மருத்துவர் பக்கம் -21: இன்சுலின்- தவறும் ஆபத்தும்

சில நாட்களுக்கு முன்பு நான் சந்தித்த நீரிழிவு நோயாளியின் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்தேன். அவருக்குக் காலை வெறும் வயிற்றில் எடுத்த ரத்தக் குளுக்கோஸ் அளவு (Fasting) நன்றாகக் கட்டுப்பாட்டில் இருந்தது. உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கழித்து எடுத்த குளுக்கோஸ் அளவும் (Postprandial) திருப்திகரமாகவே இருந்தது.

ஆனால், அடுத்த பக்கத்தில் இருந்த HbA1c (மூன்று மாத குளுக்கோஸ் சராசரி – Glycosylated Hemoglobin) முடிவில்தான் எனக்கான அதிர்ச்சி காத்திருந்தது. HbA1c அளவு 10 என்ற நிலையில் இருந்தது. பொதுவாக, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்ய HbA1c அளவு 7-க்குள் இருக்க வேண்டும்.

அவருக்கான உணவு முறையில் சற்று மாவுச்சத்தைக் குறைத்து, புரதச்சத்தை உயர்த்தி, தேவையான அளவு கொழுப்புச் சத்து இருக்குமாறு மாற்றியமைத்துக் கொடுத்தேன். மாத்திரைகளின் அளவையும் சற்று உயர்த்தினேன். பின்னர், அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த இன்சுலினை வாங்கிப் பார்த்தேன். அவர் நீண்ட நேரம் வேலை செய்யும் ‘கிளார்ஜின்’ (Glargine) வகை இன்சுலினைச் சிரிஞ்சு (Syringe) வழியாகப் போட்டுக் கொண்டிருந்தார்.

அவர் உபயோகிக்கும் இன்சுலின் சிரிஞ்சை எடுத்து வரச் சொன்னேன். அப்போதுதான், இன்சுலின் குப்பியில் (Vial) குறிப்பிடப்பட்டுள்ள அளவும், இன்சுலின் சிரிஞ்சில் குறிப்பிடப்பட்டுள்ள அளவும் ஒத்துப் போகவில்லை என்பதை அறிந்தேன்.

அதாவது, அவரது இன்சுலின் குப்பியில் ஒரு மில்லி லிட்டருக்கு 100 யூனிட் (100 U/ml) இன்சுலின் அடங்கியுள்ளது. அதை அவர் அதே அளவீடு கொண்ட இன்சுலின் சிரிஞ்சைக் கொண்டுதான் போட்டுக் கொள்ள வேண்டும். இன்சுலின் குப்பியில் 100 U/ml என்று இருந்தால், இன்சுலின் சிரிஞ்சும் 100 U/ml அளவீடு கொண்டதாகவே இருக்க வேண்டும்.

ஆனால், அவர் 100 U/ml கொண்ட குப்பியில் இருந்து 40 U/ml சிரிஞ்சில் மருந்தினை எடுத்ததால், அவருக்கு இன்சுலின் ‘ஓவர் டோஸ்’ (Overdose) ஆகியிருக்கும். அதாவது, மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட 2.5 மடங்கு அதிக டோஸ் எடுத்திருப்பார். அவர் பயன்படுத்தியது ‘லாங் ஆக்டிங்’ (Long-acting) வகை இன்சுலின் என்பதால், உடனடியாகச் சர்க்கரையைக் குறைக்காமல் இருந்தது. அதனால் அவருக்கு ‘ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) எனும் தாழ் ரத்தச் சர்க்கரை (Low Sugar) பாதிப்பு ஏற்படாமல் தப்பியது.

இதுவே உடனடியாக வேலை செய்யும் இன்சுலின் (Short-acting) இவ்வாறு தவறாகப் போடப்பட்டிருந்தால், நள்ளிரவில் அபாயகரமான ‘லோ சுகர்’ ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதே போன்ற தவறைப் பலரும் செய்து கொண்டிருக்கலாம்; அவர்களுக்கான விழிப்புணர்வே இப்பதிவு.

இதற்கு நேர்மாறாக, 40 U/ml கொண்ட குப்பியில் இருந்து 100 U/ml சிரிஞ்சில் மருந்தை எடுத்துப் போட்டால், தேவைப்படும் அளவை விட 2.5 மடங்கு குறைவான டோஸ் மட்டுமே கிடைக்கும். இதனால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்.

எனவே, இன்சுலின் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு:

குறிப்பாகச் சிரிஞ்சு மற்றும் குப்பி (Vial) உபயோகித்துப் போடும் சகோதர சகோதரிகள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்கவும்.

மருந்தக நண்பர்களின் கனிவான கவனத்திற்கு:

தாங்கள் இன்சுலின் குப்பிகள் மற்றும் சிரிஞ்சுகளை விநியோகிக்கும்போது, இரண்டிலும் உள்ள யூனிட் அளவீடுகள் ஒன்றுபடுவதை உறுதி செய்து வழங்கவும்.

நீரிழிவு சிகிச்சையில் சின்னச் சின்ன விஷயங்களும் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு, ‘பட்டாம்பூச்சி விளைவு’ (Butterfly Effect) போலப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கவனமும் விழிப்புணர்வும் அக்கறையும் எப்போதும் தேவை.

Author

Related posts

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10

தொப்புள் கொடி பந்தம்

ஜப்பானிய சிறுவர் கதைகள் 16 – மொழியாக்கம்