புள்ளிமான்குட்டி

புள்ளி போட்ட மான்குட்டி
துள்ளி ஓடும் மான்குட்டி

கொம்பு கொண்ட மான்குட்டி
வம்பு பண்ணா மான்குட்டி

அழகான விழிகளாலே
எல்லோரையும் மயக்குகிறாய்
அன்பான முகத்தினாலே அனைவரையும் கவர்கிறாய்

நீ ஓடுகின்ற வேகத்திலே
பரபரக்குது மண்ணெல்லாம்
நீ தாவுகின்ற தாவலிலே
சடசடக்குது சருகெல்லாம்

புள்ளி வைத்த உடலிலே
கோலம் போட நான் வரவா?
குட்டையான வாலிலே
பின்னல் போட நான் வரவா?

உன் கோலிக்குண்டு கண்களிலே
மை வைக்க நான் வரவா?
உன் மரக் கிளை கொம்புகளில்
பூ வைக்க நான் வரவா?

உன்னைப் பார்க்கத் தோணும் போதெல்லாம்
உன் பொம்மை பார்த்து மகிழ்கிறேன்
உன்னைக் காணொளியில்
காணும் போது
கை தட்டித் தட்டி வியக்கிறேன்!

உன்னைப் பாதுகாக்கவே
பெரிய படிப்பு படித்திடுவேன்
பயமில்லாமல் நீ வாழ்வே
எல்லா நலனும் செய்திடுவேன்!

Author

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

ஊர்வலம் போன பெரியமனுஷி