மருத்துவர் பக்கம் -16: ஆரோக்கிய ரமலான் 2026

அறிவியல்பூர்வமான பரிந்துரைகள்
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்புச்சத்து, அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை உண்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.

பேலியோ வழி ரமலானை அணுகும் போது கீழ்க்காணும் வகைகளில் நம்மால் மக்களை வகைப்படுத்த முடியும்:

அ. ஆரோக்கியமான உடலுடன் நோய் அற்றவர்கள் (HEALTHY ADULTS WITH NO DISEASES) – மாதிரி உணவு முறை ஆ. இணை நோய்களுடன் வாழ்பவர்கள் (PEOPLE LIVING WITH COMORBIDITIES) – நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் இ. மெய்ண்டெனன்ஸ் பேலியோ உணவு முறையில் இருப்பவர் (PEOPLE IN MAINTENANCE DIET) ஈ. தீவிர நோய் நிலையுடன் இருப்பவர்கள் (PEOPLE WITH SEVERAL SEVERE DISEASES) உ. சிறப்பு வகுப்பினர் (SPECIAL CATEGORY) ஊ. ரமலானில் உடல் உழைப்பு எ. ரமலானில் உறக்கம்


அ. ஆரோக்கியமான உடலுடன் நோய் அற்றவர்கள்

வளர் இளம் பருவத்தினர், எந்த இணை நோய்களும் இல்லாத வயது வந்தவர்கள், முதியோர்கள் இந்த வகையில் வருகிறார்கள்.

சஹர் (காலை நோன்பு வைக்க உண்ணப்படும் உணவு):

  • 3 முதல் 4 முழு முட்டைகள் + 100 கிராம் காய்கறிகள்.
  • 100 கிராம் மாமிசம் (மீன்/ மட்டன்/ பீஃப்/ கோழி) – (எண்ணெயில் அமிழ்த்திப் பொரிக்கக்கூடாது).
  • 1 முதல் 1 ½ லிட்டர் நீர் அருந்த வேண்டும் (மோர் / தயிர்).
  • இதனுடன் ஒரு டம்பளர் பால் (இனிப்பில்லாமல்) கூட 20 கிராம் வெண்ணெய் சேர்த்துப் பருகலாம்.

இஃப்தார் (மாலை நோன்பு திறப்பதற்கு உண்ணப்படும் உணவு):

  • 200 கிராம் பேலியோ காய்கறிகள் போட்டுச் செய்யப்பட்ட காய்கறி சூப் + 20 கிராம் வெண்ணெய் சேர்த்து (CREAMY VEGETABLE SOUP).
  • 1 லிட்டர் தண்ணீர் அருந்தவும்.
  • பேலியோ பனீர் கேரட் வடை (PANEER CARROT VADA) – (தோசைச் சட்டியில் எண்ணெயில் அமிழ்த்தாமல் குறைவான வெப்பத்தில் செய்யப்பட வேண்டும்).
  • பனீர் டிக்கா.

இரவு உணவு:

  • 300 முதல் 400 கிராம் அளவு மாமிசம்.
  • இதனுடன் 1 முதல் 1½ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

ஆ. இணை நோய்களுடன் வாழ்பவர்கள் (PEOPLE LIVING WITH COMORBIDITIES)

நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள் ரமலான் மாத நோன்பு நோற்பதில் எதிர்பார்க்கப்படும் ஆபத்துகள்:

  1. குறை ரத்த சர்க்கரை (HYPOGLYCEMIA)
  2. அதிக ரத்த சர்க்கரை (HYPERGLYCEMIA)
  3. நீர்ச்சத்து குறைபாடு (DEHYDRATION)
  4. ரத்த உறைதல் தன்மை அதிகரித்தல் (THROMBOSIS)

