கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள இதழான ‘சந்திரிகா’ இதழ் அவர்களது ஓணம் சிறப்பிதழுக்காக தமிழ்நாட்டின் இலக்கிய உலகிலிருந்து ஓர் உரையாடலை நடத்தினர். இந்த உரையாடலும், சந்திப்பும் திருவண்ணாமலையில் நடந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை, எழுத்தாளரும், மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கே. வி. ஜெயஸ்ரீ போன்ற முக்கியமானவர்கள் இருந்த அந்த உரையாடல் குழுவில் எனக்கும் ஒரு இடம் தரப்பட்டிருந்தது. அதில் பங்குபெற்று நான் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்டுரையாகக் கோரப்பட்டு மலையாளத்தில் வெளிவந்தது.
அக்கட்டுரையின் சாரம்சம் இந்தத் தொகுப்பின் நோக்கத்திற்கு முன்னுரையாக அமையும் என்பதால் சுருக்கமாக அதைப் பார்க்கலாம்.
- இந்திய நவீன இலக்கிய உலகம் மேற்குலக, ஐரோப்பிய இலக்கிய உலகத்தைப் பின்தொடர்ந்து வளர்ந்து வந்தது. தன் பாதையைத் தீர்மானிக்கும் முறைமைகளை இந்திய நவீன இலக்கியம் மேலை நவீன இலக்கியத்திடமிருந்தே பெருமளவு எடுத்துக் கொண்டது. குறிப்பாக, 1800 களின் இறுதியில் மேலை நாடுகளுக்குப் படிக்கச் சென்ற இந்தியர்களால் இந்த மாற்றம் இங்கு வந்து சேர்ந்தது. அதே நேரம் அந்த மாற்றங்களை இந்திய நவீன இலக்கியம் சுவீகரித்துக் கொண்ட வேகம் வியப்பானது. உலக அளவில் நவீன இலக்கியத்தில் உருவாகி வந்த பாணிகள் சற்றேறக்குறைய இந்தியாவிலும் உருவாகி வந்திருப்பதைப் பார்க்க முடியும்.
- இந்த நவீன அலை இந்தியா போன்ற பன்மொழி தேசத்தில் ஒட்டுமொத்தமாக நிகழவில்லை. மூன்று மொழிகள் இந்த உலக இலக்கியப் போக்கைச் சென்று கைக் கொள்வதில் முந்தி நின்றன. எழுதுமுறைகளை, வடிவ சோதனைகளை, கூறுமுறைகளை தம் மொழியில் கொண்டு வருவதில் ஆர்வமாக இருந்தன. இந்தியா விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே இருந்த ஐரோப்பியத் தொடர்பு காரணமாக இந்த நவீன அலையைக் கொண்டு வருவதில் முதன்மையாக இருந்த மொழி வங்க மொழி. வங்கத்தின் அரசியல், சமூக சூழல் இந்த மாற்றங்களுக்குத் துணையாக அமைந்தன. சமூக அரசியலில் வங்கத்தை எல்லா விதங்களிலும் பிரதியெடுக்க முயலும் மலையாள மண்ணில் அடுத்ததாக இம்மாற்றங்கள் பெரிதும் வெளிப்பட்டன. மூன்றாவதாக தமிழ் மொழியில் நவீனத் தமிழ் இலக்கிய இயக்கத்திற்கும், வங்க மலையாள நவீன இலக்கிய இயக்கத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்றுண்டு. வங்காளத்திலும், கேரளத்திலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் சமூக இயக்கங்களாகத் தம்மை முன்வைத்து வளர்ந்த கம்யூனிச சித்தாந்த அமைப்புகளால் ஆனவை. அந்த இயக்கங்கள் அக்காலத்தில் வாசிப்பை தமது கருவிகளில் ஒன்றாக, புத்தகம் படிப்பதை முக்கியமானதாக, நவீன இலக்கிய வாசிப்பை அறிவார்ந்த செயல்பாடாக முன்வைப்பதில் வெற்றி கண்டவை. மாறாக, தமிழ்நாட்டில் நவீன இலக்கிய வாசிப்பிற்கு அப்படியான சமூக இயக்க ஆதரவுப் பின்னணி அமையவேயில்லை.
- முழுக்கவே தனிநபர்களின் வாசிப்பு ஆர்வத்தாலும், அதிக பட்சம் குறுங்குழுச் செயல்பாடுகளாலும் மட்டுமே தமிழ்நாட்டில் நவீன இலக்கிய இயக்கம் செயல்பட்டது. ஆனால் உலக இலக்கியத்தின் எந்த நவீன படைப்பு முறைகளுக்கும் இணையான படைப்புகள் தமிழில் உருவாகி வந்திருக்கின்றன. ஒரு வகையில் நவீன தமிழிலக்கியப் பிதாமகர்கள் ஐரோப்பிய, மேலை இலக்கியங்களைப் படித்தவர்களாகவும், அதன் சாரத்தை உணர்ந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பது காரணமாக இருக்கலாம். அவ்வப்போது பாலையில் மழை போல இவர்கள் பொது இதழ்களில் அடையாளம் காட்டப்பட்டாலும் தமிழ்நாட்டின் மைய வாசிப்பு உலகில் இவர்கள் இடம் மிகக் குறைவு.
