ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -1

“காதலைப் பற்றி உமக்குத் தெரியுமா அன்பரே.. உண்மையான காதல் எப்படி இருக்கும்..அது உமக்கெல்லாம் புரியாது.

ஏனெனில் அதற்கு நீங்கள் பெண் உருக்கொண்டு காதலியாக வேண்டும்… பகலில் மேலே இருந்து சுட்டுப் பொசுக்கும் சூரியனின் உஷ்ணம், இரவில் சிரித்த வண்ணம் இருக்கும் நிலவின் கிரணங்களின் குளிர்ச்சி. உயிர் வாழ்தலை நீட்டிக்கும் தேவலோக அமுதம், சட்டென உணர்வுகளில் துள்ளி சீறிப் பாய்ந்து உயிரெடுக்கும் ஆலகால விஷம்… இவற்றின் கலவை தான் அது.

அதனால் தான் என்னுள்ளம் பேதலிப்பது புரியாமல் என் காதலை ஏற்க மறுக்கிறீர்கள்..”

படபடவெனப் பேசி முடித்து விம்மினேன் நான்.. கண்களில் நீர்த்துளி துளிர்த்து கன்னங்களில் தவழ்ந்து கீழே விழுந்தாலும் துடைக்கவில்லை… பெருமூச்சும் வேகவேகமாய் வந்தது…

பதறவே இல்லை அவர்…

” நீ சொல்வது புரியாமலில்லை அன்பே.. ஆனால் நான் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை… இப்போது நான் அந்த நாட்டுக்குச் சென்றே ஆகவேண்டும்..”

ஆண்கள் கருங்கற்கள்.. ஆண்கள் உணர்வில்லாத அறுக்கப்பட்ட தேக்குமரங்கள்.. ஆண்கள் மண்ணாந்தைகள்..

எனக்கு ஒட்டு மொத்த ஆண்வர்க்கத்தின் மீது கோபம் வர அந்தப் பர்ண சாலைத் தோட்டத்திலிருந்த மேடையிலமர்ந்தேன்..

என் அவர் எதுவும் பேசவில்லை…என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்…

ஹச்சோ… இது தான் நான்.. என்னைப் பற்றிச் சொல்லவே இல்லையே

நான் வதனா.. முழுப்பெயர் இப்போது என் பாட்டியம்மை சொல்வார்.

நான் யார் தெரியுமா?

ஆனைமங்கலத்துப் பெருந் தன வணிகர் என் அப்பா ருத்ராபதி… அவருடைய ஒரே புத்திரி நான்… நாங்கள் வணிக குலம்..

பிறந்த போது என்னுடைய தூய்மையான வெண்மையான தோற்றத்தில் குட்டிக் கண்களில் வெறித்து திசைதெரியாமல் பார்த்த பார்வையில் மயங்கிய என் தந்தை வைத்த பெயர் நிர்மல வதனா…

“என்னவே இது…இது அய்யரூட்டுப் பெயரால்ல இருக்கு?” என்றார் அவர் அம்மா..என் பாட்டி..

சொல்வழக்கில் அவரை நாங்கள் ஆச்சி என்று விளிப்போம்..

“இல்லத்தா… இது பாரு எவ்ளோ அழகு.. அப்படியே களங்கமில்லாத அழகு..அதுக்கு இந்தப் பேரு எப்பவோ கேள்விப் பட்டேன்..அதான்… நிர்மலம்னா தூய்மை..அதோட மொகத்தைப் பாரு..அப்படியே அள்ளுதுல்ல”

“அதுசரி..அது யார் வூட்டு ரத்தம்..ருத்ரா..அப்படித்தான் இருக்கும்..ஆனா இது என்ன நெறங் கூடுதலால்ல இருக்கு..?”

“போத்தா.. உனக்கு எல்லாமே குறும்பு தான்.. நீ தானே மருமவளுக்கு குங்குமப்பூவா கரைச்சு ஊத்தினியாம்ல….”

“ஆமால்ல பாரேன் இப்பவே ஒன் புள்ள என்னைப் பார்த்துச் சிரிக்கா பாரேன்..அடி செல்லக்கிளி…குட்டிப்புறா…என் பட்டுக்குஞ்சலம்…” என ஆச்சி கொஞ்ச அப்பா சிரித்தாராம்..பின்னால் ஆச்சியே சொல்லியிருக்கிறார் என்னிடம்..

