Home சிறுகதைமாறாததொன்றே மாறாதது

மாறாததொன்றே மாறாதது

0 comments

“திவாளிக்கு டிரஸ் கலர் பார்த்துட்டியா?” என்றாள் ராஜி.

அது அவர்களின் அலுவல் அறை. சுவரில் பதிந்திருந்த அந்த அழகிய சதுர காலண்டரில் 7 நவம்பர்-2050 என்று காட்டியது. இன்னும் ஆறு நாளில் தீபாவளி. இடைவேளை நேரம். தினமும் மதியம் பத்து நிமிடம். அந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். பதிவாகாது. பதிவானாலும் எதுவும் பயமில்லை. ஏனெனில் எதிராகவோ, கலகமாகவோ பேச அவர்களின் மனதில் எந்தச் சிந்தனையும் இல்லை.

அவள் எதிரில் பாலுவும், ஜீவாவும். அவர்களின் பேச்சு வேறேதோ விஷயத்தில் இருந்தது. தட்டில் இருந்த இரண்டு உணவு மாத்திரைகளையும் காலி செய்திருந்தார்கள். அவள் சொன்னதை அவர்கள் கவனிக்கவில்லை. சுழல் சேரை அவர்கள் பக்கம் தள்ளிய ராஜி, ஜீவாவின் தோளில் ஓர் அடி கொடுத்தாள். சட்டென்று திரும்பிய ஜீவாவிடம் மறுபடி கேட்டாள்.

“கொஞ்சம் என்னையும் கவனிப்பா… அவன்கிட்ட அப்புறம் பேசிக்கலாம்..”

“சொல்லு..”

“என்ன கலர்… தீபாவளிக்கு?”

“நான் வயலட்ல 5642-வது ஷேட் செலக்ட்… ஆனா பாரு… உனக்கு அதே கலர்ல தேடினா அவைலபிள் இல்லையே… அதான் குழப்பம்” என்றான் ஜீவா.

உடைகள் எடுக்கக் கடைகள் கிடையாது. மனிதர்களின் பொது உடை வெள்ளை. கழுத்து முதல் கால் முடிய, காலணி வரை ஒரு ரப்பர் அமைப்பு போல் அப்படியே மூடிக்கொண்டிருக்கும். உடையணியும் அறைக்குள் போனால் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே நிற்க வேண்டியதுதான். பழைய உடை நீக்கப்பட்டு அந்த இயந்திரமே முழுதாக மாட்டிவிட்டுவிடும். அதை இவர்களால் கழற்றவோ நீக்கவோ முடியாது. அவற்றில் பதிந்துள்ள சிப்களில் இவர்களின் முழு நடவடிக்கையும் இயல்பாகப் பொதுக் கணினியில் பதிந்துவிடும். மொத்தமாக ஆறு திருவிழாக்கள் அமைப்பு இயந்திரங்களில் பதிந்துள்ளன. விழாக்களின் காரண காரியங்கள் எதுவும் அவர்களின் நினைவில் இல்லை. ஆனால் அன்று முழுதாகப் பேசிக்கொள்ளலாம். விடுமுறை. அது இல்லாமல் இவர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ண உடைகளை அணிந்துகொள்ள அனுமதிக்கப்படும். கொஞ்சம் அசட்டையாக இருக்கப் பிடித்த வண்ணங்கள் குறைந்துகொண்டே வருகின்றன.

“எதுதான் நீ உடனே பண்ற?.. எது பாரு லேட்டு. நானாவது செய்திருப்பேன். சரி வேற எதுனா ஒரே கலர் கிடைக்குதா பாரு. அப்படி என்ன இதைவிட முக்கியமா பேச்சு உங்களுக்கு?” என்றாள் ராஜி. ராஜியின் காதலன் ஜீவா. அவர்களுக்கு நெருங்கிய தோழன் பாலு.

“ராஜி… இந்த வருஷம் ஆராய்ச்சிக்கு எனக்கும் இவனுக்கும் ஒரே தலைப்பில்ல. மாற்றம். கிட்டத்தட்ட முடிக்கப்போறோம். தப்பா நினைச்சுக்காதே” என்றான் பாலு.

