கொக்கின் நன்றி (鶴の恩返し)
ஜப்பானிய மொழியில் ட்சுரு என்றால் கொக்கு.
முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரக்க குணம் உள்ளவன். ஒருநாள் அவன் வேலை செய்துவிட்டுக் களைப்பாக வீட்டுக்குத் திரும்பினான். வரும் வழியில் ஒரு கொக்கு அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தான். அந்தக் கொக்கின் சிறகில் ஓர் அம்பு குத்தியிருந்தது. அடிபட்டுக் கிடந்த கொக்கை அவன் தன் வீட்டுக்குத் தூக்கிச் சென்றான்.
கொக்கின் சிறகிலிருந்து அம்பை எடுத்துவிட்டு, அதற்கு மருந்து வைத்துக் கட்டினான். கொக்கிற்கு சாப்பிடக் கொடுத்தான். காயம் ஆறும் வரையில் கொக்கு அவன் வீட்டில் இருந்தது. காயம் ஆறிய பின்னர் கொக்கு பறந்து போனது.
அதன் பின்னர், ஒருநாள் இந்த இளைஞன் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். அப்போது அவன் வீட்டு வாசலில் ஓர் அழகிய பெண் அமர்ந்திருந்தாள்.
“பெண்ணே, நீ யார்?” என இளைஞன் கேட்டான்.
“நீ நல்லவன், அதனால் நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வந்திருக்கிறேன்.” என அந்தப் பெண் சொன்னாள்.
“நான் ஏழை. என்னைத் திருமணம் செய்துகொண்டால் உனக்கு சாப்பாடுகூட சரியாகக் கிடைக்காது. என்னிடம் அரிசி இல்லை.” என்றான்.
அதற்கு அந்தப் பெண்,
“பரவாயில்லை. நான் ஒரு பையில் அரிசி கொண்டுவந்தேன். அதை வைத்துச் சமைத்துச் சாப்பிடலாம்” என்றாள்.
அதன்படியே அவர்கள் அந்தப் பையிலிருந்து அரிசியை எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டனர். தினமும் அந்தப் பையிலிருந்து அந்தப் பெண் அரிசியை எடுத்துச் சமைத்தாள். அவள் எடுக்க எடுக்க அந்தப் பையிலிருந்து அரிசி குறையவே இல்லை. எவ்வளவு எடுத்தாலும் குறையாத மந்திரப்பை அது. அவனுக்கும் அது ஆச்சரியமாக இருந்தது.
மந்திரப்பையிலிருந்து குறையாமல் கிடைத்த அரிசியால் அவர்கள் கவலை இல்லாமல் வாழ்ந்தனர்.
இளைஞன் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டான். தன்னுடைய ஆசையைத் தன் மனைவியிடம் சொன்னான்.
அதற்கு அந்தப் பெண்,
“ஓ.. தாராளமாகச் சம்பாதிக்கலாம். எனக்குத் துணி நெய்யத் தெரியும். நீ நம் வீட்டில் ஓர் அறையில் தறி வைத்துக்கொடு. நான் துணி நெய்து தருகிறேன். நீ நகர்ப்புறத்துக்குச் சென்று அதை விற்று வா.” என்றாள்.
அவன் அவளுக்காக ஒரு தறியை வீட்டில் அமைத்துத் தந்தான்.
அவள் ஒரு கட்டளை இட்டாள்.
“நான் தறி இருக்கும் அறைக்குச் சென்று பூட்டிக்கொள்வேன். ஒரு வாரம் அறையைத் திறக்கக்கூடாது. திறந்தால் ஆபத்து.” என்றாள்.
அவனும் சம்மதித்தான்.
அவள் தறி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள். வாரம் முழுக்க அறைக்குள் இருந்தாள். அவனும் வாக்குக் கொடுத்தபடி அறையைத் திறக்கவில்லை.
ஒரு வாரம் முடிந்த பின் அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவளுடைய கையில் மிகவும் மெல்லிய அழகான துணி இருந்தது. அதைப்போன்ற மெல்லிய துணியை அவன் அதுவரையில் பார்த்ததே இல்லை. அவ்வளவு அழகிய துணியையும் பார்த்ததில்லை. அவன் ஆச்சரியப்பட்டான்.
