நகுல்வசன்: வெளிப்படை என்றாலும் இதை முதலில் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது என்று தோன்றியதால் இந்தக் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த, அவ்வுலகத்துக்குக் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய கணிசமான நவீனத் தமிழ்ப் படைப்புகள் இருக்கின்றனவா?
நட்பாஸ்: மேற்கில், குறிப்பாக உலகத்தரம் என்று சொல்லப்படுவதைப் பெருமளவு மீடியேட் செய்யும் அமெரிக்காவில் இப்போது கலை- பதிப்புத்துறை உட்பட- நிதிக் கட்டுப்பாடுகளுக்கு முழுமையாகவே உட்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக் கழகங்கள் நிறைய மொழியாக்கம் செய்கின்றன. ஆனால் அவை நிதி சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு அடிபணிந்து தம் சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கின்றன.
இச்சூழலில் இவர்களால் பெறப்படும் அங்கீகாரத்தின் மதிப்பு என்ன என்ற கேள்வியைத் தவிர்க்க முடியுமா? உலகத்தரம் என்று நாம் எதைச் சொல்கிறோம், அது எவ்வாறு உலகத்தரமாகிறது? என்பது போன்ற கேள்விகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என் பார்வையில், யாரை வேண்டுமானாலும் மொழியாக்கம் செய்யலாம். அப்படி ஆங்கில மொழியாக்கம் செய்து அங்கு பெறப்படும் அங்கீகாரம் உலகத்தரத்தின் சான்று என்று தோன்றவில்லை. இன்னும் சொன்னால், மொழியாக்கத்துக்கு அப்புறம் கிடைக்கும் இத்தகைய புகழைவிட உலகின் தலைசிறந்த நூல்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றை வாசிக்கும் ஒருவர் தமிழை விட்டு வெளியே போகாத நூல் ஒன்றை உலகத்தரம் வாய்ந்தது என்று சொல்வதை நல்ல அங்கீகாரமாக எடுத்துக் கொள்வேன்.
இன்று பொது பப்ளிக் என்பது இல்லாமல் போய் விட்டபின் விமர்சகன் யாரை நோக்கிப் பேசுகிறான்? இன்றைய நிலையில் இது போன்ற அடையாளங்களுக்கு ஒரு அர்த்தமும் இல்லை.
நகுல்வசன்: அப்படியெல்லாம் குழந்தையையும், குளிப்பாட்டிய நீரையும் ஒரேயடியாகத் தூக்கியெறிந்து விட முடியாது என்று தோன்றுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்கள், கம்ப ராமாயணம், பக்தி இலக்கியம் இவை எல்லாம் உலகத்தரம் வாய்ந்தவை என்று கூறினால் அதை நீங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நம்முடன் பேசி நம்மை அவை பரவசப்படுத்துகின்றன என்பதால். நம்முடைய பிரச்சனை, நம்முடைய நவீனப் படைப்புகள் உலகப் படைப்புகளுடனும் நம் மரபின் மாபெரும் படைப்புகளின் பின்புலத்துடனும் ஒப்புமை செய்யப்பட்டு அவற்றின் தரம் நிறுவப்படவில்லை என்பதே. மேற்கில் இது சர்வ நிச்சயமாக நடந்திருக்கிறது. அப்படி ஒரு விமர்சனச் சூழல் நம்மிடம் உருவாகும் போது, அவ்விமர்சனம் தேர்ந்தெடுக்கும் பட்டியலும் “உலகத்தரம்” வாய்ந்ததாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. அப்பட்டியல் மொழிபெயர்க்கப் படுகையில், அதில் இடம்பெறும் படைப்புகளை மற்றைய மொழி விமர்சகர்களும் விமர்சிக்கையில் நம் படைப்புகளின் திறமும் நம் விமர்சனத்தின் திறமும் கண்கூடாகவே வெளிப்படும். எதை வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இங்கு வளம், நேரம் போன்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டிய கட்டாயமும் நமக்கிருப்பதால்தான், தரம் என்ற அடிப்படையையும் சேர்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
நட்பாஸ்: ஷேக்ஸ்பியரைத் தமிழாக்கம் செய்ய முடியாது, பாரதியை ஆங்கில மொழியாக்கம் செய்ய முடியாது. உலகத் தரம் வாய்ந்த எழுத்தில் இப்படி ஒரு சிக்கல் இருப்பதையும் பார்க்க வேண்டும். உலகத்தரம் என்பது உலகத்தவர் எல்லாரும் உணர்ந்து கொள்ளக்கூடிய வடிவ, உள்ளடக்கச் செம்மை என்றால் மொழியாக்கத்தில் அது சாத்தியமில்லை. அது மனித அகத்தின் உண்மையைப் பேசுகிறது என்றால் அப்படிப் பேசப்படும் உண்மை, வடிவம் மற்றும் உள்ளடக்கத்திலிருந்து பிரிக்க முடியாததாகவும் மொழியாக்கத்தில் கொணர முடியாததாகவும் இருக்கிறது. இல்லை, உலகத்தரம் என்பது தன் காலத்தை வெளிப்படுத்தி அதனோடு உரையாடும் விமரிசனம் என்று சொன்னால் உலகத்தவர் எல்லாரும் ஏககாலத்தில் இல்லை, ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு சவால்களின் எதிர் நிற்கின்றன (மானுடத்தின் தற்கால வரலாற்றுச் சவால் ஒன்றுதான் என்றாலும்).
பாரதி, ஷேக்ஸ்பியர் இருவரின் எழுத்திலும் இம்மூன்று இயல்புகளும் உண்டு என்பதால்தான் நாம் இவர்களை உலகத்தரம் என்று ஏற்றுக் கொள்கிறோம். மொழியாக்கம் என்பது மிக நெருக்கமான வாசிப்பு என்பதற்கப்பால் அது உலகத்தரத்தை நிறுவுவதாகவோ, அதற்கு ஒரு சான்றாகவோ இருப்பதில்லை. மூல மொழியின் விமரிசனச் சூழல் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதே உலகத்தரத்தை அம்மொழியினர் உள்ளத்தில் நிர்ணயிக்கிறது. இங்கு நாம் வால்மீகி, ஹோமர் போன்ற சரித்திர நாயகர்களை விட்டு விடலாம். அவர்கள் எழுத்தை உலகத்தரம் என்று சொல்வதைவிட அவர்கள் எழுத்தே ஒரு உலகை உருவாக்கியிருக்கிறது, அதன் தரத்தை நிர்ணயித்திருக்கிறது.
சமகாலத் தமிழைப் பொறுத்தவரை யாரை எல்லாம் மொழிபெயர்க்க வேண்டும், யார் எழுத்து உலக அளவில் அப்பீல் ஆகும்? என்ற கேள்வி ஊக்கம் கொண்டு மேலோங்கி எழும் சமூகக் கனவின் வெளிப்பாடு.. ஆனால், உலக அளவில் நிலவும் இன்றைய அரசியல் சூழல், அறிவுச் சூழல் இதுவெல்லாம் கசப்பாக இருக்கிறது. இன்றைய ஷேக்ஸ்பியர், பாரதி போன்றவர்களுக்கு இங்கு இடமில்லை. இவ்வுலகின் ஏற்பு ஒரு வீழ்ச்சியை உறுதி செய்வது.
