மருத்துவர் பக்கம் -22: மாமிசம் உண்பது தீய பழக்கமன்று.

மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE).

மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த பாட்டியையும் பார்க்கிறோம்.

மத்திய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘நான்-வெஜ்’ என்பதில் பாம்பு, பல்லி, பூச்சிகளும் அடங்கும்.

உலகம் முழுவதும் அதிகமாக உண்ணப்படும் ‘நான்-வெஜ்’ பன்றி இறைச்சி; அதற்கடுத்த படியாக மாட்டு இறைச்சி; அதற்கடுத்த படியாகக் கோழி, மீன் போன்றவை.

மேற்சொன்னவைகளில் எது கிடைத்தாலும் மனிதனால் சாப்பிட்டு உயிர்வாழ முடியும்.

இதில் பிறப்பால் பலர் மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறையில் இருக்கின்றனர். பலர் தாமாக முடிவு செய்து மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறையைத் தங்களுக்கு உகந்ததாக அமைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலருக்கு மருத்துவக் காரணங்களுக்காக மரக்கறி உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது.

அவரவர் எதை உண்ண வேண்டும் என்று இடம், பொருள், ஏவல் பொறுத்து முடிவு செய்து உண்ணும் உரிமை அவரவர்க்கு உண்டு.

மருத்துவ ரீதியான காரணங்கள் இருப்பின், அந்தக் காரணங்களை அறிவியல் ஆய்வுகளுடன் பேசி நம்மால் சிலவற்றை உணவு சார்ந்து ஒருவருக்குப் பரிந்துரை செய்ய இயலும். இதிலும் பரிந்துரை மட்டுமே செய்ய இயலும். பரிந்துரை என்பது SUGGESTION மட்டுமே.

பரிந்துரையை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் எப்போதும் அவரவர் தனிமனித சுதந்திரம் சார்ந்தது. இதில் எதைச் சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பத்தில்தான் விவாதங்கள் நடக்கின்றன.

விவாதங்கள் அறிவியல் ரீதியாக நடந்தால் ஆரோக்கியமானதுதான். அதுவே ஜீவகாருண்யம், மாமிசம் செரிக்காது, மாமிசம் இதயத்திற்குக் கேடு, மாமிசம் கேன்சர் வரவழைக்கும், கரியமிலப் பாத அச்சு (Carbon footprint), மறைநீர் (Virtual water) என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமாகாத பல விஷயங்களை உள்ளடக்கி, மாமிசம் உண்பது கேடு என்பது போலவும் மரக்கறி உண்பதால்தான் உலகம் விமோசனமடையும் என்பது போலவும் கருத்துகள் பரவுகின்றன.

இன்றும் மனிதன் “அனைத்துண்ணி” தான். தனது உணவுத் தேவைக்காக மற்ற உயிரைச் சார்ந்து வாழும் ஒரு சமூகப் பிராணி மனிதன்.

செடி, கொடி, மரத்திற்கும் உயிர் உண்டு; விலங்குகளுக்கும் உயிர் உண்டு; கடல்வாழ் உயிரினங்களுக்கும் உயிர் உண்டு.

உணவுக்காக நாம் செய்யும் உயிர்வதையைக் காட்டிலும் பல்வேறு இன்னபிற தேவைகளுக்காகச் செய்யும் உயிர்வதை அதிகம். வேட்டையாடிச் சமூகமாக நாம் வாழ்ந்த காலந்தொட்டு, பின் நாகரிகங்கள் தோன்றி விவசாயப் புரட்சி நடந்த பிறகும், மற்றொரு உயிரை உணவுக்காக நாடியே நமது இருப்பு உள்ளது.

