மாய நதி

​இரவு. மணி பார்க்கவில்லை, ஆனால் நிச்சயம் பன்னிரெண்டைத் தாண்டியிருக்க வேண்டும்.

​வானத்தில் நிலவு இருந்தது. அவ்வப்போது மேகங்கள் அதை மறைத்து மறைத்து விளையாடின. ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொண்டன. காற்றுதானா? அல்லது வேறு ஏதாவதா?

​ரகு சோபாவில் சாய்ந்திருந்தான். கண்கள் மூடியிருந்தன. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த மாய நதியொன்று மார்பில் வழியுதே என்ற பாடலின் ஓசையை மீறி ஒரு காலடி ஓசைக் கேட்டது.

​ராசுகுட்டி. அவனுடைய நான்கு வயதுப் பையன். கண்களில் அளவுக்கு அதிகமாய் மிரட்சி.

​”ப்பா…”

“என்னடா?”

​”நம்ம வீட்டுல பேய் இருக்கா?”

​ரகு சிரித்தான்.

“என்னடா உளர்றே?”

​பிஞ்சு விரல் சமையலறையைச் சுட்டியது.

“அந்தப் பாட்டி தான் சொன்னாங்க… இங்கே செத்துப்போனவங்க ஆவியா சுத்துறாங்களாம்…”

​ரகுவின் சிரிப்பு சட்டென்று நின்றது. முதுகுத் தண்டு சிலிர்த்தது.

​”பாட்டியா? எந்தப் பாட்டி ?” என்று கேட்டுக் கொண்டே ​அடுக்களையிலிருந்து சுமிதா வெளியே வந்தாள். கையில் ஆவி பறக்கும் காபி. பையன் சொன்னதைக் கேட்டதும் அவள் கை நடுங்கியது தெரிந்தது.

“சமையல் ரூம் பாட்டிம்மா. நான் தினமும் விளையாடுவேனே”

​’டமார்!’

நடுக்கத்தில் ​கோப்பை நழுவித் தரையில் சிதறியது. பீங்கான் சில்லுகள் தெறித்தன. காபி தரையில் ஒரு கறுப்பு ரத்த ஆறு போல ஓடியது.

​”ஏங்க… இவன் என்ன சொல்றான்? இங்கே நம்மைத் தவிர யாரும் கிடையாதே, இவன் யார் கூடப் பேசினான்? எப்ப விளையாடினான்?”

பயத்தில் ​சுமிதா ரகுவின் கையைப் பற்றிக்கொண்டாள். அவள் மார்பு அச்சத்தில் மேலும் கீழுமாக எழுந்து எழுந்து அடங்க, அது ரகுவை அந்த நேரத்திலும் அவளை ரசிக்க வைத்தது. சுமி பேரழகிதான் என்ற எண்ணம் மின்னல் போல வந்து விலகியது. வெட்கப்பட்டான். ஆதரவாகப் பற்றிய அவள் கை விரல்கள் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த கேரட் போல ஜில்லிட்டிருந்தன. கடித்துப் பார்க்கலாமா என்ற யோசனையை நிராகரித்தான்.

“எனக்கு பயமா இருக்கு ரகு…” என சுமிதா சொன்ன அந்த வினாடி.

​’க்ரிங்… க்ரிங்…’

​ஹாலில் இருந்த அந்தப் பழைய கருப்பு நிற லேண்ட்லைன் போன் அலறியது. இந்த நேரத்தில் யார்? ​நடுங்கும் கைகளில் ரிசீவரை எடுத்தான். காதில் வைத்தான்.

​”ஹலோ…”

​”டேய் ரகு… நான் தியாகு அண்ணன் பேசுறேன்…”

​ரகுவுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

“அண்ணே… நீங்களா… நான் நல்லா இருக்கேன்ணே… ஆனா இங்கே தான் ஏதோ சரியில்லை. என் பையன் பேயைப் பார்த்தேங்கிறான். சுமிதா நடுங்குறா… எனக்குப் பயமா இருக்குண்ணே…”

​மறுமுனையில் மௌனம். ஒரு எலக்ட்ரானிக் ஹம்மிங் ஓசை மட்டும் கேட்டது.

​பிறகு தியாகுவின் குரல். அதில் நடுக்கம் இருந்தது. அல்லது கோபம்?

​”ரகு… என்னடா உளறல் இது? உனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே… புதுசா தண்ணி அடிக்கிற பழக்கம் வந்துடுச்சா ராஸ்கல்” என்றது தியாகுவின் குரல்.

​ரகுவின் மூளைக்குள் ஒரு நரம்பு அறுந்தது போலிருந்தது. ​மெதுவாகத் திரும்பினான், அதிர்ந்தான். அவன் கையில் பற்றியிருந்தது சுமிதாவின் கையை அல்ல. சோபாவின் கிழிந்துபோன பஞ்சு. நிமிர்ந்தான், மேலும் அதிர்ந்தான்.

