Home கட்டுரைநாள் – 3

நாள் – 3

by அருண்
0 comments

பிக்பாஸ் – 9
நாள்: 3


காலையில 8 மணிக்கு ஏன் எதுக்குன்னே தெரியாம ஒரு அலாரம் சவுண்ட் அடிச்சது. எல்லாரும் போலீஸ் வண்டிய பாத்த அக்க்யூஸ்டுகள் மாதிரி திருட்டு முழி முழிச்சானுங்க.

சபரி தண்ணி டாங்கிய ஃபில் பண்றதுக்காக நைட்டு முழுக்க தூங்கல போல. அவன “தூங்கலயாடா நீயி?”ன்னு கனி கருணை ததும்ப விசாரிச்சுட்டு இருந்தாங்க.

ஸ்டோர் ரூமுல ஓலை வந்திருந்துச்சு. அத படிச்சு காட்டனும்னா எல்லாரும் வெளிய வரனும். ஆனா சுப்பர் டீலக்ஸ் ஆளுங்க போறதுக்கு யோசிச்சானுங்க. ரட்சகன் காந்தி “ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்டா”ன்னு எவனையும் கேக்காம ஒரு டீக்கு ஆசப்பட்டு வெளிய ஓடிட்டாரு. கடைசில “சரி நீ இதயே கட்டிட்டு அழு, நாங்க என்னன்னு போயி கேட்டுட்டு வரோம்”னு சொல்லி ரம்யாவும், வியானாவும் சுபிக்ஷாவ தனியா விட்டுட்டு வெளிய போனாங்க.

போன நேரம் மார்னிங்க் சாங் “தில்லு பரு ஆஜா” பாட்ட போட்டு மஜாவா ஆடிட்டு இருந்தானுங்க எல்லாரும். “ஆஹா ஆட்டையில நாம இல்லேன்னா ஆப்செண்ட் போட்டுடுவானுங்களே”ன்னு சொல்லி சுபிக்ஷா நைஸா வந்து கேமராவுக்கு முன்னாடி நின்னு முட்டிய தூக்கி ஆடுச்சு.

மார்னிங்க் ஆக்டிவிட்டி, யாரு மொத எலிமினேட் ஆவா? யாரு ஜெயிப்பா? நீ எத்தனை நாள் உள்ள இருப்ப?ன்னு ஆளாளுக்கு சொல்லனுமாம். இன்னும் இந்த கேள்விய டிசைன் டிசைனா மாத்தி மாத்தி 106 நாளும் கேட்டுட்டே இருப்பாப்ல இந்த வெளங்காத பிக்கி. இவனுங்களும் மொத தடவ மாதிரி சலிக்காம பதில்
சொல்லுவானுங்க.

யாரு மொத வெளிய போவா?ன்னு கேட்டதுல எப்பவும் போல மொத வந்தது நம்ம வாட்டர் லெமன் தான்.

“பரவால்ல நானே ஃபர்ஸ்டா இருந்துட்டு போறேனே”ன்னு கூலா இருந்தாப்ல. அவரு எத்தன நாள் இருப்ப?ன்ற கேள்விக்கு அவரே “நான் ஒரு 60 நாள் தாங்குவேன்”னு சொன்னது கூல் பதிலா இருந்தாலும் 60 நாள் இந்தாள நாம எப்டி தாங்குறதுன்னு ஒரு கேள்வி நம்ம மண்டைக்குள்ள ஓடுனது உண்மை. வின்னர் லிஸ்ட்ல சபரி தான் முன்னாடி இருந்தான்.