அப்படிப் பிறந்தவள் தான். நான்.. பெரிய பணக்காரர்கள் வீட்டில் பிறந்தால் வெள்ளிச் சிறுகரண்டியை வாயில் வைத்தபடியே பிறந்தான் என்பார்களாம்.. குருகுலத்தில் ஓலைச்சுவடிகளில் படித்திருக்கிறேன்..

ஆனால் நான் அப்படி அல்ல பிறக்கும் போதே பொன்னாலான சிறுகரண்டி கொண்டு பிறந்தவள்..

ஊரிலேயே எங்கள் பெருவீட்டின் முன்னால் தான் நான்கு தேர்கள் உண்டு..அதனில் கட்டப்படுவதற்கென்றே பெருவீட்டின் பின்புறம் இருந்த லாயத்தில் பலவித தேசக் குதிரைகளும் உண்டு…இது தவிர ஏராளமான மாட்டு வண்டிகள்…இன்னும் பல…எனக்குச் சொல்லத் தெரியவில்லை..

சிரிப்பு மட்டும் தான் எனக்குத் தெரியும் அழுகை,..சின்ன முகமாறுதலா…விளையாட்டுச்சாமான்கள்.. குட்டி ஜுரமா…கூப்பிடு நாலு வைத்தியரை. என்னது உணவா.. பசிக்குதா கொண்டா பதினைந்து வகை உணவுகளை…

வளர வளர அதற்கேற்ப ஆடைகள், நகைகள், படிக்கவும் வீட்டிலேயே வந்து கற்பிக்கும் வயதான ஆசிரியர்கள்…

நன்றாகத் தான் இருந்தது என் பொழுது.. நன்றாகத்தான் வளர்ந்தேன் நான்..நன்றாகத் தான் படித்தேன்.. நன்றாகத்தான் மலரவும் செய்தேன் வேளைவந்த போது.. ஆனால் அதற்கப்புறம் தான் மாற்றம் வந்ததா என்ன?..அதுவும் என்னை அறியாமலே நான் சிக்கிய சுழல் அதனுடனேயே போயிருக்கக் கூடாதா நான்… ஏனெனில் அதற்கப்புறம் நான் நன்றாக இல்லை தானே…

வாழ்க்கையில் மாறாதது மாற்றங்கள் தான் எனச் சொல்வார்கள்.. …அப்படியா என்ன…? எனது பதினைந்தாவது வயது நிறைவில் எனக்கு ஊரெங்கிலும் இருந்து பரிசுகள் பரிசுகள்…

”வதனா ”

“என்ன வல்லாளா.?”. வல்லாளன் சிறுவன்.. கோடி வீட்டு வணிகரின் பெயரன்.. நான்கு வயது..

“உனக்கு ஏன் வாயில் நுழையாத மாதிரி பெயர் வைத்தார்கள்..பார் உன் ஆத்தா வள்ளியம்மை பாட்டி மெய்யம்மை..”

“அடப்பாவி பெரியவங்களைப் பெயர் கொடுத்து அழைப்பாயா என்ன?”

“பின்ன கூப்பிடறதுக்குத் தான் பெயர்… பேசாமல் என் அண்ணாவை நீ கல்யாணம் செய்துகொள்ளேன்..”

கல்யாணம்.. கொஞ்சம் கிளுகிளுப்பாகத் தான் இருந்தது எனக்கு…ஆனால் அவன் அண்ணா எனச் சொன்னது அவன் அண்ணனை ..அவனுக்கு ஐந்து வயது.

“ஏனாம்..?”

“அப்பத் தான் உன்னை வதனா என்பதை விட்டுவிட்டு மதனி என்பேன்..”

“போடா போக்கிரி” விரட்டினேன்..

அதே பேச்சு மறுபடியும் ஆச்சி பேசினார்..

என் ஆச்சியான பாட்டி -..”இந்தா வதனா பால் கொழுக்கட்டை உனக்காக பண்ணினேன்” என்று காலையிலும் பிறகு நான்கு நாழிகைக்கு ஒருமுறை வெவ்வேறு உணவாகக் கொடுத்த வண்ணமே இருந்தார்…

மாலையிலும் அப்படித்தான்..குழிப் பணியாரம்…தினைமாவில் செய்தது.. மிளகாய்த் தொக்கு… “இந்தா புள்ள”

அந்தப் பக்கம் வந்த அப்பா சிரித்தார்..” என்னத்தா…புள்ளைய ஒரே நாள்ல குண்டாக்கப் போறியா?”