நகுல்வசன்: மிகவுமே சினிக்கலாகி விட்டீர்களோ? என்று தோன்றுகிறது. உலகத்தரம் என்பது மொழிபெயர்ப்பைச் சார்ந்தது அல்ல. ஆங்கிலம் ஒரு உபயோகமான கருவி அவ்வளவுதான். ஆங்கிலத்தில் ஓரளவுக்கு நமக்குப் பரிச்சயம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டே நாம் எலியட்டை ஒரு மிகப் பெரிய கலைஞன் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதே ஆங்கிலத்தில் நமக்குக் கிடைக்கும் மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு ஒரு டால்ஸ்டாயையோ ஒரு கார்சிய மார்கெஸ்சையோ முக்கியமான கலைஞன் என்று அடையாளம் காண முடியும். மொழிபெயர்ப்பு வழியாகத்தான் நாம் உலகத்தைச் சென்றடைய முடியும் என்பதே நிதர்சனம், செய்ய முடியாது என்பதெல்லாம் ஒரு சப்பைக் கட்டே, அதற்கான பிரயத்தனங்கள இன்னமும் மேற்கொள்ளப்பட வில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனானப்பட்ட ஃபினிகன்ஸ் வேக்கையே பதினாறு முறை பதின்மூன்று மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நாம் எதற்கெடுத்தாலும் ஏன் முடியாது என்றே ஆரம்பிக்கிறோம்? சற்று நம்பிக்கையுடன் செய்து பார்க்கலாம் என்று ஆரம்பிப்போமே. முடியும் என்று வைத்துக் கொண்டால் பாரதியைக் கண்டிப்பாக மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறுவீர்கள் என்று நம்புகிறேன். அப்படியென்றால் பாரதியைப் போல் யாரெல்லாம் என்பதே கேள்வி. உள்ளடக்கத்தில் எப்படி உண்மை உருவத்தால் கைப்பற்றப் பட்டிருக்கிறது என்பதே இலக்கியத்தின் வெகுமதியை நிர்ணயிக்கிறது. அதை மொழிபெயர்ப்பில் கடத்துவதே மொழிபெயர்ப்பின் சவால். ஆனால் இது அதிகப்படியான உழைப்பைக் கோருகிறது. எனவேதான் இவ்வுழைப்பை எப்படைப்புகளில் நாம் செலவழிக்க வேண்டும் என்ற கவனமும் தேவைப்படுகிறது. அவை ஏன் இவ்வளவு காலமாக உலகுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை?
நட்பாஸ்: எனது புரிதல் தவறாக இருக்கலாம். மொழியாக்கங்கள் மேற்கில் இரு வழியே வெளியாகின்றன- வர்த்தகப் பதிப்பகங்கள், பல்கலைக்கழகங்கள். இவ்விரண்டு இடங்களுக்கும் சென்று சேர சரியான வலைப்பின்னல்கள் உருவாகவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். விற்பனை, விருதுகளால் கிடைக்கும் கௌரவம் பதிப்பகத் தேர்வுகளுக்குக் காரணமாக இருக்கலாம். இந்த நோக்கங்கள் இல்லாத பல்கலைக்கழகப் பதிப்பகங்கள் ஏன் நவீனத் தமிழ் மொழியாக்கங்களை வெளியிடுவதில்லை என்று புரியவில்லை. ஒரு வேளை அங்குள்ள பேராசிரியர்களை அல்லது பதிப்பாசிரியர்களை நவீனத் தமிழ் இலக்கியம் ஈர்க்கவில்லை என்பதோ, நவீனத் தமிழ் இலக்கிய விமரிசனங்கள் அவர்கள் கவனத்தைக் கவரவில்லை என்பதோ காரணமாக இருக்கலாம். இது துறை வல்லுநர்களுக்குரிய கேள்வி.
ஒரு பதிவராக நான் வேறு கேள்வி கேட்கிறேன். இந்தியாவின் பிற மாநிலங்கள் உட்பட உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஏன் தாம் வாழும் பகுதியில் உள்ள மொழியில் எழுதுவதில்லை? அம்மொழியைக் கற்று அவற்றைத் தமிழாக்கம் செய்வதில்லை? அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம், தம் அயலக வாழ்வின் நேரடி அனுபவங்களைத் தமிழ் புனைவில் பதிவு செய்வதில்லை? முப்பது ஆண்டுகளாக வேறொரு தேசத்தில் வாழும் ஒரு புனைவெழுத்தாளர் அது குறித்து எதுவும் புனைவு எழுதாமல் இருப்பது தனிப்பட்ட அளவில் ஒரு பெருஞ்சோகம் என்றால் அந்நிய விஷயங்களைத் தமிழில் பேசுவதற்குரிய மொழியும் இலக்கியப் பரிச்சயமும் (familiarity) இதுவரை வளராதது ஒரு பண்பாட்டுக் குறை.
மனதளவிலும், பண்பாட்டு வெளியிலும் நிலவும் இந்தக் குறை களையப்படும்போது உலகத்தரம் குறித்த படைப்பு வழி உரையாடல்கள் மேம்படும், விமரிசனங்கள் இன்னும் காத்திரமாக இருக்கும், நவீனத் தமிழ் இலக்கிய மொழியாக்கங்களுக்கும் கவனம் கூடும் என்று நினைக்கிறேன். ஒரு பதிவராக என் பார்வை இப்படித்தான் இருக்கிறது.
நகுல்வசன்: நீங்கள் கூறுவது சரி என்றாலும், பிழைப்புக்காக வெளியூருக்குச் செல்வோரின் வாழ்க்கை அப்பிழைப்பை ஓரளவிற்கேனும் வெற்றிகரமாக நடத்துவதிலேயே கழிந்து விடுகிறது இல்லையா? இத்தருணத்தில் கிருஷ்ணமூர்த்தி போன்றோரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். நீலகண்டப் பறவையைத் தேடி ஒரு உலகத்தரமான படைப்பு என்று ஒரு தமிழனும் பெருமைப்படுவதற்கு அவர் வழி வகுத்திருக்கிறார். இங்கு வேறொரு பிரச்சனையும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
தமிழைக்காட்டிலும் சில மொழிகள் அதிகமாக மொழிபெயர்க்கப் படுகின்றன என்று நினைக்கிறேன். உதாரணமாக பெங்காலி. அருணாவா சின்ஹா மாத்திரமே தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. இது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது இதற்குத் தமிழகத்தில் அமைப்பு ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா? என்பதே கேள்வி. அரசியலும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். பரிணாமத்தில் முதல் குரங்கு தமிழ்க் குரங்கே என்று மார்தட்டிக் கொண்டிருப்போர் அதன் முதன்மையான படைப்புகளை அடையாளம் காண மெனக்கெடவில்லை என்பதே கசப்பான உண்மை. அப்படைப்புகள் அவர்களின் போலி முகமூடிகளைக் கிழித்து விடுமோ! என்று அவர்கள் நினைக்கலாம். இலக்கியத்தை அவர்கள் ஒரு அரசியல் கைக்கூலியாகவே வைத்திருக்கின்றனர்.
உலகை விடுங்கள், நாம் நம் படைப்புகளைப் பிற மாநிலங்களுக்குக்கூட எடுத்துச் செல்ல முடியவில்லையே. அருணாவாவுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் ஆங்கிலத்துக்குச் சரிசமமாக இதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எல்லாவற்றையும் நிர்ணயிப்பதைப் போல் பொருளாதாரமே ஒரு விதத்தில் இதையும் தீர்மானிக்கிறது இல்லையா? தமிழில் எழுதப்பட்டதை எவ்வளவு தமிழர்கள் வாங்கிப் படிக்கின்றனர்? ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படவில்லை என்று ஆதங்கப்பட மட்டும் நம்மால் முடிகிறது. உள்ளூரிலேயே விலை போகாத சரக்கை வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும் ஏன் எடுத்துச் செல்ல வேண்டும்?
