Home இதழ்கள்புதிய நிலத்தில் பூக்கும் தோட்டம் | வெங்கட்ரமணன்

புதிய நிலத்தில் பூக்கும் தோட்டம் | வெங்கட்ரமணன்

0 comments

சியாவுக்கு வெளியே தமிழர் அதிகம் வசிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று, கனடாவில் ஏறக்குறைய இரண்டரை இலட்சம் தமிழர்கள்  வசிக்கிறார்கள். இந்திய நகரங்களை விடுத்தால் தமிழர்கள் அதிகம் வசிப்பது டொராண்டோ பெருநகரில்தான்.  கனேடிய அரசின் தாராள அகதிக் கொள்கையாலும்,   இனக்குழுப் பன்முகக் கொள்கைகளாலும்  இலங்கைப் போர்சூழலை விடுத்துப் பெருமளவில் தமிழர் கனடாவில் குடிபெயர்ந்தனர். எனவே கனேடியத் தமிழரில் பெரும்பான்மையினர் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள்.  இந்தியாவிலிருந்து புலம்பெயரும் தமிழர்கள் பெரிதும் பொருளாதார முன்னேற்றம் கருதியே இடம்பெயர்கிறார்கள். மாறாக, அடையாளங்கள் மறுக்கப்பட்ட நிலையில் நாட்டைவிட்டு வெளியேறிய ஈழத்தமிழர் அடிப்படையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த பெரும் கரிசனங்களைக் கொண்டிருக்கிறார்கள்.  வேறேதும் இயலாத நிலையில் தமக்கு மறுக்கப்பட்ட அடையாளங்களைத் தம் அடுத்த சந்ததியினருக்குக் கையளிப்பதையே பலரும் தங்கள் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது மிகையில்லை.  இதன் முக்கிய வெளிப்பாடாக அமைவது தமிழ்க் கல்வி;   தரவுகளின்படி குறைந்தபட்சம் அறுபது சதவீத தமிழ்க் குழந்தைகளுக்கு இங்கே தாய்மொழி கற்பிக்கப்படுகிறது.  மறுபுறத்தில் தேங்காயைப் போல புறத்தில் பழுப்பாகவும், அகத்தில் வெள்ளையாகவும் தம்மை உணரும் இளந்தலைமுறை தம்மை வதிவிடச் சூழலுடன் முற்றாகப் பொருத்திக் கொள்ளவே முயல்கிறது. தம் பெற்றோரின் அடையாள இழப்பை அவர்கள் முற்றிலும் அந்நியமானதாகவும்,  சில வகைகளில் தேவையற்றதாகவுமே உணர்கிறார்கள்.

கனடாவின் தமிழ் இலக்கிய வரலாறு கையெழுத்துப் பிரதிகளில் தொடங்குகிறது.  தமீழீழ மக்கள் விடுதலை இயக்கம் அமைப்பின் கனடா கிளை மொன்றியல் நகரிலிருந்து செப்டம்பர் 1984-ல் புரட்சிப்பாதை’ என்ற கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. பத்து இதழ்களுடன் நின்றுபோன இது, “அடிப்படையில் ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றபோதும் கவிதை, சிறுகதை உள்ளிட தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது” என்று எழுத்தாளரும், கனேடியத் தமிழ் ஆய்வாளருமான வ.ந. கிரிதரன் குறிப்பிடுகிறார்.  தொடர்ந்து வ.ந. கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு குரல்’ என்ற கையெழுத்துச் சஞ்சிகை என்பதுகளின் பிற்பகுதியில் வெளியானது.  செல்வம் அருளானந்தம், குமார் மூர்த்தி போன்றோர் இணைந்து பார்வை’ என்ற சிற்றிதழை மொன்றியல் நகரிலிருந்து வெளியிட்டனர்.  சேரன், செழியன்குமார் மூர்த்தி, வ.ஐ.ஜெயபாலன் போன்ற மிக முக்கியமான படைப்பாளிகள் இதில் எழுதினார்கள். இரண்டே வருடங்களில் நின்றுபோன இந்த சஞ்சிகை கனேடிய தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.    பார்வையின் புத்துயிர்ப்பாக காலம்’ சஞ்சிகை  “காலத்தின் நிர்பந்தத்தால் அகதிகளாய் கனடாவைத் தஞ்சமடைந்த தமிழ் இளைஞர்கள் சிலர் கொண்ட ஆர்வத்தின் வெளிப்பாடு” என்று  ஆசிரியர் செல்வத்தின் பிரகடனத்துடன், 1990-ஆம் ஆண்டு டொராண்டோ நகரிலிருந்து வெளியாகத் தொடங்கியது. 

