ஜப்பானிய சிறுவர் கதைகள் 9 – மொழியாக்கம்

சித்திரக்குள்ளன் மாயாவி (一寸法師)

முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்துவந்தனர். நீண்ட நாள்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்னும் ஏக்கத்தில் இருந்தனர். ஆலயத்துக்குச் சென்று தங்களுக்குக் குழந்தை வேண்டுமென வேண்டினர்.

“கடவுளே! எங்களுக்குக் குழந்தையைக் கொடு. எவ்வளவு சிறிய குழந்தையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. எங்களுக்குக் குழந்தை வேண்டும்” என வேண்டினர்.

அவர்களுடைய வேண்டுகோளின்படி குழந்தை பிறந்தது. ஆனால், அந்த ஆண் குழந்தை மிகவும் சிறியதாக இருந்தது. நம்முடைய சுட்டுவிரலின் உயரத்தில் மூன்றில் ஒருபங்குதான் அந்தக் குழந்தை இருந்தது. தாத்தாவும் பாட்டியும் பாட்டியும் அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்தனர். சத்தான உணவை சாப்பிடக் கொடுத்தனர். இருந்தாலும், அந்தக் குழந்தை பெரிதாக வளரவில்லை.

ஓர் அங்குல உயரத்துக்கு அது இருந்ததால் அதற்கு இஸ்ஸுன் போஷி எனப் பெயர் இட்டனர்.

ஜப்பானிய மொழியில் ‘இச்சி’ என்றால் ஒன்று. அது ஓர் அங்குலத்தைச் சொல்லும்போது ‘இஸ்’ எனச் சொல்லப்படும். ‘சென்’ என்பது ஏறக்குறைய அங்குலத்துக்கு இணையான அளவு. ஓர் அங்குலம் என்பது மெட்ரிக் அளவையில் இரண்டு புள்ளி ஐந்து நான்கு (2.54) செண்ட்டிமீட்டர்.

ஜப்பானிய மொழியில் போஷி என்றால் புத்தமதத் துறவியைக் குறிக்கும். மாயாஜாலக் கதைகளில் வருகின்ற மாயாவியையும் குறிக்கும்.

இஸ்ஸுன் போஷியின் பொருள் ‘ஓர் அங்குல மாயாவி’ என்பதாகும். நாம் அந்த ஆண் குழந்தையை ‘சித்திரக்குள்ளன்’ மாயாவி என்றே அழைக்கலாம்.

சித்தியக்குள்ளன் மாயாவி வீரனாகவும், அறிவில் சிறந்தவனாகவும் வளர்ந்தான். ஆனால், உயரத்தில் மட்டும் மாற்றம் இல்லை. வளர்ந்த பின் அவன் ஏதாவது சாதிக்க நினைத்தான். தன்னுடைய கிராமத்தை விட்டு வெளியே சென்று ஏதாவது வேலை செய்ய நினைத்தான். அதைத் தன் பெற்றோரிடம் சொன்னான். அவர்கள் அவனைப் பிரிவதற்கு வருத்தப்பட்டாலும், அவனும் எதையாவது சாதிக்கவேண்டும் என நினைத்து அவனுடைய பயணத்துக்கு ஒப்புக்கொண்டனர்.

அவனுக்குத் தையல் ஊசியால் ஒரு வாள் செய்தனர், வைக்கோல் எடுத்து அதில் வாள் உறை செய்தனர். வாளை உறையில் இட்டு அவன் தன் இடுப்பில் கட்டிக்கொண்டான். தாங்கள் உணவு உண்ணும் கோப்பையால் ஒரு படகு செய்தனர், உணவு உண்பதற்குப் பயன்படுத்தும் ‘ஹஷி’ என்னும் உணவுக்குச்சிகளால் துடுப்புகளைச் செய்தனர். அவற்றை எடுத்துக்கொண்டு இஸ்ஸுன் போஷி வெளியூருக்குப் புறப்பட்டான்.

அவனுடைய வழியில் ஒரு ஆறு இருந்தது. அவன், உணவுக் கோப்பைப் படகை ஆற்றில் விட்டான். அதில் ஏறி, உணவுக்குச்சித் துடுப்புகளால் படகைச் செலுத்தினான். ஆற்றிப் பயணம் செய்து ஒரு நகரத்தை அடைந்தான்.

நகரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்த இஸ்ஸுன் போஷி ஒரு பெரிய மாளிகையைக் கண்டான். அவனுக்கு அந்த மாளிகை மிகவும் பிடித்தது. அந்த மாளிகையின் வாசலில் நின்ற காவலாளியிடம் சென்று, “நான் கிராமத்திலிருந்து இங்கு வந்திருக்கிறேன். எதையாவது சாதிக்க வேண்டும். இங்கு வேலை கிடைக்குமா?” எனக் கேட்டான். அவன் மிகச்சிறியதாக இருந்ததால் அவன் பேசியது காவலாளிக்குக் கேட்கவில்லை. அவன் விடாமுயற்சியாக உரத்த குரலில் காவலாளியிடம் கேட்டுக்கொண்டே இருந்தான்.

கடைசியில் தன்னுடைய காலணியின் உயரமே இருந்த இஸ்ஸுன் போஷியைக் காவலாளி பார்த்துவிட்டார். அவனைக் கையில் எடுத்து அவனுடைய பேச்சைக் கேட்டார். அவன் விருப்பப்படியே அந்த மாளிகையின் செல்வந்தரைப் பார்க்க அனுமதி அளித்து, அவனை உள்ளே அனுப்பினார்.

அவனுடைய அறிவுடைய பேச்சால் அந்த மாளிகையின் செல்வந்தரைக் கவர்ந்தான். அந்தச் செல்வந்தர் ஒரு சிற்றரசர். அவர் அவனைத் தன் மாளிகையில் வேலைக்கு வைத்துக்கொண்டார். மாளிகையில் எல்லாருக்கும் அவனைப் பிடித்தது. சிற்றரசரின் மகள் இளவரசிக்கு அவனை மிகவும் பிடித்தது. அவளுடைய உதவியாளனாக அவன் இருந்தான்.

ஒரு நாள் இளவரசியும் இஸ்ஸுன் போஷியும் கியோமிசு ஆலயத்துக்குச் சென்றனர். வழியில் இரண்டு அரக்கர்கள் அவர்களை மறித்தனர். இஸ்ஸுன் போஷி தன்னுடைய ஊசி வாளை எடுத்து அந்த அரக்கர்களைக் தாக்கத் தொடங்கினான். ஆனால், ஒரு அரக்கன் மிகவும் எளிதாக அவனைக் கையில் எடுத்து வாயில் போட்டு விழுங்கினான். அரக்கனின் வயிற்றுக்குள் விழுந்த போஷி விடாமல் போராடினான். ஊசி வாளால் அரக்கனின் வயிற்றின் உள்ளே குத்திக்கொண்டே இருந்தான்.

வலி தாங்கமுடியாமல் அரக்கன் போஷியை வெளியே துப்பினான். உடனே போஷி இன்னொரு அரக்கனின் புருவத்தில் ஏறி அதிலிருந்து அரக்கனின் கண்களைக் குத்தினான். கண்களில் காயப்பட்ட அரக்கன் தப்பினால் போதும் என ஓடினான். வயிற்றுக்கு உள்ளே காயப்பட்ட அரக்கனும் தப்பினால் போதும் என ஓடினான். இருவரும் ஓடும்போது தங்களிடம் இருந்த மாயச் சுத்தியல் ஒன்றைக் கீழேபோட்டுவிட்டு ஓடினர்.

மாயச் சுத்தியலைக் கையில் எடுத்த இளவரசி இஸ்ஸுன் போஷியைப் பார்த்து, “இஸ்ஸுன் போஷி, இது ஒரு மாயச் சுத்தியல். இதனால் உன் தலையில் தட்டினால் நீ நினைப்பது நடக்கும். உனக்குத் தேவையான செல்வம், உணவு எல்லாமும் கிடைக்கும். உனக்கு என்ன வேண்டும் கேள்.” என்றாள்.

அதற்கு அவன், “எனக்கு செல்வம் உணவு எதுவும் வேண்டாம். நானும் இப்படி ஓர் அங்குல உயரத்தில் இல்லாமல் உங்களைப் போன்ற மனிதனாக மாறினால் போதும்.” என்றான்.

இளவரசி, “அப்படியே ஆகட்டும்” என மாயச் சுத்தியலால் அவன் தலையில் தட்டினாள்.

அவன் உடனே அளவில் எல்லா மனிதர்களைப் போலவும் உருவம் மாறினான்.

சிற்றரசர் இளவரசியை இஸ்ஸுன் போஷிக்குத் திருமணம் செய்துகொடுத்தார். அவர்கள் இருவரும் கிராமத்துக்குச் சென்று அவனுடைய பெற்றோரைச் சந்தித்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 7 – மொழியாக்கம்

Author

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்