நட்பாஸ்: நியாயமான கேள்விதான் என்றாலும், மூன்று பேர் படித்தால்கூட நல்ல படைப்பு என்றால் உலகளாவிய கவனம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறில்லையே? தமிழில் தனி மனித உறவுச் சிக்கல்களுக்கே மிக அதிக இடம் கொடுக்கிறோம். தமிழில் மிக அதிக மதிப்பு அளிக்கப்படும் பாச உணர்வுக்கு ஆங்கிலத்தில் சரியான பதம்கூட இல்லை. சென்டிமென்ட் என்ற சொல்தான் நெருங்கி வருகிறது, அஃபெக்ஷன், அட்டாச்மெண்ட் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வளவு கலாச்சார வேறுபாடு உள்ள நிலையைக் கடக்கத் தனி மனித அவஸ்தைகளுக்கு அப்பாற்பட்ட இன்னும் கொஞ்சம் விலகிய பார்வை தேவைப்படுகிறது.
ஷேக்ஸ்பியரை எடுத்துக் கொள்வோம். அகதிகள் பிரச்சினை குறித்துப் பேசும்போது திடீரென்று அதுவரை புகழப்படாத ஒரு நாடக வசனம் பேசப்பட்டது. தற்கால அகதிகள் நிலையைத் துல்லியமாக வெளிப்படுத்தும் வசனம் அது. இன்று அது அரசியல் கருத்தாகக் கொள்ளப்படும். உண்மையில் அது எப்போதுமுள்ள humanist பார்வைதான். மொழியாக்கம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்ப் படைப்புகளில் இத்தகைய பார்வையை முன்னிலைப்படுத்தாதவரைக் கருத்தளவில் கவனம் பெறுவது கடினம். கனிவு, நம்பிக்கை கீற்று போன்ற விஷயங்களைச் சொல்லவில்லை. கருத்தொருமிப்பு பெற்று இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்கிறேன்
நகுல்வசன்: சர் தாமஸ் மோர் நாடகத்தை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். ஷேக்ஸ்பியர் ஒரு பிரத்தியேக காலம் கடந்த படைப்பாளி. எதற்கும் அவர் பயன்படுவார். இதனால்தான் அவரை inventor of human personality என்று ப்ளூம் புகழ்ந்தார். நீங்கள் கூறும் பார்வை முக்கியம் என்றாலும் அது மட்டுமே பிறரை வசீகரிக்க முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமுதாயச் சிக்கல்களை விடத் தனி நபர் சிக்கல்களையே பெரும்பாலான படைப்புகள் பேசுகின்றன என்று தோன்றுகிறது. இப்புள்ளியிலிருந்தே அவை அவனை அலைக்கழிக்கும் சூழல் சார்ந்த பிரச்சனைகளை அணுகலாம். பிறகு போன்ற ஒரு படைப்பு அனைவருக்குமான படைப்பு என்றே தோன்றுகிறது. கல்யாண் அதை மொழிபெயர்த்திருக்கிறார் தெரியுமா? வாடிவாசல், மோகமுள் போன்ற படைப்புகளும் தமிழரல்லாதோருக்கும் உவப்பாகவே இருக்கும் என்று படுகிறது. இதில் அரசாங்கத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
நட்பாஸ்: இந்த விஷயத்தில் அரசு விலகியிருப்பதே நல்லது!
நகுல்வசன்: பணத்தை ஒதுக்கீடு செய்துவிட்டு ஒதுங்கிக் கொண்டால் ஷேமம் இல்லையா? ஆனால் யார் அதை நிர்வகிக்க வேண்டும் என்பதில்தானே பிரச்சனை.
நட்பாஸ்: நிதி ஒதுக்கீடு செய்வது சாத்தியம். ஆனால் தரமான புனைவு மொழியில் ஆங்கில மொழியாக்கம் செய்யக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்? பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யக்கூடியவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது எப்படி என்பதைப் பார்க்க வேண்டும்.
நகுல்வசன்: எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ஒரு சர்ச்சை எப்போதுமே ஒடிக் கொண்டிருக்கிறது என்பதை ஸ்க்ரோல் பத்திரிக்கைக்காக அளித்த பேட்டியொன்றில் மொழிபெயர்ப்பாளர் கல்யாண் பேசியிருந்தார். இந்திய அனுபவத்தை உலகின் இலக்கிய மேடையில் அரங்கேற்றியதில் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பெரும் பங்கு வகித்தனர் என்பதை நிராகரிக்க முடியாது. ரஷ்டியின் ஆங்கிலத்தை சட்டினிப்படுத்துதல் எல்லாம் (அவருக்கு முன்னால் அவரைக்காட்டிலும் வேடிக்கையாக G.V. Dasani) முக்கியமான பங்களிப்புகளே. ஆனால் இவர்களே இந்திய இலக்கியத்தின் முகமாக ஆகிவிட்டதும் ஒரு பிரச்சனைதான் இல்லையா?
நட்பாஸ்: ஆங்கிலத்தில் எழுதும் இந்திய மொழி எழுத்து ஏன் ஒரு பிரச்சினையாகிறது? என்பது புரியவில்லை. நாம் அனைவரும் நமக்கு இயல்பாக எழுத வரும் மொழியில் எழுதுவது போலவே அவர்களும் தமக்கு இயல்பான மொழியில் எழுதுகின்றனர். இவர்கள் அசல் இந்திய எழுத்தாளர்களா என்ற கேள்வி அசட்டுத்தனமானது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. யார் அசலானவர்கள் என்ற கேள்வி நம்மை எடுத்துச் செல்லும் இடம் முடிவில் உவப்பானதாக இருக்காது.
அமிதவ் கோஷை எடுத்துக் கொள்வோம். அவர் ஆங்கிலத்தில் எழுதும் விஷயங்களை ஏன் இந்திய மொழிகளில் எழுத முடியாது? அவரது எழுத்தில் உள்ள சர்வதேசத்தன்மை பிற மொழியினரையும் ஈர்ப்பதில் என்ன வியப்பு? அதற்கு அவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்பது மட்டும் காரணமில்லை. இவர் இந்திய இலக்கியத்தின் முகங்களில் ஒருவராக இருப்பது நமக்குப் பெருமைதானே?
