Home தொடர்தனிமையைப் போக்கும் வழிகள் (இறுதிப்பகுதி)

தனிமையைப் போக்கும் வழிகள் (இறுதிப்பகுதி)

by Padma Arvind
0 comments

தனிமை என்பது பெரும்பாலோருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது பெரும் மனச்சோர்வையும் துயரத்தையும் தருவதாகவே இருக்கிறது. இந்த உணர்விலிருந்து மீள, ஒவ்வொருவரும் மன வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியம்.

தனிமையைப் போக்க பல வழிகள் இருக்கின்றன. நல்ல புத்தகங்கள் படிப்பது முதல், புதிதாக ஏதேனும் திறன்கள் வளர்த்துக்கொள்வது வரை செய்யலாம். தியானம் செய்வது, நல்ல நூல்களைப் படிப்பது ஆகியவை மனதைத் தெளிவுபடுத்தும். நம்மிடம் எந்தக் குறையும் இல்லை என நம்புவது தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், நமக்கு ஒத்த குணம் உள்ள நண்பர்களைத் தேடிச் சென்று பழகுவது தனிமையைப் போக்க சிறந்த வழி.

பதின்ம வயதில் இருக்கும் இளையோருக்குத் தனிமை இனிமை பயக்காது. அவர்கள் பள்ளியில் நண்பர்களோடு கூடி விளையாடும் பருவத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில் சைபர் புல்லியிங் போன்ற அழுத்தங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. இதிலிருந்து விலக, பெற்றோரின் பங்கு மிக முக்கியம்.

பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயது மாணாக்கரின் செல்போனில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். திரையில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது, தேவையற்ற அழுத்தங்களில் இருந்து அவர்களைக் காக்க உதவும். மேலும், என்னதான் வேலை இருந்தாலும், இரவு உணவின்போது தவறாமல் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்ண வேண்டும். அந்த நேரத்தில் மனம் விட்டுப் பேசுவது, அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வது ஆகியவை பிள்ளைகளின் தனிமையை நீக்க உதவலாம்.

ஆசிரியர்களும் குழுச் செயல்பாடுகள் மூலம் தனிமையை நீக்க பல வழிகளில் உதவலாம். இளையோரின் மன வலிமையைப் பெருக்கிக் கொள்ள சமூகம் துணையாக நிற்க வேண்டும். வகுப்புகளில் சோர்ந்திருக்கும் மாணவர்களைக் கவனித்துத் தனிக்கவனம் செலுத்திப் பிரச்சினையைத் தீர்க்க முயலலாம். குழு திட்டங்கள் வகுத்து அதிகம் பேசாமல் ஈடுபடாமல் இருக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாம். ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு தனித் திறமை இருக்கும். அதைக் கண்டுபிடித்து ஊக்குவிப்பதும் ஆசிரியர்களின் கடமை ஆகும்.

என் மகன் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குப் படிக்கும்போது, தானே விரும்பி தனிமைப்படுத்திக்கொண்டான். அப்போது வெளியுலகத் தொடர்புகள் எதுவும் இல்லை. அப்போது தினமும் மாலை ஒரு மணி நேரம் இருவரும் வீட்டருகில் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். படிப்பு தொடர்பாக எதையும் பேசமாட்டோம். ஆனால் ஏதேனும் நகைச்சுவையாகப் பேசுவதையும், தேர்வு முறைகளை எளிமைப்படுத்துவது அல்லது பொதுவான செய்திகளைப் பேசுவது என்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தோம். இது அவனது மன அழுத்தத்தையும் தனிமையையும் குறைக்க உதவியது.

கல்லூரிகளில் பல குழுக்கள், கேளிக்கைகள் , இலக்கியம், விளையாட்டு தொடர்பாக இருக்கும். அதில் எதில் தனக்கு விருப்பம் இருக்கிறது என அறிந்து ஈடுபடுத்திக் கொள்ளலாம். நன்றாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. பங்கு பெறும் அனுபவம், மற்றவர்களோடு பழகுவது அந்த நட்பு உருவாக்கிக் கொள்வது எல்லாம் தனிமையைப் போக்கும்.

இதைத் தவிர பல திறன்களைக் கற்றுக் கொள்ளலாம். இப்போது இணைய இணைப்பு வசதி எளிதாக இருக்கிறது. நமக்குப் பிடித்த பல கலைகளைக் கற்றுக்கொள்ள முடியும். பல நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மாநிலம் விட்டு மாநிலம் வந்தாலோ, நாடு விட்டு நாடு வந்தாலோ தனிமையைப் போக்க முதலில் அந்த ஊர் மற்றும் நாட்டின் மொழி, கலாசாரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். அங்கே உள்ள சமூக மையங்களுக்குச் சென்று தன்னார்வப் பணிகள் செய்யலாம். அதன் மூலம் மக்களுடன் பழக வாய்ப்புக் கிடைக்கும். அப்போது நேரமும் நல்ல முறையும் கழியும்.

வெற்றி அடைந்தோர்க்கும், தலைமைப் பதவியில் இருப்போருக்கும் தனிமை தவிர்க்க இயலாதது. அந்தத் தனிமை அவர்களுக்குச் சுதந்திரமாகச் செயல்படவும் சிந்திக்கவும் வழிவகுக்கும். இந்தத் தனிமையைக் கையாள, சமூகத்துடன் தொடர்பில் இருப்பது நல்லது. முதியோருக்கும், ஓய்வு பெற்றோருக்கும் இருக்கும் தனிமையை நீக்க, சமூக மையங்களும் குடும்பத்தின் ஆதரவும் தேவை. அவர்களின் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தனிமை வெவ்வேறு வடிவங்களில் நம்மை அண்டுகிறது. குழந்தையாக இருந்தாலும், வெற்றியின் உச்சியில் இருக்கும் தலைவராக இருந்தாலும், ஓய்வெடுக்கும் முதியவராக இருந்தாலும், தனிமைக்குப் பல முகங்கள் உண்டு. தனிமை இனிமையானதா, துயரமானதா என்பதைத் தீர்மானிப்பது நம் மனநிலை மட்டுமன்று, நம்மைச் சுற்றியுள்ள சமூகமும்தான்.

தனிமையைத் துரத்த, முதலில் அதை ஏற்றுக்கொள்வது அவசியம். சமூகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, குறிப்பாக, மற்ற நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது ஆகியவை தனிமையைப் போக்கும் வழிகளில் மிக முக்கியமானவை. தனிமை உணர்வில் இருந்து மீள சுய முயற்சியுடன், சமூகத்தின் ஆதரவும், அங்கீகாரமும் கிடைக்கும்போது, மனச்சோர்வு நீங்கி, மகிழ்வான வாழ்க்கை நிச்சயம். தனிமை என்பது ஒரு நோய் அல்ல; அது ஒரு தேவை. அதனைப் புரிந்துகொண்டு அணுகுவதே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

Series Navigation<< ஓய்வு பெற்றபின்னும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?

Author

You may also like

Leave a Comment