“ம்..” 4

This entry is part 4 of 5 in the series "ம்.."

எனக்குக் கோபம்,கோபமாய் வருகிறது. நான் தத்தி.. முற்பிறவியிலும் இந்த வாழ்க்கையிலும். ம்.. கோபம் வந்தென்ன?. சரியான செயலைச் செய்ய முடியவில்லையே.

அவன் குரல் வேறு அவ்வப்போது.

“உனக்குத்தான் வேண்டியதை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறேனே? இன்னும் என்ன வேண்டும் உனக்கு?.. “போடா.. உன்னை, யார் நீ? என்று கேட்டால்.. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன், அதாவது இப்போது. முன்பு சண்டையே போட்டேன், கடைசி வரை ஒன்றும் சொல்லவே இல்லையே. அதுவும் இன்று அடுத்தடுத்து எனக்கு நல்லது நடந்து கொண்டிருக்கிறது. கடைசி எதிரியையும் பார்த்து விட்டேன். ஆனால் ஒன்றும் ஆகவில்லை. யாரோ தடுக்கிறார்கள் இங்கே. யார்!… கூர்ந்து பார்க்கவேண்டும், ம்..

கோபத்தைப் பற்றி, போன வாழ்க்கையில் என்ன எழுதியிருந்தேன்?

கண்ணை அதுமறைக்கும் கண்ணிலே நீரழைக்கும்
தன்னை மறந்தே தரமில்லா வார்த்தையைத்
தாபமாய்ப் பேசிவிடும் தன்னுணர்வைத் தூண்டிவிடும்
பாபமாய்ச் சிந்தனையைப் பற்றி எரியவிடும்
கோபமும் காரமும் ஒன்று.

ம்.. காரமே சாப்பிடாமல் இருந்த நான், இப்போது ஆங்காரமே உருவாக இருக்கிறேன். எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்! ம்..
*
முதலில் சுதாரித்தது சி.ஐ. ஸ்ரீனிவாசப் பெருமாள்தான். கிடுகிடுவென்று உத்தரவுகள் போட ஆரம்பித்தார்.

“சைந்தவி. ஒரு கான்ஸ்டபிளுக்கு ஃபோன் போட்டு இங்க வந்து நிக்கச் சொல்லு. கதிரேசன்.. உங்க பாய்ஸ் ரெண்டு பேரை இங்க வரச்சொல்லி, அந்தப் பள்ளத்தைத் தோண்டச் சொல்லுங்க. கதிரேசன் நீங்களும் கூட வாங்க. சைந்தவி, டாக்டர் கருணா, பாலகணேஷ் என் கூடவே வாங்க. ஆம்புலன்ஸ் வந்துடுச்சு சைந்தவி. ஒரு கான்ஸ்டபிள்கிட்ட அந்த பாடியை எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடல் போகச் சொல்லு. நீ இன்னும் இரண்டு ஆம்புலன்ஸ்களை நடந்துக்கிட்டே போன் பண்ணி வரச் சொல்லு. வாங்க போகலாம். இது என்ன பெரீய கேஸ் ஆகும் போல இருக்கே?”.

தேக்கு மரங்களைக் கடந்து பலாத்தோப்பை அடைந்தார்கள். அடர்த்தியாக இல்லாமல் கொஞ்சம் இடைவெளி விட்டே பலாமரங்கள் இருந்தன. ஒவ்வொரு மரத்திலும் நிறையப் பழங்கள், காய்கள் வெவ்வேறு உயரத்தில் இருந்தன.

“எல்லாமே பலாப்பழமா?”

