ஜப்பானிய சிறுவர் கதைகள் 8 – மொழியாக்கம்

அதிசயப் பாத்திரம் (文福茶釜)

முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஜின்பே என்னும் மனிதர் வசித்தார். தெருத்தெருவாகச் சென்று பழைய ஓட்டை உடைசல் பொருள்களை வாங்கி விற்பது அவருடைய தொழில். ஒரு நாள் பழைய பொருள்களை வாங்குவதற்காக ஜின்பே தெருவில் நடந்தபோது, சில சிறுவர்கள் ஒரு பெண்குழந்தையைக் கேலி செய்வதைப் பார்த்தார். உடனே வேகமாக அந்தச் சிறுவர்களிடம் சென்று பெண்குழந்தையைக் கேலி செய்யக்கூடாது எனக் கண்டித்தார். அவருடைய கோபத்தைப் பார்த்து சிறுவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.

சிறுவர்கள் ஓடிய பின் ஜின்பே, அந்தப் பெண்குழந்தை எங்கே? எனத் தேடினார், கிடைக்கவில்லை. குழந்தையும் எங்காவது ஓடியிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு வழக்கம்போலத் தன் தொழிலைக் கவனித்தார்.

அவர் செல்லும் வழியில் ஒரு புத்தர் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் ஒரு புத்த பிக்கு இருந்தார். புத்த பிக்கு என்றால் புத்தரின் வழி நடக்கும் துறவி. புத்த பிக்குவுக்கு ஒரு தேநீர்ப் பாத்திரம் தேவைப்பட்டது. அவர், அந்த வழியாகச் சென்ற ஜின்பேயை அழைத்தார்.

“ஜின்பே, உன்னிடம் ஏதாவது பழைய தேநீர்ப் பாத்திரம், நல்லதாக இருக்குமா? இருந்தால் எனக்குக் கொடு, நான் வாங்கிக்கொள்கிறேன்” என்றார்.

“அப்படியே செய்கிறேன் புத்த பிக்குவே. வீட்டுக்குச் சென்று பழைய பொருள்களில் தேநீர்ப் பாத்திரம் கிடைத்தால் எடுத்து வருவேன்” என்றார்.

ஜின்பே பழைய பொருள்களை வாங்கி விற்பவர் என்பதால் அவருடைய வீட்டில் நிறையப் பழைய பொருள்கள் அங்கும் இங்கும் கிடந்தன. அவற்றில் தேநீர்ப் பாத்திரம் கிடைக்கிறதா? என அவர் தேடினார். வீட்டின் மூலையில் ஒரு பழைய தேநீர்ப் பாத்திரம் கிடந்தது. அதை எடுத்துக் கழுவித் துடைத்து புத்த பிக்குவிடம் கொடுக்க நினைத்தார். தேநீர்ப் பாத்திரத்தைத் தூக்கினார். அவரால் அதைத் தூக்க முடியவில்லை, மிகவும் கனமாக இருந்தது. தன் பலத்தையெல்லாம் திரட்டித் தூக்கினார், அப்போதும் முடியவில்லை.

“ஜின்பே நான்தான்” எனத் தேநீர்ப் பாத்திரம் பேசியது.

தேநீர்ப் பாத்திரம் பேசியது அவருக்கு வியப்பாக இருந்தது. விலகி நின்று அதைப் பார்த்தார். அப்போது தேநீர்ப் பாத்திரம் ராக்கூன் என்னும் அணில் கரடியாக மாறியது.

“என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டது.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அணில் கரடியாக மாறிய தேநீர்ப் பாத்திரத்திடம், “நீ யார் என்று எனக்குத் தெரியவில்லை.” என்றார்.

அதற்கு அது, “நான்தான் அங்கே தெருவில் சிறுமியாக வந்தேன். என்னைச் சிறுவர்கள் கேலி செய்த போது அவர்களை நீங்கள் விரட்டினீர்களே.” என்றது.