கனடாவின் இலக்கிய வளர்ச்சிக்குக் கணினிப் பயன்பாட்டுப் பரவலாக்கம் முக்கியமான பங்காற்றியிருக்கிறது.  உலகின் முதல் தமிழ் எழுத்துரு ‘ஆதமி’ கனடாவில் முனைவர் ஶ்ரீனிவாசன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவர் தமிழில் எழுத உதவும் ‘ஆதவின்’ செயலியையும் 1984-ல் வெளியிட்டார். தொடர்ந்து பாமினி போன்ற எழுத்துருக்கள் கனடாவில் வடிவமைக்கப்பட்டுப் பரவலான புழக்கத்துக்கு வந்தன. இவை படைப்பாக்கங்களைக் கனடாவில் கையெழுத்தில் பெற்று இந்தியாவில் அச்சுக்கோர்த்து சஞ்சிகைகளாக்கி இங்கே கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுவித்து, ஆசிரியர்கள் நேரடியாகக் கணினியில் உள்ளிட்டு அனுப்பி, அதைத் திருத்தம் செய்தால் மாத்திரம் போதும் என்ற நிலை உருவானது. இது இந்தியாவின் முன்னணிப் படைப்பாளர்களான சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன், எஸ். ராமகிருஷ்ணன்,  யுவன் சந்திரசேகர்,  எஸ்.வி. ராஜதுரை போன்றோரையும் இலங்கையின் தெளிவத்தை ஜோசப், கே. கணேஷ், எஸ். பொன்னுத்துரை, ஐரோப்பாவில் வசித்த, வ.ஐ.ஜெயபாலன், பொ. கருணாகரமூர்த்தி, ஷோபா சக்தி, சயந்தன், போன்றோரையும் நேரடியாகக் காலம் சஞ்சிகையில் பதிப்பிக்க உதவியது.   இது தர அடிப்படையில் தமிழ் இலக்கிய உலகில் காலம் சஞ்சிகையை ‘கனடாவிலிருந்து வெளிவரும் உலகத் தமிழ் சஞ்சிகை’ என்ற உன்னத இடத்திற்கு உயர்த்தியிருக்கிறது.  போர்ச்சூழல் காரணமாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் உலகமெங்கிருந்தும் பல இலக்கியச் சிற்றிதழ்கள் உருவாக்கப்பட்டபோதும், காலம் மாத்திரமே முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது.  சொல்லப்போனால் பொதுவில் தமிழ் சிற்றிதழ்களில் இந்த அளவு நீண்ட ஆயுளைக் கொண்ட மிகச் சிலவற்றையே அடையாளம் காணமுடியும்.  வ.ந. கிரிதரன் ‘பதிவுகள்’ என்ற இணைய சஞ்சிகையை 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடத்திவருகிறார்.  இதில் புனைவிலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள் , நேர்காணல்கள் எனப் பல ஆழமான படைப்புகள் வெளியாகி வருகின்றன. தாயகம், தமிழர் தகவல், விளம்பரம், நிழல், கூர் எனப் பல இலக்கியச் சிற்றிதழ்கள் கனடாவில் அவ்வப்பொழுது வெளியாகி நின்றுபோயிருக்கின்றன, சில இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