- இந்தச் சூழ்நிலையில்தான் இணையம் பெருந்தொழில்நுட்பமாக மாறி மொழிகள் மீதும் செல்வாக்கைச் செலுத்த ஆரம்பிக்கும் காலம் வருகிறது. இதுதான் தமிழ் நவீன இலக்கியத்தின் மிக முக்கியத் திருப்புமுனை. இணைய வழித் தமிழ் குறித்த “தமிழினி 2000’ என்ற சிங்கப்பூர் கருத்தரங்கும், தமிழிலக்கியத்தின் போக்குகளை ஆராயும் விதத்தில் காலச்சுவடு இதழால் நடத்தப்பட்ட “தமிழினி 2000” கருத்தரங்கும் இந்தத் திருப்புமுனையை அடையாளப்படுத்தின. இணையத் தமிழ் ஏன் திருப்புமுனை என்றால் இணையம் வழியே தன் வாசகர்களை நேரடியாகச் சென்றடைவதன் சாத்தியத்தை நவீன தமிழ் இலக்கியம் உணர்ந்ததுதான்.
- தனியுரிமையற்ற வெளியான இணையத்தில் மொழி வெளிப்படும்போது நிகழும் அத்தனை அபத்தங்களையும் தாண்டி தமிழ் நவீன இலக்கியத்தில் இணையத்தின் வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது. (மின்வெளியில் தமிழ்ச் சமூக பரிணாமம்-இயற்கைத் தேர்வு முகவர்களின் தேவை – முனைவர் நா. கண்ணன், ஸ்டுட்காட், ஜெர்மனி அவர்களின் தமிழினி 2000 மாநாட்டுக் கட்டுரை இப்புள்ளியை மிக அருமையாக முன்பே கணித்து எழுதப்பட்ட கட்டுரை. நண்பர்கள் இணைவாசிப்பிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது). இந்த இடத்தில்தான் வங்க, மலையாள நவீன இலக்கிய உலகங்கள் பின்தங்கி நிற்கின்றன. அதுவரை மூன்றாம் இடத்திலிருந்த தமிழ் நவீன இலக்கியம் இணையப் பாய்ச்சலால் முதலிடத்தில் வந்து நிற்கிறது.
இன்று தமிழில் எழுதி வரும் 40 வயதுக்கு உட்பட்ட பல எழுத்தாளர்களும் குறைவாகவே அறிந்த ஒன்றாக பழைய பதிப்பக முறைகள் ஆகிவிட்டன. நூல் வெளிவர பதிப்பகத்தார் ஆதரவு வேண்டும், இதழ்களின் ஆதரவு வேண்டும் என்ற இடத்தை இணையம் மாற்றியமைத்தது. இன்று நவீனத் தமிழ் இலக்கியத்தில் இருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்கள், வாசகர்கள் எனும் பரப்பு இந்தியாவின் பிற மொழிகளுக்கு அமையவே இல்லை. நவீனத் தமிழிலக்கிய வாசகரும், எழுத்தாளரும் இன்று சந்தித்துக் கொள்ளும் இடம் இணையவெளியே. முன்னெப்போதும் இல்லாத அளவு எழுத்தாளர் – வாசகர் உரையாடல் சாத்தியப்பட்டிருப்பதும் இதே இடத்தில்தான். ஒரு வகையில் இது இந்திய மொழிகளுக்கான நவீன இலக்கியத்திற்கு ஒரு முன்னுதாரணம்.
இந்த இடம் உருவாக ஆரம்பித்து ஆண்டுகள் 25 ஆகிவிட்டன என்பதே சிங்கப்பூர் தமிழினி 2000 மாநாடும், காலச்சுவடு தமிழினி 2000 மாநாடும் சொல்லும் உண்மை. அங்கிருந்து இந்த 25 ஆண்டுகளில் நவீனத் தமிழிலக்கியம் எங்கு வந்திருக்கிறது? எவற்றைச் சாதித்திருக்கிறது? இன்னும் செல்ல வேண்டிய இடங்கள் என்ன? என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
2000 க்குப் பிறகு நவீனத் தமிழிலக்கியம் அடைந்த முதன்மையான முன்னேற்றம் என்பது நேரடியாகத் தனது வாசகர்களைச் சென்றடைந்ததுதான். நவீனத் தமிழின் புதிய தலைமுறை எழுத்தாள வருகைகளாகப் பார்க்கப்பட்டவர்கள் இணையத்தை தம் களமாகக் கொள்ள ஆரம்பித்தனர். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா ஆகியோர் இணைய வழியில் செயல்பட ஆரம்பித்த முதன்மையான நவீன தமிழிலக்கிய எழுத்தாளர்களாக அமைந்தார்கள். இன்றுவரையிலுமே கூட அவர்கள் முன்னணியில் இருப்பவர்கள். 1990 களிலிருந்து அடையாளம் காணப்பட்ட இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திற்கு முன்பிருந்த நவீன இலக்கிய சூழலில் இருந்து இங்கு வந்தவர்கள். இணையம் உருவாக்கிய வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.