“அட… பாருங்கப்பா… முடிக்கவே போறீங்களா? எனக்குச் செடிகளின் வடிவங்கள்னு ஒரு தலைவலி தலைப்புப்பா. பாதிகூடத் தாண்டலை.” முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு ராஜி சொல்ல, அவளின் அழகிய சோக முகத்தை ரசித்தபடி பேசினான் ஜீவா.

“கொஞ்சம் பொறுப்பா… நாலே நாள்… நாங்க முடிச்சுட்டு உனக்கு ஹெல்ப் பண்றோம். ஃப்ரீ டைம்ல பண்றோம். நீ பார்த்து எடுத்துக்கோ. யாருக்கும் தெரியாது.”

“விடு… முடிக்கலைனா என்ன… ஒரு லீவு கட் ஆகும். பார்த்துக்கலாம். அதைவிட முக்கியம், நீ எங்க அப்பாட்ட வந்து பேசறது. நேத்தே வரேன்ன. லேட்டாக அவர் வேற மாப்பிள்ளை பார்த்துட்டாருன்னா அப்புறம் அதை மாத்த முடியாது. தெரியுமில்ல..”

“ஏன் அவசரம் பண்றாரோ..”

“ஹலோ… எனக்கும் இருபது முடியப்போகுது. இருபத்தொன்னு தாண்டினா கல்யாணத்துக்குப் பர்மிஷன் கிடையாது, தெரியுமில்ல… அவர் பயம் அவருக்கு.”

“சரி… சாயந்திரமே வந்து பேசிடுறேன்… இப்ப நீ ஒரு உதவி செய்யேன்” என்றான் ஜீவா. அவள் கேள்வியாய்ப் பார்க்க, ஜீவா தொடர்ந்தான்.

“இதுபாரு ராஜி. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ன்னு ஏதோ பழைய வாசகம் கிடைச்சதாம். அதில எங்களுக்கு ஒரு விவாதம். போன நூற்றாண்டில் இருந்த, இன்னும் மாறாத விஷயம் என்னன்னு, எதுவும் இருக்காதுன்னு பாலு சொன்னான். ஏதாவது ஒண்ணாவது மாறாம இருக்கும்னு நான் சொல்றேன். நீ யார் பக்கம்?” என்றான் ஜீவா.

உலகில் ஒரு முப்பது வருடங்களுக்கு முன் பலவித நோய்கள் பரவின. ஒன்று போனால் ஒன்று என்று மாறி மாறி வந்து மக்களைத் தாக்கின. லட்சங்களில் ஆரம்பித்து, கோடிகளில் இறப்பு நிகழ்ந்தன. உயிரியல் ஆராய்ச்சியாளர்களுடன், பல்வேறு அறிவியலாளர்களும் இணைந்து ஓர் அதிர்வூட்டும் உண்மையைக் கண்டறிந்திருந்தனர். அதன்படி சில கிருமிகள் மனிதனின் அறிவாற்றலை விட மிக மேம்பட்டதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதனால் யூகிக்க முடியாத அளவில் அவற்றின் செயல்பாடு இருந்தது.

