அவள் எழுகிறாள், அதிகாலையில்
ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்ல
அவளது ஆழ்ந்த வலிமையை நம்பி
தோள்களில் சாயும் உலகத்தை
தாங்கிப் பிடிப்பதற்காக.
கண்ணாடி அறைக் கூட்டங்களில்,
கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,
கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்
அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,
தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,
நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்
எங்கும் அவள் நடக்கிறாள்-
மனஉறுதி எனும் வரைபடத்தை
துணையாகக் கொண்டு.
அவள் மென்மையானவள் என்றார்கள்
ஆயின் தன் பொறுமையால்
அவள் தேசங்களைச் சுமக்கிறாள்.
அவள் பலவீனமானவள் என்றார்கள்
ஆயின் அவமானம், மௌனம்,
புறக்கணிப்பு எனப் பெயர் சூட்டப்பட்ட
புயல்களை அவள் கடந்து நிற்கிறாள்.
நாளைக்கான மொழியை
அவள் கணினியில் வடிக்கிறாள்,
நியாயத்திற்காக வாதாடுகிறாள்,
எல்லைகளுக்கு அப்பால்
விமானங்களைப் பறக்க விடுகிறாள்.
அதேவேளை, ஒரு குழந்தைக்கு
நம்பிக்கையை நாடாவாகக் கட்டுவதற்கு
கற்றுக் கொடுக்கிறாள்.
அவளது பயணம் எளிதானதல்ல.
இருட்டிய பின் தன் பாதுகாப்பை
காலடிச் சத்தங்களில்
அளக்க வேண்டிய அவலம்.
களம் பல கண்ட பின்னும்
சமத்துவம் அற்ற ஊதியம்.
தன் இருப்பையே ஆதாரங்களுடன்
மெய்ப்பிக்க வேண்டிய சூழல்.
அன்று ரகசியமாக ஒடுக்கப்பட்ட அவளது குரல்
இன்று ஒலிக்க வேண்டிய இடங்களில்
உரத்து ஒலிக்கிறது.
வரலாற்றின் விளிம்புகளில் மடிந்து கிடக்க
அவள் மறுக்கிறாள்.
அவள் வணங்கப்பட வேண்டுமெனக் கோரவில்லை.
காப்பாற்றப்பட வேண்டுமெனக் கெஞ்சவில்லை.
தனக்கான இடத்தை உரிமை கோருகிறாள்-
அதிகார மேசைகளில், அரசியல் மேடைகளில்,
இலக்கிய வெளிகளில், சாதனைப் பட்டியல்களில்,
தன்னுள்ளேயும்.
இன்றைய பெண் வெறும் அடையாளமல்ல.
இதயத் துடிப்புள்ள ஒரு இயக்கம்.
கேள்விக்குறியல்ல, ஒரு பிரகடனம்.
அவளுக்கு முன்னால் நடப்பதற்கு பதிலாக
அவள் பக்கத்தில் நடப்பதற்கு
உலகம் இன்னும் தட்டுத் தடுமாறி
கற்றுக் கொண்டிருக்கும் வேளையில்
அவள் தொடர்ந்து நடக்கிறாள்-
எவர் பின்னும் அல்ல, யார் கீழும் அல்ல
முன்னோக்கி..!