2010 க்குப் பிறகு உருவாகி வந்த எழுத்தாளத் தலைமுறை இணைய வழியே உருவாகி வந்து தமக்கான வாசகப் பரப்பை அடைய ஆரம்பித்த தலைமுறையாக இருக்கிறது. போகன் சங்கர், சரவணன் சந்திரன், சுனில் கிருஷ்ணன், மயிலன் சின்னப்பன், சுரேஷ் பிரதீப் என நீண்ட பட்டியல் இந்த வகையில் உண்டு. இணையம் வழியே பரவலாக அறிமுகம் பெற்று அந்த அடையாளத்துடன் பதிப்பிக்கப்பட்ட எழுத்தாளத் தலைமுறை இவர்களுடையது.
இந்த இருவிதமான படைப்பாளிகளும் அச்சு நூல் பதிப்பு, மின் நூல் பதிப்பு ஆகிய இரண்டிலும் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க மின் நூல் படைப்பாளிகளாகவே மட்டுமே இருக்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். வணிக எழுத்துகளின் சந்தை இப்போது மின் நூல் எழுத்தாளர்கள் வசம்தான் இருக்கிறது எனலாம். மின் நூல், இணையத் தளம் என வந்த பின்னரும் அச்சு நூல்களின் சந்தை மறையவில்லை. மிகச் சரியாகச் சொல்வதானால் உலக அளவில் வாசகர்களின் சந்தை அச்சுப் பதிப்பகங்கள் உருவாக்கிய விதத்தில்தான் இன்னும் செயல்படுகின்றன. இன்று ஒரு படைப்பு சந்தைப்படுத்தப்பட வேண்டும் என வரும்போது அச்சுப் பதிப்பகங்கள் உருவாக்கியிருக்கும் வணிகச் சூழலில்தான் அதைச் செய்ய இயலும். அச்சுப் பதிப்பை வெளியிடும் பதிப்பகமே பெருமளவு மின் நூலையும் வெளியிடுவதாகத்தான் சந்தை நிலவரம் பெரும்பாலும் இருக்கிறது. ஆகவே பதிப்பகங்கள் என்பதன் முக்கியத்துவம் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானது.
பொது வாசிப்புக்குரிய நூல்களை வெளியிடும் முந்தைய தலைமுறைப் பதிப்பகங்கள் நடுவே நவீன தமிழிலக்கியம் வெளியிடுவதற்காகவே உருவாகி வந்த பதிப்பகங்கள் கடந்த 25 ஆண்டுகளில் அதிகம். இன்னும் சொல்லப்போனால் மொழியாக்கப் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பதிப்பகங்களும் உருவாகி வந்திருக்கின்றன. வரைகலை, வடிவமைப்பு, அச்சிடுதல் என பதிப்புத் தொழிலின் அனைத்துப் பிரிவுகளிலும் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி இன்று நூல் அச்சிடுவதை அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக மாற்றியிருக்கிறது.
இங்கிருந்து நாம் முன்னே செல்ல வேண்டிய இலக்குகள் எவை என்பது நாம் பேச வேண்டிய பொருள். தொழில்நுட்பம் இன்று மொழிகளுக்கிடையேயான இடைவெளியைப் பெருமளவு குறைத்திருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். இந்த சாத்தியம் எல்லா மொழிகளுக்கும் நல்வாய்ப்பாக அமைந்ததா? என்பதுதான் யோசிக்க வேண்டிய ஒன்று. லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் தொடங்கி ஆப்பிரிக்க இலக்கியங்கள் வரை உலக அளவில் கவனம் கூடியுள்ளதென்னவோ உண்மைதான். அதில்தான் சவால் காத்திருக்கிறது. ஆசிய இலக்கியம் எனும்போது அதில் இந்திய இலக்கியம் என்பதை பிற ஆசிய நாடுகளுக்கு இணையான ஒற்றை இலக்கியப் போக்காக முன்வைக்க முடியுமா? இன்னும் சொல்லப்போனால் பிற ஆசிய நாடுகளின் இலக்கிய உலகங்களுமே இந்த ஒற்றைப் பிரதிநிதித்துவத்தை ஏற்பதில்லை. மிக முக்கியமாக இலக்கியம் வகைப்படுத்தப்பட்ட விதங்களில் மாற்றம் ஏற்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. நவீன தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் பிரதேச ரீதியில் வகைப்படுத்தப்பட்ட இலக்கியம், மொழி ரீதியில் வகைப்படுத்தப்பட்ட இலக்கியம், பொதுப் பண்பாட்டு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட இலக்கியம் என்ற இடங்களிலிருந்து நுண்பண்பாடு, இனக்குழு, நுண்கலை, நாட்டார் மரபு, வாய்மொழி வரலாறு என இலக்கியத்தின் பரப்பு விரிவடையத் தொடங்கியது கடந்த 25 ஆண்டுகளில்தான்.