சூன்ய பொம்மை கலை இன்னைக்கு தலையில கொஞ்சம் மூளையுள்ள பொம்மை மாதிரி பேசுனான். “நான் 107 நாள் இங்கதான் இருப்பேன்”னு கனி கொஞ்சம் கான்பிடெண்டா சொன்னாலும், 106 வது
நாள் நைட்டே செட்டப் பிரிச்சுருவானுங்க அப்பறம் வெட்ட வெளியில மொட்ட வெயில்லதான் நிக்கனும்ன்னு கனி அக்காக்கு தெரிஞ்சா மூட் அவுட் ஆகலாம். நந்தினி பேசும்போது குறுக்க பேசுனவன தடுத்த பாரு, ரட்சகன் காந்தி பேசுனப்போ குறுக்க பேசுனதுக்கு குறுக்குலயே மிதி வாங்குச்சு.

அப்பறம் லிவிங்க் ரூம்ல எல்லாரையும் உக்கார வச்சு “காலையில கொஞ்சம் கருத்தா பேசுனீங்கடா பதருகளே”ன்னு பிக்கி பாராட்டுனாப்ல. கையோட கேப்டன்சி டாஸ்க்க கொண்டு வந்தாப்ல. இனி வீட்டு தலைவர தலன்னு கூப்டனுமாம். வெளக்கமாத்துக்கு பேரு பட்டுக்குஞ்சமாம். யாரார தலன்னு கூப்டனும்னு ஒரு விவஸ்த இல்லயாயா பிக்கி? இந்த சீசன்ல மொத கேப்டனாகுறவங்களுக்கு15 வாரத்துக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்குமாம். அது போக அடுத்தவார கேப்டன் டாஸ்க்குக்கு டைரக்டா செலெக்ட் ஆவாங்களாம். ஏதோ ஒரு ஆகாவலிகிட்ட நாம சிக்கப் போறோம்னு என்
எட்டாவது அறிவு எச்சரிக்குது.

டாஸ்க் பேரு பொங்குதே பொங்குதே வாம். பொங்குதே பொங்குதேன்னு பிக்கி சொன்னதும் 4 பேரு போயி பால் பாத்திரத்துல பால ரொப்பி அடுப்புல வந்து வச்சு பத்த வைக்கனுமாம், பால் பொங்கி விளிம்பு நிலைக்கு ச்சீ… விளிம்பு வரைக்கும் வரனுமாம், கீழ சிந்தக் கூடாதாம். இப்பிடியே நாலு நாலு பேரா பிரிச்சி பிரிச்சி நடக்கும். இப்பிடி ஒரு குழப்பமான ஒரு டாஸ்க்க டொனால்ட் ட்ரம்ப் கூட யோசிக்க
முடியாது. இதுக்கு ஜட்ஜ் சூப்பர் டீலக்ஸ் ஆளுங்க.

மொத செட்டு முடிஞ்சது. சூப்பர் டீலக்ஸ் ரூம்ல வேலை பாக்குறதுக்குன்னு பாருவையும், வாட்டர் லெமனையும் நேர்ந்து விட்டிருந்தானுங்க. பார்வதிய வியான்னா வேலை வாங்குறேன்னு கொஞ்சம்
எடக்கு மொடக்கா பேசிடுச்சு. பாரு சும்மா இருக்குமா? சலங்கையே இல்லாம சங்கராபரணம் ஆட ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும் அது பாலையே அதுக்கு ரிப்பீட் போட்டு வியான்னா, சுபி, ரம்யா மூணு பேரும் கட்டம் கட்டிட்டானுங்க. கடைசியா பாரு “ரைட்டு நம்மளால இனி இந்த வீட்டுல வேலை செய்ய முடியாது, கணக்க முடிங்க”ன்னு ரிசைன் பண்ணிட்டு வெளிய போயிடுச்சு.