தமிழ் இலக்கிய உலகிற்குக் கனடாவின் மாபெரும் கொடை, கனடா இலக்கியத் தோட்டம் வாழ்நாள் சாதனைக்காக ஆண்டுதோறும் வழங்கும் இயல் விருதுகள். 2000-ஆம் ஆண்டு அ. முத்துலிங்கம், பேராசிரியர் செல்வா கனகநாயகம் ஆகியோரின் முயற்சியால் துவக்கப்பட்ட இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு தமிழின் மிக முக்கியமான இலக்கியக் கௌரவங்களில் தலை இடம் வகிக்கிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஆண்டுதோறும் இயல்விருது அறிவிப்பு மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐம்பது வருடங்களில் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளர்களை அறிய முயல்பவர் இயல் விருதாளர்கள் பட்டியலிலிருந்தே தொடங்கலாம். முதல் சில வருடங்களுக்கு வாழ்நாள் சாதனை விருதுகளை மாத்திரமே வழங்கிவந்த இலக்கியத் தோட்டம், இப்பொழுது கவிதை, புனைவிலக்கியம், அபுனைவு, மொழிபெயர்ப்பு, இளம் படைப்பாளிகள், எனப் பலவாகப் பெருவளர்ச்சி பெற்றிருக்கிறது.  இணைச் செயற்பாடாக இலக்கியத் தோட்ட விருதுதாளர்களுக்கான சிறப்பிதழ்களைக் காலம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ஆரம்பகாலங்களில் கனேடிய தமிழ் படைப்பாளிகள் கவிதைகளிலேயே பெரிதும் கவனம் செலுத்தினார்கள்.  சேரன், திருமாவளவன், செழியன், காலம் செல்வம், போன்றோரது கவிதைகள் பெரிதும் பாராட்டப்பட்டன.  அடுத்த தலைமுறையில் கீதா சுகுமாரன், இளங்கோ (டி.சே), மெலிஞ்சி முத்தன்,  சுமதி ரூபன், போன்றவர்களின் கவிதைகள் கவனம் பெற்று வருகின்றன.  தொடர்ந்து சிறுகதைகளின்மீது அவர்கள் கவனம் திரும்பியது.  என்.கே. மஹாலிங்கம், குமார் மூர்த்தி, டானியல் ஜீவா, குரு அரவிந்தன், வ.ந. கிரிதரன், அகில், பொன்குலேந்திரன், அ.முத்துலிங்கம், சுமதி ரூபன், செழியன், தமிழ்நதி, இளங்கோ, மெலிஞ்சிமுத்தன் ஆகியோரைக் கனடாவின் சிறந்த சிறுகதையாசிரியர்களாகக் குறிப்பிடலாம். கனடா வாழ் பெண் எழுத்தாளர்களாக சுமதி ரூபன், மைதிலி தயாநிதி,  வி.ஸ்ரீரஞ்சனி, லீலா சிவானந்தன், குறமகள், கீதா சுகுமாரன், சிவவதனி பிரபாகரன், சிவநயனி முகுந்தன், இராகவி,  ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இந்திரா பார்த்தசாரதியும், எஸ்.பொன்னுதுரையும் இணைந்து  1994-ல் வெளிவந்த ‘பனியும் பனையும்’ என்ற நூல் உலகெங்கிலும் இருக்கும் புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்தனர்.  இதில் கனடாவிலிருந்து அளவெட்டி சிறிசுக்கந்தராசா, ஆனந்த் பிரசாத், அ. கந்தசாமி, வ.ந. கிரிதரன், சக்கரவர்த்தி, க. நவம், நிலா-குகதாசன், பவான், என்.கே. மஹாலிங்கம், ஜோர்ஜ் குருசேவ் ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றன.  இதுவே கனேடியத் தமிழர்களின் (பிற அயலகத் தமிழர்களூடாக) படைப்புகளின் முதல் தொகுப்பாக்கம். இதற்கு சுஜாதா அணிந்துரை எழுதியிருந்தார்.  ஆரம்பகாலங்களில் தாயகமிழந்த ஏக்கம், தாயகம் குறித்த அக்கறை, குடும்பப் பிரிவின் தவிப்பு,  போர்ச்சுழலின் மரணங்கள், இழப்புகள் போன்றவையும் புலம்பெயர் சூழலின் அடையாளச் சிக்கல்களுமே பெரும்பாலும் படைப்பிலக்கியங்களின் கருப்பொருள்களாக இருந்தன. தொடர்ந்து தலைமுறைகளுக்கிடையேயான சிக்கல்கள், போர் வடுக்களின் வெளிப்பாடாகக் குடும்பத்தில் எழும் வன்முறைகள்,   எந்தவித ஆயத்தங்களுமின்றிப் பிடுங்கி நடப்பட்ட புதிய நிலத்தில் வேற்றுச் சமூகங்களுடன் ஊடாடுதலில் இருக்கும் சிக்கல்கள், போன்றவையும் எழுதப்பட்டன. முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரச் சூழல் தரும் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர உணர்வால் கிளைத்தெழும் தனிமனித இருப்பு குறித்த கேள்விகள், பாலியல் சுதந்திரங்கள், முதியோரின் தனிமை, அந்நியமாதல் போன்றவையும் பேசப்படுகின்றன. 