இதில் ஒரு சுவாரசியம் உண்டு. இந்தப் பரப்பு விரிவடைந்து கொண்டே போவதாக நாம் ஒருபுறம் நினைக்கலாம். ஆனால் இந்த விரிவு, எல்லைகளை இணைக்கும் பணியை இன்னொரு புறம் செய்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் வளர்ந்து வந்த இம்மரபின் அடிப்படையில் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், பவா செல்லத்துரை, சு வேணுகோபால் எனத் தொடங்கி மலேசியாவின் ம நவீன், ஆப்பிரிக்க மண்ணையும் எழுதும் கனடா அ முத்துலிங்கம் ஆகியோரை ஒரே சரடாக இணைக்க முடிகிறது. ஆப்பிரிக்க மண்ணின் பழங்குடி விழுமியமும், மலேசிய மண்ணின் கந்தாரம்மன் தொன்மமும், திருவண்ணாமலை மலைக்கிராமமொன்றிலிருக்கும் மழைத்தெய்வத்தின் அருள்சுரப்பும், தேனி மண்ணின் விவசாய நுட்பங்களும், இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையில் ஓடையில் கலந்த பாலைப் பார்த்திருந்த அம்மையும், கொடைப் படையலில் சர்க்கரைப் பொங்கலைக் கண்டு கதறும் மாடனும் தமிழ் வாசிக்கும் எவருக்கும் விலகி தூரத்தில் இருப்பவையே அல்ல. இந்த இலக்கியப் பரவல் சாத்தியமாக்கிய வாய்ப்புதான் உலகளாவிய சந்தை நவீன தமிழ் இலக்கியத்திற்கு அமைந்தது. இன்று பல நவீன தமிழ் இலக்கியப் பதிப்பகங்களுக்கான விற்பனையில் அயல்நாட்டு விற்பனை கணிசமான பங்கில் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பபாசி அமைப்பினரால் சென்னையில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் நூல்களின் எண்ணிக்கை மலைப்பைத் தருகிறது. நவீன தமிழிலக்கிய நூல்களும் இன்று விற்பனையாகும் அளவில் இதற்கு முன்பு விற்பனையானதில்லை. விரிந்து வரும் சந்தை, கூடி வரும் வாசகர் எண்ணிக்கை, தொழில்நுட்பம் என வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் பதிப்புலகம் தேங்கி நிற்கும் இடங்கள் இருக்கின்றன.
தொழில்நுட்பம் என்ற பெயர்ச்சொல்லை ஆராய்ந்தால் ஒரு தொழிலில் பயன்படுத்தப்படும் நுட்பம், அதாவது, அத்தொழிலை மேலும் எளிதாக்கும், வசதியாக்கும் நுட்பம் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால் தொழில்நுட்பம் மட்டுமே செம்மையான தொழிலுக்குப் போதாது. தமிழ்ப் பதிப்புலகம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அடைந்த முன்னேற்றத்தை, தொழிற்செம்மைக்கு பயன்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை என்றுதான் செல்ல வேண்டும். பலமுறை எழுத்தாளர்கள் முன்வைத்த கவனஈர்ப்புக் கருத்துதான் இது – ஒரு பதிப்பகம் ஒரு நூலை எழுத்தாளரிடமிருந்து பெற்றுக் கொண்டதும் அந்த நூலுக்கும், எழுத்தாளருக்குமான உறவு என்னவாகிறது? என்பது முக்கியமான கேள்வி. எத்தனை பதிப்புகள் வெளிவருகின்றன, எவ்வளவு விற்பனை, நூலின் பிற பயன்பாடுகள் ஆகிய விஷயங்களில் இன்றும் எழுத்தாளர் எந்தத் தகவலும் இல்லாதவர்தான். இன்றுவரை எழுத்து மூலமாக ஒப்பந்தம் செய்து நூல் வெளியிடும் தமிழ் பதிப்பகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இத்தனைக்கும் நூலின் விற்பனையில் ஆகக் குறைவான சதவீதம் என்பதுதான் எழுத்தாளருக்குக் கிடைக்கும் பங்கு. அதையும் முறையாக அளிக்கும் பதிப்பகங்கள் தமிழ்ப் பதிப்பக உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. இந்திய மண்ணில் சிறு விவசாயி நிலைமைதான் தமிழ் எழுத்தாளருக்கும் . விளைச்சல் அதிகரித்தால் அவர்தான் நட்டமடைவார்; விலை எவ்வளவு ஏறினாலும் அவர் கூலிக் காசை கூடுதலாகப் பெறுவார். அவ்வளவே.
