பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கும். பெற்றோர்களையே ரோல் மாடல்கள் என்று குழந்தைகள் எண்ணுவர்.
குழந்தைப் பருவத்தில் நண்பர்கள், தோழிகள் போன்ற உறவுகள் அவ்வளவு திடகாத்திரமாக இருக்காது. பருவ வயதில் பூப்பெய்துதல் நிகழும்போது, வளர் இளம் பருவம் தொடங்கும் காலம் தொட்டு தங்களின் உடல் மற்றும் உளவியலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாகப் பெற்றோர்களின் உலகத்தில் இருந்து சற்றே விலகி நண்பர்களின் உலகத்துக்குள் நுழைய விரும்புகின்றனர். இப்படி டீன் ஏஜ் தொடக்கம் தொட்டு இந்த உறவு பலகீனம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும்.
அவற்றுள் முக்கியமானவை என டீன் ஏஜ் பிள்ளைகள் நினைப்பவை
1. பெற்றோர்கள் / ஆசிரியர்கள் / சமூகத்திடம் இருந்து கிடைக்கும் அவமானம். குறிப்பாக “INSULT” என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனர். அவர்கள் தாங்கள் தரக்குறைவாக அல்லது திறமைக்குறைவானவர்களாக அணுகப்படுவதை விரும்புவதில்லை. அதிலும் தங்களைப் பெற்று இது நாள் வரை சீராட்டிப் பாராட்டி வளர்த்த பெற்றோர் தங்களை இன்சல்ட் செய்வதை முற்றிலுமாக வெறுக்கிறார்கள்.
2.தங்களின் பெற்றோர்களால் தங்களின் இயற்கையான அந்த டீன்ஏஜ் வயதுக்கே உரிய கவனக்குறைவு / கவனச்சிதறல் / கற்றல் குறைபாடு / தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுப்பது போன்றவற்றிற்காகப் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் மனம் விரும்புவதில்லை. கன்ஃபார்மிட்டி பயாஸ் கொண்டு ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து ஒன்றை உயர்த்தி மற்றொன்றை மட்டம் தட்டும் நமது குணத்தைப் பிள்ளைகள் வெறுக்கின்றனர்.
3.இதுநாள் வரை பெற்றவர்களிடம் இருந்து கிடைத்து வந்த அரவணைப்பு, திடீரென காணாமல் போவது பல டீன் ஏஜ் பிள்ளைகளை அந்த அரவணைப்பை மற்றொருவரிடம் தேடுமாறு உந்துகிறது. இது நார்மல் மனித சைக்காலஜி. பொதுவாகவே கணவன் மனைவி தங்களுக்குள் ஈர்ப்புடன் அன்பு செய்து அரவணைப்புடன் இருப்பதே நல்ல இல்லறம். இதில் ஒருவருக்கு மற்றொருவரிடம் இருந்து கிடைக்கும் இந்த அரவணைப்பு குறைந்தால் அதை மற்றொருவரிடம் தேடும் நாட்டம் வரும். ஆனால் முதிர்ந்த அறிவுடைய பக்குவப்பட்ட மனம் படைத்த நாம் அப்படி உடனடியாக அடுத்த உறவுகளில் பந்தத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால் டீன் ஏஜ் பருவத்தில் மனம் பக்குவப்படாத சூழ்நிலையில் பெற்றோர்கள் விடும் வெறுமையைப் பிள்ளைகள் வேறு ஒருவருடன் நிரப்பிக் கொள்ள விரும்புவது சகஜமாகிறது.
4.உணர்வால் தனிமைப்படுத்தப்படுதல். வயதுக்கு வந்து விட்டதால் திடீரென பல டன் பாரத்தை அவர்கள் மீது தூக்கி வைத்து குழந்தைப் பருவத்தில் இருந்து முதிர்ந்த பருவத்திற்கு மெதுவாக அழைத்துச் செல்லாமல் உடனடியாக அவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள் போல சிந்திக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ‘நமது டீன் ஏஜ் பிள்ளைகள் நம்ம கூட தான இருக்காங்க, அவுங்களுக்கு வேண்டியதச் செய்றோமே அப்பறம் என்ன தனிமை?’ என்று நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.
