சின்ன வேண்டுதல்

தமிழ்நாடெங்கும் பரந்து விரிந்திருக்கும் யோகிதா கோழி மற்றும் கால்நடைத் தீவன நிறுவனத்தில் உள்ள மாடுகள் எல்லாம் நன்றாகச் செளக்கியமாக இருந்து, உற்பத்தி செய்யும் பால், தயிர், வெண்ணெய் + கோழிகள் எல்லாம் சேவலுடன் சேர்ந்தோ சேராமலோ, இடும் முட்டைகள் முதலியவற்றையும், அவற்றுக்கான பராமரிப்பு + உணவுச் செலவுகள், கட்டடங்கள், அங்கு வேலை செய்பவர்கள், அவர்களது சம்பளப் பணம், சந்தைப்படுத்துதல் – இவையெல்லாம் கணினியில் எப்படி வரவேண்டும் என நீளமாக நிறுவன மேலாண்மை இயக்குநர் சுவாரசியமாகச் சொல்வதாக நினைத்துச் சொல்லிக் கொண்டிருக்க, நாகாசும் அவன் குழு ஆட்களும் கொட்டாவி வந்தும் விடாமல் புதிய திட்டம் பற்றிப் பராக்கோடு கேட்டுக்கொண்டிருக்கையில் நாகாசின் சட்டையில் இருந்த கைப்பேசியில் சலனம்.

இப்போது எடுக்க முடியாது. மேலாண்மை இயக்குநர் முறைப்பார்.. விடாது பத்து நிமிடம் விட்டு விட்டு கைப்பேசி சலனப்பட, அப்பாடா ஒருவழியாய் முடித்தார் மேலாண்மை இயக்குநர்.. “சரி இளைஞர்களே! நமக்கு இரண்டு மாதங்கள் தான் கால அவகாசம் இருக்கிறது.. தூள் கிளப்புங்கள்!” என முகத்தில் ஐந்தாம் பிறையாய்ப் புன்னகை பூத்து அவர் முடிக்க, நாகாசும் குழுவினரும் வெளியே வந்தனர்.

நாகாஸ் கைப்பேசியை எடுத்துப் பார்த்தால் பாவனி பத்து முறை அழைத்திருந்தாள். புலனத்தில் (WhatsApp) ஒரு செய்தி: “எப்போது வருவாய்? ஜி.எம். (GM) இன்று வரவில்லை.”

”அச்சச்சோ.. இது வேறயா? அப்போ போகும் வழியில் சங்கீதா உணவகத்தில் இரவு உணவு வாங்கிட்டுப் போயிடலாம்” என அலுவலகத்திற்கு வெளியே வந்து இருசக்கர வாகனத்தின் அருகில் வந்தபோது மணி ஆறரை. ஜி.எம் (Green mother!) என அழைக்கப்படும் பச்சையம்மா – அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி. வளசரவாக்கத்திற்கு மாறிய ஒரு மாதத்தில் பாவனியின் தோழி, பழைய குடியிருப்பின் அண்டை வீட்டார் பாரதியின் பரிந்துரை. பாவனியும் பார்த்திருக்கிறாள்.

பச்சையம்மாவின் பிள்ளை ஆழ்வார் திருநகரியில் வீடு கட்டிக்கொண்டு விட, ஜி.எம்மால் பாரதியின் வீட்டிற்குச் செல்ல இயலவில்லை.. எனவே பாவனியின் வீடு. ஏழு நாட்களும் வேலை என்றுதான் வந்தாள். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். ஆனாலும் பாவனியை அக்கா என்றும் நாகாசை அண்ணா என்றும்தான் அழைப்பாள்.. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பின் பழகிவிட்டது.

பாவனி வேலை பார்க்கும் ஆய்வகத்தில் இருந்து வர ஆறு மணி ஆகிவிடும்.. ரோகித் முன்னாடியே பள்ளியில் இருந்து நான்கு மணிக்கு வந்து விடுவான். வந்து விளையாட்டோ வீட்டுப்பாடமோ பண்ணிக்கொண்டிருப்பான். பச்சையம்மா ஐந்து மணிக்கு வந்து ரோகித்திற்கு ஊட்டச்சத்துப் பானம், தனக்குக் காபி எனப் போட்டுக்கொண்டு குடித்து பின் பெருக்கி, துடைத்து, காலையில் பாவனி சமைக்கும்போது உண்டான பத்துப் பாத்திரங்களைக் கழுவி, பின் முடிந்தால் இட்லி வைத்து அல்லது சப்பாத்தி இட்டுவிட்டுச் செல்வாள். சரியாகப் பாவனி வரும்போது ‘முடிச்சுட்டேன்க்கா’ சொல்லி இன்னொரு காபி பாவனியுடன்!

வேலை ஒன்றும் அவ்வளவு நேர்த்தியாகக் கிடையாது.. பாவனிக்குக் கொஞ்சம் ஓய்வு அவ்வளவுதான். தவிர ரோகித்தால் வெளியில் விளையாடவெல்லாம் செல்ல முடியாது.. பெருக்குவதெல்லாம் கிட்டத்தட்ட சர்வர் சுந்தரம் படத்தில் வரும் மனோரமா போலத்தான்.