நகுல்வசன்: வட்டார இலக்கியத்துக்குச் செய்யப்பட்டிருக்கும் அநீதியைத் தட்டிக் கேட்கையில் போகிற போக்கில் மற்றொரு அநியாயமும் நிகழ்கிறது என்று நினைக்கிறேன். அதாவது தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலத்தில் சிறு வயதிலிருந்து கல்வி பயின்ற என் போன்றோரின் அனுபவம் ஏதோ ஒரு வகையில் அசலான இந்திய அனுபவமில்லை என்ற ஒரு கருத்தும் மறைமுகமாக முன்வைக்கப் படுகிறது. ஆங்கிலத்தைத் தமிழுக்கு இணையான “என் மொழியாகவே “நான் உணர்கிறேன். பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, பணிமொழி, புலம்பெயர்ந்த இடத்தின் மொழி, பலதுறைகளைப் பரிச்சயப்படுத்திக் கொண்ட மொழியாக அது இருக்கையில் அதை எப்படி நான் ஒரு அன்னிய மொழியாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்?. நகரங்களில் பிறந்து வளர்ந்தோர் பலரின் நிலமையும் இதுவே. இப்படிப்பட்டோரின் அனுபவங்களைக் கைப்பற்றுவதில் ஆங்கிலத்துக்கும் பங்கிருக்கிறது என்பதே என் கருத்து. படித்துக் கொண்டிருக்கையில் உபமன்யூ சாட்டர்ஜியின் “English, August” நாவலே எந்தத் தமிழ் நாவலைக் காட்டிலும் என் மனநிலையைச் சரியாகப் படம்பிடித்து என் இருத்தலிய angst-ஐ அதன் நகைச்சுவையின் மூலம் ஆசுவாசப் படுத்தியது என்று கூறினால் அதை மேட்டிமைவாதம் என்று புறந்தள்ளுவர். ஆனால் இப்படிக் கூறுவதால் உபமன்யூ அசோகமித்திரனை விடச் சிறந்த இலக்கியவாதி என்று நான் கூறவில்லை. இது என் ஒரு காலகட்டத்து மனநிலையைச் சார்ந்தது. ஜெயமோகனின் பல அபாரமான பதின்ம காலத்துக் கதைகள், மணல் கடிகையின் ஆரம்பப் பகுதி, அஜயின் இயர் ஜீரோ இவை எல்லாமும் எனக்கு அணுக்கமானவைதான். ஆனால், இந்திய அனுபவத்தை ஆங்கிலத்தில் எழுதினாலே அது தரத்தில் ஒரு படி கீழ்தான் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. விஜய் நம்பீஸனை ஒரு அசலான “இந்தியக்” கவிஞனாக உங்களால் அடையாளம் காண முடியவில்லை என்றால் குறை உங்கள் ஆங்கிலத்திலோ அல்லது இலக்கிய நுண்ணறிவிலோ தானே ஒழிய விஜயின் கவித்திறத்தில் அல்ல. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நட்பாஸ்: இதேபோல் தமிழில்கூட யாருடைய எழுத்து தமிழ்த்தன்மை கொண்டது என்று விசாரிக்கலாம். தூய தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்படுவது தவிர அதிலென்ன ஆகப் போகிறது?
மேட்டிமைத்தனம் என்பது நடப்பு நிலவரத்தைப் புரிந்து கொள்ள முடியாத உயரத்தில் இருப்பதைச் சுட்ட மட்டுமே பயன்படக் கூடியது. ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார், சொத்து வைத்திருக்கிறார், எங்கு சாப்பிடுகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன அணிகிறார், என்ன மொழி பேசுகிறார், அவரது சாதி மதம் என்ன என்பதைக் கொண்டு அவரை மேட்டிமைவாதி என்றோ லோக்கல் என்றோ நிராகரிப்பது அவரைப் போட்டியிலிருந்து விலக்குவது ஒன்றுக்குத்தான் உதவலாம்.
Fitzgeraldன் Great Gatsby பணக்காரர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பது. அதில் வரும் “They were careless people, Tom and Daisy- they smashed up things and creatures and then retreated back into their money or their vast carelessness or whatever it was that kept them together, and let other people clean up the mess they had made,” என்ற மேற்கோள் டெக்புரோக்களால் கைப்பற்றப்பட்ட சமகாலத்தில் அவர்கள் செலுத்தும் ஆதிக்கத்தை எவ்வளவு துல்லியமாக விவரிக்கிறது.
உண்மையாகவும் விமரிசனப்பார்வை கொண்டதாகவும் உள்ள எந்த எழுத்தும் பொருட்படுத்தத் தக்கதே. அதை இம்மண்ணின் மொழியில் எழுதாமல் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் எழுதுவோர் மேட்டிமைவாதிகள் என்பது குறுகிய பார்வை. அது போக, மேல்தட்டில் உள்ளோர் வாழ்வு பற்றிப் புரிந்துணர்வுடன் தமிழில் இலக்கிய புனைவுகள் பலவும் இல்லாதது நல்ல விஷயமா? இத்தனைக்கும் நம்மில் பலரின் லட்சியமும் அங்கு போய்ச் சேர்வதாகவே இருக்கிறது.
நகுல்வசன்: ஆனால் ஃபிட்ஸ்ஜெரால்ட அவர் நிலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தோரைப் பற்றி அவரது மொழியில் எழுதினார். அதையே நாம் இங்கு ஆங்கிலத்தில் செய்தோமென்றால் ஆங்கிலத்துக்கும் செலவத்துக்கும் ஏதோ தொடர்பிருப்பதைப் போல் விமர்சனங்கள் வரும். உண்மைதான் செல்வந்தர்களின் வாழ்வனுபவங்கள் அதிகமாகப் புனைவாக்கப் படவில்லை என்று நினைக்கிறேன். அர்பனிசத்தை விவசாய ஆதர்சங்களை அழித்தொழித்த சீர்கேடாக மட்டுமே அணுகாமல் அதை ஒரு நடைமுறை யதார்த்தமாக அணுகும் படைப்புகள் அதிகம் வர வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய படைப்பாளிகள் இதைக் கண்டிப்பாகச் செய்வார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அர்பனிசம் ஒரு க்ளோபல் ரியாலிடி என்பதால். அம்மாதிரியான படைப்புகளே தமிழரல்லாதோருக்கு உவப்பாக இருக்கலாம்.
நட்பாஸ்: இது ஏதோ அவர்களைத் திருப்திப்படுத்த நாம் செய்வதல்ல. இதெல்லாம் யதார்த்தம். நமக்கு நாமே உண்மையாக இருந்து கொள்வது.
நான் நேற்று ஒரு காரியமாக டிகாத்லான் போக வேண்டியிருந்தது. அங்கு இருந்த எல்லாரும் பணக்காரர்கள், எனக்கு அந்த இடத்தில் ஒவ்வொரு நொடியும் இருப்புக் கொள்ளாத கூச்சமாக இருந்தது. பில்லிங் கவுண்டரில் இருந்த பெண், “காரில் கொண்டு செல்கிறீர்களா?” என்று கேட்டபோது கேலி செய்கிறாரோ என்ற சந்தேகம் வந்தது. இது என் தாழ்வு மனப்பான்மைதான், அவர்கள் குற்றமல்ல. ஒரு வேளை எனக்கு ஏதேனும் எதிர்மறை அனுபவம் ஏற்பட்டிருந்தால் மேட்டிமைவாதிகள் என்று திட்டி அதிலிருந்து விடுபடலாம். மற்றபடி அனைவரும் அங்கு ஒரே நோக்கத்தில்தான் வந்திருந்தோம். இதை மறக்கக் கூடாது.
உலகளாவிய இலக்கியம் வாசிப்போர் இப்படிப்பட்ட கருத்துக் குழிகளில் புதையுண்டு மறைவது வியப்பான விஷயம். எந்த ஒரு இலக்கியவாதியும் மண், இரத்தம், மொழி, சமயம் போன்ற விஷயங்களைக் கொண்டு அசலானோரையும் அல்லாதோரையும் அடையாளப்படுத்துவது பாசிச வட்டங்களுக்கு வெளியே ஏற்புடையதாக இருக்க முடியாது.