கனடா, தமிழிலக்கியம் என்ற இரட்டை வார்த்தைகளுடன் மூன்றாவதாக  உச்சரிக்கப்படும் பெயர் – அ. முத்துலிங்கம். தமிழின் முதன்மை சர்வதேச எழுத்தாளர் என்று பலராலும் அடையாளம் காணப்படுபவர் இவர். ஏறத்தாழ இருபது வருடங்கள்  ஆப்கானிஸ்தான் தொடங்கி, சூடான் வரை பல நாடுகளில் ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வங்கி அமைப்புகளின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய முத்துலிங்கம் 2000-ஆண்டு முதல் டொராண்டோ பெருநகரில் வசித்து வருகிறார்.  இரண்டு நாவல்கள் இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகள், பல கட்டுரைகளை எழுதிய முத்துலிங்கம், முதன்மையாக ஒரு சிறுகதை விற்பன்னர்.  பன்னாட்டுக் கதைக்களன்கள், மென்னகை தரும் விவரிப்புகள் போன்றவை  தமிழ்ச் சிறுகதை உலகுக்கு முத்துலிங்கத்தின் கொடைகள்.   தமிழில் புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளியைக் குறைத்தவர் என்று எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் மதிப்பிடுகிறார். “அவருடைய புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேறு ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகுநுட்பமான வகையில் தூண்டிவிடக்கூடியது” என்று அசோகமித்ரன் மதிப்பிட்டார். அ. முத்துலிங்கத்தின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் 17 உலகச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.   இருபத்தைந்து ஆண்டுகளாக இயல்விருது செயற்பாடுகளை முன்னின்று நடத்தி வருகிறார்.  சிறுகதை, நாவல், கவிதை, அபுனைவு, கூர் இதழின் ஆசிரியர் எனப் பரந்துபட்ட செயற்பாடுகள் தேவகாந்தனை கனடாவின் முக்கியமான படைப்பாளியாக அடையாளம் காட்டுகின்றன. மஹாபாரதத்தின் மறுவாசிப்பான கதாகாலம்,  முப்பதாண்டுகளுக்கு மேலாக விரியும் பெருநாவல் கனவுச்சிறை போன்றவை இவருடைய முக்கியமான நாவல்கள்.  அடுத்த தலைமுறையின் முக்கிய எழுத்தாளர், இளங்கோ. இவரும் கவிதை, புனைவிலக்கியம், திரைப்படக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனத் திறம்படப் பலதுறைகளில் ஆக்கங்களை வடித்துள்ளார்.

கலாச்சாரப் பன்மை பேணும் சமூகம் என்று கனடாவை அடையாளம் காட்டும் அதே வேளையில் இலக்கியத்தைப் பொருத்தவரை  இங்கே கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல் அதிகம் இல்லை.  இது தமிழுக்கு மாத்திரமானதல்ல.  ஆங்கிலம், பிரெஞ்சு என்ற இரட்டைத் தேசிய மொழிகளைக் கொண்ட கனடாவில், சீனம், தமிழ், பஞ்சாபி போன்ற பிற மொழிப் படைப்பாளர்களுக்கிடையே எந்தப் பிணைப்பும் இல்லை என்றே தோன்றுகிறது.  இதைப்போலவே கனடாவின் பூர்வகுடிகளுக்கும் இங்கே குடியேற்றம் பெற்றவர்களுக்கும் இடையேயான இலக்கிய உரையாடல்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்குக் கிடையாது.  இந்நிலையில் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் படைக்கப்பட்டவை மாத்திரமே ‘கனேடிய தேசிய இலக்கியங்கள்’ என்று வகையறுக்கப்படுகின்றன, அடையாளம் சுட்டப்படுகின்றன. மறுபுறத்தில் வியட்நாமியர், தமிழர், பஞ்சாபியினர், இத்தாலியர், மேற்கிந்தியத் தீவினர், தென்னமெரிக்கர், படைக்கும் கனேடிய வாழ்வை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் இங்கே ‘பிறமொழி இலக்கியங்கள்’ என்ற வகையிலேயே பார்க்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களிலும் அந்த வகைப்பாட்டிலேயே கற்பிக்கப்படுகின்றன.  கனேடியத் தமிழரின் படைப்புகள் கனடாவின் தேசிய இலக்கியமாக அடையாளம் காணப்பட  தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய அவசரக் கட்டாயம் இருக்கிறது.  இதில் பெரும்பங்காற்றியவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான காலஞ்சென்ற செல்வா கனகநாயகம். இவர் 2001-ஆம் ஆண்டு Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka என்ற மொழிபெயர்ப்புத் தொகுதியை வெளியிட்டார். தொடர்ந்து 1954 முதல் 2014 வரை ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை You canno turn away: poem in Tamil,  Uprooting the Pumpkin: Selections from Sri Lankan Tamil Literature, History and Imagination: Tamil Culture in the Global Context, என்ற தொகுதிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.  இந்தப் பணிகளில் இவருடன்  கவிஞர், பேராசிரியர் சேரனும் இணைந்து செயல்பட்டார். இவை பன்னாட்டு மொழியாய்வுச் சூழலுக்கு சமகாலத் தமிழ்ப்படைப்புகளை அறிமுகப்படுத்துகின்றன.  அ. முத்துலிங்கம், தேவகாந்தன், சேரன் ஆகியோரின் படைப்புகள் தற்பொழுது ஆங்கில மொழியாக்கம் பெற்றுவருகின்றன. மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’ என்.கே. மஹாலிங்கத்தால் A Seperate Home என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.  சேரன் பரவலாக மொழியாக்கம் பெற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர்;  ஆங்கிலம், சிங்களம், மலையாளம், கன்னடம்,  வங்காளம், ஜெர்மன், டச்சு, ஸ்வீடிஷ் ஆகிய மொழிகளில் இவர் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சேரனின் ஆங்கில நாடகங்கள்  ‘What If the Rain Fails’, ‘Canto of War’, ‘Not By Our Tears’  இரண்டையும் கனடாவின் Asylum Thetare Group கனடாவிலும் அமெரிக்காவிலும் தொடச்சியாக மேடையேற்றி வருகிறது.