அந்தப் பெண் உடல் மெலிந்து மிகவும் சோர்வாக இருந்தாள். அவன் அவளை ஓய்வெடுக்கச் சொன்னான். அவள் நெய்து தந்த துணியை எடுத்துக்கொண்டு நகர்ப்புறத்துக்கு விற்கச் சென்றான். அந்தத் துணி நகர்ப்புறத்திலும் யாரும் அதுவரை காணாததாக இருந்தது. அழகிய அந்தத் துணியை அதிக விலைக்கு விற்றான். அவனுக்கு நிறையப் பொருள் கிடைத்தது.
ஒரு வாரம் ஓய்வெடுத்து உடல்நிலை தேறியதும் அந்தப் பெண் மீண்டும் தறி அறைக்குள் சென்றாள். ஒரு வாரம் கழித்து அறையிலிருந்து வெளியே வரும்போது இன்னொரு துணியை நெய்து எடுத்து வந்தாள். அதுவும் மிக அழகாக இருந்தது. பெண் முன்பு சோர்வடைந்து மெலிந்ததைப் போலவே இப்போதும் இருந்தாள். அவனும் அவளை ஓய்வெடுக்கச் சொன்னான்.
துணியை எடுத்துக்கொண்டு நகர்ப்புறத்துக்கு விற்கச் சென்றான். அதுவும் அதிக விலைக்கு விற்பனையானது.
“இவ்வளவு அழகான மெல்லிய துணியை யார் நெய்கிறார்?” என்று மக்கள் கேட்டனர்.
“என் மனைவி நெய்கிறார்” என அவன் பதில் சொன்னான்.
“எப்படி இத்தனை அழகாக நெய்கிறார்” என மக்கள் பாராட்டினர்.
மக்கள் அப்படிக் கேட்டதால், அவனுக்கும் அவள் எப்படி துணி நெய்கிறாள் எனப் பார்க்க ஆசை வந்தது. ஆனாலும், கதவைத் திறக்கக்கூடாது என்று அவள் கட்டளை இட்டிருப்பதால் அவன் அறைக்குள் சென்று பார்க்க விரும்பவில்லை.
இப்படியாக அவர்கள் துணி நெய்து விற்று பணம் சேர்த்தனர்.
திடீரென ஒரு நாள் அவனுக்கு அவள் துணி நெய்வதைப் பார்க்கும் ஆசை அதிகமானது. அவள் உடல்நிலை சரியாகி மீண்டும் தறி அறைக்குள் செல்லக் காத்திருந்தான். தறி அறைக்குள் அவள் சென்று ஒன்றிரண்டு நாள்கள் ஆனதும் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைத் திகைக்க வைத்தது.
தறி அறைக்கு உள்ளே அந்தப் பெண் கொக்காக மாறியிருந்தாள். முன்பு ஒருமுறை அவன் அடிபட்ட கொக்கைக் காப்பாற்றினானே அந்தக் கொக்குதான் அவள். கொக்காக மாறிய பின்னர், தன் சிறகிலிருந்து இறகுகளை எடுத்து மென்மையான அந்தச் சிறகுகளால் அவள் துணி நெய்தாள். அதனால்தான் அவை அத்தனை மெல்லியதாகவும் அழகாகவும் இருந்தன.
கொக்காக மாறிச் சிறகுகளை எடுத்துத் தான் துணி நெய்வதை ரகசியமாக வைத்திருந்தாள். ஆனால், இப்போது அவன் அதைப் பார்த்துவிட்டான். துணி நெய்வதில் கவனமாக இருந்த அவள் அவன் உள்ளே வந்ததைப் பார்க்கவில்லை. அவள் தன் வேலையில் கவனமாக இருந்தாள். அவளைக் கொக்காகப் பார்த்த ஆச்சரியத்தில் அவன் “ஆ” எனச் சத்தமிட்டான். அவனுடைய சத்தத்தைக் கேட்டு அவள் கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
தன்னுடைய கட்டளையை மீறி அறைக்குள் வந்து ரகசியத்தை அறிந்துகொண்டது அவளுக்குப் பிடிக்கவில்லை
“நான் வரக்கூடாது என்று சொல்லியும் நீ உள்ளே வந்து பார்த்ததால், இனி உனக்கு உதவி செய்யமாட்டேன். என் நன்றிக்கடன் முடிந்தது. இதுவரை சம்பாதித்ததை வைத்து நீ வாழ்ந்துகொள்” எனச் சொல்லிவிட்டுக் கொக்காகவே வானத்தில் பறந்துபோனாள்.