ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்

This entry is part 12 of 12 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵)

முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே இருந்தது. அப்போது வெளியில் அதிகமான பனிப்பொழிவு இருந்ததால் கிழவரால் வெளியே சென்று வைக்கோல்களைக் கொண்டு வந்து கூடை முடைய இயலவில்லை. இருக்கின்ற அரிசியை வைத்து அவர்கள் சோறு சமைத்துச் சாப்பிட நினைத்தனர்.

அப்போது அவர்கள் வீட்டிலிருந்த எலி வளையில் இருந்து ஒரு குட்டி எலி வெளியே ஓடி வந்து, “எனக்குப் பசிக்கிறது, சாப்பாடு வேண்டும்” என அழுதது. அதனைப் பிடிக்க வளையிலிருந்து வெளியே வந்த அப்பா எலியும் அம்மா எலியும், “இது ஏழையின் வீடு. இவர்களிடமும் சாப்பிட எதுவும் இல்லை. கொஞ்சம் பசியைப் பொறுத்துக்கொள்.” என்றன.

இதைக்கேட்ட கிழவரும் கிழவியும் மிகவும் வருத்தப்பட்டனர். ஒரு குட்டி எலிக்குக்கூட தங்களிடம் உணவு மீதமாகாதே என வருந்தினர். அதனால், தங்களிடம் இருந்த குறைவான அரிசியில் சோறு சமைத்து, அதிலும் குட்டி எலிக்குக் கொஞ்சம் கொடுத்தனர். குட்டி எலி தைச் சாப்பிட்டுப் பசியாறியது.

அடுத்த நாள் காலையில் எலிகள் மூன்றும் காட்டுக்கு உள்ளே சென்றன. பனிப்பொழிவு இல்லாத இடங்களைத் தேடி அங்கிருந்து நிறைய வைக்கோல்களை இழுத்து வந்து வீட்டில் நிறைத்தன. கிழவரும் கிழவியும் வியப்பாகப் பார்த்தனர்.

“நேற்று இரவு நீங்கள் குட்டி எலிக்கு உணவு தந்ததற்கு இது நன்றிக்கடன்” என அப்பா எலியும் அம்மா எலியும் அவர்களிடம் கூறின. அவர்களும் எலிகளுக்கு நன்றி கூறினர்.

அவர்கள் அந்த வைக்கோலினால் அழகிய நான்கு வைக்கோல் தொப்பிகளைச் செய்தனர். அந்தப் பனிப்பொழிவிலும் தொப்பிகளை விற்பதற்காகக் கிழவர் சந்தைக்குச் சென்றார். தொப்பிகளை விற்றுக் கிடைக்கும் பணத்தால் புத்தாண்டுக்கு நல்ல உணவுகள் வாங்கலாம், நிறைய அரிசி வாங்கலாம் என அவர் நினைத்தார்.

சந்தைக்குச் செல்லும் வழியில் அவர் போதியின் சிலைகளைக் கண்டார். ஐந்து சிலைகள் வரிசையாக இருந்தன. பனிப்பொழிவு இருந்ததால் சிலைகளின் தலையில் பனி நிறைந்து காணப்பட்டது.

“அடடா, போதியே! உன் தலையில் பனி நிறைந்துவிட்டதே” எனச் சிலைகளுடன் பேசிக்கொண்டே பனியைத் தள்ளிவிட்டார். சிலைகளின் தலையைத் துடைத்தார். பிறகு, நான்கு தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றார்.

சந்தை பரபரப்பாக இருந்தாலும் கிழவரின் தொப்பிகளை யாரும் வாங்கவில்லை. கிழவரும் “தொப்பி வாங்கலியோ தொப்பி! அழகான வைக்கோல் தொப்பி!” எனக்கூவிக்கூவி மக்களை அழைத்தார். அப்படியும் யாரும் தொப்பிகளை வாங்கவில்லை. மாலையில் சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியது. சந்தையில் கூட்டம் குறைந்தது, மெதுவாகச் சந்தை காலியானது. அவர் வருத்தத்துடன் நான்கு தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.