PRE RAMADAN HEALTH ASSESSMENT: ரமலானுக்கு முந்தைய மாதத்தில் தாங்கள் சந்திக்கும் மருத்துவரிடம் கட்டாயம் தங்களது இணைநோய்களைப் பரிசோதனை செய்து, நோன்பு நோற்பதற்கு ஏற்ற நிலையில் உடல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மாத்திரைகளில், இன்சுலினில் செய்ய வேண்டிய மாற்றங்களை மருத்துவர் அறிவுரையின்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் பின்வரும் வகைப்படி பிரிக்கப்படுகின்றனர்:

Very High Risk patients:

  • Hba1c அளவுகள் 9-க்கு மேல் இருப்பவர்கள்.
  • அடிக்கடி ரத்த சர்க்கரை குறைபாட்டால் அவதிப்படுபவர்கள்.
  • கடந்த மூன்று மாதங்களுக்குள் கீட்டோ அமிலத்தன்மைக்கு (DKA) உள்ளானவர்கள்.
  • கர்ப்ப கால நீரிழிவு.
  • நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் காய்ச்சல்.
  • அதீத உடல் உழைப்பு செலுத்த வேண்டிய நீரிழிவு நோயாளி.

HIGH RISK DIABETIC PATIENTS:

  • Hba1c 7.5 முதல் 9 வரை.
  • ரத்த சர்க்கரை அளவுகள் 150-300 mg/dl.
  • சிறுநீரகச் செயல்பாட்டு அழற்சி/ போதாமை.
  • eGFR < 90.
  • தனியாக வாழும் முதியோர்.
  • பல்வேறு இணைநோய்கள் ஒன்றாக இருப்பவர்கள்.

MODERATE RISK DIABETIC PATIENTS:

  • மாத்திரைகளுடன் / இன்சுலினுடன் நல்ல கட்டுப்பாட்டில் உள்ள நீரிழிவு உள்ளவர்கள் (Hba1c < 7.5).
  • வேறு இணை நோய்கள் இல்லாதவர்கள். இவர்கள் இன்சுலின் மற்றும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையில் குறைத்து/ மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

LOW RISK PATIENTS:

  • மாத்திரை மருந்துகளின்றி உணவு முறை மற்றும் உடல் உழைப்புடன் நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.

குறிப்பு: நீரிழிவு நோயாளிகள் நோன்பு வைக்கும் போது கட்டாயம் தனியாக இருக்கக்கூடாது. குளுக்கோமீட்டர் கருவி கொண்டு காலை எட்டு மணி, மதியம் ஒரு மணி, மாலை ஐந்து மணி, இரவு எட்டு மணி என அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும்.

ஹைப்போ கிளைசீமியா அலர்ட்: கையில் எப்போதும் குளுக்கோஸ் / சீனி வைத்துக் கொள்ள வேண்டும். தலைசுற்றல், படபடப்பு, வாந்தி, குமட்டல், வேர்த்துப்போதல் இருப்பின் அல்லது ரத்த குளுக்கோஸ் அளவுகள் 70-க்குக் கீழ் குறைந்தால் உடனடியாக நோன்பை முறித்துவிட வேண்டும். குளுக்கோஸ் பானத்தை அருந்த வேண்டும். ரத்த குளுக்கோஸ் அளவுகள் 300-க்கு மேல் ஏறாமலும் இருக்க வேண்டும். கட்டாயம் சீனி/ இனிப்பு கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தக் கொதிப்பு நோயாளிகள்:

  • நல்ல கட்டுப்பாட்டில் ரத்த அழுத்தத்தை வைத்திருப்பவர்கள் நோன்பு நோற்கலாம்.
  • கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் மக்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாத்திரைகளைச் சரிவர மாற்றிக்கொண்டு நோன்பு வைக்க வேண்டும்.
  • ACCELERATED HYPERTENSION எனும் அதீத ரத்தக் கொதிப்பு நிலை கொண்டவர்கள் நோன்பு வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
  • ரத்தக் கொதிப்புடன் சிறுநீரகப் பிரச்சனை (EARLY STAGE KIDNEY DISEASE/ ALBUMINURIA) இருப்பவர்கள் நோன்பைத் தவிர்ப்பது நல்லது.
  • உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அபாய அறிகுறிகள்: தலைசுற்றல், குமட்டல், தடுமாற்றம், தலைவலி. ரத்த அழுத்தமானியில் பரிசோதனை செய்து அழுத்தம் அதிகமாக இருப்பின் நோன்பை முறித்துவிட்டு மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