“சக்கைல நிறைய வெரைட்டி இருக்கு சார், அயினிச் சக்கை, வருக்கச் சக்கை, கூழன் சக்கை, செம்பருத்திச் சக்கை, சீமைச்சக்கை. எல்லாமே பலாதான். வருக்கச் சக்கை – சிப்ஸ் போடறது. கூழன் பலாமுசு காய் பெரிசாகவே ஆகாது.. சக்கைன்னா பலாப்பழம்”

”தெரியும்” என ஸ்ரீநி நடக்க ஒரு மரத்தின் வளைவில் அந்தக் காட்சி தென்பட்டது. இன்னொரு மரத்தின் கீழ் இரண்டு கால்கள் தெரிந்தன. உடல் மீது பலாப் பழங்கள். கிட்ட நெருங்கிப் பார்த்ததில் – தலை மீது ஒரு பழம் விழுந்து இரண்டாய் உடைந்து, அந்தப் பக்கம் போயிருந்தது. கூடவே இன்னொரு பழம் விழுந்து தலையை மறைத்திருந்தது. மார்பு, கைகளிலும் பலாப் பழங்கள் விழுந்திருந்தன. அருகில் கதிரவனுக்கு ஃபோன் செய்த பண்ணை ஆள் நின்றிருந்தான்.

“என்ன கதிரேசன். பலாப்பழமெல்லாம் இப்படி விழுமா? அதுவும் கொஞ்ச நேரம் முன்னால அடிச்ச காத்துல?”

“தெரியலை சார். நானும் இப்ப தான் பார்க்கறேன்”

ஃபாரன்ஸிக் பாலகணேஷ் கொஞ்சம் அந்தப் பலாப்பழங்களைச் சுற்றி வந்தார். உன்னிப்பாகப் பார்த்தார். “கைரேகை எதுவும் இருக்கறது மாதிரி தெரியலை ஸ்ரீநி. தானாத்தான் விழுந்துருக்கணும்”

கதிரேசன் பண்ணை ஆளைக் கை காட்டினான். “பழத்தை நகர்த்தச் சொல்லட்டுமா சார்?”

”சொல்லுங்கள்”

மெல்ல, பழங்களை ஒதுக்கியபோது முகம் தெரிந்தது, அதாவது பின்னந்தலை. பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்த்த உடனே புரிந்து விட்டது உடல் என்று. திருப்பினான் பண்ணை ஆள்.

“இது?”

“ஜெயராஜ் சார். ரொம்ப நாளா வேலை பார்க்கிறார். இது ஒண்ணு தான் வேலைன்னு இல்லை. ரியல் எஸ்டேட், கோல்ட் வாங்கி விக்கறது, ப்ரோக்கரேஜ் இன்னும் நிறைய பார்ப்பார். நல்லா சம்பாதிக்கறவர் சார். சொந்த வீடு கூட இருக்கு. ரெண்டு மாசம் ஊர்ல வேலைன்னு லீவ்ல போய்ட்டு முந்தா நாள்தான் ஜாய்ன் பண்ணினார்”

“சரி, வாங்க நடந்துக்கிட்டே பேசலாம். ஆம்புலன்ஸும் வந்துடுச்சு போல இருக்கு. அங்கிட்டுப் போகலாம். கதிரேசன்.. நாங்க வந்து சில மணி நேரம் ஆச்சு, லஞ்ச்சுக்கு ஏதாவது கிடைக்குமா?”

“ஸ்விக்கில பீட்ஸா ஆர்டர் பண்ணிடறேன் சார்”

“ஃபாரன்ஸிக் சார்.. கொஞ்சம் கதை வசனம் சொல்லுங்க பார்க்கலாம்”

“முதல்ல நானும் என் ஆட்கள் சிலரைக் கூப்பிடணும் சி.ஐ. வேறு ஏதாவது தடயம் கிடைக்கறதா பார்க்கணும். அப்புறம் பீட்ஸா ஆர்டர் பண்ணிடுங்க கதிரேசன்”

“செய்ங்க பாலகணேஷ். என்ன நடந்துருக்கும்னு நினைக்கறீங்க?” டாக்டர் கருணாஸ், ஜெயராஜை ஆராய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.

