136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள் பல நினைவுகளை ஒளித்து வைத்திருக்கும்.
வாசலில் ஒரு புறம் அகலமாகவும், மறுபுறம் ஒடுக்கமாகவும் இரு திண்ணைகள். சிறு வயதில் எல்லோரும் சேர்ந்து திண்ணம்பிள்ளை விளையாடுவோம். பிடிப்பவர் ஒருவரைத் தவிர மற்றவர் எல்லோரும் திண்ணையில் ஏறிவிடுவோம். கீழே இருந்தபடியே எங்களை அவர் பிடிக்க வேண்டும். முதலில் பிடிக்கப்பட்டவர்தான் அடுத்து கீழே இறக்கப்படுவார். ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருக்கும்.
அப்பொழுதெல்லாம் வீட்டில் விறகு அடுப்புதான். காலை வேளைகளில் மாட்டு வண்டியில் பெரிய மரத்துண்டுகள் விலைக்கு கொண்டு வருவார்கள். ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ கொடுத்தால், மூன்று மரத்துண்டுகள் வாசலில் போட்டு விட்டுப் போவார்கள். விறகு வெட்டுபவர்களும் வீதியில் குரல் கொடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் அந்த பெரிய மரத்துண்டை மெலிதான விறகுகளாக வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றபின்னால்தான் எங்களுக்கு வேலை ஆரம்பிக்கும். நானும் என்னுடைய தங்கையும் அதை வரிசையாக வாசல் மண் தரையில் காய வைப்போம். மாலை பள்ளியிலிருந்து வந்த உடன் அதைத் திண்ணையில் அடுக்க வேண்டும். இது மாதிரி ஐந்தாறு நாட்கள் வெயிலில் வைத்து அவை சுக்காகக் காய்ந்தபின் வீட்டின் பின்புறம் உள்ள இருட்டு அறையில் அடுக்கி வைக்க வேண்டும். நீட்டிய இரண்டு கைகளிலும் அத்தை விறகுகளை அடுக்க, அதை ஓடி ஓடிக் கொண்டு போய் வைத்துவிட்டு வருவோம். விறகு கொண்டு போன கைகள் இரண்டு மணி நேரத்துக்கு சிவந்து ஒரு மாதிரியான எரிச்சல் தரும். இரவு படுக்கும்போது அம்மா தேங்காயெண்ணெய் தடவி விடும்போது இதமாக இருக்கும்.
அந்தத் திண்ணையில் ஒரு கைரேகை ஜோஸியர் சில மாதங்கள் தங்கினார். குளியல் காவேரியில், உணவு வெளியில் எங்கோ, இரவுதான் வருவார். சில நாட்களில் பகல் பொழுதுகளில் அங்கே படுத்து சிரம பரிகாரம் செய்து கொள்வார். வரும் வருமானம் சாப்பிட மட்டும்தான் காணும் என்பார். அவரிடம் நாங்களும் கையைக் காண்பித்திருக்கிறோம். அவர் மற்றவர்களுக்கு என்ன சொன்னார், அதில் எது பலித்ததோ நினைவில்லை, சுத்தமாக நம்பிக்கையே இல்லாமல் அவரைச் சோதிக்க கை நீட்டிய என்னைப் பார்த்து, ’22 வயசுக்கு வெளிநாடு போவே’ன்னு அவர் சொன்னப்ப, பெரிதாகச் சிரித்தவன் நான். சற்றே அவர் முகம் சுண்டியதைப் பார்த்த சித்தப்பா, நறுக்கென்று தொடையில் கிள்ளியதன் வலி இரண்டு நாட்களுக்கு இருந்தது. டிகிரி முடித்து ஒரு வருடம் பெரிதாக ஒரு வேலையும் கிடைக்காமல், பிறகு நண்பன் மூலமாக சவுதியில் வேலை கிடைத்து அப்படியே படிப்படியாக மேலே வந்து இப்பொழுது மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஊரைப் பற்றிப் பேசும் போது அந்த ஜோஸியர் நினைவும் வந்து போகும்.
சித்திரைத் தேருக்கு முதல் நாள் வீதி ஜே ஜே என்று இருக்கும். திண்ணையிலும், அதன் கீழுள்ள சிமெண்ட் தரையிலும், வெளியூரிலிருந்து தேர் பார்க்க வருபவர்கள், தாங்கள் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டுப் பின் அங்கேயே படுத்துறங்கி விடியற்காலையில் கிளம்பிவிடுவார்கள். தேர் அன்று, நானும் என் நண்பர்களும் சேர்ந்து பெரிய ஜோடுதலை நிறைய நீர் மோர் வைத்துக்கொண்டு, வெயிலில் எங்களைக் கடந்து செல்பவர்களுக்கெல்லாம் கொடுப்போம். பக்கத்தாத்து சுப்புணி எப்படியும் ஏழெட்டு க்ளாஸ் குடித்து விடுவான்.