நகுல்வசன்: எதைத் தமிழிலிருந்து கொண்டுசெல்ல வேண்டும் என்பதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. விமர்சனம் என்ற பேரில் குழுக்கள் ஒன்றை மற்றொன்று தாக்கிக் கொள்ளும் சூழலே இங்கிருப்பதால் சார்புகளற்ற ஒரு கறாரான விமர்சன இயக்கம் இன்னமும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது. அப்படிப்பட்ட விமர்சனம் உருவாக்கும் ஒரு நவீன canon-உம் இங்கு சரியாக உருவாக்கப்படவில்லை. இலக்கியவாதிகளே அளித்திருக்கும் பட்டியல்களே இங்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் யாரை எடுத்துச் சென்றாலும் இவருக்குப் பதிலாக போயும் போயும் அவரை ஏன் எடுத்துச் சென்றாய்” என்ற அங்கலாய்ப்பைத் தவிர்க்க இயலாது. இதற்கான தீர்வாக சில அளவுகோல்களை உங்களால் முன்மொழிய முடியுமா?
நட்பாஸ்: யாரை வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம், இது அவரவர் தேர்வு. என்னிடம் கேட்டால் என் அளவுகோல்கள், மனித நேயப் பார்வையை வெளிப்படுத்துவதாக இருக்கிறதா- “எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்… எல்லாரும் இந்நாட்டு மன்னர்” -, கருத்தொருமிப்பு பெற்று இழைக்கப்படும் அநீதிகளை எதிர்கொள்கிறதா, என்பது பொன்ற ‘அரசியல்’ கேள்விகள் சார்ந்ததாக இருக்கும். எப்போதையும்விட இப்போது நாம் நம்மை உலக குடிமக்களாக உணர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நினைக்கிறேன். அதனால் அத்தகைய படைப்புகளையே விரும்புகிறேன். பிராந்தியவாதம் (parochialism) அருவருப்பாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது.
நகுல்வசன்: இலக்கியத்தின் பயன்பாட்டு வெகுமதியை நோக்கித் தராசை மிகவுமே சாய்க்கிறீர்களோ? ஆடனின் Poetry makes nothing happen, ஆஸ்கார் வைல்டின் All art is quite useless வரிகளே நினைவுக்கு வருகின்றன. இலக்கியத்தில் “எது” வைக் காட்டிலும் எது எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே என் அளவுகோல். அரசியலும், பாலுணர்வும், பிறழ்வும் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் சரி சமம்தான், கருப்பொருளாக என்ற அர்த்தத்தில். பிராந்தியத்திலிருந்து உலகளாவிய அனுபவமாக விரியும் படைப்புகளையே நான் மொழிபெயர்ப்புக்குத் தேர்வு செய்வேன். மொழிபெயர்ப்பு வாசகியிடத்தே estrangement ஒன்றை நிகழ்த்த வேண்டும். She should “suffer a sea change”- மீண்டும் ஷேக்ஸ்பியர் – என்ன செய்வது! ஆனால் ஜிங்கோயிஸத்தை நாம் நிச்சயமாகத் தவிர்த்தாக வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் அரிதாக இருக்கும் சூழலில் யாரை வேண்டுமானலும் மொழி பெயர்க்கலாம் என்பதெல்லாம் என் பார்வையில் வளங்களை வீணடிக்கும் பொறுப்பின்மையே.
நட்பாஸ்: மொழிபெயர்ப்பாளன் தேர்வு இங்கு அங்கீகரிக்கப்படாத அல்லது எதிர்மறையாக விமர்சிக்கப்படும் எழுத்தாளனாக இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? இலக்கியச் செயல்பாடு சிறந்த பிராடக்டுகளை ஏற்றுமதி செய்வது போன்றதில்லையே. இன்னும் அதிக அளவில் மொழியாக்கங்கள் வருவதற்கு பிற மொழிகளில் தமிழ் இலக்கியம் பற்றி விமர்சனக் கட்டுரைகள் வர வேண்டும்.
மொழியாக்கத்தையும் சர்வதேச அங்கீகாரத்தையும் விட்டு விடுவோம். தமிழில்கூட இப்படிப்பட்ட கருப்பொருட்கள் பேசும் புதினங்களை எதிர்பார்க்கிறேன்: சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் எழுப்பும் சவால்கள், தொழில்நுட்ப மாற்றத்தால் மாறி வரும் அன்றாட வாழ்வு, உலகமயமாக்கம் முறிந்து குறுகிய பார்வை வலுக்கும் கருத்துச் சூழல்.
இதெல்லாம் தமிழர் வாழ்வுக்கு அந்நியமானவை என்ற எண்ணம் எழுகிறது என்றால் நம் பார்வை அன்றாட வாழ்வை உற்று நோக்கவில்லை என்பதே பொருள். இவை ஒவ்வொரு இந்தியனின், கடைக்கோடி இந்தியன் உட்பட ஒவ்வொரு இந்தியனின் வாழ்வையும், புரட்டிப் போடக்கூடிய விஷயங்கள். இவை குறித்து நம்மால் சிந்திக்க இயலவில்லை என்பதற்குக் காரணம் நடப்புலகைக் கைப்பற்ற இயலாத நம் கற்பனையாற்றலின் தோல்வி மட்டுமே, அவற்றின் முக்கியத்துவம் இல்லாது போவதில்லை. இவை தமிழ் எழுத்தில் இடம் பெறும்போது அவற்றுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பும் கூடும். இவை உலகத்தவர் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தல்கள்.
நகுல்வசன்: கண்டிப்பாக இவற்றை எல்லாம் தவிர்க்க இயலாது. ஆனால் இவை இடம் பெறுவதால் மட்டுமே ஒரு படைப்பு சிறந்த இலக்கியப் படைப்பாக ஆவதில்லை என்பதைத்தான் கூற முயன்றேன்.
அப்படியே யார் மொழிபெயர்க்க வேண்டும் என்பதையும் பேசிவிடுவோம். தமிழில் சிறப்பாக எழுதுகின்றனர் என்பதாலேயே இங்கு சிலர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் ஆகி விடுகின்றனர். பல நகைப்புக்குரிய மொழிபெயர்ப்புச் சறுக்கல்களை நாம் எள்ளி நகைத்திருக்கிறோம். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கையில் ஆங்கிலப் பரிச்சயமின்மையும் அதை அதிகம் செவிமடுக்காததுமே பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. தமிழிலிருந்து ஆங்கிலம் என்று வருகையில் சில இளம் மொழிபெயர்ப்பாளர்களின் வருகை நம்பிக்கை அளிக்கிறது. அவர்களை எவ்வாறு அடையாளப் படுத்துவீர்கள்?
நட்பாஸ்: இந்த விஷயத்தில் எனக்கு ஒன்றும் தெரியாது. என் குறுகிய பரிச்சயத்தில் தரமான புனைவு மொழியில் ஆங்கில மொழியாக்கம் செய்வோர் ஒரு நான்கைந்து பேர் இருக்கிறார்கள் என்ற குருட்டு ஊகம் செய்வேன். அது பத்துப் பதினைந்தாகக்கூட இருக்கலாம்.
நகுல்வசன்: எடிட்டிங் பற்றி நம்மிடையே சில எதிர்மறையான கருத்துகள் நிலவுகின்றன. வெளியே கொண்டு செல்கையில் எடிட்டிங்கின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
நட்பாஸ்: எடிட்டிங் இல்லாமல் எதுவும் இல்லை. மொழியாக்கம் மட்டுமல்ல, தமிழ் எழுத்துக்கும் எடிட்டிங் தேவைப்படுகிறது. மணிக்கொடி காலத்திலேயே எடிட் செய்திருக்கின்றனர், மோகமுள்ளை எடிட் செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறார் தி.ஜா. எடிட் செய்யப்படுவது இழுக்கல்ல. மொழியாக்கத்தில் நிகழும் எடிட்டிங் சர்ச்சைக்குரியது. மூல மொழி ஆசிரியர் ஏற்றுக் கொண்டால் தவறில்லை என்று நினைக்கிறேன்.