“கொஞ்சம் யோசிச்சா.. அந்த மரத்துக்குக் கீழ நாய்கள் கண்டெடுத்த உடல் இவங்க – ராகவ்வோட சித்தி காத்யாவா இருக்கலாம். பார்கவன் ஏதோ ஒரு சூழ்நிலைல அவங்களைக் கொலை பண்ணி அங்க புதைச்சுருக்கலாம்.. அதுக்கு உதவினது இந்த ஜெயராஜ். அந்த விஷயம் தெரிஞ்சவங்க யாரோ இவங்களைப் போட்டுத் தள்ளி இருக்கலாம்”

“சார். நீங்க நிறைய க்ரைம் ஸ்டோரீஸ் படிப்பீங்க போல இருக்கு. அபத்தமா இருக்கு உங்க கற்பனை”

“ராகவ். கோபிக்காதீங்க. நாங்க போலீஸ், இவர் போலீஸ்க்கு சப்போர்ட்.. இப்படித் தான் யோசிப்போம். இன்னும் கதிரேசன் கிட்ட, முன்னால யார் கேர் டேக்கரா இருந்தாங்க?ன்னு விசாரிக்கணும். விசாரிச்சா வேறு ஏதாவது மாட்டலாம்”.

“இல்லை சார்.. என் அப்பா கொலைல்லாம் செஞ்சுருக்க மாட்டார் சார்”.

“உங்க சித்தியைத்தான், நீங்க பார்க்கவே இல்லையே ரெண்டு மாசமா”.

தூரத்தில் புளியமரத்தின் பக்கத்தில் இரண்டு பேர் தோண்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.

பேசியவண்ணம் ஆம்புலன்ஸை அணுகி இருந்தனர் அனைவரும். டாக்டர் கருணாஸ் எதுவும் பேசவில்லை. “என்ன டாக்டர் எதுவும் சொல்லலை”

“எனக்குப் பிடிபடலை. ஐ திங்க்.. பழம் விழுந்ததாலதான் உயிர் போயிருக்கும். எதுன்னாலும் போஸ்ட் மார்ட்டத்துல தெரிந்துவிடும்”

ஆம்புலன்ஸின் அருகில், அந்தப் பக்கம் மாதவ், மாத்வி நிற்பதைப் பார்த்தான் ராகவ்.

“மாத்வி, மாதவ் நீங்க எங்கே இந்தப் பக்கம்?”

“இவங்க?”

“இவங்க என் சித்தியின் கஸின். ஒன்று விட்ட தங்கை. எப்போதாவது எங்கள் வீட்டிற்கு வருவாங்க. மாதவ், என் அப்பாவை யாரோ கொலை செஞ்சுட்டாங்க”.

மாத்வி அதிர்ச்சி அடைந்தாள். “என்ன சொல்ற ராகவ்! போன வாரம் கூட பேசினேனே. எல்லாம் ஆல்ரைட், காத்யா ஹைதராபாத் போய் இருக்கான்னு சொன்னாரே”

“தெரியலைங்க.. பார்த்தா இங்க இன்னும் ரெண்டு பாடி இருக்குங்கறாங்க”

“ஹச்சோ”

“என்ன சைந்தவி? இங்க நிறைய வேலை இருக்கும் போல இருக்கே! இன்னும் விசாரிக்கப்பட வேண்டியவங்க எண்ணிக்கை கூடுது” என்றார் ஸ்ரீநி.

சைந்தவி மாத்வியைப் பார்த்தாள். கலைந்த தலை, கொஞ்சம் விலகிய பொட்டு, அழகான ஆடை. ‘ம்.. ஹேர்ஸ்டைல் நல்லா இருக்கே. எங்கே பண்ணினாள் எனக் கேட்கவேண்டும். அதை விட மாதவ்.. நன்னா தெறிக்க விடறானே!’ என மனதுள் நினைத்துக் கொண்டாள்.

“இங்க எதுக்கு வந்தீங்க மாதவ்?. விஷயம் கேள்விப்பட்டா?”

