave a Comment