நகுல்வசன்: Journey of the Magi கவிதையைத் தாகூர் மொழிபெயர்த்ததைப் பற்றி அருணாவா அவரது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் இறுதி வரியான I should be glad of another death -இல் தாகூர் எடுத்துக் கொண்ட சுதந்திரம் (arikbar motapalay amibachi) எவ்வாறு அதற்கு வங்கத்தில் மேலதிகமான அர்த்தங்களை அளித்து மெருகூட்டியது என்பதை அவர் சுவாரசியமாகப் பேசியிருப்பார். மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு சுதந்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும்?
நட்பாஸ்: எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். மொழியாக்கம் சுவையானதாக, நல்ல வாசிப்பனுபவம் அளிக்க வேண்டும் என்பது அடிப்படை. யாரும் இரு மொழி படைப்புகளையும் ஒப்பு நோக்கி வாசிக்கப் போவதில்லை. அதற்காக மூல படைப்புடன் முரண்படக் கூடாது, நாலு பக்கத்துக்குத் தன் கதையைச் சேர்க்கக் கூடாது. யாரும் இப்படியெல்லாம் செய்யவும் மாட்டார்கள்.
நகுல்வசன்: மொழிபெயர்ப்புகள் அதிகமாக நம் சூழலில் விமர்சிக்கப் படுவதில்லை (அவ்வப்போது வெடிக்கும் ஃபேஸ்புக் சர்ச்சைகளை விட்டுவிடுவோம்!). அவ்விமர்சனங்கள் நிகழும் பட்சத்தில் அவை கண்டிப்பாக மூலத்தைப் பறைசாற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் மூலத்துடன் ஒப்பு நோக்கி கராறாக மதிப்பிடும் என்று எதிர்பார்க்கிறேன். இங்கு நாம் மொழிபெயர்ப்பாளரின் பெயரைக்கூட முன் அட்டையில் போடத் தயங்குகிறோம். இங்கு மட்டுமல்ல, மேற்கிலும்கூட. அமெரிக்காவில் ஒரு வருடத்தில் பதிப்பிகக்ப படும் புத்தகங்களில் மூன்று சதவீதம் மொழிபெயர்ப்புகள். அவற்றில் ஐந்து சதவீதத்திற்குக் குறைவாகவே நியூ யார்க் டைம்ஸ் புக் ரெவ்யூவில் விமர்சனம் செய்யப் படுகின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத உலகத்தை யோசித்துப் பார்க்கிறேன். அதில் என்னால் வாழ முடியும் என்று தோன்றவில்லை!
மொழிபெயர்ப்பாளரும் படைப்பாளிக்கு இணையான கர்த்தாவா? அவருக்கு எவ்வளவு சன்மானம் அளித்தால் தகும்?
நட்பாஸ்: கர்த்தாவைக் காட்டிலும் படைப்பை ஆழமான வாசிப்புக்கு உட்படுத்துபவர் என்பதால், ஆசிரியர் மற்றும் விமரிசகரைக் காட்டிலும் படைப்புக்கு நெருக்கமானவர் மொழிபெயர்ப்பாளர். சிலை வடித்தவன் காணாத இறைவனைப் பக்தன் காண்கிறானல்லவா? புரிதலே நேசத்தின் பெறுமதி என்றாலும் மொழியாக்கம் செய்பவருக்குச் சரிபாதி முதல் எவ்வளவும் சன்மானம் அளிக்கலாம்.
நகுல்வசன்: AI மொழிபெயர்ப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்று நினைக்கிறீர்கள். அதை எவ்வளவிற்கு மொழிபெயர்ப்பாளர் துணைக் கருவியாகப் பயன்படுத்தலாம்? தமிழில் அது செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றாலும் அது கண்டிப்பாக அவ்விலக்கைச் சென்றடையும் என்றே தோன்றுகிறது.
நட்பாஸ்: நிச்சயமாக மொழிபெருக்கிகளைக் கொண்டு தரமான மொழியாக்கங்கள் பெற இயலும். உலகில் உள்ள அத்தனை நூல்களையும் அத்தனை மொழிகளிலும் ஒரு க்ளிக் செய்து பெற்று வாசிக்கக்கூடிய நிலைகூட உருவாகலாம். மொழியாக்கங்களை டிங்கரிங் செய்து இக்கருவிகளின் திறனை மேம்படுத்தும் வல்லுநர்களாக மட்டுமே நாம் இருக்கப் போகிறோம்.
நகுல்வசன்: தட்டச்சுக் குரங்குத் தேற்றம் நினைவுக்கு வருகிறது. அது இப்போது சற்று புத்திசாலித்தனதுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இன்னமும் குரங்குதான். மிக விரைவாகவே அது தற்போது பரிணமிக்கிறது. ஆனால் அதன் பரிணாமத்தில் ஒரு சிக்கலும் பொதிந்திருக்கிறது அது கடந்தகாலத்துச் சிந்தனைகளையும் தரவுகளையும் வைத்தே ஜல்லி அடிக்கிறது. சிலை வடித்தவன், அதை விதந்தோதியவன், அதை ஒடித்தவன் கூறியதை வைத்து அது குறுந்தெய்வத்தை நமக்குத் தர முயல்கிறது. பக்தன் தன் பரவசத்தில் கண்டெடுக்கும் புது விதமான பிரம்மத்தை அதுவும் கண்டெடுக்குமா என்பது சந்தேகமே. இங்கு தான் மொழிபெயர்ப்பாளரின் வாசிப்புத் திறன், படைப்பை அவன் முற்றிலும் புதிய வெளிச்சத்தில் பார்ப்பது போன்றவை முக்கியமாகின்றன. அவ்வெளிச்சத்தில் சொற் தேர்வுகளும் மாறி படைப்பை விசித்திரப் படுத்தும். ஆனால் கண்டிப்பாகப் பேனா, லாப்டாப், போல் அதுவும் மொழிபெயர்ப்பாளரின் டூல்பாக்ஸில் இடம் பெற்றிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
நட்பாஸ்: நண்பரொருவர் தான் சார்ந்திருக்கும் ஆன்மீக அமைப்புக்காக ஆங்கில கட்டுரைகளை மொழியாக்கம் செய்கிறார். ஏஐ கொண்டு செய்யப்பட்ட மொழியாக்கங்களை அவர் ஒரு முறை சரி பார்த்து என்னிடம் கொடுப்பார். சில அபத்தங்கள் இருந்தாலும் பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது. இலக்கியத்தரமான புனைவுகளை அவற்றால் இன்று மொழிபெயர்க்க முடியாது என்பது உண்மையே. ஆனால் பிழையற்ற மொழியாக்கங்களை அவற்றைக் கொண்டு பெற முடியும் (நாமும் சிறிதளவு செப்பனிட வேண்டும்). எதிர்காலத்தில் இத்திறன் கூடுமென்றுதான் நினைக்கிறேன்.
நகுல்வசன்: அமெரிக்கா போன்ற நாடுகளின் இலக்கிய செயல்பாட்டிற்கான முன்னெடுப்புகளுக்குக் கிடைக்கும் அமைப்பு ரீதியான ஆதரவுகள் அடுத்து தமிழுலகுக்கும் கிடைக்கப் பெறுமா? இம்மாதிரியான செயல்பாடுகள் எவ்வளவுக்குப் பயனுள்ளத்தகாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
நட்பாஸ்: கருத்துச் சுதந்திரத்திலும் மானுட நேய விழுமியங்களிலும் நம்பிக்கை கொண்ட சிந்தனையாளர்கள் இன்றைய சூழலில் அமெரிக்காவை பகிஷ்கரிக்க வேண்டிய நிலை வருத்தத்துக்குரிய விஷயம். அப்படி நடக்கவில்லை என்றால் அது நாம் எவ்வளவுக்கு சுயமரியாதையற்ற வெற்று மனிதர்கள் என்பதையே உணர்த்தும்.