அதன் தன்மையை ஆராய்ந்து கண்டறிந்த உண்மை என்னவெனில், மனிதன் அந்த கிருமிகளை அழிக்க மருந்து கண்டுபிடிக்க முயற்சிக்க, அந்த கிருமிகள் யார் யாரெல்லாம் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்களோ அவர்களின் மூளையின் செயல்பாட்டைத் தாக்க ஆரம்பித்து, அவர்களின் நினைவாற்றலைப் போகச் செய்துகொண்டிருந்தன. அத்தோடு நில்லாமல், மனிதர்கள் அனைவர் மீதும் அந்தத் தாக்குதலைப் பிரயோகிக்க, ஒட்டுமொத்த மனிதச் சமுதாயமே தன் பழைய நினைவுகளை இழந்தன. என்ன நடந்தது, என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனாசக்தி முழுதும் நீங்க, பெயரும், உறவுகளும் மட்டும் தெரிய உலகமே ஒரு குடைக்குள் அடங்கிப்போனது. ஜனத்தொகை பாதியாகக் குறைந்து போயின. இந்தத் தாக்குதலின் வீரியத்தை ஒரு பாதி சமூகம் மட்டுமே சமாளித்து எதிர்த்து நின்றது. ஓரளவு அறிவும், கொண்ட கருத்தில் உறுதியும் கொண்டவர்களின் மூளையின் பலத்தை அந்த கிருமிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன்பின் விழித்துக்கொண்ட மனித சமூகம், கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது. உலகின் இயற்கை வளத்துக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகள் குறைக்கப்பட்டன. மனிதர்கள் வசிக்கப் பாதுகாப்பு காலனிகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களால் வீடுகள், அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. வெளி உலகில் இன்னமும் இருக்கும் ஞாபக சக்தியை இழந்த மனிதர்களைக் காக்கும் பொருட்டு அவர்களை மீட்டெடுக்க ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியின் அலுவலகத்தில்தான் இவர்களின் பணி.

இழந்த பழைய இலக்கிய, கலை செயல்பாடுகளை மீட்கும் வழியில் பல தலைப்புகளில் இவர்கள் ஆராய வேண்டும். இளம் தலைமுறைகளான இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களின் காலனி வீடும், அதன் சின்னச் சின்ன பொம்மை விளையாட்டுகளும், அலுவலகங்களும்தான். இப்போதைய வாழ்க்கை முறை இவர்கள் பிறந்ததிலிருந்தே இருப்பதால், ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

கமாண்டோ படை ஒன்று உண்டு. அவர்கள், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வெளி உலகில் சில நேரம் செல்வார்கள். அங்கிருக்கும் நூலகங்கள், அடையாளங்கள் ஆகியவற்றிலிருந்து கைபடாமல் சில ஒளிப்படங்களை எடுத்து வருவார்கள். அவற்றின் பிரதிகள் தற்போது பதியப்பட்டு அதிலிருந்து பழைய காலத்தை ஞாபகத்தில் மீட்டெடுக்கும் முயற்சியில் இவர்களைப்போல் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டிருந்தனர். சம்பளம், வசதிகள் என்று எதுவும் இல்லை. வேலை முடிந்தால், சில நாள் கிடைக்கும் லீவுதான் அவர்களுக்குச் சம்பளம். அதுவே சேமிப்பு, சொத்து எல்லாம்.

“நான் பாலு பக்கம்தான். எல்லாம்… எல்லாமே மாறிப்போச்சு. ஏதாவது ஒரு விஷயத்தை நீ சொல்லு, அது எது வேணா இருக்கட்டும். அது இப்ப எப்படி மாறியிருக்குன்னு நான் சொல்றேன்” என்றாள் ராஜி. அவளுக்கு அந்தத் தலைப்பில் ஓர் ஆர்வம் உண்டு. பழையதைக் கொஞ்சம் ஆர்வத்துடன் படிப்பாள். என்னவொரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று அடிக்கடி தோன்றும்.

“சரி… என்ன பெட்டு..?” என்றான் ஜீவா.

“நான் ஒரு நாள் லீவை உனக்குத் தர்றேன்…” என்றான் பாலு.

“நானும்” என்றாள் ராஜி. அவளை ரகசியமாகப் பார்த்து கண்ணடித்த ஜீவா மெதுவாக, “உன்கிட்ட வேற வாங்கிக்கறேன்” என்றான். அவனின் குறும்பை மனதில் ரசித்த அவள், “ஆனா நீ ஜெயிச்சாதானே..” என்றாள்.