திண்ணை தாண்டிதான் வாசல் கதவு. தாழ்ப்பாள், கதவின் வயிற்றில் இருக்காது. கதவின் மேலே ஒரு சங்கிலியும், நிலையில் அதை மாட்டுவதற்கு ஒரு கொண்டியும் இருக்கும். அழைப்பு மணியெல்லாம் கிடையாது. அந்தச் சங்கிலியை டங் டங் என்று கதவில் அடித்தால், கோயில் மணியோசை மாதிரி பின்புறம் வரை கணீரென்று சத்தம் கேட்கும்.
நுழைந்தவுடன் முதல் தாழ்வாரம். அதில் வலது புறம், வெளியில் காணப்பட்டது போல ஒரு ஒடுக்கமான திண்ணை. இடது புறம் தரையில் இருந்து அரையடிக்கு மேலே எழுப்பப்பட்ட அகலமான திண்ணை என்று சொல்லலாம். அங்கே மொட்டை மாடிக்குச் செல்ல படிக்கட்டும், தாழ்வாக ஒரு சன்னலும் உண்டு. படிக்கட்டில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்க்கலாம். அந்த இடத்தில், மேசை நாற்காலி போட்டுக்கொண்டு கல்லூரி செல்லும் சித்தப்பா படித்துக் கொண்டிருப்பார். அதன் அருகில், ஒரு ஸ்டூலில் டேபிள் ஃபேன் வைக்கப்பட்டிருக்கும். பக்கத்தில் சிறியதாய் மர ஷெல்ஃப் இருக்கும். அதில் சித்தப்பாவுடைய பாடப் புத்தகங்களும், நூலகத்தில் இருந்து எடுத்து வந்த கதைப் புத்தகங்களும் இருக்கும். சித்தப்பா நல்ல உயரம். ஒல்லியும் இல்லாமல் பருமனும் இல்லாமல் நடுவாந்திரமான உடல்வாகு. மாநிறம். அடர்த்தியான மீசை வைத்திருப்பார். பாட்டி அந்த மீசையை எடுக்கச் சொல்லி திட்டிக்கொண்டே இருப்பாள். எனக்கென்னவோ மீசையை எடுத்துவிட்டால் சித்தப்பா நல்லாவே இருக்க மாட்டார் எனத் தோன்றும். நல்லவேளை சித்தப்பா பாட்டி பேச்சைக் கேட்டு மீசையயை எடுக்கவில்லை. இரவு சித்தப்பா வெகு நேரம் படித்து விட்டு அங்கேயே பாய் விரித்து படுத்துப்பார். வேலை கிடைத்து மும்பை செல்லும் வரை சித்தப்பாவின் வாசம் அங்குதான். சித்தப்பா மும்பை போகும் போது பள்ளி இறுதி வகுப்பிற்கு வந்துவிட்ட நான் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டேன்.
அடுத்து மற்றொரு ஒடுக்கமான தாழ்வாரத்தைத் தாண்டி பெரிய கல்யாணக் கூடம். கூடத்தின் நடுவே மூன்று உயரமான தூண்களும் இரு பக்கச் சுவர்களும் கூடத்தை எட்டு அங்கணங்களாகப் பிரித்து இருக்கும். சின்ன ஃபங்ஷன்லாம் அந்த கூடத்தில்தான் நடக்கும். அத்தை கல்யாணம் வாசலில் பந்தல் போட்டு செய்து விட்டு, சாப்பாடு கூடத்தில் பரிமாறினார்கள். கூடத்தில் ரெண்டு ஃபேன் தான். பழங்கால ஒட்டுவீடு அது. மேலே நான்கு புறமும் ஜன்னல் இருக்கும். சுவர் முழுக்க ஆணி அடித்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மட்டப்பட்டிருக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நிறைய நகை போட்டு, கொண்டையில் பூ சுற்றி அம்மணமாகக் குப்புறப் படுக்கப் போட்ட புகைப்படம் ஒன்று இருக்கும். அத்தை பையன் அரவிந்த்க்கு, அடர் நீல நிறச் சட்டை, ட்ரெளசருடன் கூடை நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்த போட்டோ. அவன் பக்கத்துல அவனோட தங்கை புவனா குட்டி மஞ்சள் ஃப்ராக், கண் நிறைய மையுடன் மோடாவில் நின்று கொண்டிருக்கும்.