பதிப்பகம் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் பதிப்பகத்தரப்பில் வைக்கப்படும். வைக்கப்பட வேண்டும். அரசு தரும் குறைந்த பட்ச ஆதார விலையை நம்பி விவசாயம் இருப்பது போல நாங்கள் நூலக ஆணையை நம்பியிருக்கிறோம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் தொழிற்செம்மை என்பது ஒரு பொருள் விற்றாலும், ஒரு கோடி பொருள் விற்றாலும் மாறாமல் கடைப்பிடிக்க வேண்டியது. இத்தனைக்கும் காப்புரிமைச் சட்டம், அறிவுசார் காப்புரிமை அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில் இருக்கிறோம். ஆனால் பதிப்பகங்கள் – எழுத்தாளர் இடையேயான தொழிற்செம்மை கூடிய உறவுமுறை தமிழ் சூழலில் உருவாகி வரவே இல்லை. தனிப்பட்ட நட்பும், நம்பிக்கையுமே இன்னும் அந்த உறவுமுறையை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன. ஆகவே நட்பில் நிகழும் ஏற்றத்தாழ்வுகள், சச்சரவுகள் பதிப்பகத் தொழிலிலும் எதிரொலிப்பதை காண முடியும். விளைவாக, நவீன தமிழிலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்கள் தாமே பதிப்பகம் தொடங்கி நடத்தும் சூழலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சரி, ஆங்கிலப் பதிப்பகத்துறையில் இதுபோன்ற குழப்பங்கள் இல்லையா? என்று கேட்டால் அங்குதான் இலக்கிய முகவர் எனும் தரப்புடன் முக்கோணத் தொழிலுறவு செயல்படுகிறது. எழுத்தாளர் தரப்பும், பதிப்பாளர் தரப்பும் முகவர் வழியே தத்தம் எதிர்பார்ப்புகளைப் பேசிக் கொள்ளமுடிவதால் இருதரப்புமே சரியான விதத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது சாத்தியமாகிறது. பதிப்பாளரிடம் நேரடியாகப் பேசத் தயங்கும் எழுத்தாளர்கள் முகவரிடம் பேச முடிகிறது. முகவரால் எழுத்தின் தன்மைக்கேற்ற பதிப்பகத்தாரை அடையாளம் கண்டு அவரிடம் படைப்பைக் கொண்டு சேர்க்க முடிகிறது. இப்படி ஒரு அமைப்பு தமிழ் இலக்கிய சூழலில் இல்லை. இதைப் பேசினால் தமிழ் பதிப்பாளர் தரப்பிலிருந்து ஒரு “கேலிப் புன்னகை” வெளிப்படக்கூடும். ஆங்கில இலக்கிய விற்பனையையும், தமிழ் இலக்கிய விற்பனையையும் ஒப்பிட்டு சுட்டிக்காட்டக் கூடும் – என் தாத்தா சொல்லும் பழமொழியை எனக்கே சொல்லிக் கொள்கிறேன்; ”எதிர்வீட்டுக்காரன் ஆனைக்கு அங்குசம் வாங்குனான்னு நம்ம பூனைக்கு புங்குசம் வாங்கியான்னாளாம் புதுப்பொண்டாட்டி”.
பதிப்பகத் துறையில் இத்தனை தொழில்நுட்ப மாற்றங்கள் வரும், வெறும் ஒற்றை இலக்க எண்ணில் கூட புத்தகங்களை தேவைக்கேற்ப அச்சிட முடியும் என்றெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கூட முழுமையாக நம்பினோமா? ஆகவே இந்த முகவர் பணியினை தமிழ் பதிப்பக வட்டத்தில் உருவாக்க பதிப்பாளர் தரப்பு முயல வேண்டும். எல்லா முதல் முயற்சிகளுமே முதலில் அவநம்பிக்கையாய் பெரும்பான்மை மனிதர்களால் அணுகப்பட்டு பின்னர் தவிர்க்க முடியாதவையாய் மாறியவைதாம். சிறிய அளவிலாவது அத்தகைய ஏற்பாட்டினை பதிப்பாளர் தரப்பு செய்ய வேண்டும். இன்று தொலைத்தொடர்புகள், ஒப்பந்தங்கள், உரையாடல்கள் ஆகிய அனைத்துமே கணினி வழியில் எளிதாக மாறிவிட்டிருக்கின்றன. மிகக் குறைந்த செலவில் அடிப்படையான முகவர் பணியினை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. பதிப்பகங்கள் மனது வைத்தால் நடக்கும். அதன் பலன் ஆரோக்யமான தமிழ் பதிப்புலகமாக இருந்தால் பலனடையப்போவது அனைவரும்தானே.
அடுத்த முக்கியமான இலக்காகக் கொள்ள வேண்டியது “எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களை கொண்டு அங்கே சேர்க்க” வேண்டியது. ஆம். தமிழின் நவீன இலக்கிய வாசிப்பாளர் பட்டியலில் வங்கத்தின் எழுத்தாளுமைகளும், மலையாளத்தின் எழுத்தாளுமைகளும் மட்டுமல்லாமல் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளுமைகளும் எப்போதும் இருந்தார்கள். இருக்கிறார்கள். அந்த மொழிகளில் உருவாகி வந்த இலக்கியப் படைப்புகள் ஆங்கிலம் வழியே தமிழுக்கு வந்து சேர்கின்றன. தொழில் நிமித்தம் நான் பேசிய மலையாள நண்பரிடம் தகழி தொடங்கி மனோஜ் குரூர், சந்தோஷ் எச்சிகானம், கே ஆர் மீரா வரை இங்குள்ள நவீன இலக்கிய வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்றபோது அவர் அதிர்ச்சியாகி விட்டார். அவரிடம் தமிழ் எழுத்தாளர்களில் யாரை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பரிதாபமான புன்னகையை பதிலாகப் பெற்றேன். பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்த என் மாமா பெண்ணுக்கு நான் மாஸ்தி, குவெம்பு தொடங்கி விவேக் ஷாண்பக், வசுதேந்திரா வரை வாசித்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பதிலுக்கு கிடைத்ததோ இன்னொரு பரிதாபப் புன்னகைதான்.