இந்தியாவில் மாமிச உணவுகளின் நுகர்வு என்பது மேலை நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைவு. இங்கு அதிகரித்து வரும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய், இரத்தக்கொதிப்பு, பிசிஓடி (PCOD), உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாக உணவைக் காரணமாகக் கூற வேண்டும் என்றால், மாமிசம் உண்பதைக் காரணமாகக் கூற இயலாது. மாறாக:

  • நாம் உண்ணும் தானியங்கள் சார்ந்த அதி உயர் மாவுச்சத்து உணவு (VERY HIGH CARBOHYDRATE INTAKE) முறை.
  • எண்ணெயில் பொரித்த உணவுகள்.
  • மது, புகை உள்ளிட்ட போதை வஸ்துகள்.
  • உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்காத வாழ்வியல்.
  • உறக்கக் குறைபாடு.
  • மன உழைச்சல் / அழுத்தம் ஆகியவற்றைத் தொடக்கக் காரணமாகக் கூறலாம்.

அதே போன்று சிவப்பு மாமிசம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்பது “பதப்படுத்தப்பட்ட” சிவப்பு மாமிசத்தைக் குறிக்கிறதே அன்றி, நாம் கறிக்கடைகளில் ஃப்ரெஷாக நம் கண்முன்னே வெட்டி வாங்கி வந்து அன்றே உண்ணும் முறையில் பதப்படுத்துதலுக்கு வேலை இல்லை. அதுபோக நம்மிடம் இருக்கும் பொருளாதாரத்திற்கு வாரம் ஒருமுறை, இருமுறை கொஞ்சம் சிவப்பு மாமிசம் சாப்பிடுவதால் எந்தச் சிக்கலும் வராது. மாறாக நமக்கு நல்ல புரதம், பல்வேறு அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன.

நாம் மேற்கத்திய உலகம் போலச் சாசேஜ், ஹாட் டாக் போன்று உண்பதில்லை. எனவே புற்றுநோய் அச்சம் நமக்குத் தேவையில்லை.

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் புரதச்சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் – பொருளாதாரம் சார்ந்த சவால்களாலும் சமூகத்தில் நிலவும் மாமிசம் மீதான பொய்ப் பிரச்சாரங்களாலும் புரதம் நிரம்பிய மாமிசத்தையும் முட்டையையும் மக்கள் குறைவாக நுகரும் தன்மை இருக்கிறது.

இங்கு யாருக்கேனும் நீரிழிவோ இரத்தக்கொதிப்போ கண்டறியப்பட்டால், அவர்கள் ஏற்கனவே குறைவாகச் சாப்பிட்டு வரும் மாமிசத்தை முழுமையாக நிறுத்தவே அறிவுறுத்தப்படுகிறார்கள். முட்டைகளில் மஞ்சள் கருவை ஒதுக்கிவிடக் கூறப்படுகிறது. ஆனால், அதனால் அறிவியல் ரீதியாகப் பெரிய பயன் ஏதும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

மரக்கறி மட்டும் உண்போர், மரக்கறியுடன் பால் உண்போர், மீன் மட்டும் உண்போர், அனைத்துண்ணியாக இருப்போர் யாராகினும் அவரவர் உணவு முறையில் வரம்பு மீறாமல் இருப்பது சிறந்தது. அறிவியல் அடிப்படை இன்றி இது தவறு, இது சரி என்று முடிவு செய்து ஒன்றைப் போற்றுவதோ ஒன்றைத் தூற்றுவதோ தவறு.

ஒருவர் உண்ணும் உணவு அவரவர் தேர்வு. நோய்கள் இருப்பின் மருத்துவ ரீதியான பரிந்துரைப்படி உணவின் தன்மையை அமைத்துக் கொள்வதும் அவரவர் சிந்தனைக்குட்பட்டது.

மாமிசம் உண்ணும் பழக்கம் தீய பழக்கமன்று. அவரவர்க்கு உகந்த மாமிசத்தை அவரவர் உண்ணலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே. எதிலும் வரம்பு / பிறர் எல்லைகளை மீறாதவர்களாக இருப்போம்.

பன்முகத்தன்மையை மதித்து வாழப் பழகிடுவோம். இவ்வுலகம் நம் அனைவருக்குமானது. இங்குப் பிறப்பால், உண்ணும் உணவால், படித்த படிப்பால், வகிக்கும் பதவியால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.

இங்கு நீங்கள், நான் என அனைவருமே பலவீனங்கள் பல நிறைந்த சாதாரண மனிதர்களே…

Author

Related posts

வரலாற்றில் பொருளாதாரம் – 24

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் – 11

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்