இதன் மறுதலையாக உலகின் பிறமொழி முன்னணி இலக்கியப் படைப்புகள் கனேடியத் தமிழரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன.  என்.கே. மஹாலிங்கம் நைஜீரிய எழுத்தாளர் சினுவா ஆச்சேபியின் Things Fall Apart நாவலை ‘சிதைவுகள்’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார்.  தென்னாப்பிரிக்காவின் ஜெ.எம். குட்ஸியின் Life of Animals  குறுநாவல்;  செக்காவ், வெர்ஜினியா வுல்ஃப், ஐஸக் அஸிமோவ் உள்ளிட்ட பெரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மஹாலிங்கம் தமிழாக்கம் செய்திருக்கிறார்.   அ. முத்துலிங்கம் பல சமகால உலகச் சிறுகதைகளை மொழிபெயர்த்துத் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  இளங்கோவின்  ‘சார்ள்ஸ் ப்யூகோவிஸ்கியின் கவிதைகள்’, கீதா சுகுமாரனின் ‘தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி’ என்ற சில்வியா பிளாத் கவிதை மொழியாக்க நூல் போன்றவை மிக முக்கியமான சர்வதேச கவிஞர்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கின்றன. 

மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க தொடர் முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் ஹார்வட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டும் முயற்சியில் கனேடியத் தமிழர்கள் முனைந்து ஈடுபட்டார்கள். அதையொட்டி கனடாவின் முதன்மையான டொராண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்க ஆர்வம் ஏற்பட்டது.  2024 மே மாதம் பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு டொராண்டோ பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்றார்.  நிரந்தர ஆய்வுத் துறையின் உருவாக்கம், கனடாவில் தொடர் தமிழாராய்ச்சிகளுக்கும், ஆய்வு நிகழ்வுகளுக்கும் உந்தம் அளிக்கிறது. டொராண்டோ பல்கலைக்கழகம்  போர் விளைத்த அனர்த்தங்களால் அழிந்து வரும் இலங்கைத் தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து ஆவணப்படுத்திவருகிறது.

1994-ல் பனியும் பனையும்’ தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய சுஜாதா, “பொதுவாகவே இந்த எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம் இருக்கிறது.  இதனால் சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்துவிடுகின்றன.” என்று எழுதினார். இன்று காலம் செல்வத்தின் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ அதனுடைய பாசாங்கற்ற வட்டாரப் பேச்சு மொழிக்காகவே இந்தியாவில் உச்ச கவனத்தைப் பெற்றது கனேடியத் தமிழுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் கொள்ளவேண்டும்..

Author

  • வெங்கட்ரமணன், டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர், எழுத்தாளர், மற்றும் குவாண்டம் கணினி அறிவியல் குறித்து, எளிய தமிழில், நவீன கலைச்சொற்கள் வளத்துடன் கட்டுரைகள் எழுதி வருபவர். கனேடிய சிறுபத்திரிகை இயக்கங்களின் முக்கியப் பங்கேற்பாளர்.

You may also like

Leave a Comment