இந்த பாருவோட வாய்ஸும், பாடி லேங்குவேஜும் பழைய நடிகை லட்சுமி மாதிரி இருக்குல்ல? எபிசோட் முழுக்க ஜீன்ஸ் படம் பாத்த மாதிரியே இருந்துச்சு. சுபிக்ஷா தான் இந்த சீசனோட வெஷ பாட்டிலு போல. அதோட இப்போதைய டார்கெட் பாரு தான். அவசரமா கக்கூஸுக்கு போறவன கைய பிடிச்சு நிப்பாட்டுற
மாதிரி எப்போ, எங்க பாத்தாலும் பாருவ வம்பிழுக்க போயிடுது. தூக்கத்துல எந்திரிச்சு நடந்தாலும் பாரு வாயில தான் குச்சிய விட்டு ஆட்டும் போல… இப்ப கூட தனியா இருந்த பாருகிட்ட, அதாவது பாரு தனியா இருகுன்னா அது கூட வாட்டர் லெமனும் இருப்பாருன்னு அர்த்தம்.

பாருகிட்ட போயி

சுபி: அக்கா ஏன் அப்பிடி நடந்துக்கிட்டீங்க?
பாரு: அத மறப்போம் மன்னிப்போம்
சுபி: சரிக்கா, நடந்தத மறந்துட்டு …நாளைக்கு வேலைக்கு வந்துருங்க

பாரு: இல்ல அத மறக்கல
சுபி: நீங்கதான மறப்போம் மன்னிப்போம்னு சொன்னீங்க?
பாரு: மறப்போம்னு சொன்னது இனிமே வர விஷயங்கள, மறக்க மாட்டேன்னு சொன்னது பெருக்குற விஷயத்த
சுபி: அப்போ மறக்காம வேலைக்கு வந்துருங்க
பாரு: (மை.வா: ஆத்தீ இவ டேஞ்சரா இருக்காளே…ரைட்டு எஸ்கேப்பாக ரூட்ட பிடிப்போம்)
சுபி: என்ன சொல்றீங்க?
பாரு: என்ன என்ன சொல்றீங்க?
சுபி: நாளைக்கு வேலைக்கு வருவீங்கள்ல?
பாரு: என்ன வேலைக்கு வருவீங்கள்ல?
சுபி: என்னக்கா இப்டி பேசுறீங்க?
பாரு: என்ன என்னக்கா இப்டி பேசுறீங்க?

சுபி நைஸா வெளிய ஓடிடுச்சு…

அப்றம் வந்த ரம்யா கிட்ட பாரு “ஆனாலும் சுபி ஒரு மோசமான நரித்தனம் கொண்ட அப்டின்னு சொல்ல முடியாத ஒரு தெளிவான ஆளு” அப்டின்னு வஞ்சப்புகழ்ச்சி சர்ட்டிபிகேட் குடுத்துச்சு. அதக்கேட்டு உள்ள வந்த சுபி மறுபடியும் அதே ரெக்கார்ட போட, சீரியல்ல வர்ர ரெண்டு வில்லிகள் எப்டி உள்ள வன்மத்த வச்சுக்கிட்டு வெளிய சிரிச்சு பேசுவாங்களோ அப்டி பேசிட்டு இருந்துச்சுங்க

பாரு: சுபி, நீ ஒரு அதி புத்திசாலித்தனமான பொண்ணு (மை.வா: நரிக்கே ஸ்கெட்ச் போடுற நரி நீ ஊ ஊ ஊ)
சுபி: என்னனாலும் வயசுல மூத்தவங்க நீங்க (மை.வா: வயசுல மட்டும்தான் மூத்தவ ஆனா சில்ற நீ)
பாரு: என்னய கன்வின்ஸ் பண்ண விதம் ஆஸம் (மை.வா: ப்ரைன்வாஸ் பண்ண பாக்குற நீ ரொம்ப மோசம்)

இப்டிதான் இருந்துச்சு ரெண்டும் பேசிக்கிட்டது. பாரு ஒரு கட்டத்துல வாட்டர் லெமன் கூட சேர்ந்து பாடி லேங்குவேஜுல சுபிய புல்லி பண்ண ஆரம்பிச்சுது. இதப் பாத்த சுபி வெளிய போயிடுச்சு. ஆனா பாரு தெளிவா எல்லாரும் போனப்பறம் கேமரா கிட்ட வந்து ஒட்டு போடுற வேலைய பாத்துச்சு. ஆனா இந்த ஒட்டு ஓட்டா மாறுமான்னு தெரியாது.