​எதிரில் சுமிதா இல்லை. ராசுகுட்டி இல்லை. உடைந்த காபி கோப்பை இல்லை.

​சுற்றிலும் பார்த்தான். அது வீடா? அதுவும் இல்லை. பாழடைந்த ஒரு மண்டபம். சுவர்களில் காரை பெயர்ந்து செங்கற்கள் பல் இளித்தன. மூலைகளில் ஒட்டடை. ​வியர்வை அருவி போல ஓடிக் கொண்டிருந்தது. போனை இன்னும் காதில் வைத்திருந்தான். கவனித்தான், கையில் இருந்தது லேண்ட்லைன் அல்ல. அவனுடைய மொபைல்.

​”அ… அண்ணே…?”

​லைனில் யாருமில்லை. சிக்னல் கட் ஆகியிருந்தது.

​”மை காட்… எனக்கு என்னாச்சு? எல்லாம் மனப் பிரம்மையா?”

​முகத்தில் கையை வைத்துத் தேய்த்துக்கொண்டு தெளிவடைய முயன்றான். முகத்தைக் கழுவிக் கொண்டான். பத்துக்குப் பத்து அறை. தனிமை. இதுதான் நிஜம். அந்தப் பெரிய வீடு, மனைவி, பிள்ளை… எல்லாம் மன அழுத்தம் கொடுத்த பிரம்மை. வேலை இல்லாத விரக்தி. தூக்கமின்மை.

அவன் தூங்கியே நான்கு நாளானது நினைவிற்கு வந்ததும் கசங்கலாகச் சிரித்தான்.

​நிலவின் வெளிச்சத்தில் வெளியே வந்தவன் உறைந்துபோய் நின்றான். ​இது வீடே இல்லை.

​கீழே பார்த்தான். அவன் ஒரு பாலத்தின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்திருப்பது புரிந்தது. கீழே ஐம்பது அடி ஆழத்தில் நதி இருளில் ஓடிக்கொண்டிருந்தது.

​மூளையின் நியூரான்களின் அடுக்குகளில் இருந்து அவனுடைய நினைவுகள் திரும்பின. அம்மாவிடம் சண்டை. வீட்டை விட்டு வெளியேறியது. பாலத்தில் வந்து உட்கார்ந்தது… எல்லாம் சரிதான். பின் ஏன் இத்தனைக் குழப்பம்?

​”தியாகு அண்ணனிடம் பேசினால் தெளிவு கிடைக்கும்…” என்று நினைத்தபடியே மொபைலை அன்லாக் செய்தான்.

​வால்பேப்பரில் அவன் அப்பா, அம்மாவுடன் சிரித்துக் கொண்டிருந்தான்.

​அந்தப் புகைப்படத்தைப் பார்த்த அந்த நொடி… ரகுவின் தொண்டைக்குழிக்குள் இருந்து ஒரு சத்தம் பீறிட்டது.

“வீல்ல்ல்ல்ல்ல்”

​காரணம் இரண்டு. ​ஒன்று, அவன் அந்த வீட்டுக்கு ஒரே பிள்ளை. அவனுக்கு ‘தியாகு’ என்ற பெயரில் அண்ணனே கிடையாது. அப்படி என்றால் இவ்வளவு நேரம் பேசியது யார்?

​இரண்டு, அவன் ஊரைச் சுற்றி இருபது மைல் தூரத்திற்கு நதியே கிடையாது.

​அப்படி என்றால்… அவன் உட்கார்ந்திருக்கும் பாலம்? கீழே ஓடும் நதி?

​எது உண்மை?

​கேள்விகள் அவன் செல்கள் ஒவ்வொன்றையும் அரித்தன. கத்த முயன்றான். குரல் வரவில்லை. சில்லிட்ட காற்று வீசியதில் மேகங்கள் விலகின. முழு நிலவு அந்தப் பாலத்தின் மீது பளீரென வெளிச்சத்தைப் பாய்ச்சியது.

​இப்போது…

​அந்தப் பாலத்தில் ரகு இல்லை. ​அவன் அமர்ந்திருந்த தடம் கூட இல்லை.

​வெறிச்சோடிய அந்தப் பாலத்தின் நடுவே… அனாதையாக அந்த மொபைல் போன் மட்டும் கிடந்தது. ​அதிலிருந்து மாய நதியொன்று பாட்டின் மெல்லிய ரிங்டோன் ஒலித்துக் கொண்டே இருந்தது.

Author

Related posts

நன்றிக்கடன்

உப்புக் காற்று

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்

2 comments

Radha Narasimhan January 31, 2026 - 11:18 am
அருமை....பயந்தப்படி தான் படித்தேன்....திகில்
ஐயப்பன் கிருஷ்ணன் February 1, 2026 - 8:25 am
மிக்க நன்றிங்க. அன்புடன் ஐயப்பன்
Add Comment