அதற்குள் மணி அடிக்க, அவரவர் சீட்டுக்குக் கிளம்பினார்கள். பாலு தன் முன்னால் இருந்த மாயத்திரையைப் பார்த்தான். அவன் உற்றுப் பார்த்த இடத்திலிருந்து புள்ளி நகர்ந்து சில தகவல்களைச் சொன்னது. டேபிளில் இருந்த எலக்ட்ரிக் தாளில் விரலைத் தடவினான். அவன் பார்த்து, நினைத்த அந்தத் தகவல்கள் அதில் படபடவென்று பதிவாகியது. அவர்களின் உடையில் இருந்த சிப்களின் உதவியால், அவர்கள் அனைவரும் ஓர் அறிவுசார் இணைப்பில் இருந்தார்கள். வேலை முடியும் வரை அந்த இணைப்பின் மூலம் மைய கேந்திரத்துடன் இணைந்திருப்பார்கள். பொதுத் தலைமை என்று எதுவும் இல்லை. மனிதர்களின் கூட்டு உழைப்பின் மூலம் அனைத்தும் சாதிக்கப்பட்டன. யாரும் அவரவர் கடமையிலிருந்து கொஞ்சமும் தவறுவதில்லை. கவனத்தை இடறும் எந்தவொரு செயல்பாடும் இல்லாததால், வாழ்க்கை அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது.

ஐந்து மணி அளவில் வேலை முடிய, பாலு தன் கையில் இருந்த அந்த எலக்ட்ரிக் தாளை ராஜியிடம் கொடுத்து, “ராஜி… இதை வச்சுக்கோ, பாரு… அவன் கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கும். உன் அறிவையும் சேர்த்து இவனைக் கவுத்துடு… ஒரேயடியா வாதம் பண்றான். எனக்கு ஓர் அவசரம். நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அடுத்த ஷிஃப்ட் ஆட்கள் வரும்வரை அவர்கள் அங்கே இருக்கலாம்.

“கேட்கறியா?” என்றாள் ராஜி.

“ம்… நான் ரெடி. பந்தயம் வேற இருக்கில்ல… இங்கேயே தந்திட்டுப் போகணும் சரியா..?”

“மகனே முதல்ல ஜெயிச்சுட்டு சொல்லு.”

“சரி…. இப்ப மாத்திரை சாப்பிடறோம். ஆனா அந்த காலத்துல தட்டு நிறைய வகை வகையா வச்சு சாப்பிடுவாங்களாம். இது இன்னமும் சில இடங்கள்ல இருக்குன்னு நினைக்கிறேன்.”

“சான்ஸே இல்லை. தாவர வகைகளில் நான் பார்த்துட்டு இருக்கேன். பயிர் விளையற இடம் எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கு. எனக்கே அதிலிருந்து சில சமயங்களில்தான் ஸ்டில் கிடைக்குது. அதிலிருந்து எடுத்த எக்ஸ்ட்ராக்ட் தான் நமக்கு உணவா மாற்றப்படுது. கிருமிகள் வரலாம்னு பழைய உணவுகள் எல்லாத்துக்கும் தடைதான்” என்றவள் அவனின் பார்வையைப் பார்த்துச் சட்டென்று, “தலைவரே… இங்க நம்ம அளவில்தான் பேச்சு. நமக்கு முழுசா தெரியாத வெளி உலகைப் பத்தி பேசக்கூடாது. அது இன்னும் ஆராயணும்” என்றாள் ஜாக்கிரதையாக.

“சரி… அதை விடு… தீபாவளிக்கு கலர் டிரஸ் போடணும்னு இருக்கோமே, அது மாறாத விஷயம்தானே…”

“நமக்கு கிடைச்ச லீவில் அது ஒண்ணு, வேறென்ன அதில் விசேஷம். அப்ப அது ஒரு பெரிய பண்டிகை போல. அப்போ பணம்னு ஒண்ணு இருந்தாதான் தீபாவளியே இருக்குமாம். டிரஸ் இதுபோல இல்லாம, உடம்பு முழுசும் பல வண்ணங்களில் நாமளே செலக்ட் பண்ணிக்கலாமாம். முழு சுதந்திரமாம். வேடிக்கையா இல்ல?”

“ம்..ம்.. என்ன சொல்றது. நாம ஓர் அமைப்பின் கீழ இருக்கோம். அது அந்த கால அரசாங்கம் போன்ற அமைப்புன்னு நினைக்கிறேன்.”

