“ஏங்க.. கழுத்துல ஒரு செயினு கூட இல்லாம எப்பிடிங்க உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போறது?” கமலா கவலையுடன் கேட்டாள். அவனின் பிடிவாதம்தான் மனைவியின் நகைகளையெல்லாம்  அடகு வைக்கும்படி ஆனது. 

“வண்டி வாங்குறதுக்கு இப்ப என்னங்க அவசரம்?” என்று கமலா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. கவரிங் செயின் வாங்கலாம் என்று சொன்னால், “நான் என்னிக்குங்க கவரிங் நகையெல்லாம் போட்டிருக்கேன்?” என்று சண்டைக்கு வருவாள். இப்போது ஏதாவது தர்க்கம் செய்தால் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். எதுவும் பேசாமல் அமைதி காத்தான் முருகேசன். முகத்தைச் சங்கடமாக வைத்துக்கொண்டான். 

“என்னங்க எதுவும் பேசமாட்டேங்குறீங்க?” பிரச்சினைக்கு தூபம் போட்டாள் கமலா.

“நானும் அதான் யோசிக்கிறேன் கமலா” என்றான் ஜாக்கிரதையாக.

கொஞ்ச நேரம் யோசித்த கமலா, “என்னங்க நம்ம கீதாகிட்ட நகை எதாச்சும் இரவல் கேக்கட்டுங்களா?” என்றாள்.

“கீதாகிட்டயா!” என்று ஆச்சரியமுடன் கேட்ட முருகேசன், “அவ கொஞ்சம் அடாவடியான டைப் ஆச்சே. ஏற்கனவே அவளைப் பத்தி இங்க எல்லோரும் ஒருமாதிரியாத்தானே பேசுறாங்க!” என்றான்.

“எங்கிட்ட  இதுவரைக்கும் அப்பிடியெல்லாம நடந்ததில்லங்க. எப்பவும் அன்பாத்தா பேசுவா. கேட்டுப் பாக்குறேன்” என்றாள். 

தன்னிடம் நகை இல்லை என்பதைப் பறைசாட்டுவதுதானே நகை இரவல் கேட்பது. அதுவுமில்லாம கீதாகிட்டப்போயி கேக்குறாளே… முருகேசன் சம்மதமில்லாமல் தலையாட்டினான்.

முதல் தடவையாக பக்கத்துவீட்டு கமலா தன்னிடம் நகை இரவல் கேட்டதும்  எதுவும் சொல்லமுடியாமல் கொஞ்சம் தடுமாறினாள் கீதா. பிறகு சுதாரித்துக் கொண்ட அடாவடிப் பெண்ணான அவள் மனம் உடனே ஒரு கணக்குப் போட்டது. 

பிறகு, “ஒரே ஒரு பெரிய செயின் மட்டுந்தா இப்ப இருக்கு. போதுமா கமலா” என்றாள்.

“அது போதும் கீதா” மகிழ்ச்சியுடன் சொன்னாள் கமலா.

உள்ளே சென்று பீரோவிலிருந்து அந்தச் செயினை எடுத்துவந்து கொடுத்தாள் கீதா. புதிதாக பளபளப்பாக இருந்தது, அந்த பெரிய செயின். ‘அஞ்சு ஆறு பவுனுக்கும் மேலிருக்கும்’ என நினைத்துக் கொண்டு வீடு வந்தாள் கமலா. இரவு கணவரிடம் அந்தச் செயினைக் காட்டி விவரம் சொன்னாள். 

செயினை வாங்கிப் பார்த்த முருகேசனுக்கு சந்தேகமாக இருந்தது. “கமல், புது செயினாட்டம் இருக்கு. ஆனா, செயின்ல ஒரு கண்ணி  கட்டான மாரி இருக்கு! ஜாக்கிரதை” என்றான்.

கல்யாணம் முடிந்து வீடு திரும்பியவுடன்   கழுத்தில் செயினைக்  காணாமல்  பதட்டமும் கவலையுமாக கணவனிடம் சொல்லி அழுதாள் கமலா. ‘எவ்வளவு கவனமாக இருந்தோம்! எப்படி, எங்க கழன்று விழுந்திருக்கும்! நகை விற்கிற விலையில் இலட்சக்கணக்கில் தண்டம் அழணுமே’ நினைக்க நினைக்க அவளுக்குள் அழுகை இன்னும் அதிகமாகப் பொத்துக் கொண்டு வந்தது.

“நாந்தா அப்பவே அவகிட்ட செயின் வாங்க வேண்டாம்னு சொன்னேன். நீ கேக்கல. செயின் கட்டாயிரும் ஜாக்கிரதையா இருன்னும் சொன்னனே” கோபத்துடன் கத்தினான் முருகேசன்.

பதில் எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் அழுதுகொண்டே இருந்த கமலா, “நீங்கதாங்க காரணம். என்னோட நகைகளையெல்லாம் வண்டி வாங்க அடகு வைக்காம இருந்திருந்தா, இப்பிடி ஆயிருக்குமாங்க?” என்றாள் கோபத்துடன்.

மனைவியை ஆறுதல்படுத்திய முருகேசன், மனைவியின் திட்டிலிருந்து தப்பிக்க, “அது தங்கமல்ல. கவரிங் செயின். ஏதோ திட்டத்தோடத்தான் கழன்று விழறதுக்கு தோதா ஒரு கண்ணிய கட் பண்ணி வச்சிருக்கா!  அதான் நீ கேட்டதும் கவரிங் செயின  உடனே உனக்கு கொடுத்திருக்கா கீதா. அதுதா  நா அவகிட்ட வாங்க வேண்டாம்னு சொன்னேன்” என்றவன், “அதே மாதிரி ஒரு கவரிங் செயின் வாங்கி அதேமாதிரி ஒரு கண்ணிய  கட்டாகிற மாதிரி செஞ்சு  கொடுத்துரலாம்” என்றான்.

“நா கொடுத்தது தங்க செயின்னு அவ பிரச்சன எதும் பண்ணினா என்னங்க பண்றது?” அழுகையைக் குறைத்துப் பதட்டத்துடன் கேட்டாள் கமலா.

“நேத்தைக்கே அவ கொடுத்தது செயின் கவரிங்தான்னு செல்போன்ல நாலைஞ்சு கோணங்கள்ல போட்டோ எடுத்து, பொற்கொல்லர் கிட்ட கொடுத்துப் பரிசோதிச்சு, ஆதாரம் எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன். பயப்படாம திருப்பிக் கொடு. அவ கவரிங் செயின் குடுத்து நம்மள ஏமாத்தப் பாக்குறா. நாமும் அதே வழில போவோம்” என்றான் முருகேசன்.

Author

You may also like

Leave a Comment