இந்த இடம்தான் தமிழ் பதிப்பகங்கள் கவனம் குவிக்க வேண்டிய அடுத்த கட்டம். இங்கு ஆயிரம் இலக்கிய பேதங்கள் இருக்கலாம். ஆனால் உலகின் எந்த வகையான எழுத்தும் நவீன தமிழில் விடுபட்டதில்லை என்பதை நவீன தமிழிலக்கிய வாசகர்கள் மறுக்க மாட்டார்கள். இன்று உலக அளவில் அதிக விற்பனையாகும் படைப்புகளை வாசிக்கும்போது நவீன தமிழ் வாசகன் நம்மிடமும் இதற்கிணையான படைப்புகள் உண்டே எனும் எண்ணத்தை அடையாமல் இருக்க முடியாது. ஆகவே தமிழ் பதிப்புலகம் கவனத்தில் கொள்ள வேண்டியது அடுத்த கட்டத்திற்கு தம் தொழிலை விரிவுப்படுத்தத் தேவையான படைப்புகள் கணக்கில்லாமல் இங்கு உண்டு என்பதே.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் பிற மொழிகளுக்குச் சென்று சேரும் வேகத்தில் ஆங்கில இலக்கிய உலகிற்கு பிற மொழி நூல்கள் சென்று சேர்ந்தனவா என்ற கேள்வி கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் உருவாகி வந்திருக்கும் ஒன்று. பிற மொழி இலக்கியங்கள் இக்கேள்விக்குப் பதிலளிக்க ஆரம்பித்து விட்ட வேகத்தை ஒப்பிட்டால் தமிழில் நாம் முதல் அடியே இப்போதுதான் எடுத்து வைத்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.
ஓர் உதாரணத்திற்காக ஆசிய நாடான ஜப்பானை எடுத்துக் கொண்டால் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் தம் இலக்கியத்தை உலகளவில் கொண்டு செல்ல அவர்கள் செய்திருக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம். விளைவாக இன்று ஆங்கில இலக்கிய உலக விற்பனையில் ஆசியப் பிரிவில் ஜப்பானிய நாவல்கள் முன்னணியில் இருக்கின்றன. இதைச் சாதிக்க ஜப்பான் அரசு உருவாக்கிய Japanese Literature Publishing Project (JLPP) (https://www.jlpp.go.jp/, https://www.jpf.go.jp/ ) எனும் திட்டங்கள் குறித்துப் பார்த்தால் வெறும் மொழியாக்கம் என்பதோடு மட்டுமல்லாமல் படிப்படியாகச் சரியான இடைவெளிகளில் எப்படியெல்லாம் தங்கள் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் எனப் புரியும். மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி, பதிப்பகத்தார்க்கு உதவி என விரிவான பணிகள். இன்று முரகாமி உலக அளவில் பேசப்படுகிறார் என்றால் நாம் இந்தப் பின்னணியை நினைவில் கொள்ள வேண்டும்.
ஓர் ஆர்வமூட்டும், பாராட்டக் கூடிய செயல்பாடாக தமிழக அரசு கடந்த நான்காண்டுகளாக சர்வதேச புத்தகக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகிறது. தமிழ் பதிப்பகங்கள் பிற மொழிப் பதிப்பகங்களுடன், குறிப்பாக ஆங்கிலப் பதிப்பகங்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக, இலக்கிய முகவர்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. அரசாங்கத் தரப்பிலிருந்து வருங்காலத் தேவையறிந்து செய்யப்படும் முக்கியமான முன்னெடுப்பு இது. ஆனால் இதன் நல்விளைவுகள் இன்னும் நமக்குக் கையில் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒருவகையில் சரியாக எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி இது எனும் அளவில் நிற்கிறோம்.
சரி, இதற்குமுன் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதில்லையா எனக் கேட்டால் சற்று விரிவான பதில் அவசியமாகிறது.