டீன் ஏஜ் வளர் இளம் பருவத்தில் அவர்களுக்குள் நிகழும், அவர்களைச் சுற்றி நிகழும் பல மாற்றங்களை அங்குலம் அங்குலமாக அறிந்து கொண்டு, அவர்களுக்குக் கூடவே நிழல் போல நல்ல தோழர்களாக இருந்து தங்களது அனுபவத்தையும் அறிவையும் அறிவியலையும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையைப் பெற்றோராகிய நாம்தான் செய்ய வேண்டும். பெற்றோராகிய நாம் “எம்பதி” எனும் எதிராளியின் உணர்வை நாம் உணர்ந்து அவருடன் தொடர்பு படுத்தி ஒரு வழியைக் கூறும் போது, நமக்கென நம் மனம் அறிந்த தோழனோ தோழியோ பெற்றோர் வடிவில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கூறக்கூடும். இதன் வழி அவர்களது தனிமையைப் போக்கி நம்மால் இயன்ற அளவு நல்ல வழியை அவர்களுக்கு உண்டாக்கிட முடியும்.
5.முன்னுதாரணமின்மை. பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை முன்னுதாரணங்களாக எடுத்துக் கொள்ளும் போது, பெற்றோராகிய நாம் பல விசயங்களில் நம்மைச் சீர் செய்து கொள்ள வேண்டியுள்ளது. சிகரெட் பிடிக்கும் தந்தையோ, மது அருந்தும் தந்தையோ, அவரது மகனுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கணவன் மனைவி பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தாயும் தந்தையும் கண்ணெதிரே வாழும் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. தந்தையின், தாயின் நடத்தைகள் மகன் மற்றும் மகளின் போக்கைத் தீர்மானிக்கக்கூடும்.
6.அதீத அன்புடன் + கண்காணிப்பின்மை. டீன் ஏஜ் பருவத்தில் கொஞ்சம் தனிமையை விரும்புவது இயற்கை. இந்தத் தனிமையில், தங்களது உடலில் அங்கங்களில் நேரும் மாற்றங்கள் குறித்து ஃபேண்டசைஸ் செய்து கொள்வதும் இயற்கை. தோழமைகளுடன் தங்களது உடல் மற்றும் பாலியல் சார்ந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது களிப்பு தரும் விசயமாக இருக்கும். இப்படியாக அவர்களுக்கான வெளி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான ப்ரைவசியும் சரிதான். ஆனால் பெற்றோராகிய நமக்கு, அவர்களை அன்புடன் தொடர்ந்து கண்காணித்து வரும் முக்கிய கடமை இருக்கிறது. அவர்களின் தோழமைகள் குறித்த விபரங்கள் , அவர்களின் சோசியல் மீடியா செயல்பாடுகள் , அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் அடையாளம் கண்டு உடனே சீர்செய்யும் கடமையும் நமக்கு உண்டு. எனினும் இந்தக் கண்காணிப்பில் தனிமனிதச் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும். எல்லை மீறி அராஜகமாக நடந்து கொண்டால் ஒவ்வாமை விளைவு ஏற்பட்டு உறவு விரிசல் ஏற்படக்கூடும்.
ஆய்வு முடிவுகளில் போதை வஸ்துக்கு அடிமையான டீன் ஏஜ் பிள்ளைகளில், என்ன மனநிலை போதை பொருள் உட்கொள்ள உந்தியது? எனும் கேள்விக்கு..
16% அவமானகரமாக உணரும் போது+ புறக்கணிக்கப்படும்போது
40% சோகமாக இருக்கும் போது
42% நண்பர்களுடன் சந்தோசமாக இருக்கும் போது
2% பேர் பய உணர்வு கொள்ளும் போது போதைக்கு அடிமையானதாக கூறியிருக்கிறார்கள்
யார் உந்துதலில் போதைக்கு அடிமையானீர்கள்? என்ற கேள்விக்கு..
45% பேர் நண்பர்களின் அழுத்தம்
21% எளிதாக போதை பொருட்கள் கிடைப்பதால்
17% புதிதாக முயற்சி செய்து பார்ப்போம் என்ற ஆர்வத்தில்
12% தனிமையான உணர்வைப் போக்குவதற்கு
5% வாங்குவதற்கு பணம் இருப்பதால்
என்று பதில் கூறியிருக்கின்றனர்.
இவ்வாறாக, பெற்றோர்களுக்கு டீன் ஏஜ் பிள்ளைகள் வளர்ப்பில் முக்கியமான பங்கு உண்டு. ஒரு மனிதனின் 90% குணநலன், மனம், எண்ணம் சார்ந்த முன்னேற்றம், மற்றும் எந்தத் தொழில் செய்யப்போகிறார்? போன்றவற்றை டீன் ஏஜ் முடிவு செய்கிறது. அறிவு முதிர்ச்சி, அனுபவ முதிர்ச்சி, உடல் சார்ந்த முதிர்ச்சி போன்றவை ஒருங்கே நிகழும் இந்த முக்கியமான டீன் ஏஜின் பருவத்தில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது.