இப்போது பறவைகளிடத்தில் பரவி வரும் H5N1 வைரஸ் நமது பூமியில் பிறந்து கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. 1996-1997-களில் தென் சீனாவில் உள்ள வாத்துப் பண்ணைகளில் ஆரம்பித்து, அங்கிருந்து வலசை செல்லும் வனாந்திரப் பறவைகளில் தொற்றி, ஐரோப்பா – அமெரிக்க கண்டங்களுக்கும் ஏனைய ஆசிய கண்டத்திற்கும் பரவியது.
H5N1 வைரஸ் சிறுகச் சிறுகத் தன்னகத்தே மரபணு மாற்றங்களைச் செய்து வனாந்திரப் பறவைகளில் பரவத் தக்கதாக மாறியது. பிறகு கடல்சார் பாலூட்டி இனங்களில் பரவும் தன்மையைப் பெற்றது. கடந்த சில ஆண்டுகளாகக் கால்நடைகளிலும் பரவும் தன்மையை அடைந்துள்ளது. இவ்வாறு ஓர் இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு வைரஸ் தாவுவதை “இனம் விட்டு இனம் தாவல்” (SPILL OVER) என்கிறோம்.
இப்படியாக மனித இனத்திற்கு இந்த H5N1 வைரஸ் தாவுவது நடக்குமா?
இப்போது வரை H5N1 வைரஸ் தொற்றுக்கு உள்ளான பறவைகளை மனிதர்கள் பாதுகாப்பின்றித் தொடும் போதும், அதன் கழிவுகளைக் கையாளும் போதும் தொற்று மனிதர்களுக்குப் பரவி இருக்கிறது. எனினும், ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் வகையில் இந்த வைரஸ் உருமாற்றம் அடையவில்லை. எனவே, இப்போது வரை மனித இனத்திற்கான தாவல் நடக்கவில்லை. ஆனாலும் எதிர்காலத்தில் அப்படி ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உண்டு. அது எப்படியெனப் பார்ப்போம்.
இப்போது பரவும் H5N1 வைரஸ் மனிதர்களைத் தாக்கும் போது, மனிதர்களின் கீழ் சுவாசப் பாதையில் உள்ள ஆல்ஃபா 2,3 ஏற்பிகளுடன் தொடர்புள்ள சயாலிக் அமிலத்துடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, இப்போது ஏற்படும் தொற்றுகள் நுரையீரலில் நிமோனியாவை ஏற்படுத்தும் வகையிலானவை. அதனால் மனிதர்களுக்குத் தொற்றுப் பரவல் நடக்கும் போது தீவிரமான நிமோனியாவாக வெளிப்படுகிறது.
ஆனால், ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதற்கு நமது மூக்கு, நாசி உள்ளிட்ட மேல் சுவாசப் பாதையில் உள்ள ஆல்ஃபா 2,6 (பொதுவாக மனித மேல் சுவாசப் பாதை ஏற்பி) சயாலிக் அமில ஏற்பிகளுடன் ஒன்றிணைய வேண்டும். அப்போது எளிதில் சளி, இருமல், தும்மல் மூலம் ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்குப் பரவும் நிலையை அடையும். அத்தகைய மாற்றத்தை அடைவதற்கு அதன் மரபணுக்கூறில் Q226L என்ற ஹேமக்ளுட்டினின் (Hemagglutinin) பகுதியில் மாற்றம் நிகழ வேண்டும். இந்த உருமாற்றம் இன்னும் நிகழவில்லை.
அதற்கடுத்து, தற்போதைய H5N1 வைரஸ் பறவைகளின் உடலில் 41° செல்சியஸ் எனும் சற்று அதிக வெப்பத்தில் உயிர் வாழப் பழகியிருக்கிறது. இதுவே மனிதர்களுக்குப் பரவும் போது மனிதனின் நாசியின் வெப்பம் 33° செல்சியஸ் மட்டுமே. இத்தகைய குறைந்த வெப்பத்தில் வாழ்வதற்கு அதன் பாலிமரேஸ் PB2 எனும் பகுதியில் E627K என்ற மரபணு மாற்றம் நிகழ வேண்டும். இந்த மாற்றமானது தற்போது வனாந்திரப் பறவைகளிலும், கால்நடைகளிலும், கடல்சார் பாலூட்டி இனங்களிலும் பரவும் தன்மையை H5N1-க்கு வழங்கி இருக்கிறது.
இதற்கடுத்த படியாக, இந்த வைரஸுக்கு எதிராக வேலை செய்யும் சிறப்பான மருந்தான ஒசல்டாமிவிர் (Oseltamivir) எனும் வைரஸ் கொல்லி மருந்துக்கு எதிரான திறனை வளர்த்துக்கொள்ளும் மரபணு மாற்றமாக H274Y உள்ளது. இது தற்போதைய நிலையில் மிக மிகக் குறைவான, அரிதான நிலையிலேயே கண்டறியப்பட்டு வருகிறது.
எனினும் எதிர்காலத்தில் மேற்கூறிய மூன்று வகை மரபணு மாற்றங்களும் தொடர்ந்து நடக்கும் போது, வளர்ப்புப் பறவை -> வலசை செல்லும் வனாந்திரப் பறவைகள் -> கடல்சார் பாலூட்டி இனம் -> கால்நடைகள் என்று தாவித் தாவி மனித இனத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றே படுகிறது.
இன்னும் மனிதர்களுக்குச் சீசனல் ப்ளூ (Seasonal Flu) காய்ச்சல் ஏற்படும் போது, அவர்கள் தப்பித் தவறி H5N1 தொற்றுள்ள பறவையைக் கையாண்டு அந்தத் தொற்றையும் பெற்றால், இரண்டு வைரஸ்கள் ஒரே உடலில் ஒரே நேரத்தில் தொற்று ஏற்படுத்தும் போது ஒன்றோடொன்று கலந்து புதிய ஹைப்ரிட் வைரஸை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த வைரஸ் அதிக வேகமாக மனிதர்களிடம் பரவும் தன்மை கொண்டதாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதை மறுகலப்பு வைரஸ் (REASSORTANT) என்று அழைக்கிறோம்.
இவ்வாறாக H5N1 வைரஸ் என்பது தற்போது வரை நமக்கு அச்சுறுத்தல் வழங்காத நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் மனித இனத்திற்கு அச்சுறுத்தலை வழங்கும் நிலையை அது அடையலாம் என்பதால், நாம் இன்னும் எச்சரிக்கையுடனும் அதற்குண்டான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்.
H5N1 தொற்று பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு உருவானால் அதற்கு உலகம் தயாராக இருக்கிறதா? தொடர்ந்து பார்ப்போம்.