ஒரு மொழிபெயர்ப்புப் பணி என்பது ஒரு மொழியில் இருக்கும் படைப்பை மற்றொரு மொழியில் மாற்றி எழுதுவதோடு முடிவதில்லை. பணி அங்கிருந்துதான் தொடங்குகிறது. அம்மொழியாக்கப் படைப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், அப்பின்னணியை விளக்குவதும், சந்தையில் கொண்டு சேர்ப்பதும் பல பணிகளும் முடிந்தால்தான் மொழியாக்கப் படைப்பு பிறமொழியின் வாசகப் பரப்பிற்குள் சென்று சேர்கிறது. தன் மொழியின் எழுத்தாக அதை அம்மொழியின் வாசகன் பார்க்க ஆரம்பிக்கிறான். அதன்பின்னர்தான் அந்த நூல் வாசகப் பரப்பை அடைவதும், தேங்குவதும் நிகழ்கிறது. உரையாடல்கள், விவாதங்கள், விமரிசனங்கள், விழா அரங்குகள் என படைப்பைப் பரவலாக்கும் நிகழ்வுகளில் இந்த நூலும் இணைவது அந்த எழுத்தின் வலிமையால் நிகழ்வதாக அமையும். இந்தச் சூழ்நிலையைச் சந்தித்து, இந்தத் தொழிற்செம்மைச் செயல்பாடுகள் வழியே உலக அரங்கிற்கு சென்று சேர்ந்த தமிழ் இலக்கியப் படைப்புகள் எத்தனை என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.
கல்விப்புல மொழியாக்கங்கள் அவ்வளவிலேயே நின்று விடக் கூடியவை. கல்விப்புல அளவில் உலகப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று சேர்ந்த திருக்குறளை விட தமிழ்நாட்டில் தமிழ் கற்ற திரு. தாமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மா (https://thomaspruiksma.com/ ) அவர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பும், ஒளவை பாடல்களின் மொழிபெயர்ப்பும் ஆங்கில வாசகர்களுக்குத் தமிழை அதிகம் கொண்டு சேர்த்திருக்கின்றன. அப்படிக் கொண்டு சேர்ப்பதில் தாமஸ் காட்டும் முனைப்புகளுக்கு, தமிழ் மொழியின் வாசகனாக இருக்கும் ஒவ்வொருவரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டவர். தமிழ்நாட்டில் இருக்கும் மொழிக்கான பல்கலைக் கழகத்தில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய தனித் துறையும், அதற்கான நிதி ஒதுக்கீடும் உண்டு. அவையும் இருக்கின்றன என்பதை இங்கு தகவலாக மட்டுமே சொல்ல முடிந்த நிலைதான் நான் குறிப்பிட விரும்புவது. மொழி மாற்றப்பட்டு அச்சிடப்பட்டாலே போதும் என்ற அளவிலேயே மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றுகளாக இருக்கும் நமது கல்விப்புல, அரசு சார் இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளே நாம் தாண்டிச் செல்ல வேண்டிய எல்லைக் கோடுகள். ஒரு வகையில் எல்லைக் கற்கள்.
இதுவரை அரசாங்கமும், பதிப்பகங்களும் செய்ய வேண்டிய அடுத்த கட்ட நகர்வு குறித்து பேசியிருக்கிறோம். என்றாலும், நவீன தமிழ் இலக்கியம் தன்னளவில் நின்று போராடி வளர்ந்த ஒன்று. நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஆதரவாக உடன் நின்ற மற்றொரு அம்சம் முக்கியமானது. அதன் கடந்த கால பங்களிப்பும், எதிர்காலத் தேவையும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
இந்த இடம்தான் தன்னார்வலர்களாக இணைந்து செயல்படும் இலக்கிய அமைப்புகள் வரவேண்டிய இடம். நவீன தமிழ் இலக்கியத்தில் சில அமைப்புகளின் பங்கு மறுக்க முடியாதவை. நவீன இலக்கியப் படைப்புகளுக்குப் பரிசு, விருது, அச்சிடுவதற்கு ஆதரவு எனும் அளவில் செயலாற்றிய சில அமைப்புகளாலும், பதிப்பகங்களாலும், இதழ்களாலும்தான் இவ்வளவு தூரம் நவீன தமிழ் இலக்கியம் வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இனியும் இதேபோன்ற முன்னெடுப்புகள் போதாது என்பதுதான் நம் அடுத்த கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டியது.
நவீன தமிழ் இலக்கியத்தின் வாசகர்கள் இன்று மாநில எல்லைக்குள், தேசத்தின் எல்லைக்குள் மட்டும் இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் விரிந்த வாசகப்பரப்பு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில், ஜப்பானில், ஜெர்மனியில், இங்கிலாந்தில்,கனடாவில். மலேஷியாவில், சிங்கப்பூரில், ஆப்பிரிக்க நாடுகளில், வளைகுடா நாடுகளில் இயங்கும் தமிழ் சங்கங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் இருக்கும் இலக்கிய அமைப்புகளை விட அதிகமாகவே இருக்கலாம். அங்கும் தன்னார்வ வாசிப்பு அமைப்புகள் துணை அமைப்புகளாக, தனி அமைப்புகளாக இயங்கி வருகின்றன. இவையும் தமிழகத்தின் தன்னார்வ இலக்கிய அமைப்புகள் ஏற்கனவே செய்து வருபவற்றையே அயல்மண்ணில் செய்து வருகின்றன. விருதுகளின் எண்ணிக்கையும், பரிசுத் தொகையில் மதிப்பூட்டலும் நிகழ்ந்திருக்கின்றன என்பது வரை பாராட்டத்தக்க செயல்பாடுகள்.
