Home கட்டுரைமனத்திலிருந்து..

மனத்திலிருந்து..

by Kalpana Rathan
0 comments

நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வசைபாடிக் கொண்டு பேசுகிற பேச்சையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும் பொழுது இப்படியொரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது.

இதற்கு முன்பும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அரசியல் மீது பற்று கொண்டு தாங்கள் விரும்பும் தலைவர்களை ஒரு முன்மாதிரியாக வைத்து வேலைகள் பார்த்தார்கள். அரசியல் கூட்டங்களுக்குப் போய் வந்து அதைப்பற்றி விமர்சனங்கள் பரிமாறிக் கொண்டார்கள். ‘படிக்கிற வயசுல உங்களுக்கு அரசியல் எதுக்கு?’ என்று பெற்றோர்களின் கடுஞ்சொற்கள்தான் இருந்திருக்கும்.

ஆனால் இப்போது உள்ள மாணவர் சமுதாயம் எப்படி எப்படியோ மாறிப் போய்விட்டது. பள்ளியிறுதி வகுப்பு வரை உள்ள மாணவர்களைக் கணக்கில் கொண்டால் நல்ல மதிப்பெண்கள், பிடித்த வேலை, பெரிய கம்பெனிகளில் நல்ல சம்பளம் என்று குறிப்பிட்ட சதவீதத்தினர் மாய்ந்து மாய்ந்து படித்து, படிப்பு மட்டுமே உலகம் என்று இருப்பார்கள்.

அதற்கடுத்து குறிப்பிட்ட சதவீதத்தினர் சுமாராகப் படித்தாலும் அவர்களால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஒரு சினிமாவில் சொல்வது போல் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டுச் செல்வார்கள்.

அதற்கு அடுத்தபடியாக உள்ள குறைந்த சதவீதத்தினர். கொஞ்சம் ஆபத்தானவர்கள் இவர்கள்தான். ஒரு வகுப்புக்கு சுமார் 10 பேர் என்றாலும் வைரஸ் போல பல்கிப் பெருகுவார்கள். நன்றாக உள்ளவர்களையும் அவர்கள் வலைக்குள் இழுத்துக் கொள்வார்கள். இப்போது பேசுவது அவர்களைப் பற்றித்தான்.

பெற்றோர்களின் அதீதச் செல்லம் ஒரு முக்கிய காரணம். கேட்டதெல்லாம் கிடைத்து விடுகிறது. கேட்டது கிடைக்காத போது மனதளவில் வன்முறை அங்கேயே ஆரம்பிக்கிறது. யார் பேச்சையும் கேட்பதில்லை. யாருக்கும் யாரிடமும் பயம் இல்லை. முன்பெல்லாம் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம், ‘கண்ணையும் தலையையும் தவிர எங்கே வேண்டுமானாலும் அடிங்க’ என்று சொல்லுவார்கள். இப்போது அவர்களால் திட்டக் கூட முடியாத இயலாமை.

பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் மாணவர்களுக்குக் கொடுக்கும் முன்னுரிமை. சின்னதாக அடித்தால் கூட போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு வைரலாக்குவது மற்றும் பள்ளியிலேயே ஆசிரியர்களைத் தாக்கிய எத்தனை காட்சிகளைப் பார்த்து பதைத்திருக்கிறோம். ஆசிரியர் அடித்து விட்டார் என அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி அவரை அழுது மன்னிப்பு கேட்க வைத்த மாணவர்களையும் பார்த்திருக்கிறேன். குழு மனப்பான்மையில் என்னென்னவெல்லாம் நடக்கின்றன.

இங்கேயே ஜாதி வர்க்க வேறுபாடுகள் எல்லாம் ஆரம்பித்து விடுகின்றன. ஜாதியை சொல்லித் திட்டுவது அப்பாவின் தொழிலை வைத்து கிண்டல் பண்ணுவது.. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அப்போது எங்களிடம் சொல்லி, கதறி அழும் காட்சியையும் கண்டிருக்கிறேன்.நிறையப் பேருக்கு ஒரு தெளிவான குறிக்கோளே கிடையாது. உங்களுக்கு ரோல் மாடல் யார் என்றால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அடிதடி வன்முறை பட நடிகர்கள், wrestling மாதிரி விளையாடுபவர்கள், பாப் பாடகர்கள் தான் இருப்பார்கள். மறந்தும் கூட தேசியத் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் யார் பெயரும் சொல்ல மாட்டார்கள்.

இதையெல்லாம் பெற்றோரோ, ஆசிரியரோ எடுத்துச் சொன்னால் கேட்கும் மனநிலை மாணவர்களிடம் இல்லை. கொரோனா காலத்தில் அலைபேசி பயன்பாடு அதிகரித்ததும் காரணங்களில் ஒன்று.பான்பராக் மாதிரியான போதையூட்டுபவற்றை வகுப்பில் கூட மென்று கொண்டிருத்தல், பிறந்தநாள் பார்ட்டிகளில் மது வகைகள், இன்னும் சொல்ல முடியாத விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு பேஷன், ட்ரெண்டிங் தான்.

இந்த மாதிரியானவர்கள் கிராமம், சிறு, பெரு, நகரங்கள், மேல்மட்ட, நடுத்தர, அதற்குக் கீழேயுள்ள குடும்பங்களில் இருக்கிறார்கள். நடிகர்கள், அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேடி ஓடுகிறார்கள். யாருக்காவது fan, ரசிகர்களாக இருக்கும் போது கூட பரவாயில்லை, fanatic ஆக வெறித்தனமான ரசிகர்களாக மாறும் போது நடக்கும் விளைவுகள் எல்லோரையுமே பாதிக்கின்றன.

எல்லோரும் சேர்ந்து பொறுமையாகக் கையாள வேண்டிய முக்கியமானவொன்று.நாம் எல்லோருமே ஏதோவொரு வகையில் காரணமாகிறோமோ? இந்த மாதிரி தான்தோன்றித்தன இளைஞர்களுடன் நாம் வாழ்கிறோமா? என்று முன்பெல்லாம் கவலையாக இருந்தது இப்போது பயமாக உள்ளது. இப்படிப்பட்ட, முதிர்ச்சியற்ற, அரைவேக்காடுகளைக் கொண்ட இளைய சமூகத்தை எப்படி நல்வழிப்படுத்துவது?

இதற்கான நல்லதோர் தீர்வை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். எப்படி என்பது தான் எல்லோர் முன்னாலும் உள்ள மிகப்பெரிய கேள்வி.

Author

  • சிவகாசியில் வசிக்கும் கல்பனாரத்தன் ஆங்கில ஆசிரியை. தமிழ் மீதும் காதல் கொண்ட தீவிர வாசிப்பாளர். சமூக ஆர்வலரும்கூட! கவிதையும், சிறுகதையும் இவரது படைப்புலகம். இவரது ஒருபக்க சிறுகதைகள், கவிதைகள் பல வாரஇதழ்களிலும் வெளிவந்து பரிசுகளும் வென்றுள்ளன. ‘கந்தகப்பூக்கள்’ என்னும் இலக்கிய அமைப்பில் இணைந்து செயல்பட்டுவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு, ‘மனம் உதிரும் காலம்’.

You may also like

Leave a Comment