மாயக் கோடுகள்

சுவர்கள் எப்போதும்
செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,
சில நேரங்களில் அவை எண்ணங்களை
சுவாசித்தும் எழுகின்றன.
இயலாதெனும் தயக்கமும்
வேண்டாமெனும் எச்சரிக்கையும்
ஒரு முடிச்சாகப் பிணைந்து
காலத்தைக் கட்டிப் போடுகின்றன.

நமது எல்லைகளால்
ஆகாயம் சுருங்கிப் போகிறது.
நமது சந்தேகங்களால்
அடிவானம் மறைந்து போகிறது.
நமது தடுமாற்றங்களால்
திசை விளிம்பு குறுகிப் போகிறது.

வெளிப்படுத்தாத வார்த்தைகள்
மெளனச் சுவர்களாக உயருகின்றன.
மாயக் கோட்டிற்குள்
அவிழாத புதிர்களாக உலவுகிறோம்.
கதவு திறந்திருந்தும்
சிந்தனையில் சிக்கி நிற்கிறோம்.

சிறை என்பது எப்போதும்
சங்கிலிகளோ கம்பிகளோ அன்று.
வீழ்ந்தால் என்னாவோம் என்கிற
பாரமும் பயமுமே அது.
என்றோ அடங்கிப் போன
குரல்களின் எதிரொலி
கண்ணுக்குப் புலப்படாத
சுவர்களை எழுப்பியபடி உள்ளது.

எண்ணங்கள் சுழலச் சுழல
சுவர்களை அசைக்கும்
கேள்விகள் கிளம்புகின்றன:
ஒருவேளை அந்தச் சுவர்கள்
அங்கு இல்லையோ?
அது நமக்குள் நாம்
சுமந்து திரியும் வரையறைகளால்
உருவான கூண்டோ?
கோட்டிற்கு அருகிலேயே
கூண்டுக்கு உள்ளேயே
நின்று விட வேண்டாமென
நாம் தீர்மானிக்கும் வரை மட்டுமே
அவற்றின் இருப்பு அன்றோ?

அச்சம் வலியக் கீறிய கோடுகளுக்குள்
அடங்கி விடுவதில்லை வாழ்க்கை.
நடுக்கத்தின் விளிம்பிற்கு அப்பால்
அது காத்திருக்கிறது.
ஒவ்வொரு முடிவும்
புதிய விடியலைப் பெறுமிடத்தில்
நமக்கான பெருவெளி
கனிந்து நிற்கிறது.

Author

  • ராமலக்ஷ்மி : எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

வலைப்பூ – 3

அம்மா மாறி விட்டாள்

இனியவன் – 5 (இறுதிப்பகுதி)