Home கட்டுரைசமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2

by Padma Arvind
0 comments
This entry is part 2 of 3 in the series பயணக்கட்டுரைத் தொடர்

காவிரியில் இருந்து ஜம்னாவுக்கு

முதன்முதலில் அண்ணன் புதுதில்லிக்குப் படிக்கச் சென்றபோது இருந்த பயமும் ஒருவித அச்சமும், நான் புதுதில்லிக்குச் செல்ல ஆயத்தமான போது இல்லை என்பதுதான் உண்மை. அம்மா, அப்பா இருவருக்குமே புதுதில்லியைப் பற்றி தெரிந்திருந்தது; அண்ணன் ஐஐடியில் படித்தபோது விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நிறைய விவரங்களைச் சொல்லி இருந்தான். இப்போது இரண்டாவது அண்ணன் அங்கே பணி நிமித்தம் சென்றிருந்ததால் பயம் எதுவும் இல்லை. கும்பகோணத்திலேயே விடை அளித்துவிட்டனர்.

ஏற்கெனவே பாண்டிச்சேரியில் விடுதி வாழ்க்கை பழகிய ஒன்றுதான் என்றாலும், இரண்டு மாத விடுமுறையில் அம்மாவின் கவனிப்பு கொஞ்சம் பிரிவுச் சோகத்தை ஏற்படுத்தியது. புதுதில்லி, இரண்டுநாள் புகைவண்டிப்பயணம் செய்யும் தூரம், வேறு மொழி பேசும் இடம் என்ற கலக்கம் மட்டும் இருந்தது.

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வந்து, மாமா வீட்டில் பகல் பொழுது தங்கிவிட்டு, மாலை இரண்டு நாட்களுக்கான உணவுப் பொட்டலங்களோடு ஜிடி (GT) எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன். புகைவண்டியில் முன்னதாகச் சொல்லி உணவைப் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் அது மிகவும் விலை உயர்ந்தது. வீட்டில் தயார் செய்து எடுத்துப்போகும் உணவுப்பொட்டலங்கள் ருசி மிகுந்ததுடன் விலை கொடுத்து வாங்கவேண்டியது இல்லை. மாமி மூன்று வேளைக்கும் இரண்டு நாளுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக் கொடுப்பதோடு சில நொறுக்குத் தீனிகளையும் கொடுத்துவிடுவார்.

அப்போதெல்லாம் சாதாரணப் பெட்டிதான். பெட்டிக்குள் நுழைந்தாலே ஒரு சிறிய இந்தியாவைப் பார்க்கலாம். சிலர் பெரிய மண்பானைகளிலும், சிலர் வாட்டர் கேன்களிலும் தண்ணீரை நிரப்பி எடுத்து வருவர். மேல் படுக்கைக்கும் நடுத்தரப் படுக்கைக்கும் இடையே புடவையைத் தூளியாகக் கட்டி, அதில் குழந்தையைத் தூங்கவிட்டிருப்பர். ரயில் ஆடும் ஆட்டத்தில் அந்தத் தூளி ஊஞ்சலாட, ஒரு பக்கம் குழந்தை அழுதுகொண்டு இருக்க, மறுபக்கம் ரயிலின் ‘தடக் தடக்’ சத்தத்தில் அதுவே தூங்கியும் போகும்.

ஒவ்வொரு ரயில் நிலையம் வரும்போதும் ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய திருவிழாவே நடக்கும். ஜன்னல் வழியாகவே கையை நீட்டி உணவுப் பொட்டலங்களை வாங்குவர். இதில் வேடிக்கை என்னவென்றால், புகைவண்டி கேண்டீனில் விற்கப்படும் ‘சாய்’. “சாய்… சாய்…” என்று கூவிக்கொண்டு வருவர், ஆனால் அதை வாங்கிப் பார்த்தால் வெறும் சூடான வெந்நீர் போலத்தான் இருக்கும்! ஆனாலும் அந்தக் குளிரில் அந்த வெந்நீரே அமிர்தமாகத் தெரியும்.