நகுல்வசன்: இதெல்லாம் சற்று ஒவர் என்று படுகிறது. அமெரிக்காவின் செயற்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அதைத் துறந்து அனைவரும் இந்தியாவுக்குத் திரும்பி வந்து விடுகிறார்களா என்ன. கிளோபலைசேஷ உலகில் இம்மாதிரியான அடிரடி பகிஷ்கரிப்புகள் வெறும் டோக்கன் வினையாற்றல்களே. அமெரிக்காவைத் தவிர்க்க இயலாது. ஆக அதன் ஆக்கப்பூர்வமான, பொருளாதார ரீதியில் நமக்கு பயணளிக்கும் விஷயங்களில் நாம் அதனுடன் செயல்படலாம் என்பதே என் கருத்து.
அதை மிகக் கறாராக விமர்சிக்கும் படைப்புகளும் அங்கு அரங்கேற்றப் படுகின்றன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. கிணற்றுத் தவளைகளாக இவ்வளவு காலமாக இருந்தவர்களுக்கு இப்போதுதான் அப்புறக்கணிப்புக் கிணற்றிலிருந்து வெளிவர வாய்ப்புகள் கிட்டியிருக்கின்றன. அதை நாம் நம் தார்மீக உயரங்களிலிருந்து மறுக்க வேண்டாமே!
நட்பாஸ்: ஆமாம், நீங்கள் சொல்வது போல் அமெரிக்காவில் மக்களாட்சி வலுவாக இருக்கிறது, வளர்ந்த தேசங்களில் வேறெங்கும் எதிர்பார்க்க முடியாத அளவு அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமான எதிர்ப்பும் இருக்கிறது, உண்மைதான். ஆனால் அந்த அரசு செய்வதை பாருங்கள் – இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முகமூடி அணிந்த காவல் துறை போன்ற ஒரு அமைப்பால், பலரும் அடையாளமில்லாத கார்களில், கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது யாருக்கும் பல வாரங்கள் முதல் மாதங்கள் தெரியப்படுத்தப்படுவதில்லை. பலர் சம்பந்தமில்லாத அந்நிய தேசங்களில் சிறைப்படுத்தப்படுகிறார்கள். வான்வழி தாக்குதலால் கிட்டத்தட்ட நூறு அந்நிய தேச படகோட்டிகள் அவர்கள் கடலின் எல்லைக்குள்ளேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகள் என்பதற்கோ, போதை பொருள்கள் கடத்தினார்கள் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை. பின்னொரு நாளில் இந்நாள் அமெரிக்க அதிபரும் அவருக்கு துணை நின்றவர்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும் வகையில் அதன் சட்டதிட்டங்கள் மாற்றி எழுதப்படாவிட்டால் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அரசு மறைமுகமாக மிரட்டுகிறது. அது கருத்து சுதந்திரத்துக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் ஏராளமானவை.
நடக்குமா நடக்காதா என்று பார்த்து, எல்லாம் நடந்து முடிந்தபிறகு, ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்தான் வரலாற்றில் நிறுவப்பட்டுவிட்ட அநீதிகளை விமரிசித்துப் பேசப் போகிறோமா? வரலாறு நடப்பு காலத்தில் குழப்ப நிலையில்தான் இருக்கும். தார்மீக நிலைப்பாடுகளின் ஆற்றலே நல்லது கெட்டது பிரித்தறிய முடியாத காலகட்டத்தில் வெளிச்சம் பாய்ச்சுவதாக இருப்பதுதான்.
உயிர் வாழ, பிழைப்புக்காக ஓரிடத்தில் வசிக்கிறோம். அங்கு எதுவும் செய்து நம் குடும்பத்தை நடு ரோட்டில் நிறுத்தாமல் எச்சரிக்கையாக இருப்பது புரிந்து கொள்ள முடியும். நாம் யாரும் புரட்சியாளர்கள் இல்லை. ஆனால் இலக்கியவாதிகள் அமெரிக்கா செல்லும் விஷயத்தில் அப்படிப்பட்ட கட்டாயமில்லை. அவர்கள் என்னவெல்லாம் பேசக் கூடாது என்று சொல்கிறார்களோ அந்த விஷயங்களில் மௌனம் காக்க ஒப்புக் கொள்கிறோம், அவர்கள் ஒன்றுமே செய்யாமல் போனாலும், அப்படியொரு நிபந்தனை போடுவதை ஏற்றுக் கொள்கிறோம். அது அவர்களுக்கு மட்டும்தான், நமக்கெல்லாம் அப்ளை ஆகாது என்று சொன்னால் அந்த எண்ணம் ஒரு அற வீழ்ச்சியே.
Wole Soyinkaவின் அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டிருப்பதையும், எனக்கு அமெரிக்கா செல்லும் ஆர்வமில்லை, “But a principle is involved. Human beings deserve to be treated decently wherever they are,” என்று அவர் சொல்லியிருப்பதையும் சுட்ட விரும்புகிறேன்.
“மனிதர்கள் எங்கிருந்தாலும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்,” என்று அவர் சொல்வதையே நான் இக்காலத்தின் ஆதார போராட்டமாக நினைக்கிறேன். இந்த humanism படைப்புகளில் வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். உலகமயமாக்கலுக்கும் வேற்றார்களுக்கும் எதிரான இனதேசீயவாதம், புவி வெப்பமயமாதலின் தாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வாழ்வாதாரத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல், இவை குறித்து எழுத வேண்டும் என்று சொல்வதும் மனிதன் எங்கிருந்தாலும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய நிலைக்கும் சுதந்திர இயக்கத்துக்கும் (individual agency) எதிரான போக்காக மாறிவிடக்கூடிய சாத்தியம் இருப்பதால்தான்.
இதுவெல்லாம் அரசியல் என்றால் இவை நம் காலத்தின் ஆதார பண்புகள் என்பேன். இவை மட்டுமே இலக்கியமாகாது, உண்மைதான். ஆனால் இந்த பிரக்ஞை இல்லாமல் எழுதப்பட்ட இலக்கியத் தொகையின் உலகத்தர கனவுகள் யாருடைய மீட்சிக்காக, எந்த உண்மையை உணர்த்த, எத்தகைய பார்வையின் வெளிப்பாடு எனக் கொள்ள முடியும்?
நகுல்வசன்: இரண்டு விஷயங்களைக் குழப்பிக் கொள்கிறீர்கள். அமெரிக்காவின் அடாவடித்தனங்களை விமர்சனம் செய்வது வேறு அங்கு தமிழ் இலக்கியத்துக்கான சர்வதேச நிகழ்வொன்றை நடத்துவது வேறு. ஒரு அறிவியலாளரோ, கணிதவியலாளரோ அமெரிக்காவில் ஒரு கான்ஃப்ரென்சுக்குச் சென்றால் அவர்களையும் இதே அளவு காத்திரமான விமர்சனத்துக்கு உட்படுத்த மாட்டீர்கள் தானே. அப்போது இலக்கியத் துறைக்கு மட்டும் ஏன் இத்தகைய மேலதிகத் தார்மீகக் கட்டுப்பாடுகள்?