தூண்களின் இடையே கயிறு கட்டி, அத்தையின் புடவையைத் திரையாகப் போட்டு, நாங்கள் போட்ட நாடகம் அடிதடியில் முடிந்தது. அதனால் நாடகத்துக்கு பின் நடக்க இருந்த என் தங்கையின் பாட்டு கச்சேரியும் கான்ஸல் ஆனது. பாவம் அது வரவீணா பாட்டை பத்து நாளாக தொண்டைத்தண்ணி வற்ற ப்ராக்டிஸ் பண்ணியிருந்தது, கடைசியில் அது வரவேணாம்னு போய் விட்டது.
கூடத்தில் இருந்த ஒரு அறை பூஜைக்கு. சுவர் முழுதும் ரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி, ராமர் பட்டாபிஷேகம், தவிர வேறு சில படங்களும் விக்ரகங்களும் இருக்கும். சுவரோடு இருந்த அலமாரியில் ஊதுபத்தி, கற்பூரம் மற்றும் பிற பூஜைசாமான்களும் ஸ்லோக புத்தகங்களும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இரண்டடி உயரத்திற்கு இரண்டு குத்து விளக்குகள். அந்தப் பூஜை அறையே கோவில் சன்னதி மாதிரிதான் இருக்கும்.
கூடத்தில் இன்னொரு இருளோடிய சிறிய அறை இருக்கும். வாசற்புறம் பார்த்த சன்னல் வழியே பகல் நேரத்தில் சொற்ப வெளிச்சம் வரும். படுக்கை உள் என அம்மா சொல்லுவார். அங்கிருந்த தாத்தா கால கட்டிலில் எங்களுடைய போர்வை தலையணை அடுக்கி வைத்திருப்போம். மூலையில் ஒரு இரும்புப் பெட்டி இருக்கும். அதைப் பூட்டி சாவியை பாட்டி தன் தாலிக்கொடியில் ஒரு சேஃப்டி பின்னில் கோர்த்து மாட்டிக் கொண்டிருப்பாள். அந்தப் பெட்டியில், தங்க நகை, வெள்ளிப் பாத்திரம் முதல் முந்திரிப் பருப்பு வரை இருக்கும்.
வீட்டில் உள்ள அனைத்து நபர்களும் தூங்குவது கூடத்தில்தான். விருந்தாளிகள் வந்தால், திண்ணைகள் உபயோகப்படும். ஏப்ரல், மே மாதங்கள் என்றால், வீட்டின் ஆண்கள், விரிப்பு, தலகாணி, சொம்பில் தண்ணீர் சகிதம் மொட்டைமாடிக்குப் போய்விடுவோம்.
கூடம் தாண்டி இரண்டாவது தாழ்வாரத்தில் இடது புறம் சமையலறையும், வலது புறம் பெரிய உரலும் இருக்கும். அத்தை அங்கு மாவரைக்கும் போது பக்கத்தில் ட்ரான்ஸிஸ்டரில் பாட்டு, நாடகம், செய்தி எதாவது கேட்டுக் கொண்டிருப்பாள். உரலுக்கு மேலுள்ள சன்னல் வழியே பக்கத்து வீட்டு ஹிந்தி டீச்சர், ஹிந்து பேப்பர் வேண்டும் என்றால் குரல் கொடுப்பார். சன்னல் வழியேதான் பேப்பர் பரிமாற்றம். நான் ஏழாவது படிக்கும்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.
பக்கத்து வீட்டு டீச்சர் இறந்து இரண்டு வாரம் இருக்கும். மாலை விளக்கேற்றி சிறிது நேரம் ஆகியிருக்கும். நானும் என் தங்கையும் அரை ஆண்டுத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தோம். “ அம்மாஆஆஆஆ” என்று அலறிய படியே சமையல் அறையில் இருந்து அத்தை ஓடி வர, பின்னால் சிரித்தபடியே சித்தப்பா வந்து கொண்டிருந்தார். சித்தப்பாவின் சிரிப்பு சத்தத்தைக் கேட்டு திரும்பிய அத்தை, கையில் கிடைத்த பொருளை எல்லாம் எடுத்து சித்தப்பாவின் மீது வீச ஒரே களேபரம். விஷயம் என்னவென்றால் சமையலறையில் அத்தை பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது, சித்தப்பா மறைந்து இருந்தபடி, பக்கத்து வீட்டு டீச்சர் குரலில், “ஹேமா, பேப்பர் தரியா?” என குரல் கொடுக்க அத்தை பயந்து அலறி கூடத்தை நோக்கி ஓடி வந்திருக்கிறாள். விஷயம் தெரிந்து பாட்டி, அத்தைக்குக் கொழு மோர் காய்ச்சிக் கொடுத்த பின்னும் அத்தை பயந்து அழுது கொண்டே இருந்தாள். சித்தப்பாவுக்குக் கடும் அர்ச்சனை எல்லாரிடமிருந்தும்.