ஆனால், இந்த அயலகத் தமிழ் இலக்கிய அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணி தாம் இருக்கும் மண்ணிற்கு தன் தாய்மொழியின் இலக்கியத்தை கிடைக்கச் செய்வதாக இருந்தால் தமிழ் இலக்கியத்தின் இத்தனை பரந்து விரிந்த சந்தை சாத்தியக்கூறு எப்படி இருக்கும்? ஆண்டிற்கு 5 நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்து, தகுந்த பதிப்பகத்தாரை/முகவரை தொடர்பில் கொண்டு வந்து, அவற்றை தாம் இருக்கும் மண்ணின் இலக்கியச் சூழலில் பரவலாகக் கொண்டு சேர்த்து- என ஒவ்வொரு அயலக தமிழ் இலக்கிய அமைப்பும் செயல்படுமானால் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகின் சந்தை மதிப்பு என்னவாக இருக்கும்? தமிழ் பதிப்பகங்களின் சந்தை எவ்வளவு விரிவடையும்? இது ஒரு வெற்றுக் கனவா, காற்றுக் கோட்டையா? எனக் கேட்டால் அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன என்று உறுதியாகச் சொல்லுமிடத்தில் இருந்துதான் இதைப் பேசுகிறேன்.
2009 ல் துவக்கப்பட்ட இலக்கிய வாசக நண்பர்கள் தன்னார்வலர்களாக இணைந்து செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என கடந்த 10 ஆண்டுகளில் விரிவடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் எழுத்தாளர் ஜெயமோகன் பயணித்து நவீன தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சேர்ப்பதைப் பற்றி பேசியதன் தூண்டுதலால் மகத்தான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் கதைத் தொகுப்பும், ஏழாம் உலகம் நாவலும் ஆங்கில பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு அங்கு அந்த நூல்களைப் பரவலாக்கும் செயல்பாடுகளில் ஜெயமோகன் கடந்த ஓராண்டாகவே பரபரப்பாக இருந்தார். அந்தத் தளத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் படைப்புகளை ஏற்றி நிறுத்தும் நோக்கில் வரும் ஏப்ரல் 2026 ஆம் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு மாநாடு நடத்தப்பட உள்ளது. முழுக்க முழுக்க நவீன தமிழ் இலக்கிய பிதாமகர்களையும், முக்கியப் படைப்பாளுமைகளையும், அவர்களது படைப்பின் வெளிச்சத்தில் முன்வைத்து மேலை இலக்கிய வாசக உலகிற்கும், மேலைப் பதிப்பக உலகிற்கும் அறியச் செய்யும் பெரு முயற்சி இது. இதை ஒட்டிய அடிப்படை முகவர் பணிக்கான முயற்சியாக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு படைப்புகளை கொண்டு செல்வதற்கான வழியாக மற்றொரு முன்னெடுப்பு இங்கிலாந்தின் லண்டனில் நிகழவிருக்கிறது. இவை அனைத்திற்குமான ஏற்பாடுகள் இறுதிக்கட்ட அளவில் இருப்பதால் வெகு விரைவில் நிகழ்ச்சிகள் விவரம் அனைவருக்கும் அறிவிக்கப்படும். இதில் முக்கியமான அம்சம் இந்த ஏற்பாடுகளை முன்னின்று செய்வது அந்தந்த மண்ணில் இருக்கும் தன்னார்வல தமிழ் இலக்கிய வாசகர்களின் குழுவே.
நீண்ட பண்பாட்டுப் பின்னணியும், மொழி வளமையும் கொண்ட மொழி, நவீன இலக்கியத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மொழி, புதுமை தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்தி தனது நவீன இலக்கிய வடிவை முன்னெடுத்துக் கொண்ட மொழி தற்போது அதன் அடுத்த கட்டத்தில் நிற்கிறது. “யாவரும் கேளிர்” என்ற அறைகூவலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிய மொழியை அந்த “யாவருக்கும்” கொண்டு சேர்க்க வேண்டிய கடமைதான் இன்றைய தலைமுறையின் தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், பதிப்பகத்தார், வாசகர், இலக்கிய அமைப்பினர் ஆகியோர் முன் உள்ள கடமை.
பெரும் பணியைத் தொடக்கி நடத்தும்போது இடையே சிறு ஓய்வில் வரும் கனவும் அப்பணியின் நல்விளைவாகவே வரும். எவ்வித பெரிய நிதி, நிறுவனப் பின்னணி இல்லாத நிலையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் இம்முயற்சியில் ஈடுபட முடியுமென்றால் அரசாங்கம், பல்கலைக் கழகங்கள், இலக்கிய அமைப்புகள், நிறுவனங்கள், பதிப்பகங்கள், கல்வியாளர்கள் என அனைவரும் இதில் ஈடுபடும்போது…. எனக்கும் ஒரு நற்கனவு இருக்கலாம்தானே நண்பர்களே!