எல்லாரும் சமையக்கட்டுல சபையக் கூட்டி பஞ்சாயத்து பேச ஆரம்பிக்க….வெளிய சைரன் லைட்டு எரிஞ்சத எவனும் கவனிக்கல, தண்ணி தானா வந்து வீணாப் போச்சு. எதார்த்தமா வெளிய வந்த விக்கல்ஸ் விக்ரமும், “பக்கத்து செட்டுல மோட்டர் நெறஞ்சு தண்ணி ஒழுகுது போல”ன்ற மாதிரி மறுபடியும் உள்ள போயி பஞ்சாயத்துல சீட்டப் போட்டான். அப்பறம் ரெண்டாவது தடவ கவனிச்சு எல்லாரும் ஓடிப்போயி வெளிய தண்ணி டாங்கிய தள்ளிட்டு இருந்தானுங்க.

மறுபடியும் லான் ஏரியால அதே பஞ்சாயத்து. அடப் போங்கடா! இந்த தடவ சுபி பேசிட்டு இருக்கும் போது “என்னடா இன்னைக்கு நம்மள கண்டுக்கவே இல்லே”ன்னு கண நேரத்துல சிந்திச்சு வாட்டர் லெமன் “சும்மா எல்லாரும் பாலிடிக்ஸ் பண்ணாதீங்கடா, பிடிச்ச ஆளுக்கு சப்போர்ட் பண்ணி சலம்புறீங்களா?”ன்னு சவுண்டக் குடுக்க, கெமி வந்து “என்னப் பாத்து பேசு, என் கண்ணப் பாத்து பேசு”ன்னு அருள் பட விக்ரம் மாதிரி சொல்ல, அந்தாளு குனிஞ்சுட்டே பேச, “என்னடா வாட்டர் லெமன் என் வயித்த பாக்குறியா?”ன்னு ஒரு POSH கேஸப் போட பதறிட்டாப்ல வாட்டர் லெமன்.

முடிவா பாரு சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கு வேலைக்கு வர மாட்டேன்னு சொல்லிருச்சு. கண் கலங்கி கணத்த இதயத்தோட உள்ள போயி அழுதுட்டு இருந்த சுபிய அரவணைச்சு ஆறுதல் சொல்லுச்சு ரம்யா, “மூணாவது நாளே மூட் அவுட் ஆனா எப்பிடி? மீதி நாளுல எல்லாரையும் மிதி மிதின்னு மிதிப்போம்”னு சொல்லி தூங்க வச்சுச்சு ரம்யா.

இந்த கலவரத்துலையும் இன்னைக்கு கதை சொல்ற டாஸ்க் இல்லையான்னு ரம்யா கேக்க (ஹெவியா ரெடி பண்ணி வச்சிருக்கு போல) “என் பஞ்சாயத்துலயே இன்னைக்கு பொழுது போயிருச்சு…நாளைக்கு சொல்லிக்கலாம்”னு சுபி சொல்ல வெளக்குகள் அணைந்தன.

கமருதீன் மட்டும் கேமராகிட்ட போயி “நைட்டு தண்ணி வர வாய்ப்பிருக்கா?”ன்னு நைஸா கேக்க ஒரு பதிலும் வராம போக, “அப்ப நான் தூங்கப் போயிருவேன்…..போயிருவேன்…..போயிருவேன்….இதோ போயிட்டேன்”ன்னு உள்ள போயி போர்வைய பொத்திக்கிட்டான்.

பாரு, வாட்டர் லெமன், சுபி, ரம்யா, கெமி இவங்கதான் மொத்த ஷோவையும் இப்ப வரைக்கும் கைல வச்சிருக்காங்க. இன்னும் வேற யாரு கைக்கு ஷோ போகுதுன்னு பாக்கலாம்.

Series Navigation<< நாள் – 2நாள் – 4 >>

Author

You may also like

Leave a Comment