இதற்கிடையில், ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு, காற்றுக்கு அணையாமல் ஊதுவத்தியைப் பற்றவைக்கப் போராடும் பக்தர்களையும் பார்க்கலாம். கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதியைக் கடக்கும்போதெல்லாம் சில்லறைக் காசுகளைத் தூக்கி வீசி நதியை வணங்கிப் பிரார்த்திப்போரைக் காணலாம்.

சுற்றிலும் ஹிந்தியிலும் புரிந்துகொள்ள முடியாத பல மொழிகளிலும் பேசும் பலர். கழிவறைகளில் நீர்ப்பற்றாக்குறை எப்போதுமே பெரிய பிரச்சினை. காசிபெட், நாக்பூர் போன்ற நிறுத்தங்களில் நீர் பிடித்துக் கொள்வர். அப்போதுதான் கழிவறைகளும் சுத்தம் செய்யப்படும்.

தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் தூங்கும் வேளையில் கொஞ்சம் விழிப்புடன் இருத்தல் மிக அவசியம். என்னதான் வெப்பமாக இருந்தாலும், போர்வை கொண்டுவருவது இதற்காகத்தான்; தலைமுதல் கால்வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு திரும்பிப் படுத்து உறங்குவது அவசியம்.

போபாலை நெருங்க நெருங்க, சட்டென ஜன்னல்கள் மூடப்படும். கொள்ளைக்காரர்கள் யாரேனும் ஏறுவரோ! என ஒரு ஐயம் ஏற்படும். புகைவண்டியும் சீற்றமெடுத்துப் பல சின்ன ஸ்டேஷன்களில் நிற்காமல் ஓடும்.

டிக்கெட் பரிசோதகர்கள் சிலசமயம் உள்ளே கதவைத் தாளிட்டுவிடுவதும் உண்டு. பயணிகள் ஏறமுடியாமல் கதவைத் தட்டுவர். காலி இடங்களை அடுத்த நிறுத்தத்தில் வேறு யாருக்காவது பேரம் பேசியிருப்பார். எந்த நிறுத்தம்? என்பதோ யார் தட்டுகின்றனர்? என்பதோ புரியாமல் திகிலாக இருக்கும்.

ஒரு வழியாக இரண்டு நாள் கரியுடன், ஃபாசியாபாத் தாண்டி புது தில்லி வந்தடைந்து அண்ணனைக் கண்டவுடன் அத்தனை ஆறுதலாக இருந்தது. அண்ணனுடன் சஃப்தர்ஜங்க் என்க்ளேவ் என்ற இடத்திற்குச் சென்றேன். ஒரு சின்ன வீடு, வெளியே நல்ல பரந்த புல்வெளி, சின்ன சமையலறை. அண்ணன் என்னை ‘தங்கை’ என்று அந்த வீட்டுப் பாட்டிக்கு அறிமுகப்படுத்தினான். பயணக் களைப்புத் தீர “குளித்துவிட்டு வருகிறேன்” என்று சொன்னபோது, என் அண்ணன், “இந்த இரண்டு வாளித் தண்ணீருக்குள் குளித்துவிடு” என்றான். 2000 கிலோமீட்டர் கடந்து வந்த எனக்கு, அந்த இரண்டு வாளித் தண்ணீர் தான் தில்லியில் கிடைத்த முதல் பெரிய அதிர்ச்சி. காவேரி ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து வந்தவளுக்கு ரேஷனில் தண்ணீர் கிடைத்தால் எப்படி இருக்கும்?

வெந்நீர் என அண்ணன் சொன்ன நீர், வைத்த பத்து நிமிடத்துக்குள் சில்லென்று குளிர் நீராக மாறியிருந்தது இன்னோர் அதிர்ச்சி. எனவே புதுதில்லியில் எறும்பைவிடச் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பது முதல்நாளே நான் கற்றுக்கொண்ட பாடம்.

Series Navigation<< சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரைசமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3 >>

Author

You may also like

Leave a Comment