“போடா ருத்ரா…” என்றாள் ஆச்சி. “பொண்ணு வளர்ந்து மலர்ந்துகெடக்கு… நல்லவனாப் பார்க்க ஆரம்பிடா..”

“அத்தா…” அப்பா ருத்ரனானார்….

“என்னப் பேச்சு பேசுதிய.? .அது இளங்கொருத்து…”

“ம்க்கு.ம் நெனச்சுண்டே இருலே… இப்போதே சடசடன்னு வளர்ந்துடுத்து.. இங்க வா வதனி… சீலைய இப்படிச் சொருகிக்கோணும்”… என என் விலகிய சீலையைச் சரி செய்தார் ஆச்சி…

“ஒன்னோட சம்சாரம் அதாண்டா மெய்யம்மை அவளோட உறம்பொறை இருக்கானேடா நவகோடி வணிகனோட புள்ளை கேக்கலாமா?…”

“ச்சும்ம்மா இரு கிழவியம்மா…”

“நல்லாச் சொல்ற.. சரி மெய்யம்மையோட உறவின் கல்யாணம் அதுக்குப்போறியா என்ன?”

“ஆமா ஆச்சி…இந்தப்பக்கத்துல வில்லி மங்கலம் ஊர்..அங்க தான் நாளைக்கு இவக எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு இருக்கேன்.”

வில்லிமங்கலம் என் தாயின் அண்ணனின் ஊர்..அங்கு அவரது மனைவியின் தம்பிக்குக் கல்யாணம்….

எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த பின்னர் அவளைப்பார்க்கப் போகிறேன். நிறையப் பேசலாம் சந்தேகங்கள் கேட்கலாம்.

சந்தோஷ ஊற்று நெஞ்சத்தில் பொங்கியது.. ஆனால் அங்கே தான் அங்கே தான் என் வாழ்வியல் மாற்றம் நடக்கும் என்பது அப்போது எனக்குத் தெரியாது..

வில்லிமங்கலத்தின் கோடியில் ஒரு பெரிய ஆறு ஆறா? கிட்டத்தட்ட நதி எனச் சொல்லலாம்.. நீளம்..வில்லியாறு…

நாங்கள் கல்யாணத்திற்காக இரண்டு தினங்கள் முன்னமேயே போய் விட்டோம்…

அனகாவுடன் பேச்சு பேச்சு பேச்சு.. அவளும் வளர்ந்திருந்தாள்..அவள் கருவண்டுக் கண்களில் கனவுகளும் வளர்ந்திருந்தன..பின் அவள் தோழிகள்..

மாலை தான் கல்யாண ஊர்வலமாம் மாப்பிள்ளை பெண்ணை வைத்து..

இரவின் கடைசி ஜாமம் முடிவதற்கு முன்னாலே முழிப்பு வர அனகாவையும் தோழிகளையும் அழைத்துக்கொண்டு…ஆற்றங்கரை நோக்கிப் போனோம் குளிப்பதற்கு..

பார்த்தால் திகைப்பு…

“என்ன அனகா?”

“தெரியவில்லையடி.. பாரேன் இன்னும் விடியவில்லை இருளாக…கருகருமேகக் கூட்டங்கள்…துன்பங்களைப் போல.”

“ப் போடி இவளே காலையில் நல்ல வார்த்தை பேசு..இந்த மண்ணின் ஈரக்காற்று எவ்ளோ சுகம்”..

கரையிலிருந்து பார்க்கையில் ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தது

“இது எப்படி அனகா?”

“தெரியவில்லை நிர்மலா?”

“வா குளிக்கலாம்.”.

“வேண்டாம் ..வீட்டில் போய் வென்னீர் உள்ளில் சூடாகக் குளிக்கலாம்.”
.
“ம்ஹூம் எனக்கு நீராட ஆசை இருக்கிறது உனக்கு நீச்சல் தெரியாதா..இதோ பார் வெளிச்சம் மெலிதாய் வருகிறது..கருக்கல் வந்துவிட்டது..வா இவளே”

“ம்ஹூம் நீயும் போகாதே நிம்மி…மழை பெய்யும் போல இருக்கிறது…”. அவளுக்கு பயம் வந்தால் என் பெயரைச் சுருக்குவாள்.

அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் நீரில் நீந்தக் காலைவைத்தேன்..அவ்வளவு தான்..

வில்லியாறு என்னை அழகாய் அணைத்து இழுத்தவண்ணம் செல்ல ஆரம்பித்தது…கூடவே பெருமழை.

–தொடரும்.

Authors

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19