சனி ஞாயிறுகளில்தான் கொஞ்சம் நிறைய வேலை ஜி.எம்மிற்கு. சனிக்கிழமை நாகாசிற்கு விடுமுறை. எனில் ரோகித்தை அவன் பார்த்துக்கொள்வான். பாவனிக்கு அரை நாள். வந்து ஜி.எம்மிற்கு விட்டுப்போன வேலைகளைச் சொல்வாள். ஞாயிற்றுக்கிழமை யாராவது நண்பர்கள் உறவினர்கள் வந்தாலோ ஜி.எம் வந்து பாவனிக்கு ஒத்தாசை செய்து செல்வாள்.

என்ன.. சனி ஞாயிறு தவிர மற்ற நாட்களில் அவளுக்கு என்ன தோன்றும் எனத் தெரியாது.. திடீரெனப் புதன்கிழமை பாவனிக்கு அலுவலக நேரத்தில் அழைப்பு வரும்.. “அக்கா, நான் குலதெய்வம் கோவில் போகிறேன்க்கா நாளைக்கு.. ஒரு சின்ன வேண்டுதல்”. “அக்கா நான் திருப்பதி போறேன்க்கா.. ரெண்டு நாளில் வந்துடுவேன்” இன்னொரு நாள் இன்னுமொரு கோவில்.

அவள் போடும் விடுமுறைக்கும் சரி, நாகாஸ் குழுவினர் எங்காவது இரண்டு மூன்று நாள் வெளியூர் சென்றாலும் சரி, பாவனி அவளது சம்பளத்தைக் குறைக்கவெல்லாம் மாட்டாள். முழுச் சம்பளம்தான்.. அதற்கே ஜி.எம்மிடம் பூனைக்குட்டி விசுவாசம்.

தவிர அவள் கணவன் பொன்னப்பனுக்கு மின்சார வேலை மற்றும் குழாய் பழுது பார்க்கும் வேலை தெரியுமென்பதால் விளக்கு மாற்ற, நீர் சூடேற்றி பழுதுநீக்க, குழாய் பழுது எனச் சின்னச் சின்ன வேலைகள் கொடுப்பாள் பாவனி.. அதற்கும் கூலி உண்டு.

ஜி.எம் அதான் பச்சையம்மா திருப்பதி போனால் மட்டும் நாகாசிற்குப் பிடிக்கும் என லட்டு கொண்டுவந்து விடுவாள். ரெண்டு லட்டு. “எதுக்கு…. இந்தா காசு வாங்கிக்கோங்க..” என்றால், “வேண்டாம். பையனுக்கும் அண்ணாவுக்கும் தான் வாங்கிட்டு வந்தேன்” எனச் சொல்ல அடுத்த முறை போவதாகச் சொல்லும்போது கையிலேயே இருநூறு ரூபாய் கொடுத்துவிடுவாள் பாவனி.

கிளம்பும்முன் பாவனிக்குத் தொலைபேசி செய்யலாம் எனச் செய்து ”சொல்லு பாவனி. மீட்டிங்கில் இருந்தேன்.. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. எத்தனை நாளாம் பச்சையம்மா விடுமுறை?”

“இன்னிக்கு நைட்டே கும்பகோணம் போறாளாம்.. சில கோவில்களில் சின்ன வேண்டுதல்கள் இருக்காம்! வர்றதுக்கு ஞாயிறு மாலை ஆகிடுமாம்.. எப்படியும் வந்துடுறேன்க்கான்னு இருக்கா. ஞாயிறு மருத்துவர் முகுந்த் மற்றும் குடும்பத்தினர் மதிய உணவிற்கு வர்றாங்க தெரியும்ல..”

“ஆமாம் எனக்கு நினைவிருக்கிறது பாவனி. அது பார்த்துக்கலாம். அப்புறம் நாளைக்கு நானும் ரோகித்தும் சமாளித்துக்குவோம். ஞாயிறு நானும் நீயும் என்ன சமையல் செய்யலாம் என யோசிக்கலாம். ஜி.எம் ஞாயிறு மாலை வருவாளா?”

“நீயும் ஏதாவது கோவிலுக்கு வேண்டிக்கோ நாகாஸ் அவ வரணும்னு” பாவனி சிரிக்காமல் சொல்ல, சிரித்தபடி, “சரி.. இப்போ நைட்டுக்கு இரவு உணவு வாங்கி வரட்டுமா?”

”வேண்டாம். மாவு வாங்கிட்டு வந்துட்டேன். தோசை மற்றும் மிளகாய்ப் பொடி.. நேராக வீட்டுக்கு வாங்க” என்றாள் பாவனி.