மட்டுறுத்துநர்: தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இணைந்து நடத்தும் ‘மொழி’ தளத்தின் செயல்பாடுகள், புக் பிரம்மா போன்ற நிகழ்வுகள், இந்திய சாகித்ய அகடெமி முன்னெடுக்கும் புத்தக விமர்சனக் கூட்டங்கள், போன்றவற்றினால் உண்டாகும் முன்னகர்வுகள் எவ்வகையான தாக்கங்களை உண்டாக்குகின்றன? இவை போன்ற கூட்டுச் செயல்பாடுகள், ஒரு தனித்துவ மோனநிலையிலான எழுத்து செயல்பாட்டை எந்தெந்த வகைகளில் செழுமைப் படுத்துகின்றன அல்லது பிறழச் செய்கின்றன?
நகுல்வசன்: அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. சோர்வடையாது செயலாற்றிக் கொண்டிருப்பதே முக்கியம். சாகித்ய அகடெமி மோன்ற அமைப்புகள் தங்களை முற்றிலும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அவர்கள் வலைத்தளத்தைப் போய்ப் பாருங்கள். இன்னமும் அப்படியே உபயோகமற்றதாகவே இருக்கிறது.
படைப்பு எப்போதுமே ஒரு தனி மனிதச் செயற்பாடுதான். குழு மனப்பான்மை படைப்பூக்கத்துக்கு ஏற்றதல்ல. ஆனால் அனைவருக்கும், அதை தேவையில்லை என்று பிரகடணம் செய்பவர்களுக்கும்கூட அங்கீகாரம் என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவையாக இருக்கிறது. படைப்பாளி தனியன் என்றாலும் அவனுக்கும் வாசகன் என்றொருவன் தேவைப் படுகிறான். படைக்கையில் பரவசப்படுத்தியது வாசிக்கையில் வேறொருவரையும் ஏதோவொரு பரவசத்தில் ஆழ்த்தியது என்பதில் ஏதோவொரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது. அந்தப் போஷாக்க்கை அவனுக்கு அளித்து அவனை உற்சாகப் படுத்த இம்மாதிரியான இலக்கியக் குழுக்கள் அவசியமாகவே இருக்கின்றன
மட்டுறுத்துநர்: உலக அரங்கில் இடம்பெறும் நோக்கில், தங்களது வட்டாரத் தன்மையை, தனித்துவ மரபுத் தொடர்ச்சியை, இலக்கிய நீட்சியை சமரசப்படுத்திக் கொள்ள வேண்டுமா பிராந்திய இலக்கியங்கள்? இந்த இலக்கிய, வட்டாரத்தன்ன்மைகள் கொண்ட அடையாளங்களுடனான புனைவுகளை விட நேரடி துறைசார்ந்த அல்புனைவு நூல்கள் அளிக்கும் அறிவுச் செறிவு இன்றைய பரவலான வணிகச் சூழலுக்கு உகந்ததாக உலகளவில் காணப்படுகிறதா?
நட்பாஸ்: அப்படியெல்லாம் எந்த அவசியமும் இல்லை. அதை யாரும் எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் முன் சொன்னது போல் வட்டார வாழ்வின் கூறுகள் உலகளாவிய வாழ்வின் கூறுகளுக்கு அந்நியமானவையல்ல. வட்டார வாழ்வை உள்ளபடியே பதிவு செய்யும் எந்த புனைவும் உலகளாவிய எதிரொலி எழுப்ப வல்லது. சமகால வாழ்வின் சவால்கள் குறித்த ஒரு அறிவார்ந்த பார்வை, மானிட நேய அணுகுமுறை இவ்விரண்டும் தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்ல, அவை மொழிபெயர்ப்பு ஆற்றலுக்கு வலு கூட்டுவதாகவும் இருக்கும்.
நகுல்வசன்: படைக்கையில் அதை யார் வாசிக்கிறார்கள், அவர்களுக்கு புரியுமா, அதை மொழிபெயர்க்க முடியுமா என்பதைப் பற்றி எல்லாம் நாம் யோசிப்பதில்லை. ஆகவே மூலத்தில் நாம் எதையுமே விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியுமில்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு இது ஒரு பிரச்சனையே. ஆங்கிலம் அனைத்து வட்டார வழக்கயும் சரிசமமாக்கி விடும் அபாயத்தை அவன் உணர்ந்திருப்பதால். வட்டார வழக்கு மட்டுமல்ல மூலமொழி, இலக்கு மொழி இவற்றுக்கு இடையே இருக்கும் syntax வேறுபாடுகள், அவற்றின் பயன்பாட்டு விதம் இவை அனைத்துமே சிக்கல்கள் தாம். மொழிபெயர்பாளார் தன் க்ரியா சக்தியைக் கொண்டே இவற்றிற்கான தீர்வுகளை கண்டடைகிறான். அவன் வெறும் grunt work செய்யும் அடியாள் அல்ல. படைப்பாளிக்கு நிகரானவனே.
நட்பாஸ்: தனிப்பட்ட முறையில் நானே ஆங்கில மொழி புனைவுகளைவிட அபுனைவுகளையே விரும்பி வாசிக்கிறேன். அபுனைவுகள் புனைவுகளைக் காட்டிலும் நம்பகத்தன்மை கொண்டவை, அவற்றை எழுதுபவர்கள் மிகச் சிறப்பாக புனைவின் கூறுகளை தம் எழுத்தில் கையாள்கிறார்கள்.
நகுல்வசன்: புனைவில் நம் உலகுக்கு முற்றிலும் புறம்பான, தன்னளவில் self-sufficient ஆக இருக்கும் ஓர் உலகை நம்மால் நம்பகத்தன்மையுடன் கட்டமைக்க முடியும். அதன் பலமே அதுதான். அல்புனைவில் சிந்தனையை அடுக்கடுக்காக ஒரு தேற்றத்தைப் போல் மேலே எடுத்துச் செல்ல முடியும். புனைவில் இதைக் கதையோட்டத்திலிருந்து துருத்திக் கொண்டு நிற்காத விதத்தில் செய்வது சற்று சிரமமே. ஆனால் தமிழில் அல்புனைவுகள் இன்னம் அதிகமாகவே வர வேண்டும் என்று விரும்புகிறேன். அன்றாட மொழியில் நாம் பயன்படுத்தும் சொற்கள் மிக எளிமையானவை. கடினமான சிந்தனைகளை நாம் அனேகமாக அன்றாட பேச்சு வழக்கில் எதிர்கொள்வதே இல்லை. அப்படியே அரிதாக இவை நம் அன்றாடப் பேச்சில் எழும்போது நாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறோம். அல்புனைவுகளின் புழக்கம் அதிகரிக்கையில் இந்நிலைமை மாறும் என்று நம்புகிறேன்.
தொழில்நுட்பம் அனைத்து காலங்களிலும் முன்னேறிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. ஒவ்வொரு காலமும் அதில் நிகழும் பாய்ச்சலை இறுதிப் பாய்ச்சலாக அர்த்தப் படுத்திக் கொள்கிறது. ஆனால் படைப்பூக்கமும் அப்பாயச்சல்களை அரவணைத்தபடியே அதற்கேற்ப பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படைப்பூக்கம் கற்பனை செய்யும் dystopia-க்களும் மாறிக் கொண்டு வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
தொழில்நுட்பங்களைத் தாண்டி அவற்றின் வலைகளுக்குள் சிக்காத புதுமைகளைக் கண்டறிவதே வருங்காலப் படைப்பூக்கத்தின் சவாலாக இருக்கலாம்.