இதய நோய் இருப்பவர்கள்: தங்களது இதய நோய் சிறப்பு நிபுணரை அணுகி ஈசிஜி (ECG), எக்கோ (ECHO) பரிசோதனைகள் மேற்கொண்டு இதயத்தின் செயல்திறனை ஆய்வு செய்து, இதய நோய் நிபுணரின் பரிந்துரைப்படி நோன்பு இருக்கலாம்.

இதயச் செயலிழப்பு (HEART FAILURE) & நோன்பு:

  • LOW & MODERATE RISK: தீவிரமற்ற இதயச் செயலிழப்பு (EJECTION FRACTION >40) இருப்பவர்கள்.
  • HIGH RISK HEART PATIENTS: அமர்ந்திருக்கின்ற நிலையில் அதிக மூச்சுத் திணறல், நடந்தால் மூச்சுத் திணறல் (EJECTION FRACTION < 40). இவர்கள் கட்டாயம் உயிர்காக்கும் மருந்துகளை, மாத்திரைகளை நிறுத்தக்கூடாது.

இ. மெய்ண்டெனன்ஸ் பேலியோ உணவு முறையில் இருப்பவர் (PEOPLE IN MAINTENANCE DIET)

இதைச் சாமானிய மக்கள் (Common man) உணவு முறையில் இருப்பவர்களும் கடைபிடிக்கலாம்.

சஹர் (காலை நோன்பு வைக்க உண்ணப்படும் உணவு):

  • 100 கிராம் வடித்த சோறு + 100 கிராம் காய்கறிகள் + 100 கிராம் மாமிசம் (எண்ணெயில் அமிழ்த்திப் பொரிக்கக்கூடாது).
  • 1 முதல் 1 ½ லிட்டர் நீர் அருந்த வேண்டும் (மோர் / தயிர்).

இஃப்தார் (மாலை நோன்பு திறப்பதற்கு உண்ணப்படும் உணவு):

  • 200 கிராம் பேலியோ காய்கறிகள் போட்டுச் செய்யப்பட்ட காய்கறி சூப் + 20 கிராம் வெண்ணெய் சேர்த்து (CREAMY VEGETABLE SOUP).
  • 1 லிட்டர் தண்ணீர் அருந்தவும்.
  • வடை, பஜ்ஜி, இனிப்புச் சேர்க்கப்பட்ட பானங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும்.

இரவு உணவு:

  • 1 தோசை + 200 கிராம் மாமிசம்.
  • 1 முதல் 1½ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

ஈ. தீவிர நோய் நிலையுடன் இருப்பவர்கள் (நோன்பு வைப்பது ஆபத்தில் முடியக்கூடும்)

  • டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள்.
  • இன்சுலின் கட்டாயமாகத் தேவைப்படும் டைப் இரண்டு நீரிழிவு நோயாளிகள்.
  • கட்டுப்பாடற்ற நீரிழிவு / ரத்தக் கொதிப்பு.
  • தீவிர இதயச் செயலிழப்பு / சிறுநீரக நோய்.
  • 3 மாதத்திற்குள் ஆஞ்சியோ/ ஸ்டெண்ட்/ பைபாஸ் செய்து கொண்டவர்கள்.
  • 3 மாதத்திற்குள் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்கள்.
  • இதயத்தின் தசைகள் தடிமன் (CARDIOMYOPATHY).
  • இதயத்தின் துடிப்பில் ஏற்படும் சிக்கலான நோய்கள்.
  • இதயத்தின் வால்வு நோய்கள்.
  • அடிக்கடி வலிப்பு ஏற்படுபவர்கள்.
  • கட்டாயம் மூன்று வேளை மாத்திரை உட்கொள்ள வேண்டியவர்கள்.
  • கர்ப்பிணிகள் / முதல் ஆறு மாதம் பாலூட்டும் அன்னைகள்.