சனிக்கிழமை விரைந்து சென்று ஞாயிறு வர, முதல் நாள் இரவு திட்டமிட்டது போல், சப்பாத்தி, சீரகச் சாதம், பருப்பு உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் பருப்பு உசிலி, தக்காளி ரசம், தயிர் சாதம், இனிப்பிற்குச் சேமியா பாயசம் என உணவுப் பட்டியல்..

காய் நறுக்கிக் கொடுப்பது முதல் சப்பாத்தி இடுவது, உருளைக்கிழங்கு, பீன்ஸ் பருப்பு உசிலி, பருப்பு கொதிப்பதைப் பார்வையிடுதல் என எல்லாவித உதவியும் நாகாஸ் செய்ய, சொன்ன நேரத்திற்கு மருத்துவர் முகுந்த் தம்பதியினர் வர, மதிய உணவு பெரிய வெற்றியானது..

சந்தோஷமாய் நன்றி சொல்லி அவர்கள் விடைபெற, சமையலறைக்கு வந்த பாவனி கன்னத்தில் கை வைத்திருக்கும் நாகாஸைப் பார்த்துத் திகைத்தாள்.. “என்னாச்சுப்பா?”

“ஜி.எம் வந்துடுவாள் இல்லையா.. இவ்வளவு பாத்திரம் இருக்கே? மாலையில் அலுவலக வேலைகளைக் கொஞ்சம் ஷெட்யூல் பண்ணனும்.”

“பரவாயில்லைப்பா வந்துடுவா. இல்லைன்னா நானே தேய்த்துக்கொள்வேன்” என்றாள் பாவனி. * சொன்னாற்போல ஐந்தரைக்கே வந்துவிட்டாள் பச்சையம்மா.. கண்களில் களைப்பு.. தலையில் மொட்டை. கொஞ்சம் சேலையால் மறைத்திருக்க.. பாவனியின் கண்களில் சிரிப்பு.

“எப்படி இருந்துச்சு பயணம்?”

“நல்லா இருந்துச்சுக்கா.. சுவாமி மலை போனேன்.. பேரனுக்கு உடம்பு முடியலைன்னு நேர்ந்துக்கிட்டேன்.. அதான் மொட்டை போட்டேன்.” எட்டு மாதங்களில் பச்சையம்மா போடும் மூன்றாவது மொட்டை..

அடுத்து ஒன்றரை மணி நேரம் வேலையெல்லாம் முடித்துவிட்டுப் பச்சையம்மா கையில் கொண்டுவந்த பையுடன் “அக்காவ்”

“என்ன பச்சையம்மா?”

“சுவாமி மலை, அப்புறம் சில பெருமாள் கோவில்லாம் போனோம்.. அப்புறம் முக்கியமா ஒரு கோவில் போனேன்க்கா உங்களுக்காக..” பை திறக்க பையில் ஒரு குட்டிப் புட்டி. ”இந்தாங்க வெச்சுக்கோங்க.”

“என்ன கோவில்..? இது என்ன..?”

“திருக்கருகாவூர்மா.. கர்ப்ப ரட்சகாம்பிகை. உங்களுக்கு உங்களை மாதிரியே ஒரு பொண்ணு பொறக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.. இந்தாங்க நெய். சாமி அறையில் வெச்சுட்டு அப்பப்ப குடிங்க..”

“போதும் பச்சையம்மா” பாவனி சிரித்தாள்..”ரோகித் ஒருவனையே சமாளிக்க முடியலை.. இன்னொன்னா? வயசாயிடுச்சு.”

“அப்படி என்ன வயசு? கொப்பும் கொலையுமா தான் இருக்கீங்க. பெத்துக்குங்க” சொல்லிக் கையைப் பிடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றாள் ஜிஎம்.

இரவு நாகாசிடம் சொல்ல அவன் கண் சிமிட்டினான். “இது நல்ல யோசனையா இருக்கே!”

“யோவ். பேசாமல் தூங்கு!”


மறுநாள் காலை நாகாஸ் கிள்ளி எழுப்பப்பட்டான்.. விழித்தால் எதிரே பாவனி.. தலையில் கட்டப்பட்ட சிறு துண்டு.. நெற்றியில் குட்டிப் பொட்டின் கீழ் திருநீறு, அதிசயமாய்ப் புடவை.. கையில் காபி..

“என்ன பாவனி.. ஆறு தானே ஆகுது.”

“நாகாஸ்.. என்னங்க!.. என்னன்னாக்க..”

காபியைக் கையில் வாங்கி “எதுக்கு இவ்வளவு முன்னேற்பாடு?. சொல்லு”

“இல்லை.. கொஞ்சம் நாள் தள்ளிப் போச்சா. . இன்னிக்கு டெஸ்ட் பண்ணினேனா.. பாஸிட்டிவ்ங்க..” என இன்னும் வெட்கப்பட.. காபியை அருகில் உள்ள மேசையில் வைத்த நாகாஸ் அவளை இழுத்து அருகில் அமர்த்தி, “பச்சையம்மா.. வாழ்க!” என்றான்.

Author

Related posts

ஜப்பானிய சிறுவர் கதைகள் 15 – மொழியாக்கம்

அவளும் நானும்

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)