எவ்வளவு ஆட்கள் வந்தாலும் தாங்கி, பல நல்லது கெட்டதுக்கு சாட்சியாய் விளங்கிய வீடு, எங்கள் அனைவருடனும் உணர்வுபூர்வமாக கலந்து விட்ட ஒன்று. வெறும் கல் கட்டிடமாக அதை சொல்லி விட முடியாது.
அந்த விசாலமான சமையலறையில் பாட்டி அநாயசமாக ஐம்பது பேருக்குச் சமைத்து விடுவாள். அப்பொழுதெல்லாம், குழாய் வரவில்லை . கிணறுதான். பாட்டியும் அம்மாவும் காவிரியில், குளித்து விட்டு எல்லாருடைய துணிகளையும் துவைத்து ஈரத்துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு, இடுப்பில் ஆளுக்கு ஒரு குடம் தண்ணியும் கொண்டு வருவார்கள்.
இரண்டு வருஷம் முன்பு ஊருக்குச் சென்றபோது, எங்கள் வீடு இருந்த வீதிக்குச் சென்றேன். அருகிலுள்ள வீடுகள் மாறியிருந்தாலும் எங்கள் வீடு மட்டும் முப்பது வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த இளைஞரிடம்,
“சார்” என ஆரம்பித்தவுடன், “
“அவசரமா வெளில போறேன், உள்ள அப்பா இருக்கா”, என்று வாக்கியத்தை முடிக்காமலேயே விர்ரென்று சென்றுவிட்டான்.
நான் தயங்கியபடியே நின்ற போது, உள்ளே இருந்து வந்தவருக்கு எழுபது வயது இருக்கலாம்.
“இங்க வாசுன்னு” என்று ஆரம்பித்த உடனேயே,
“அவா எங்களுக்கு இந்தாத்த வித்துட்டுப் போய் எட்டு வருஷமாச்சே. அவர் கோயம்புத்தூர்ல பிள்ளையோட போய் செட்டில் ஆகப் போறேன்னு சொன்னார்”
நான், பூட்டியிருந்த வீட்டை காண்பித்து,
“நாங்க இந்தாத்லதான் ரொம்ப வருஷம் முன்னால குடியிருந்தோம். எல்லாரும் வெளியூர்ல வேலை கெடைச்சு போய் பல வருடங்களாச்சு. நடுவுல இங்க வரச்ச கூட பெருமாள் சேவிச்சுட்டு அப்டியே போய்டுவோம். இந்த ட்ரிப்தான் எப்படி இருக்கு நாங்க இருந்த வீடுன்னு பார்க்க வந்தேன். அப்படியே மாறாம இருக்கே”
“ஆமாம், ப்ராப்பர்டி லிடிகேஷன்ல இருக்கு. அண்ணன் தம்பிகளுக்குள்ள எதோ மனஸ்தாபம். அவ அப்பா இருக்கறச்சயே இந்தாத்த வித்து, ஆளுக்கொரு பங்கு பணமா கொடுத்திருக்கலாம். இப்ப வாடகைக்கும் விடாம, விக்கவும் விக்காம இப்படி வருஷக்கணக்காப் பூட்டி வச்சிருக்கா “
“அவா ப்ரதர்ஸ் யாரோட போன் நம்பராவது உங்க கிட்ட இருக்கா”.
“போன் நம்பர்லாம் இல்லியே, கடைசி பையனோட ஆகம் பக்கத்லதான், இப்படியே நேர போய் லெஃப்ட் திரும்புங்கோ, மொதல் ஆகம், வாசல்ல கம்பி கதவு நீல பெயிண்ட் அடிச்சிருக்கும்.”
“ரொம்ப தேங்க்ஸ்”
வீட்டின் சொந்தக்காரர்களைப் பார்த்து, பேசி, பொறுமையாக அவர்களுடைய சொத்து தகராறெல்லாம் முடியும் வரை காத்திருந்து, அந்த வீட்டை விலைக்கு வாங்கி ரெஜிஸ்டர் பண்ண இரண்டு வருஷம் ஆனது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே போன போது, தூசியோடு பழைய நினைவுகளின் மணமும் சேர்ந்து கொண்டது. கூடத்திற்குள் கால் வைக்கும் போது,
“சார், சார்” என்று யாரோ கூப்பிடுவது கேட்டது.
பக்கத்து வீட்டு மாமா, அவருடன் வந்த நபருக்கு ஐம்பது வயது இருக்கலாம், பச்சை நிற சட்டை, பச்சை கரை வேஷ்டி, தடிமனான கண்ணாடி, நெற்றியில் ஶ்ரீசூர்ணம்.
மாமாதான் பேசினார்,
“இவன் பேரு சாரங்கன், எங்காத்து மாமியோட சித்தப்பா பையன். பில்டிங் காண்ட்ராக்டரா இருக்கான். வீதிக்குள்ள நிறைய வீடுகள இவந்தான் ரீமாடல் பண்ணிக் கொடுத்திருக்கான். ப்ரமாதமா பண்ணிடுவான். அதான் உங்க கிட்ட கூட்டிண்டு வந்தேன். வீடு ரொம்ப பழசு. மொத்தத்துக்கு இடிச்சுட்டு மாடர்னா கட்டிடுங்கோ.”
“ரொம்ப தாங்க்ஸ். நானே யாரைக் கேக்கறதுன்னு யோசிச்சுண்டு இருந்தேன்,”
ஒரு மாசம் கழித்து சித்தப்பாவோடு வீட்டு வாசலில் வந்து இறங்கினேன். அதே பழைய திண்ணை, நிலையில் கொண்டியில் தொங்கிய பூட்டு, கூடுதலாக பித்தளையில் பள பளவென 136, மற்றும் தாத்தா பாட்டி நினைவாக அவர்கள் இரண்டு பேர் பெயரையும் இணைத்து “சுஜனா இல்லம்”. உள்ளே பெரிதாக எந்த மாற்றமும் இல்லாது வெள்ளை அடித்து, சின்ன சின்ன மராமத்து வேலைகள் மட்டும் செய்தால் போதுமென்று சொல்லியிருந்தேன்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், சித்தப்பாவின் கண்கள் தன்னிச்சையாக, தன்னுடைய ராஜ்ஜியமாக இருந்த இடது புறத் திண்ணையை நோக்கின. அங்கு ஒரு மேசை, நாற்காலியும், அருகில் ஒரு பெடஸ்டல் ஃபேனும் வைத்திருந்தேன். காலியாக இருந்த மேசையில் மெல்லிதாக தாளம் போட்ட படியே திரும்பியவர், சட்டென எழுந்து, மாடிப்படியில் அமர்ந்து சன்னல் வழியே ஆர்வமாக எதிர் வீட்டைப் பார்த்தார்.
“கெளஸிக்கா இப்ப பிள்ளயோட அமெரிக்கால இருக்காளாம்”
மெல்லிய புன்னகையோடு, “படவா” என்று எழுந்தபடியே, என் தோளைத் தட்டினார்.
உள்ளே கூடத்துக்கு வந்தவர், வரிசையாக சுவற்றில் மாட்டப் பட்டிருந்த கருப்பு வெள்ளை புகைப்படங்களைப் பார்த்தவுடன், தூண்களைத் தடவியவாறு சற்று நேரம் கண்களை மூடியபடி நின்று கொண்டிருந்தார்.
பிறகு வீடு முழுவதையும் பார்த்துவிட்டு, “அம்மா கையால இப்ப ஒரு காப்பி சாப்பிடனும் போல இருக்குடா” என்று உடைந்து போனார்.
சிறிது நேர ஆசுவாசத்துக்குப் பின் நெகிழ்ச்சியோடு, என் கையைப் பற்றியவர், “எப்டிடா?” என்றார், கண்களில் நீர் தளும்ப.
வீட்டைப் பார்க்க பார்க்க, என்னுள்ளும் மேலும் பல நினைவுகள் மேலெழ, அவர் பற்றிய என் கைகளை மேலும் இறுக்கினேன்.
1 comment
இலக்கம் 136- சிறுகதை அருமை.
அருமை. வீட்டின் விவரணை ரொம்பவும் விஸ்தாரமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே படித்து வந்தேன். கதையின் நிறைவுப் பகுதியில் அதற்கான காரணம் புரிந்தது. நெகிழ்ச்சியான சிறுகதை.