“இல்லீங்க.. ஜஸ்ட் அந்தப் பக்கம் லேண்ட் பாக்க வந்தோம் . இங்க மாம்பழம் மலிவாக் கிடைக்கும்ன்னு ரியல் எஸ்டேட் நண்பர் சொன்னார். வந்த இடத்தில மாத்வி ரெஸ்ட் ரூம் போகணும்ன்னா. அப்ப, அந்த இளநீர் அடுக்கில் இருக்கற அரிவாள் தானாவே எழுந்து மாத்வியப் பார்த்துப் பறந்து வந்து, டபக்கென அவ கால் மேல விழுந்துடுச்சு. அதிர்ச்சியில அவ மயங்கிட்டா. அவ மயக்கத்தைத் தெளிவிச்சு நின்னுக்கிட்டு இருந்தோம், நீங்க வந்தீங்க”

“என்னது! அரிவாள் தானா இவங்களைப் பார்த்து வந்துச்சா?”

“ஆமாம் சார். நானும் பார்த்தேன், கதி கலங்கிடுச்சு. சீக்கிரம் கிளம்பலாம். இங்க என்னவோ இருக்கு” என்றார் கான்ஸ்டபிள்.

”அரிவாளாவது.. தானா வர்றதாவது. என்ன சொல்றீங்க?” என்றார் ஸ்ரீநி.

இதற்கிடையில் ஆம்புலன்ஸ் ட்ரைவர் ஸ்ரீநியிடம் சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸைக் கிளப்பிப் புறப்பட்டு, பண்ணை வாசலின் இடது புறம் திரும்பி மறைந்தார்.

“உங்க காத்யா சித்தியோட ஃபோட்டோ இருக்கா ராகவ்?”

ராகவ் செல்லில் எடுத்துக் காண்பித்தான். க்ரே வித் ரெட் பார்டர் பட்டுப் புடவை, வழித்து வாரிய தலை, வில் போல் ப்யூட்டி பார்லரில் தீட்டப்பட்ட புருவங்கள், சீரான குமிழ்ப் பூ நாசி, காதில் பெருமையுடன் மிளிர்ந்த வைரத் தோடுகள், கழுத்தில் ரூபி நெக்லஸ், உதடுகளில் ஒட்டப்பட்ட புன்னகை. அழகாய்த்தான் இருந்தாள். உடன், வர்ணனை எதுவும் தேவை இல்லாத பார்கவன். உற்றுப் பார்த்தார் ஸ்ரீனி. சைந்தவியிடம் காட்டினார்.

“சார். இவங்க கிட்ட மாத்வி சாயல் இருக்குல்ல?! தூரத்துல பார்த்தா, மாத்வி காத்யா மாதிரியே இருப்பாங்க.. ஒரு சில கோணங்கள்லயும். என்ன சொல்றீங்க?”

“உண்மைதான்” என்றான் ராகவ். “சமயத்தில் நானே ஏமாந்தும் இருக்கிறேன்”

“சார். எதேச்சையா வந்தோம். பார்கவ் சாரைப் பிரேதப்பரிசோதனைக்குக் கொண்டு போயிருப்பாங்க இல்லையா? ராகவ்.. நான் மாத்விய வீட்டுல விட்டுட்டுத் திரும்பி வர்றேன். நாங்க போகலாமா?” என ஸ்ரீநியிடம் கேட்க, ஸ்ரீநி, “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. அப்புறம் போங்க” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போது தொலைவில் பண்ணையினுள் அந்த சிகப்பு ஹோண்டா சிவிக் கார் நுழைந்தது.

சர்ரென்று இவர்கள் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் வந்து நிற்க, அதனுள் இருந்து இறங்கியது.

காத்யாயினி!.

(தொடரும்)

Series Navigation<< “ம்..” 3“ம்..” 5 (இறுதிப்பகுதி) >>

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.

“ம்..” 5 (இறுதிப்பகுதி)