திரும்பும் வழியில் போதி சிலைகளைப் பார்த்தார். அவற்றுடன் வருத்தமாகப் பேசினார்.

“போதி, பார்த்தீர்களா? யாரும் தொப்பிகளை வாங்கவில்லை. தொப்பி விற்றுக் கிடைக்கும் காசில் உங்களுக்கும் கொழுக்கட்டை வாங்க நினைத்தேன், முடியவில்லை” என்றார்.

மீண்டும் பனி விழுந்திருந்த சிலையின் தலையைத் துடைத்தார்.

“உங்களுக்குப் படைக்க என்னிடம் உணவு இல்லை. ஆனால், உங்கள் தலையில் பனி விழாமல் இருக்க இந்தத் தொப்பிகளை உங்களுக்கு அணிவிக்கிறேன்.” என்று சொன்னார். ஒவ்வொரு சிலைக்கும் ஒரு தொப்பியை அணிவித்தார். சிலைகள் ஐந்து, அவரிடம் இருந்த தொப்பிகள் நான்கு, அதனால் ஒரு சிலைக்குத் தொப்பி இல்லை. கிழவர் வருத்தப்பட்டார். அந்த ஒரு சிலைக்குத் தான் அணிந்திருந்த துண்டை எடுத்துப் போர்த்தினார். தொப்பிகளும் துண்டும் இல்லாமல் வீடு திரும்பினார்.

தூரத்தில் கிழவர் வெறும் கையுடன் வருவதைப் பார்த்த கிழவியும் யோசித்தார். கிழவர் தொப்பிகளை விற்றுக் காசு கொண்டுவருகிறார் என நினைத்தார். கிழவர் வீட்டுக்கு வந்து தொப்பிகளை யாரும் வாங்காத நிலையையும், போதி சிலைக்குத் தொப்பிகளை அணிவித்த தன்மையையும் சொன்னார்.

“அதை விடுங்கள். மீதியான காய்கறிகளை நான் காடியில் ஊறவைத்திருக்கிறேன். அவற்றைத் தின்று நாம் பசியாறலாம்.” என்றார். கிழவரும் கிழவியும் எலிகளும் காடியில் ஊறவைத்திருந்த காய்கறிகளைத் தின்று பசியாறி உறங்கினர்.

திடீரென்று இரவில், “வாருங்கள் வருங்கள்.. உங்களுக்குப் புத்தாண்டுப் பரிசு” என்று வாசலில் குரல் கேட்டது. கிழவரும் கிழவியும் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தனர். அப்படிச் சத்தம் போட்டு அழைத்தவை போதி சிலைகள்.

“தொப்பி செய்பவரே! நீங்கள் உங்கள் தொப்பிகளை எங்களுக்கு அணிவித்தீர்கள். அதற்காக நாங்கள் தரும் புத்தாண்டுப் பரிசு இது” எனச் சொல்லிவிட்டு போதி சிலைகள் தங்கள் பழைய இடத்துக்குச் சென்று நின்றுகொண்டன. அவர்கள் இருவரும் பரிசுப் பெட்டிக்கு உள்ளே பார்த்தனர். அதற்கு உள்ளே அரிசிக்கொழுக்கட்டை, மிசோ என்னும் களி, இன்னும் வகைவகையான பலகாரங்கள் இருந்தன.

அனைத்தையும் அவர் தன் வீட்டுக்குள் அடுக்கினார். இப்போது அவரிடம் உணவு இருப்பதால் மறக்காமல் போதி சிலைகளுக்கு உணவு படைத்தார். எலிகளையும் சாப்பிட அழைத்தார். தன்னுடைய நண்பர்களையும் வீட்டுக்கு சாப்பிட அழைத்தார்.

அவர்கள் அனைவரும் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால், நமக்கும் நல்லதே நடக்கும்.

Series Navigation<< ஜப்பானியச் சிறுவர் கதைகள் 12 – மொழியாக்கம்

Authors

Related posts

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6

வெள்ளை நாய்

எனக்கான ஒரு நாள்