“அது வேற அமைப்புப்பா. அதுக்கு ஜனங்கள் எல்லாம் சேர்ந்து தேர்ந்தெடுப்பாங்க. அதிலிருந்து யாராவது வந்து தலைமையில இருப்பாங்களாம். ஜனங்க ஏதும் செய்ய முடியாது. வாழலாம், இல்லைனா சாகலாம். தேவையானது எதுவும் அவங்க செய்து கொடுப்பாங்கன்னு கட்டாயம் இல்லையாம். ஆனா இப்ப பாரு. ஒரு தலைமைனு சொல்லிக்கறமே தவிர, நீயும் நானும் சேர்ந்த ஒரே நெட்வொர்க்கின் அங்கம் தான் எல்லாம். இங்க வேணுங்கிறதை எல்லாரும் பகிர்ந்துக்கறோம். என்ன வேணும், வேணாம் எல்லாம் நம்ம கைல இருக்கு. இது முழுசா வேற அமைப்புப்பா..” என்று அவள் சொல்ல, மணி ஆகியிருந்தது.

“ராஜி… பந்தயத்தில் நீ ஜெயிச்சா… என்ன பரிசு எதிர்பார்த்த?… ”

“நான் சொல்ற கலர்ல நீ டிரஸ் செலக்ட் பண்ணனும்னு.. ஏன் கேட்கற?”

“இல்ல… நான் கேட்க நினைச்சதையே நீயும் நினைச்சிருந்தா… நீயே ஜெயிச்சதா ஒத்துகிட்டு பரிசை கொடுத்திடலாம்னு இருக்கேன்.”

மனதில் வந்த சிரிப்பை அடக்கியவாறு, “என்ன நினைச்ச…?” என்றாள் ராஜி.

“போடி…” என்று கூச்சமாய் குனிந்தான் ஜீவா.

“ஒருவேளை, அந்த காலத்திலிருந்தே இந்த மாதிரி வழியறது ஒண்ணுதான் மாறாம இருக்கும் போல் இருக்குடா” என்று சிரித்தவள், “சரி கிளம்பு, அப்பா வந்திருப்பார்… போகலாம்” என்றாள்.

அவர்களின் வாசலுக்கு வர, சிக்னல் கிடைத்து அவர்களின் வாகனம் தரையில் படாமல் மிதந்தவாறு அவர்கள் முன் வந்து நின்றது. ஏறிக்கொள்ள அதிராமல் ராஜியின் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்தது. அவர்கள் வரும் தகவல் ராஜியின் அப்பாவுக்கு முன்னமே சென்று, அவர்களின் தகவலும் போய்ச்சேர்ந்திருந்தது. வணக்கம் சொல்லி வரவேற்றார். கைகொடுக்கவோ குலுக்கவோ அவர்களுக்குத் தெரியாது. ஹாலில் உட்காரச் சொன்னார்.

“தம்பி என்னவா இருக்கீங்க?” என்றார்.

“நான் ஃபிஃப்த் கிரேடு அங்கிள், இதுவரை மூணு வருஷம் லீவு கையில வச்சிருக்கேன். ஓய்வு காலம் எங்களுக்கு நல்லதா இருக்கும். அடுத்த வருஷம் ஒரு கிரேடு ஏறும்.”

“ஓ… நல்லது. ஒண்ணு மட்டும் உங்க தகவல்ல இல்லை. கேட்கட்டுமா?”

“கேளுங்க.”

“உங்க ஜாதி என்ன?” என்றார் அவர்.

முகத்தில் ஒளி அடிக்க ராஜியை நிமிர்ந்து பார்த்தான் ஜீவா. “ராஜி நான் கண்டுபிடிச்சிட்டேன்” என்றான். வெட்கமாய்த் தலைகுனிந்தாள் ராஜி.

Author

  • அப்பு சிவா, Appu Siva

    எழுத்தாளர் அப்பு சிவா, நாவல்கள், சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைகதைகள் போன்ற பல்வேறு வகைகளில் எழுதியுள்ளார். அவருடைய சில படைப்புகளில் "இருள் சூழ் உலகு, பாமரன்" மற்றும் "கடவுள் துகள்" ஆகியவை அடங்கும். 

You may also like

Leave a Comment