“அப்படியா? சிறுமி, தேநீர்ப் பாத்திரம், அணில் கரடி எல்லாம் நீதானா?” என்றார்.

“ஆமாம்” எனப் பதில் சொன்ன அணில் கரடி, தேநீர்ப் பாத்திரமாக மாறிக்கொண்டது.

அதை அவர் புத்தர் கோயிலுக்கு எடுத்துச் சென்று புத்த பிக்குவிடம் கொடுத்தார். பிக்கு, தேநீர்ப் பாத்திரத்துக்கு விலையாகப் பணம் தந்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜின்பே மகிழ்ச்சியாகத் தன் வீட்டுக்கு வந்தார்.

பாத்திரத்தைப் பெற்றுக்கொண்ட புத்த பிக்கு அடுப்பை மூட்டினார். தேநீர் தயாரிப்பதற்காகப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது வைத்தார். தேநீர்ப் பாத்திரமாக மாறி இருந்த அணில் கரடியால் அடுப்பின் சூட்டைத் தாங்கமுடியவில்லை. ‘ஆ ஊ சூ சூ’ எனக் கத்திக்கொண்டே அணில் கரடியாக மாறி அடுப்பிலிருந்து வெளியே குதித்துத் தப்பித்துத் தீக்காயங்களுடன் ஓடியது. ஜின்பே தன்னை ஏமாற்றிவிட்டதாக புத்த பிக்கு நினைத்தார்.

தீக்காயங்களுடன் ஓடிய அணில் கரடி ஜின்பேயின் வீட்டுக்குச் சென்றது. “என்னால் அடுப்புச் சூட்டைத் தாங்கமுடியவில்லை” என்றது. அதன் மீது இரக்கப்பட்ட அவர், அதன் காயங்களுக்கு மருந்து இட்டார். உடம்பு சரியாகும் வரையில் தன் வீட்டில் படுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார்.

புத்தர் கோயிலுக்குச் சென்று புத்த பிக்குவைச் சந்தித்து பணத்தைத் திருப்பித் தந்தார்.

தேநீர்ப் பாத்திரமாக மாறிய அணில் கரடி அப்படியே இருக்கும் என நினைத்த ஜின்பேயின் மீதும் தவறு இல்லை. தன்னை அடுப்பில் வைத்து சூடாக்குவார்கள் என அணில் கரடி நினைக்கவில்லை. அதன் மீதும் தவறு இல்லை. தேநீர்ப் பாத்திரத்தைப் பெற்றுக்கொண்ட புத்த பிக்குவின் மீதும் தவறு இல்லை.

வீட்டுக்கு வந்த ஜின்பே, அணில் கரடியின் உடம்பு குணமாகும் வரையில் அதற்கு உதவி செய்தார். முன்பு தன்னைச் சிறுவர்களிடம் இருந்து காப்பாற்றியதற்கு உதவி செய்யாமல், புத்த பிக்குவிடம் கெட்ட பெயர் வாங்கித் தந்ததற்கு மன்னிப்புக் கேட்டது. இப்போதும் தனக்கு உதவி செய்த அவருக்குத் தானும் உதவவேண்டும் என அது நினைத்தது.

தனக்கு வேடிக்கை காட்டத் தெரியும் என்று அவரிடம் சொன்னது. மக்களிடம் வேடிக்கை காட்டினால் மக்கள் பணம் தருவார்கள் அதை வைத்து அவர் நிம்மதியாக வாழலாம் என்று சொன்னது. ஜின்பேவுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அணில் கரடி கயிற்றின் மீது நடக்கும் வேடிக்கையைக் காட்டியது. ஜின்பே கீழே இருந்து தாளம் தட்டியும் புல்லாங்குழல் வாசித்தும் உற்சாகப்படுத்தினார். ஜின்பேவும், அணில் கரடியும் சேர்ந்து செய்த இந்த வேடிக்கை விளையாட்டைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர், பணம் கொடுத்தனர்.

ஜின்பேவும் அணில் கரடியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 7 – மொழியாக்கம்

Author

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்