உ. சிறப்பு வகுப்பினர் (SPECIAL CATEGORY)

பிசிஓடி மற்றும் மகப்பேறின்மையால் குழந்தைக்குக் காத்திருக்கும் இணையர்கள்:

  • பிசிஓடி/விந்தணுக் குறைபாடு உள்ள சகோதர சகோதரிகள் கட்டாயம் இனிப்பைத் தவிர்க்க வேண்டும்.
  • சீனி, நாட்டுச் சர்க்கரை போன்ற இனிப்பு கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • பால் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • தினசரி இஃப்தாருக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யலாம்.

ஆட்டோ இம்யூன் வியாதிகள் இருப்பவர்கள்:

  • தாங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளைச் சஹர் மற்றும் இஃப்தாருக்கு மாற்றிக்கொண்டு, நோன்பை ரியூமடாலஜிஸ்ட் பரிந்துரையில் கடைபிடிக்கலாம்.
  • பயறு/ கடலை/ இனிப்பு / நட்ஸ் / தானியங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட ஆட்டோ இம்யூன் புரோட்டோகாலைத் (AIP) தொடரவும்.

ஊ. ரமலானில் உடல் உழைப்பு

பொதுவாக ரமலானில் அதீத உடல் உழைப்பைத் தவிர்ப்பது நல்லது. வெயிலில் அலைவதைத் தவிர்ப்பது சிறந்தது. எனினும் இஃப்தாருக்குப் பிறகு ஒரு மணிநேரம் நடக்கலாம் அல்லது மிதமான உடற்பயிற்சி செய்யலாம். செய்யும் வேலைக்கு ஏற்றவாறு உணவும் நீரும் அமையுமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.

எ. ரமலானில் உறக்கம்

இரவு 11 மணிக்குள் உறங்கினால் நான்கு முதல் ஐந்து மணிநேர உறக்கம் கிடைக்கும். முதியவர்களுக்கு, இணை நோய்கள் இருப்பவர்களுக்குத் தூக்கமின்மையால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதை ஈடு செய்ய, மதிய நேரத்தில் உறங்க வாய்ப்பிருப்போர் ஒன்று முதல் இரண்டு மணிநேரம் உறங்கலாம்.

ஏ. ரமலானில் நீர்ச்சத்து

வெயில் காலங்களில் வரும் ரமலானில் அதீத நீரிழப்பு ஏற்படக்கூடும். எனவே:

  • சஹர் நேரத்தில் 1½ லிட்டர் நீர்.
  • இஃப்தாருடன் 1½ லிட்டர் நீர்.
  • இரவு உணவுக்கு முன் 1 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.
  • அடிக்கடி சிறுநீரகக் கற்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்போர் கட்டாயம் 3 லிட்டர் நீரை அருந்த வேண்டும். மோர், தயிர், எலுமிச்சைச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு, வெள்ளரிக்காய் என்று உட்கொள்ளலாம்.
  • மெய்ண்டெனன்ஸ் மக்கள் – தர்பூசணி/ கிர்ணிப்பழச் சாறு அருந்தலாம்.

மேற்கூறிய பரிந்துரைகளைப் பின்பற்றிப் பேலியோவுடன் ரமலானைக் கடைபிடிக்கலாம். இணைநோய்கள் இருப்பவர்களுக்குக் கட்டாயம் ரமலானுக்கு முன்பான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவரின் பரிந்துரை அவசியம். மருத்துவர் இம்முறை நோன்பு வேண்டாம் என்று கூறினால், நோயாளிகள் / முதியோர்/ கர்ப்பிணிகள்/ பாலூட்டும் அன்னைகள்/ பயணிகளுக்கு மார்க்கம் தந்த விலக்கைப் பயன்படுத்தி நோன்பு வைக்காமல் இருப்பது நல்லது.

அனைவருக்கும் ஆரோக்கியமான ரமலானை வேண்டியவனாக இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

அப்டேட் 2-இல் சந்திப்போம்.

Author

Related posts

மாயா

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6